பகுதி 1

பெண்கள் கைகோர்த்து எந்த விடயத்தைச்செய்தாலும் அது ஆக்கபூர்வமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்தது ஊடறு- பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலுமாகும். எல்லாவிதமான அதிகாரவெளிகளுக்குள்ளும் கட்டுண்டு கிடக்கும் பெண்ணுக்கான கட்டுடைப்பை, விடுதலையை, சமத்துவத்தை முதன்மை நோக்கமாகக்கொண்டு செயலாற்றித் தனது இருபது வருடங்களைப் பூர்த்திசெய்துள்ள ஊடறு, தனது பெண்நிலை சந்திப்பினை இம்முறை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் 15, 16 ஆகிய இரு தினங்கள் நடாத்தியது. இந்தியா, தாய்லாந்து, இலங்கையின் பல பாகங்கள் ஆகியவற்றிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், சட்டத்தரணிகள், இளம் தலைமுறையினர், பெண் ஆளுமைகள், மாற்றுத் திறனாளிப் பெண்கள், திருநங்கைகள், பொதுநிலையினர் ஆகியோர் ஒரே குழுமமாய் இணைந்து ஆய்வரங்குகள், அனுபவப்பகிர்வுகள், நிகழ்த்துகைகள், முன் வைப்புக்கள், கலந்துரையாடல்கள் முதலானவற்றைச் சந்திப்பு முழுவதும் நிகழ்த்தியிருந்தனர்.



ஊடறுவின் இருபது வருட வாழ்வு மற்றும் பயணப்பாதை ஆகியவற்றை உள்ளடக்கி ரஞ்சி, சந்திரலேகா கிங்ஸ்லி, சரோஜா சிவச்சந்திரன் ஆகியோரால் வெவ்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்ட உரைகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. ஊடறு பதிப்புக்கள், ஊடறு இதழ்கள், ஊடறு களச் செயற்பாடுகள் முதலானவை பற்றியும் இளம் தலைமுறையினரும் மாணவிகளும் பேசினர். நிகழ்வு, மாற்றுத் திறனாளிகளாயிருந்த முன்னைநாள் பெண் போராளிகளினது பாட்டாலும் கூத்தாலும் கும்மியாலும் நெகிழ்ச்சி கொண்டது. போருக்குப் பின்னர் மீண்டெழமுடியாதிருந்த இன்னும் முள்ளாய்த் உறுத்திக்கொண்டிருக்கின்ற, முன்னைநாள் பெண் போராளிகளின் உள மற்றும் சமூகச் சிக்கல்களை அது காட்சிப்படுத்தியதுடன் அவற்றுக்கு மத்தியில் அவர்கள் மீண்டெழ முயன்றுகொண்டிருப்பதையும் அரங்க அளிக்கையாய் கொண்டு வந்தது. தொடர்ந்து இடம்பெற்ற, சிந்து குழுவினரது உத்தரை வரவுப் பாடல் என்னும் கூத்துக் காட்சி, கூத்துக்களில் பெண் பாத்திரவார்ப்புக்களை மீட்டுருவாக்குவதன் தேவைப்பாடு பற்றியும், மீட்டுருவாக்குவதாயும் அமைந்திருந்தது. அரங்கியல் செயற்பாட்டாளர் யாழினி இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்திருந்தார்.
பகுதி 2







ஆய்வரங்குகள் அரசியல், சமூகம், சமூக நிறுவனங்கள், சட்டம், கலை இலக்கியம் முதலான துறைகளில் பெண்களின் இருப்பையும் வெளியையும் ஆய்வுக்குட்படுத்திய, ஆய்வு அளிக்கைகளை உள்ளடக்கியனவாய் அமைந்திருந்தன. பெண்ணின் வாழ்வும் இருப்பும் எவ்வாறெல்லாம் கேள்விக்குள்ளாகின்றன எனவும் அவற்றை ஊடறுக்க வேண்டிய அவசியத்தையும் இவ்வாய்வுகள் முன்னெடுத்துச்சென்றன. பெண் எழுத்தாளர்கள், களப்பணியாளர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள்,ஆசிரியர்கள், துறைசார் நிபுணர்கள், பெண் அரசியல் செற்பாட்டாளார்கள், மாணவிகள் முதலானோர் அவ்வாய்வரங்குகளில் ஆய்வுகளை நிகழ்த்தியதுடன் தலைமையும் வகித்தனர்.
புதிய மாதவியின் பெண் மொழியும் பெண் எழுத்தும் பற்றிய ஆய்வு, விஜயலட்சுமியின் சிற்பங்களில் பெண்கள் பற்றிய ஆய்வு, கல்பனாவின் பெண்ணியத்தின் பன்முகத்தன்மை பற்றிய ஆய்வு, வைதேகியின் சமூக மேம்பாட்டில் பெண்களின் சுயநிர்ணயம் பற்றிய ஆய்வு, சபானா குல் பேகத்தின் இலங்கையின் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் இடைவெளிகளும் திருத்தங்களும் சவால்களும் பற்றிய ஆய்வு, வைஸ்ணவியின் பெண்கள் எதிர்கொள்ளும் சட்டச்சிக்கல்கள் பற்றிய ஆய்வு, ஆவணப்படுத்தல் மற்றும் பெண் ஆவணப்படுத்தல் தொடர்பான றஞ்சுதமலர் நந்தகுமாரின் ஆய்வு முதலான பல ஆய்வுகள் கனதியானவையாகவும் குறிப்பிடத்தக்கவையாக அமைந்ததுடன் அவை பெண், பெண்நிலைவாதம் பற்றிய பல திறப்புக்களையும் வழங்கின.
நான் இலங்கைப் பல்கலைக்கழகங்களும் பால்நிலைசமத்துவமும் பற்றி ஆய்வு நிகழ்த்தியிருந்தேன். திருநங்கைகள், ஊடகத் துறையினர், அரசியல் செயற்பாட்டாளர்கள், களப்பணியாளர்கள்,சமூக ஆர்வலர் ஆகியோர் பெண்களாகத் தத்தம் துறைகளில் எதிர்கொள்ளும் சவால்களை அனுபவப் பகிர்வுகளாக முன்வைத்தனர். குறிப்பாகத் திருநங்கைகள் தமது சமூக மற்றும் உளப் போராட்டங்கள் பற்றிப் பேசியதுடன் இலங்கையில் திருநங்கைகளுக்கான பாலினப் பதிவு நடைமுறைகள், மருத்துவ உதவிகள் பெற்றுக்கொள்வதிலுள்ள தாமதங்கள் மற்றும் பிரச்சினைகள், சுய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்ள வேண்டியதன் அவசியம் முதலான விடயங்களைத் தெளிவுபடுத்தியதுடன் திருநங்கைகள் பற்றிய முற்கற்பிதங்களை, சந்தேகங்களைக் களையவும் துணைபுரிந்தனர்.
அனுதர்சியின் தலைமையில் நடைபெற்ற பெண்களின் ஊடகவெளி என்னும் அனுபவப் பகிர்வானது திரைத்துறையைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள் மீதான நெருக்கடிகளை லிப்சியாவின் அனுபவம் வாயிலாகப் பேசின. சௌமியாவின் புகைப்படங்கள் இவ்வரங்கில் காட்சிப்படுத்தப்பட்டதுடன் நரம்பியல் பயிற்றுனர் கோகிலாதர்சனியின் பயிற்றுவிப்பும் நிகழ்ந்தது. அரசியல் வெளியில் பெண்களின் பங்குபற்றுதலை அதிகாரக்கட்டமைப்பைப் பற்றி சுரேகா உள்ளிட்டோர் தமது அனுபவங்கள் வாயிலாகப் பேசினர்.
பகுதி 3

மலையகப் பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவனவாக வானம் இருக்கும் என்னும் ஓராள் அரங்கும், தர்சிகாவின் கசிவு என்னும் குறுந்திரைப்படமும் அமையப்பெற்றிருந்தன. மத்திய கிழக்குக்குப் பணிப்பெண்ணாய்ச் செல்லும் மலையகப் பெண்களின் இருண்ட வாழ்வையும் அவற்றுக்கு மத்தியில் மீந்திருக்கின்ற விடுதலை வேட்கையையும் லீலாவதியின் தத்ரூபமான நடிப்பில் வானம் இருக்கும் என்னும் ஓராள் அரங்கு அளிக்கை செய்யப்பட்டிருந்தது. மலையகப் பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதாய்க் கசிவு என்னும் குறுந்திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டதுடன் இவை பற்றிய கேள்விபதில்கள் மலையகப் பெண்கள் தொடர்பான மேலதிக கலந்துரையாடல்களுக்கும் வாய்ப்பாயிருந்தது.
சட்டத்தரணி சிநேகாவின் நடிப்பினூடாக அளிக்கை செய்யப்பட்ட மற்றுமொரு ஓராள் அரங்கு பெண் உடல் அரசியலைப் பேசியது. சண் நாடக குழுவின் என்ன வென்று சொல்வேனடி நாடகம் நகைச்சுவை அரங்காக அமைந்தது. ஊடகத்துறையில் கற்கும் யாழ்ப்பல்கலைக்கழக மாணவிகள் இந்நிகழ்ச்சிக்கான முழு ஒளிப்பதிவுகளையும மிக நேர்த்தியாகச் செய்திருந்தனர். இறுதியாக திசாவின் ஒருங்கிணைப்புடன் பெண்ணிலைவாதமும் சமூக நடைமுறைச் சிக்கல்களும் என்னும் உரையாடலும் இடம்பெற்றிருந்தது.
பல பெண் ஆளுமைகளையும், இளம் தலைமுறையினரையும், மாணவிகளையும், பொது மனுசிகளையும் ஊடறு என்னும் ஒருபுள்ளியில் இணைத்த, இப்பெண்ணிலைவாத சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் மிகக் காத்திரமான ஒன்றாக அமைந்திருந்துடன் இந்த இணைப்பினை மகிழ்ச்சியாக மேற்கொண்ட தோழி ஊடறு ரஞ்சி அவர்கள் பாராட்டுதலுக்கும் வாழ்த்துதலுக்குமுரியராவார்.
பெண்களைப் பாசறையமைக்க வைத்து சந்திப்பும் உரையாடலும் நிகழ்த்துகையுமாய் நிகழ்ந்த இந்நிகழ்வு ஒன்றுகூடிய பெண்கள் யாவருக்கும் சிந்தனை வீச்சின் பெருக்கத்தையும் அதிகார ஒடுக்குதல்களிலிருந்து மீண்டெழுகின்ற புத்துணர்ச்சியையும் இன்னும் சில நாட்களுக்காவது நிச்சயம் அளிக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.