தாய் தெய்வங்களின் ஆயுத எழுத்து – அன்பாதவன்

நூல்ருசி 0 அன்பாதவன் ஃகவிதைகள் 0 புதியமாதவி

“கவிதையை உணர்ந்து கொள்வதும் வாழ்வின் பொருளை உணர்ந்து கொள்வதும் ஒன்றுதான். படைப்பின் இரகசியமும் அதுவே. என்றாலும் உணர்ந்து கொள்வது என்பது தனிப்பட்ட ஒவ்வொருவரையும் சார்ந்த விஷயம்.உண்மையோடு உறவுவைத்துக் கொள்ளாத எதுவும் படைப்பு ஆவதில்லை. கவிஞனின் படைப்பு உண்மையைத் தவிர வேறு எதையும் கொண்டதில்லை.” மா.அரங்கநாதன்

”புதியமாதவி சுயமரியாதையை சிறகடிக்கும் எந்த ஒன்றுக்கும் தன்னைச் சமரசப்படுத்திக் கொள்ளாத சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறவர்.மண்ணையும் ப்ண்ணையும் பின்னிய நமது பண்பாட்டுச் சூழலையும் அதற்கெதிரான ஆண்மைய அரசியலையும் அவற்றின் தொன்மம் தொடு அறிந்தவர்.அதற்கெதிரான அரசியலை அழுத்தத்துடன்  முன்வைப்பவர்”- மிகச் சரியாக கவிஞர் பழனிபாரதி எம் இனியத் தோழமை புதிய மாதவி குறித்த கோட்டோவியத்தை தீட்டி இருக்கும் பின்புலத்துடன் தான் கவிதைநூலுடன் பயணித்தேன்.

“’கவிதை’ என்ற சொல்மீது கவனம் குவிகிறது. சொல்தான் புதிதே தவிர கவித்துவம் அன்றும் இன்றும் இருப்பதே. கவிதை எப்போது உரைநடைக்கு வந்ததோ அப்போதே கவிதைக்கான பொதுவான இலக்கணம் விடைபெற்றுவிட்டது. இலக்கணம் எப்போது விடை பெற்றுவிட்டதோ அப்போதே கவிதை ஆக்கத்திற்கு அதிகமான பொறுப்பு வந்துவிட்டது. உரைநடைக்குள் கவிதை வந்த பிறகு தான் எழுதியதைக் கவிதை என்று நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் படைப்பாளிக்கு வந்துவிட்டது. இந்த அவசியம்தான் கவிதைமீதான சர்ச்சைகளும் இதுதான் கவிதை என்று உரக்கப் பேசுகிற சப்தங்களும் உருவாகக் காரணம், இது கவிதை என்று யார் முடிவு செய்வது அல்லது எவை முடிவு செய்கின்றன? இந்தக் கேள்வியை எளிதில் கடந்துவிடலாம். நமக்கு மிகவும் பரிச்சயமான கவிதை ‘எந்தக் கவிதை இலக்கணத்தில் இருக்கிறது?’ என்றா யோசிக்கிறோம். கவிதைகள் வாசகனின் விருப்பமாக, தேர்வாக இருப்பதற்குக் காரணம் ஒவ்வொரு கவிதையும் ஒரு முழுமையில் அமர்ந்துவிடுகிறது. அதாவது வாசிக்கும்போது அதற்கான உருவமும் உயிரும் வந்துவிடுகிறது. இந்தச் சுயமே,தனித்த அடையாளமே கவிதையின் வண்ணம். இந்த வண்ண ஈர்ப்புதான் வாசகனைக் கவர்கிறது. ஆக, கவிதைக்கான இலக்கணத்தைக் கவிதைகளே தேர்வு செய்துவிடுகின்றன.”-[க.வை.பழனிசாமி,கவிதையின் அந்தரங்கம் ப.87]

புதிய மாதவியின் பல கவிதைவரித் துண்டுகள் படைப்பாளியின் சமூக அக்கறையின் மூலவித்தாக இருப்பதை உணர முடியும். வரிகளின் உள் பொதிந்த சூக்குமங்கள் வாசக அதிர்ச்சியை கூட்டுவதும் நிஜம் என்பேன்.

தொன்மத்துண்டுகள் கலந்துருவாகும் கலைடாஸ்கோப் காட்சிகளில் சமகால நிகழ்வுகள் கவிதையாகிள்ளதும் நிகழ்கிறது.  தொன்மங்களின் மீது புதிய மாதவியின் எடுத்துக் கொள்ளும் அதீத சுதந்திரம் படைப்பாளியின் புரிதலை தாண்டி வாசகப் புரிதலுக்குள் ஒருவித மயக்கத்தை நிகழ்த்த மிகச்சரியாக தொன்மங்களை சமகாலத்துடன் இணைக்க முடியாத சூழல் சில கவிதைக் கணங்களில் இருந்து வாசகனை வெளியேறவும் நிர்பந்திக்கிறது .அதேநேரம் புதிய மாதவியின் வரிகளில் கூடு கட்டி இருக்கும் தொன்மங்களும் இதுகாரும் வாசகனுக்கு கற்பிக்கப்பட்ட தொன்மங்களும் கலக்கையில் புதியதொருக் காட்சிப் பிறக்கக் ,கவிதைக்குச் சிறகுகள் முளைத்து புதியத் திசையில் பறந்து செல்வதையும் கண்ணுற முடிகிறது

யட்சி, சமணத்தின் தொன்மமெனில் ’பச்சையம்மன்’ சிறுகுடியொன்றின்  குலதெய்வம் என்கிர பண்பாட்டு செய்திகளும்  படைப்பாளிக்கு புரிய வேண்டும்

’தவ்வையை விரட்டியவன் யாரிங்கே ?

மூதேவியென தெற்கு மூலையில்

கிடத்தியவன் யாரிங்கே ..?

_ மூத்த தேவியின் சக்தி இவ்வளவுதானா இந்த தொன்மக்கலவை காட்டும் காட்சி பல கவிதைகளிலும் காணப்படுவதால் நேர்கோட்டு புரிதலில் புதிய மாதவின் கவிதைகளை அணுகுவதை விடவும் அவர் காட்டும் கவிதை கங்குகளின் மின்னலில் மாணிக்க பரல்களை தரிசிக்கக்கூடும் வாசகன்.

படைப்பிலக்கியத்தின் பன்முகங்களான கவிதை கதை நாடகம் புதினம் கட்டுரை என எல்லாவற்றிற்கும் அடிப்படை வாசல் வார்த்தைகளும் வாக்கியங்களும் தாம்.

 மனிதரோடு மட்டுமின்றி இயற்கையின் அங்கங்களான விலங்கு தாவரம் என எதுவோடும் தொடர்பு கொள்ளும் மொழியின் கருவியை வார்த்தைகள் தான் நமக்கு வசதியானவையாக நடைமுறையில் உள்ளன அதே நேரம் வார்த்தைகளின் வாக்கியங்களின் அதீதங்களும் உணர்த்தவே இயலா ஒன்றினை மௌனம் மிக எளிதில் கடத்தி விடுகிறது உணர்த்தி விடுகிறது துக்க வீடுகளில் நிகழும் தொடுகை அறிவோம் சொல்லாதென சொல்லும் வலிமையான மொழியது. 

கவிதையின் அழகு அதன் சுருக்க செரிவான நுட்ப மொழியில் தான் இருக்கிறது ஆனால் ஒரு நாள்லினியர் நாவலுக்கான அத்தியாயங்களை கவிதைகளாக்கி நல்லதொரு புதினத்தை இழந்து விட்டோமா என்ற கேள்வியும் எழுகிறது

பகல் வேட்டை’ [ப 39] கவிதையில் என்உன் களை நீக்கி வாசிக்க மிகச்சிறந்த குறியீட்டுக் கவிதை வாசகனுக்கு கிடைத்து விடுகிறது.

எச்சம்[ப 44] நல்லதொரு நவீன நாடகப் பிரதியாய் மலர வேண்டியது. நூலில் பல கவிதைகள், சிறுகதைகள் மற்றும்  நாடகப்பிரதிகளாய் அலர வேண்டியவை. மனதில் ஊறும் எல்லா சிந்தனைகளையும் கவிதைகளாக தான் வடிப்பை என்பது கூட படைப்பாளியின் மூடநம்பிக்கை தான்.

 ”தகத்தக தகத்தக தகவென

ஆடும் காற்றில்

 நான் நீ காலம் “ (ப.29)-

இந்தக்கவிதை வரிகள் காட்டும் படிமக்காட்சி சொல்லாதன சொல்வது.

புதிய மாதவியின் கவியாக்கங்கள் ஆட்டோ ரைட்டிங் எனும் உத்தியைச் சார்ந்தவை எனலாமா ..? காரணம் மீமெய்யியல் பாணியில் புள்ளி மான்களாய் துள்ளி மறையும் கவிதைக்கணங்களை வாசகன் வெகு கவனத்தோடு ரசிக்க வேண்டியிருக்கிறது , உள்வாங்க வேண்டி இருக்கிறது .

.படைப்புக்கும் பிரம்மத்துக்கும் நடுவில்

வெந்து தணியுமோ காடு’[ ப. 21 ]என்ற வரி ,பிரம்மம் தானே படைப்பின் கடவுளாய் கட்டமைக்கப்பட்டது எனில் பிரம்மம் வேறு படைப்புகு வேற என்றொரு கேள்வியை எழுப்புகிறது

”தொன்மப்பாத்திரங்ளும் வரலாற்றுப் பாத்திரங்களும் இலக்கியப்பனுவலாக்கத்திற்கான கச்சாப் பொருட்களாக இருப்பது எல்லா மொழிகளிலும் காணப்படுகின்ற பொதுத்தன்மை. அவற்றைத் தங்களின் சமகாலத்துப் பார்வையோடு மறுவிளக்கம் செய்வதில் எழுத்தாளர்களின்/ கலைஞர்களின் திறமையும் சமகாலப்புரிதலும் வெளிப்படும். ஒரு தொன்மப்பாத்திரத்தை நிகழ்காலத்திற்குரியதாக மாற்றும்போது எழுத்தாளர்கள் அவரவர் சார்பு நிலைக்குள் நின்றே பேசுகின்றனர். மரபின் ஆதரவாளர்கள் அந்தப் பாத்திரங்களைப் புனிதப்பாத்திரங்களாகக் கட்டமைக்க நினைக்கிறார்கள். ஆனால் நவீனத்துவத்தை உள்வாங்கியவர்கள் தொன்மங்களின் மீதும் வரலாற்றின் மீதும் நவீனத்துவத்தைப் பாய்ச்சுகிறார்கள். அவற்றின் புனிதத்தைக்கட்டுடைக்கிறார்கள். ”-என்பார் பேரா.அ.ராமசாமி.[முகநூல் பதிவு 14.02.25]

புதிய மாதவியின் கவிதை கருக்கள் புராண, இதிகாச மற்றும் பண்பாட்டியலில் புழங்கும் தொன்மங்களின் மீதான கேள்விகள் அவருடைய பலம் எனில் தேவைக்கு அதிகமாய் புழங்கும் சொற்பிரயோகம் கவிதையின் செரிவானக் கட்டுமானத்தை நீர்த்துப் போக  செய்வது பலவீனமென்பேன்.

 “ புதைத்துக்கொள்கிறேன்

இருத்தலின் துயரத்தை

எரித்து எரித்து சாம்பலாக்கி” (ப.36)

“ இருத்தலின் நாடகத்தில் இதுக்கிறோம்

யாரோ எழுதிய வசனங்களுக்கு வாயசைக்கிறோம்”( ப.50)

-இந்த இருத்தலியல் துயரங்கள்தான் கலை இலக்கியங்களாய் வெளிப்படுகின்றன பல படைப்பாளிகளின் குரலில் குரலாக ஒலிக்கிறது புதிய மாதவியின்  வரிகள்

“ பெருநகரம் பித்துப்பிடித்து அலைகிறது

காமட்டிபுரத்தின் குடிசைகள் அதன் காயத்துக்கு மருந்தாக”-( ப.42)..

பாலியல்  வக்கிரமென்பது தனிமனிதனின்  ஆண்குறி அதிகாரம்..அஃது நோயல்ல..காயமுமல்ல..மேலும் பெருநகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட காமத்தணிப்பு பிரதேசங்கள் இருப்பினும் பாலியல் அத்துமீறல்கள் குறையவில்லை என்பதே புள்ளி விவரம்.-கசப்பானதொரு உண்மையிது இப்பொழுது சமூக வலைத்தளங்களும் காமம் காமக் கடத்திகளாக மோக வலைகளாக தூண்டில்களாக மாறிவிட்டது சமகால துயரம் அல்லவா

’பூம்பூம் மாடுகள். [ப. 66 ] என்பதொரு குறியீட்டுக் கவிதை. தலைப்பே குறியீடாய் உட்பொருளை உணர்த்தி விடும் சூழலில் கவிதையில் எட்டு இடங்களில் ’பூம்பூம் மாடுகள்’ என்ற வார்த்தை வாசகர்களின்  புரிதலின் மீது நம்பிக்கையற்ற விரயங்களாய்… கவிதை அகதி [ப. 68]யில்  06 ’என்’கள் கவிதை தன்மை ஒருமையில் சொல்லப்படுகையில் ஏன் இந்த சொல்செலவு?

. வடமாவட்டங்களில் மயான கொள்ளை எனும் நிகழ்வு மாசி மாதத்தில் நிகழும். அங்காளம்மன் ஆலயத்தில் இருந்து தொடங்கும் ஊர்வலம் மயானத்தில் நிறைவுறும் .வழிநெடுக பக்தர்கள் விதைகள், கனிகள், காய்கள், நாணயங்கள் என அல்லி வீசுவர் சூறையிடுதல் என்று அழைக்கப்படுவது புதிய மாதவியின் சில கவிதைகளில் சொற்களின் சூறையாடல் ஆர்வம் மிகுதியில் நிகழ்கிறது. அளவுக்கு அதிகமான வார்த்தைகள் கவிதையை நீர்த்துப்போக செய்து கவிதாரசனை மீது சுமையாக அழுத்துகின்றன.புதினத்துக்கும் கதைகளுக்கும் வார்த்தைகளும் வாக்கியங்களும் பெருமளவில் தேவையில்லை சுருங்கச் சொல்லுதல் குறைவான வார்த்தைகளில் சூட்சுமங்களை உணர்த்துதல் என்பது தேர்ந்த கவிஞர்களின் நுட்ப மொழியே படைப்பாளியின் வெற்றி எனலாம்

 ’காலை படி மாலைப்படி கடும்பகல்படி ’என்றான் பாரதிதாசன்.  கற்க கசடற என்றவன் வள்ளுவன்.’கவிதையை எப்போதும் பகலில் வாசிக்காதீர்கள்’, ’இதை யாரும் பகலில் வாசிக்க வேண்டாம்”  மேலுக் கவிதைப்பேய் என்கிறப் படிமம் எதிர்மறைச் சிந்தனை.படிக்காதே என்பது ஆதிக்கத்தின் குரலல்லவா தோழி!

”விடியும் போது

கவிதையின் உதிர்ந்த றெக்கைகளை

கூட்டிப் பெருக்கி குப்பையெனத் தள்ளுகிறது

வெளிச்சம்”[ப.54] எனும் வரிகளில் அழகான படிமம்.

“ ஒன்பாதாவது திசையில்

சீதை எழுதும் 

ஸ்ரீராவணஜெயம் கேட்கிறதா” (ப.22)

எனும் வரி எழுதியிருப்பது புதிய மாதவியா…அல்லது புதிய வால்மீகியா..?

நான் கருப்பி’(ப.105)-தலித் பெண்ணியக் கூறுகள் உள்ளடங்கிய ,தொகுப்பின்   மிக முக்கியமான கவிதை .எனினும் கோபங்குறையாத வசவு வார்த்தைகள் மட்டுமே கவிதைக்கு வலு சேர்க்காது.வெறும் கோபங்கள் வார்த்தை சிதறல்களாக மறைந்து போகும் வாய்ப்பு உண்டு கவிதையின் முன்மொழி வாசகனின் ரகசிய சுரங்கத்தில் தேர்ந்தெடுத்த கவிதைகளுக்கு இடம் தேடி கொடுக்கும் .

கவிதை .எவரையும் விமர்சிக்கும்,எதன் மீதும் வினா எழுப்பும் எல்லையற்ற சுதந்திரம் கொண்டது.புதியமாதவியின் கவிதைகள்  நம் முன்னெ அமர்ந்து நம் கண்களை நேரடியாக சந்திக்கின்றன.பதில் சொல்ல வேண்டிய ப் பொறுப்பு நம்முடையது.அவை நம்மைத் தப்பிக்க விடாது என்பதே நிஜம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *