இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட அவர்களின் துணைவியார் -“சந்தியா எக்னெலிகொடவுனான” நேர்காணல்…

 

santhiya kandil

2010 ஜனவரி மாத இறுதிப் பகுதியில் இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட அவர்களின் துணைவியார்  -“சந்தியா எக்னெலிகொடவுனான” நேர்காணல்.

நேர்கண்டவர் – றஞ்சி சுவிஸ்- தமிழாக்கம் : ஃபஹீமாஜஹான்

இல்லை. மனித உரிமைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்களேகூட பாதுகாப்பற்ற நிலையில் இன்று இருக்கிறார்கள்.

வணக்கம், காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் ஊடகப் பணிகள் குறித்த உங்கள் பார்வை என்ன?

 என் கணவர் மிகுந்த மானுடநேயம் மிக்கவர். அவர் காணாமல் போகும் நாள் வரையிலும் மனித உரிமைகளுக்காகத் தன்னார்வத்துடனும் துணிச்சலுடனும் செயற்பட்டவர்.அவர் வரைந்த கேலிச்சித்திரங்களிலும் அந்த மானிட நேயத்தின் வெளிப்பாட்டையும், எதிர்க் குரலையுமே காணக் கூடியதாய் இருந்தது, நல்லதொரு எழுத்தாளர் மற்றும் சிந்தனை வாதி என்று அவரைக் கூற முடியும். அவரது ஊடகத்துறை வாழ்வில் கலை, இலக்கியம், அரசியல் என்பவை மட்டுமன்றி அவற்றிற்கு அப்பால் எம் நாட்டில் நிலவிய நிலவுடமைத்துவக் கூறுகளையும், பெண் விடுதலையையும் முன்னிறுத்தினார். எழுச்சி மிக்க ஒரு தேசமே அவரின் கனவாய் இருந்தது. அதை நோக்கிய அவரது ஊடகப் பயணத்தின் பல்வேறு கால கட்டங்களில், பல் அரசியல்வாதிகள் பிரகீத்தின் விமர்சனங்களுக்கு ஆளாயினர். விஷேடமாக அவர் 2007, 2008, 2009 காலப்பகுதில் ராஜபக்ஷ அணியினை விமர்சனம் செய்தார். அவர்களது முறைகேடான கொடுக்கல் வாங்கல்களை அத்தாட்சிகளோடு முன்வைத்தார்.முக்கியமாக 2008 இறுதிப் பகுதியில் இலங்கை அரசாங்கம் வடபகுதித் தமிழ் மக்கள் மீது இரசாயன ஆயுதங்களைப் பிரயோகிப்பதாகவும், அத்தகைய இரசாயண ஆயுதப் பாவனையானது குறித்த குழுவொன்றின் மீதல்ல என்றும், சமூகக் கொலைகளைப் புரிவதன் நோக்கத்துடன் பொதுமக்கள் வாழும் இடங்களிலெல்லாம் அவை பிரயோகிக்கப் படுவதாகவும் எழுதினார். தனது இக் கருத்தினை அத்தாட்சிகளோடு சிறு குழுக்களிலினிடையே அவர் வெளிப்படுத்தவும் செய்தார்

 
 பிரகீத் காணாமல் போனதன் பின்னர், அவர் குறித்து நீங்கள் முயன்று அறிந்து கொண்ட தகவல்கள் என்ன?

media_protest_sri_lanka.jpg2

அவர் காணாமல் போனதை அடுத்து,அரச மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடம் நான் தொடர்ந்தும் அலைந்து வருகிறேன். ஆனால் எந்தத் தகவலையும் அவர்கள் வெளிப்படுத்தாமல் வெற்றுப் பொய்களையே கூறியவண்ணம் இருக்கின்றனர். வெறுமனே காலத்தைக் கடத்துகிறார்கள்.தொடர்ந்தும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் காலம் கடத்தப் படுகிறதேயொழிய இதுவரை சரியான தகவலோ அல்லது உரிய தீர்வோ என்னை வந்து சேரவில்லை.

  

  

பிரகீத்தைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களைப் பற்றிக் கூற முடியுமா? 

santhiya kandil

எம் நாட்டில் உறவுகள் காணாமல் போவதும் அதனால் அவலப் படுவதுமான பிரச்சனையானது எனக்கு மட்டுமேயானதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரகீத்தை இழந்ததால் ஏற்பட்டுள்ள பிரச்சினையானது கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்பட்டுவிடும் அல்லது சமூகம் அதை மறந்துவிடும். உண்மையில் எனக்கிருக்கும் பிரதான பிரச்சினை நான் தனித்து விடப்பட்டிருப்பதுதான்..நான் ஒரு நிறுவனத்தைச் சார்ந்திருக்கவில்லை. எந்தவொரு நிறுவனத்தினதும் அங்கத்தவரும் அல்ல. என்னிடம் போதிய வளங்கள் இல்லை. இதன் காரணமாக வேறொரு நிறுவனத்தினது அல்லது நபரினது உதவியை நான் பெறவேண்டியுள்ளது. அவ்வாறு உதவி கோருகிறபோது, அது அந்த நிறுவனத்தினது தொழில் சார்ந்த வட்டத்திற்குப் புறம்பானதொரு விடயமாய் அமைகிறது. அன் நிறுவனம் இப்பிரச்சனை தொடர்பாகக் குறைந்தளவு கவனத்தையே செலுத்த முடியும் . இதனால் உத்தேசித்த காலப்பகுதியினுள் நான் எதிர்பார்க்கும் விடயங்களைச் செய்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது.

மற்றைய சவாலாக இருப்பது இலங்கையினுள் காணப்படும் நலிவடைந்த சிவில் சமூக இயந்திரம். இன்று செயற்படும் அனைத்து சிவில் சமூக அமைப்புக்கள் மீதான பொதுவான குற்றச்சாட்டாக இதை நான் முன் வைக்கவில்லை.பலதரப்பட்ட நோக்கங்களுக்காக உருவான அமைப்புகள் இங்கு செயற்படுவதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவை தமது அமைப்பின் நோக்கங்களுக்காகவே செயலாற்றுகின்றன. என் தேவைகளையும் கோரிக்கைகளையும் இவர்கள் மத்தியில் முன் வைக்கிறபோது, நான் அந்த அமைப்புக்களின் செயற்பாடுகளின் இரையாக மாற வேண்டி நேர்ந்துள்ளது. இவை தவிர இன்றைய இளைஞர்களின் சிந்தனைகள் கூட தளர்ச்சியடைந்தே காணப்படுகின்றன. இவை எல்லாம் என்னை தனிமைப்படுத்துகின்றன. ஆனாலும் நான் தனிமைப்பட்டிருப்பதற்கு அஞ்சாத பெண்ணாக இருக்கிறேன். எந்தவொரு பிரச்சினையையும் கவனத்திற் கொள்ளாமல் பிரகீத்தைத் தேடிக் கொள்ளும் இலக்கை நோக்கி என்னால் பயணிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

நீங்கள் எப்படி உங்கள் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கிறீர்கள்?

பிரகீத் காணாமற் போனதுடன் எனது உலகம் மாறிவிட்டது. அதன் விளைவாக நான் தொழில் புரிந்த நிறுவனத்திலிருந்து என்னை நீக்கினார்கள்.எனது இரண்டாவது மகன் நோய்வாய்ப்பட்டுள்ளார். தந்தையை இழந்ததால் ஏற்பட்ட அதீத விரக்தி அவரை நோயாளி ஆக்கியது. இத்தனை சிக்கல்களுக்கிடையேதான் நான் என் கணவனை தேட வேண்டி உள்ளது. அதற்காக நான் அல்லும் பகலும் அலைய வேண்டி உள்ளது. இதனால் ஊதியத்திற்கான மாற்று வேலை ஒன்றை என்னால் செய்ய முடியவில்லை. நாங்கள் இப்பொழுது வசிக்கும் வீட்டுக்காக எடுக்கப்பட்ட கடன் ஒன்று சேர்ந்துள்ளது. எந்தநேரத்தில் வேண்டுமானாலும் என்னையும் பிள்ளைகள் இருவரையும் வீட்டு உரிமையாளரினால் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட முடியும். எனது சகோதர சகோதரிகள் எனக்கும் பிள்ளைகள் இருவருக்குமான உணவு உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்கிறார்கள். பிரகீத் காணாமல் போனதன் பின்னர் மூன்று வெளிநாட்டு அமைப்புகள் நிதி உள்ளிட்ட உதவிகளை மூன்று தடவை செய்துள்ளனர். இவற்றிற்கு அப்பால் பிரகீத்தின் சில நண்பர்களிடமிருந்தும் உதவிகள் கிடைத்துள்ளன. இதுவரை இந்த உதவிகளின் அடிப்படையிலேயே நானும் எனது இரண்டு பிள்ளைகளும் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும் நாளைய எமது வாழ்வும் இருப்பும் எமக்கு உத்தரவாதமானதல்ல.

 மிகச் சிக்கலான சமூக அரசியல் பிரச்சினைகளைப் பற்றிய தனது கருத்துக்களை எடுத்துக் கூறியதால் தான், அவர் காணாமற் போயுள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்களா?அல்லது வேறு காரணங்களுண்டா?

media_protest_sri_lanka

எனக்குத் துல்லியமாக இதுவே தான் காரணமென்று கூற முடியாது. ஆனாலும் யுத்த காலத்தில் இலங்கை அரசு வடக்கு வாழ் தமிழ் சமூகத்தை கூட்டாகக் கொலைசெய்யும் நோக்கில் இரசாயன ஆயுதங்களைப் பாவித்தது என்று அவர் எழுதியதை ஒரு முக்கிய காரணமாக என்னால் சொல்ல முடியும். அக்கட்டுரைகளை உரிய அத்தாட்சிகளோடு பல்வேறு குழுக்களிடமும் அவர் சமர்ப்பித்தார். வெளிநாட்டு அதிகாரிகள் வருகை தந்திருந்த இடங்களிலும் அதனை முன்வைத்தார். 2009 ம் ஆண்டில் பிரகீத்தின் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் வெள்ளைவானில் அவரை வதைகூடத்திற்குக் கொண்டு சென்றார்கள். பின்னர் தவறுதலாக அது நிகழ்ந்ததெனக் கூறி பிரகீத் விடுவிக்கப் பட்டிருந்ததையும் இங்கு நினைவுகூரவிரும்புகிறேன்.

 உண்மையான காரணம் இன்னதெனத் தெளிவாகத் தெரியாவிட்டாலும் இரசாயன ஆயுதங்களின் பாவனை பற்றி அவர் எழுதியதும் பேசியதும் இந்த இறுதிக் கடத்தலுக்கும் காணாமல் போதலுக்குமான முக்கியமான காரணமென்றே நான் கருதுகிறேன். அவர் காணாமல் போகும்வரை இரசாயன ஆயுதத் தாக்குதல்கள் தொடர்பாக தொடர்ந்தும் தேடல்களைச் செய்து வந்தார். இது வரையிலும் நான் அறிந்த விடயங்களின் அடிப்படையில் இது தொடர்பாகக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவிலான தகவல்களை பிரகீத் கொண்டிருந்தார். எவ்வாறாயினும் பிரகீத்தின் கேலிச் சித்திரங்களும் அவர் எழுதிய அரசியல் கட்டுரைகளும் அரசின் ஊழல்களை அவற்றின் மூலம் அவர் வெளிப்படுத்திய விதமும் அரசுக்கு எரிச்சலை உண்டு பண்ணியிருக்கும். மாற்றுக் கருத்துக்களை மதிக்காத ராஜபக்ஷ அணிக்கு உகந்தவைகளாக அவரின் ஊடக செயற்பாடுகள் எதுவும் காணப்படவில்லை.

இவை தவிர கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்த் தரப்பில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரச்சார வேலைகளில் அவர் ஈடுபட்டிருந்தமையும் மற்றையதொரு முக்கிய காரணமாகும். இன்றைய காலகட்டத்தில் தெற்கிலுள்ள அதிகமான மக்கள் வடக்கில் சுற்றுலாக்களை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு செல்பவர்களில் சிலர் வடக்கில் நிகழ்ந்துள்ள அழிவுகளைப் பார்வையிட்டபின்னர் யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் இரசாயன ஆயதங்களைப் பயன்படுத்தியிருப்பது பற்றியும் பேசத் தலைப்பட்டுள்ளதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

  கோவணத்தால் முகத்தை மறைப்பதால் உங்கள் வெட்கம் தீராது என்ற கருத்தோடு பிரகீத் தீட்டிய கேலிச் சித்திரம் பிரபலமானது, அது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

prageeth.jpg1சமூகத்திற்கு உன் முகத்தை மறைக்க உன் நிர்வாணத்தை மூடும் ஆடையையா பயன்படுத்துவது என்ற கேள்வி அந்தக் கேலிச் சித்திரத்தில் இருந்தது. யாரும் தன்னைக் காணக் கூடாது என்பதற்காகப் பூனை கண்களை மூடிக் கொள்ளும் அதே முட்டாள்தனத்தையே அரசும் செய்கிறது என்பதை பிரகீத்தின் அந்தக் கேலிச் சித்திரம் சுட்டிக் காட்ட முனைந்தது.அதிகார வல்லமை தனது தவறுகளை மறைக்கும் என்று அரசு நினைக்கிறது. ஆனால் ஏனைய அறிவார்ந்த மனிதர்களுக்கு அவை தென்படுகின்றன.அத்தகைய நிலைமையைத்தான் இன்று நாமும் காண்கிறோம். தனது கண்களை மூடிக் கொண்ட மாத்திரத்தில் மற்றவர்களுக்குத் தனது தவறுகள் தென்படப்போவதில்லையென அரசு கருதுகிறது. அதைக் கண்டவர்களையும், காட்ட முயற்சிப்பவர்களையும்  அரசாங்கம் பிரகீத்தைப் போல காணாமற் போக வைக்கிறது அன்றேல் கொலை செய்துவிடுகிறது

   இலங்கையில் காணப்படும் ஊடக சுதந்திர மறுப்பு பற்றி ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

ராஜபக்ஷ அரசாங்கமானது எல்லா ஊடகங்களையும் தமது அரச மற்றும் ராணுவ பலத்தின் ஆளுகைக்குள் கட்டுப் படுத்தி வைத்துள்ளது. ஊடகத்தினரும் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவோ அல்லது தமது நிறுவனத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகவோ அல்லது தனிப்பட்ட சில சுய இலாபங்களுக்காகவோ அரசுக்குத் துணை போகின்றனர். மிகச் சிறிய அளவிலான குழுவினர் மட்டுமே மாற்று ஊடகச் செயற்பாடுகளுக்கான தமது முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நான் கருதுகிறேன்.

 

இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தற்போது குறைந்துள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்களா? 

இல்லை. மனித உரிமைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்களேகூட பாதுகாப்பற்ற நிலையில் இன்று இருக்கிறார்கள். மக்கள் பிரதி நிதிகள் மீதே உரிமை மீறல்களும் தாகுதல்களும் மேற்கொள்ளப்படுகின்றன காலம் இது. கடந்த தேர்தல் காலத்தில் மக்கள் விடுதலை முண்ணனியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் யாழ்ப்பாணத்தில் தாக்கப் பட்டார்கள். அவர்கள் அங்கு சென்றிருந்த வேளையில் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி மண்டையுடைபட்ட சம்பவத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்களைத் தாக்கியது அரச தரப்பைச் சேர்ந்தவர்களே எனபது பரகசியமான ஒரு விடயம்.

  அரசுக்கு எதிராக எந்ததவொரு சுவரொட்டியையும் இங்கு ஒட்ட முடியாது.எந்தவொரு துண்டுப்பிரசுரத்தையும் விநியோகிக்க முடியாது. இதற்கு உதாரணமொன்றைக் கூற விரும்புகிறேன். கடந்த காலத்தில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் பெண்ணொருவர் மருந்து எடுப்பதற்காக வைத்தியரிடம் சென்ற வேளையில் அப்பெண் வல்லுறவுக்கு ஆளாகி பின்னர் கொல்லப்பட்டார். கொலைசெய்யப்பட்ட உடல் மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இன்று வரையும் அந்த வைத்தியருக்கு எதிராக எந்த வழக்கு விசாரணையும் மேற் கொள்ளப்படவில்லை. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நண்பிகள் குழுவொன்று கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்திற்கு எதிரில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தது. பொலிசார் அதனை நிறுத்தி அவற்றை வழங்கவிடாது தடைசெய்தனர். பொலிசாரின் அழுக்குச் சட்டத்தின் கீழ் எல்லா அரசியல் கட்சிகளினதும் எதிர்கட்சிகளினதும் பொது விடயங்கள் தொடர்பாக ஒட்டப்படும் சுவரொட்டிகளும் அகற்றப் படுகின்றன. அத்தகைய சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் கைதாகிறார்கள். இவர்கள் அனைவருமே சிங்களவர்கள். இது இவ்வாறிருக்கையில் ஏனைய சிறுபான்மை இனத்தவரின் நிலைமையும் உரிமையும் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

சுவரொட்டி சம்பந்தமாக இன்னொரு விசயத்தையும் சொல்ல வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருக்கு ஆதரவானவர்களின் சுவரொட்டிகள் பொலிசாரின் இந்தச் சட்டங்களின் கீழ் தடை செய்யப் படவில்லை. அவை மாத்திரம் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன

  

வடக்கு கிழக்கில் பல தமிழ்ப் பெண்கள் காணமற்போன தமது கணவன்மாரைத் தேடி அலைகிறார்கள். அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளீர்களா?

 

 தனது கணவன் இயற்கையாகவே இறப்பெய்திய மனைவியொருத்தியைவிடவும் கணவன் காணாமற் போன மனைவியின் நிலைமை பரிதாபகரமானது. தந்தையைத் தொலைத்த அப் பிள்ளைகளின் நிலையும் அவ்வாறானது தான். இந்த நிலைமை வடக்கு, கிழக்கு, சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று பேதங்களுக்கு அப்பாற்பட்டது. இந்நிலையில் எல்லோருக்குமே இருப்பது ஒரே துயர் தான். சில சந்தர்ப்பங்களில் நான் பல்வேறு குழுக்களையும் நபர்களையும் சந்தித்துள்ளேன்.அவர்களோடு இது தொடர்பாக கலந்துரையாடியிருக்கிறேன். இது குறித்து மூவினத்தவரும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டுமென்பதே எனது குறிக்கோளாகும். நான் எண்ணும் இக்குறிக்கோளை இலகுவில் சொல்லி விடலாம் ஆனால் நடைமுறைப்படுத்துவது அத்தனை இலகுவானதல்ல. சமூகக் குரல் ஒன்றை ஒன்றிணைந்து எழுப்புவது என்பது இன்றைய சூழலில் அசாத்தியமானது என்றே நினைக்கிறேன். ஆனாலும் என்றோ நாமெல்லோரும் ஒன்றிணைந்து வலுவான அமைப்பொன்றை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அணையாமல் என்னுள் எரிகிறது..

 

அண்மையில் நீங்கள் மேற்கொண்ட ஐரோப்பிய பயணம் பற்றிச் சுருக்கமாகக் கூறுவீர்களா?

எனது ஐரோப்பிய பயணத்திற்கான அழைப்பினை ஷப்ரூ , ஜெகொடம் ஆகிய நிறுவனங்கள் விடுத்திருந்தன. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அவர்களே செய்திருந்தார்கள். அந்த ஐரோப்பியப் பயணத்தை எனக்கான மிகப் பெரிய வாய்ப்பாகவே நான் கருதுகிறேன். மிகக் குறுகிய காலத்தினுள் ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு என்னால் பயணிக்க முடிந்தது. குறித்த நாடுகளில் உள்ள அரச அதிகாரிகளையும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் மற்றும் மாறுபட்ட பல்வேறு தரப்பினரையும் சந்திக்க கூடியதாக அப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சந்திப்புக்களை பிரகீத்தைத் தேடுவதற்காக நான் முன்னெடுத்துச் செல்கின்ற போராட்டத்திற்கான மிகப் பெரிய அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன். நாட்டிற்கு வெளியே உத்தியோகபூர்வமாக அவர்கள் எனக்குப் பெற்று தரும் அங்கீகாரங்கள் அவை. இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக எனக்கு கிடைத்த நட்பு ரீதியான ஆலோசனைகளும் அவர்களின் தோழமை கலந்த ஒத்துழைப்புக்களும் மிகவும் மனிதாபிமானமுடையனவாய் இருந்தன.அந்தத் தோழமைக்கும் மனித நேயத்திற்கும் முன்னே இனம்,மதம்,மொழி என எழும் எந்த வேறுபாடுகளும் குறுக்கே நிற்பதில்லை. இவை என்னை உற்சாகப் படுத்துவனவாகவும் எனக்கு மேலதிக வலுவை தோற்றுவிப்பவையாகவும் உள்ளன. பலத்த சவால்களை எதிர் கொள்ளும் என்னைக் காக்கும் வலுமிக்க அரண்களாக அவை எழுந்து நிற்கின்றன. இதற்கெல்லாம் காரணமான ஷப்ரூ , ஜெகொடம் ஆகிய நிறுவனங்களுக்கும், ஷப்ரூ அமைப்பின் அங்கத்துவர்களின் உழைப்பிற்கும் தியாக எண்ணத்திற்கும் நான் தலை வணங்குகிறேன். 

  

Santhiya prageeth eknaliyakod   Interview  in Sinhalam   interviewd by  Ranji (swiss )  Translation in tamil  Faheemaa Jahan

 

 

 

 

 

 

2 Comments on “இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட அவர்களின் துணைவியார் -“சந்தியா எக்னெலிகொடவுனான” நேர்காணல்…”

  1. இங்கு நடக்கும் சாதி அரசியல் விவாதத்துக்கும் இப்போது சொல்லப் போகும் விசயத்துக்கும் தொடர்பில்லை என்றாலும் சோபாசக்தி , டக்ளஸ் தேவானந்தா பெயர்கள் இங்கு அடிபடுவதால் இதையும் ஒரு தகவலுக்காக சொல்லிவைக்கிறேன். டக்ளஸ் தேவானாந்தாவின் ஈ.பி.டீ.பி. கட்சிய…ினால் நடாத்தப் படுகின்ற உத்தியோகபூர்வ பத்திரிகையான தினமுரசு பத்திரிகையில் சோபாசக்தியின் கட்டுரைகள் அடிக்கடி வெளிவரும். நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் ஒரு விவாதத்தின்போது சோபாசக்தியிடம் ஒரு நண்பர் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியின் சாராம்சம், ”இலங்கை அரசுக்கு சார்பான ஒரு அச்சு ஊடகத்தில் உங்கள் கட்டுரைகள் வெளிவருகிறதே….அப்படியானால் இலங்கை அரசாங்கத்தை எதிர்க்கிறேன் என்ற உங்கள் வாதத்தை எப்படி எடுத்துக்கொள்வது?” என்றிருந்தது. (அந்த கேள்வி பதில்களின் ஒரிஜினலை அப்படியே எடுத்துத் தர முடியாமைக்கு மன்னிக்கவும் ) அதற்கு சோபாசக்தி சொன்ன பதிலின் சாராம்சம் ”தினமுரசில் வெளிவரும் எனது கட்டுரைகள் என்னிடம் கேட்காமல் பிரசுரிக்கப்படுகிறது. நான் அவற்றை அனுப்பவில்லை. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை” என்றிருந்தது. (அத்தோடு கேள்விகேட்ட அந்த நண்பரை தனது Facebook நண்பர்கள் பட்டியலில் இருந்து சோபாசக்தி உடனடியாக நீக்கிவிட்ட என்பது மேலதிக தகவல்.) அப்படியானால் தினமுரசு, சோபாசக்தியின் கட்டுரைகளை சுட்டுப் போடுகிறதா? பிஸ்கோத்து மேட்டருக்கே கூவிக் கூச்சலிடும் சோபாசக்தி, அவரது எழுத்துக்களையே அவரது அனுமதியில்லாமல் பிரசுரிக்கும் பத்திரிகைக்கு ஒரு எதிர்ப்புக்கூடவா காட்டாமல் இருக்கிறார்? தன் எழுத்துக்களுக்கே copyrights இல்லாத ஒரு எழுத்தாளனா? இதே திருட்டுத்தனமும், திருட்டு மௌனமும்தான் அண்மையில் நடந்த கொழும்பு எழுத்தாளர் மாநாடு வரை தொடர்ந்தது. இனியும் தொடரும். உமா ஷநிகவின் பெயரை அவரது அனுமதியில்லாமலேயே எழுத்தாளர் மாநாட்டுக்கு ஆதரவான அறிக்கையில் சேர்த்திருக்கிறார் சோபாசக்தி. உமா ஷநிக வெளிப்படையாக இதைப் போட்டுடைக்க, ” ராகவன் தான் உமாவின் பெயரை பட்டியலில் சேர்க்கச் சொன்னார். அதுதான் நான் உங்கள் பெயரை சேர்த்தேன். ஒருவேளை அவர் வேறு உமாவை சொனாரோ தெரியாது” என்று மழுப்பியிருக்கிறார். மாநாட்டுக்கு ஆதரவானவர்களின் அறிக்கையில், இவர்கள் எல்லாம் கையொப்பம் வைத்திருக்கிறார்கள் என்றுதான் முதலில் அறிவிக்கப் பட்டது. பின்னர்தான் தெரிந்தது பலரது கையொப்பம் வேறு யாராலோ வைக்கப்பட்டது என்று. ”கேக்கிறவன் கேனையனா இருந்தா….” என்ற பழமொழி அடிக்கடி கேட்டும் பார்த்தும் புளிச்சுப்போச்சு…..வேறு பழமொழிகள் தேடிக்கொண்டிருக்கிறேன்….யாராவது உங்களுக்குத் தெரிந்தால் நல்ல பழமொழி சொல்லுங்கள் நண்பர்களே….http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12472&Itemid=263

  2. நல்ல நேர்காணல் இதைத்த தந்த ஊடறுவுக்கும் எனது நன்றிகள் பிரகீத் காணாமல் போய் ஒருவருடமாகின்றன. ஆனால் அவர் எங்கே என்று தெரியாமல் எல்Nலூரும் தவிக்கிறார்கள் இந்த நேரத்தில் ஊடறு ஒரு நேர்காணலை எடுத்துள்ளது மிகப்பொருத்தமானது. இங்கு ஒன்றை நான் நினைவு கூற விரும்புகிறேன். அண்மையில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாடுட்டுக்கு கையொப்பமிட்டவர்கள் ஊடகவியாளாளர் பிரகீத்தை கண்டுபிடித்து தர முயற்வசி செய்:வார்களா? இல்லை இது தான் உடக சுதந்திரம் என்று முனகுவார்கள். இதில் எனக்கு ஒரு வருத்தம் இவர்கள் எல்லாம் தங்களை ஊடகவியலாளர்கள் என்று நினைத்துக் கொண்டு பெரிய விடுகை விடுவது தான் உதாரணமாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *