யாழ்ப்பாணத்து மாணவி ஒருவர் கைப்பட எழுதி கேள்வியொன்றை அனுப்பினார்.கேள்வி இதுதான்

– மணா -இந்தியா (நன்றி நட்பு)

eelapathivu5

தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் எந்தவிதமான கண்காணிப்பு நிகழ்ந்தது? அதனால் பல செய்திகள் வர இயலாத சூழல் எப்படித் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது? என்பதையும் சொன்னபோது கேட்டுக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்து மாணவி ஒருவர் கைப்பட எழுதி கேள்வியொன்றை  அனுப்பினார்.
கேள்வி இதுதான்

”ஈழப்பதிவுகளுக்கு தமிழக ஊடகங்களில் இடமில்லை. ஆபாசத்திற்கு மட்டும் தாராளமான இடம் ஏன்?” – சுடும் உண்மை சமீபத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்தைப் பற்றிய நிகழ்வு. அதில் பங்கேற்க வந்திருந்தவர்கள் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஊடகவியல் மாணவ, மாணவியர் என்பதுதான் இந்த நிகழ்வின் சிறப்பு. இலங்கை இனஅழிப்புக் கொடுமைக்குப் பிறகு அங்கிருந்து வந்திருக்கும் மாணவர்களைப் பார்த்துப் பேசுவது என்பதே தமிழக ஊடகம் சார்ந்தவன் என்கிற முறையில் ஒருவிதத்தில் அந்நியமாக இருந்தது.
 

eelapathivu1

நம்மைப் போலில்லை அவர்களுடைய இயல்பான வாழ்க்கை. போர்ச்சூழலும். ஊரடங்கு அறிவிப்புகளும்,  சொந்தங்களின் மரணங்களும், மொழியை முன்வைத்த துவேசம் காட்டும் அரசின் இறுக்கம் என்று வாழ்வின் உக்கிரமான பலவற்றை அனுபவித்த மக்களின் பிரதிநிதிகளாக வரும் மாணவர்களைச் சந்திக்கும்போது அவர்களை மீறிய எந்த அனுபவத்தை இங்குள்ள ஊடகம் சார்ந்தவர்களால் சொல்லிவிட முடியும்?

இந்தத் தயக்க உறுத்தலுடன் – தமிழகத்தில் உள்ள காட்சி ஊடகங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் ”உங்கள் வாழ்க்கையின் உக்கிரத்தைப் பதிவு செய்யத் தவறிய குற்ற உணர்வுடன் உங்களுக்கு முன்னால் பேசுவதற்கு வெட்கப்பட வேண்டியிருக்கிறது” என்றுதான் அவர்களுக்கு முன்னால் மென்மையாகப் பேச ஆரம்பித்தேன். வேறு எப்படித் துவக்க முடியும்? தமிழகத்தில் காட்சி ஊடகம் என்கிற வலிமையான கருவிகள் எப்படிப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைப் பல அனுபவங்களுடன் விவரித்தேன். ஈழப் பிரச்சினையைப் பொறுத்தவரை மத்திய அரசின் நிலை ஒருசார்புடன் இருந்த நிலையில் – தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் எந்தவிதமான கண்காணிப்பு நிகழ்ந்தது? அதனால் பல செய்திகள் வர இயலாத சூழல் எப்படித் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது? என்பதையும் சொன்னபோது கேட்டுக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்து மாணவி ஒருவர் கைப்பட எழுதி கேள்வியொன்றை  அனுப்பினார்.கேள்வி இதுதான்.

 ‘

eelapathivu2

‘ஈழத்தில் எத்தனையோ கொடூரமான நிகழ்வுகள் நடந்தபோதும், மிகச் சமீபத்தில் இலங்கை ராணுவம் செய்த கொடுமைகளை ”சேனல் 4” போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியபோதும் தமிழகத்தில் உள்ள பல தொலைக்காட்சி சேனல்கள் அவற்றை ஒளிபரப்பாதது ஏன்? வெறும் கேளிக்கையும், ஆபாசமுமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருப்பது எதனால்?” தமிழகத்தில் ஊடகத்தில் பணியாற்றுபவர்களின் மனச்சாட்சிக்கு முன்னால் தொடுக்கப்பட்ட நியாயமான கேள்வி. அதில் கொஞ்சமாவது சமூக அக்கறை உள்ளவர்களை மனம் குமையச் செய்கிற கேள்வி.

 

“ஒன்றை மட்டும் முதலில் சொல்லவேண்டும். இங்கிருப்பது தமிழ், தமிழன் மீதான அசலான அக்கறை அல்ல. அக்கறை இருப்பதைப் போன்ற பாவனை. அதைத்தான் குறிப்பிட்ட இயக்கங்களும் செய்கின்றன. அதே பார்வையுடன் இருக்கும் ஊடகங்களும் செய்கின்றன. ஊடகங்கள் சில பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கும் நோக்கம் இருக்கிறது. பேசாமல் மௌனமாக இருப்பதற்கும் நோக்கம் இருக்கிறது. அரசியல் பின்புலம் இருக்கிறது. இது ஏன்? தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களைப் பற்றிய ஆய்வுக்காக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டிற்கு நானும், நண்பர் ஒருவரும் போயிருந்தோம். போய் இறங்கி அங்குள்ள இந்தியத் தூதரான வங்காளியைச் சந்தித்தபோது அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். ”இது அதிகபட்சமான ‘தணிக்கை’ அமல் செய்யப்பட்ட நாடு. அதனால் தொழிலாளர்களைக் கவனமாகச் சென்று பாருங்கள். இல்லை என்றால் உடனே கைது  பண்ணிவிடுவார்கள்” என்று. 

 அதையும் மீறித்தான் அங்கு சில நாட்கள் தங்கி பல பகுதிகளில் மிக மோசமான நிலையில் வைக்கப்பட்டிருந்த தமிழகத் தொழிலாளர்கள் பலரைச் சந்தித்துப் பேசினோம். சாலைகளின் நடுவே துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை, வெக்கை கனக்கிற இடங்களில் தங்கியிருந்த தொழிலாளர்களைச் சந்தித்தோம். தமிழர்களில் பலர் அடுத்தடுத்துக் காணாமல் போனதாகச் செய்திகளும் அங்குள்ள நாளிதழ்களில் வெளிவந்து கொண்டிருப்பதையும் பார்த்தோம். சுமார் முப்பதாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த நாட்டிற்கும் திரும்ப வழியற்று, பாஸ் போர்ட்கள் முடக்கப்பட்டு, வெதும்பிப்போய் வாழ்வதைப் பார்த்து அதிர்ந்து போனோம். சிலர் கண்ணீர் விட்டு அழுததையும் வேதனையுடன் பார்க்க முடிந்தது.

 

தேசமயம் அங்குள்ள மலையாளிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை வெளியிட அங்கு மலையாள சேனல்கள் இருக்கின்றன. நாளிதழ்களும், வார இதழ்களும் இருக்கின்றன. உடனே அங்கு வருகை தர கேரள அமைச்சர்கள் தயாராக இருக்கிறார்கள். எங்கோ இருந்து உழைத்துத் தன்னுடைய நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தங்களுடைய மாநிலத் தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நாடு கடந்தும் அவர்கள் பதறுகிறார்கள். செயல்படுகிறார்கள்.நாடு கடந்து போய் நாங்கள் எடுத்துவந்த தமிழகத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளியிட பல முன்னணி இதழ்கள் வெளியிட முன்வரவில்லை. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத்தலைவர் உள்ளிட்ட பலருக்கு பிரச்சினைகளை அறிக்கையாக அனுப்பியபோது – குளத்தில் கல்லெறிந்த சத்தம்கூடக் கேட்கவில்லை. இறுதியில் ஒரு நடுநிலை இதழில்தான் அந்தக் கட்டுரையை என்னால் வெளிக்கொண்டுவர முடிந்தது.இங்கும் தமிழகத் தொழிலாளர்கள் மூலம் அந்நியச் செலாவணி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அதை அனுப்பித் தருகிற தமிழர்களின் மிக மோசமான நிலைமையைக் கண்டுகொள்ளக்கூட இங்கு மனமில்லை.தமிழகத்தில் இருந்து சென்ற தமிழர்களின் துக்கங்களுக்கு இதுதான் மரியாதை. இவர்களுக்கே இந்த நிலை என்றால் தமிழக அரசியல் கட்சிகளால் மாற்றி மாற்றி வெவ்வேறு விதமான பார்வைகளை முன்வைக்கும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை ஒட்டி முடிவெடுக்கும் தமிழக மக்கள் ஈழத்தமிழர்கள் பற்றி என்ன முடிவெடுக்க முடியும்? அவர்கள் பார்க்கிற ஊடகங்கள் வழியாக – அவர்கள் நம்பும் தலைமை வழியாக – வந்தடையும் செய்திகள் வழியாகத்தானே அவர்கள் தங்களுக்குள் ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்?

ஈழப் பிரச்சினையில் வட இந்திய தொலைக்காட்சி சேனல்கள் ஒன்றைக் கொடுக்க தென்னிந்திய தொலைக்காட்சிகள் ஒன்றைக் கொடுக்க அதில் எதை நம்புவது? எதைத் தவிர்ப்பது? என்பதைக் கூட

இங்குள்ள தமிழ் மக்களால் முடிவு செய்ய முடியவில்லை. அவர்களைத் தெளிவுபடுத்தும் பணியை எந்த ஊடகங்களும் செய்யவில்லை. இதுதான் உறுத்தக்கூடிய உண்மை. பக்கத்து நாட்டில் நடந்த மிகக் கொடூரமான இன அழிப்பைப் பதிவு செய்யாத ஊடகங்கள் எப்படி ஆபாசத்தை அனுமதித்துக் கொண்டிருக்கின்றன என்று நீங்கள் கேட்கிற கேள்வி மிக நியாயமானது. ஆனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் கேட்கத் தவறியதும் கூட. யதார்த்தத்தை வெளிப்படுத்துவதைவிட எதை நோக்கியோ திசைதிருப்பும் காரியம்தான் ஆபாசத்தை ஒளிபரப்புவதன் மூலமாக நடக்கிறது. அதைப் பார்ப்பதன் மூலம் தொடர்ந்து ஒருவிதக் கிளர்ச்சி பார்ப்பவர்களுக்கு உருவாகிக்கொண்டிருக்கிறது. பக்கத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. அதன் வெக்கை நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் பக்கத்தில் பயாஸ் கோப்பில் ஆபாசமான ஒன்றைப் பார்க்கும் மனிதர்களாக நம்மை மாற்றியமைத்திருக்கிறார்கள். நாமும் அதற்கு மறைமுகமாக இசைந்து கொண்டிருக்கிறோம். 

 இங்கு எதை அனுமதிப்பது என்பதிலும் திட்டமிட்ட அரசியல் இருக்கிறது. எதை அனுமதிக்கூடாது என்பதிலும் திட்டமிட்ட அரசியல் இருக்கிறது. இது தான் இங்குள்ள நிலைமை”  என்று பேசி முடித்ததும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருந்த மாணவர்கள் நெருக்கத்துடன் வந்து பேசினார்கள். ”தமிழக ஊடகங்களைப் பற்றிய கடுமையான விமர்சனமும், கோபமும் எங்களிடம் இன்னும் இருக்கிறது. இப்போது நீங்கள் பேசியது எங்கள் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது” என்றார்கள் மிருதுவாக. நம் தரப்பிலான உண்மை எப்படியெல்லாம் சுடுகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *