இத் தொகுப்பிலுள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் எரிமலை வெடித்துச்சிதறி வழிந்தோடும் தீக்குழம்புகள் போல உள்ளன.
நமது பண்டைய வரலாறுகள், புராணங்கள், கற்பிதங்கள், புனைவுகள் பற்றிய ஆழ்ந்த அறிதல் உடையுயவராக இருக்கிறார் கவிஞர். அதனாலேயே அவை சொல்லும் ஆண்மை அரசியலைச் சாடி அவைகளின் மேல் துணிகரமான உடைப்பை மேற்கொண்டிருக்கிறார்.
எல்லைகள் வெவ்வேறாயினும் வலிகள் ஒன்றுதான் என்பது அவரது கவிதைகளை வாசிக்கும் போது புரிகிறது. சுயமரியாதையை வலியுறுத்தும் அவரிடம் சமரசங்களுக்கே இடமில்லை.
கவிதைகளை அவர் இருளின் ஆன்மா என்கிறார்.
//இருளின் நிர்வாணத்தில் கவிதை
தன்னை அழகூட்டிக் கொள்கிறது.
கவிதை இருளின் ஆன்மா.
இந்த இரவு மட்டும் வரவில்லை என்றால்
கவிதை என்றோ தற்கொலை செய்திருக்கும்.
கவிதையை எப்போதும் பகலில் வாசிக்காதீர்கள்.
கவிதை இரவின் மொழி. //
‘அவள் மொழி உன் அகராதி’ எனுமொரு கவிதை
//அவளுக்கும் உனக்கும் மொழிகளில் பேதமில்லை. ஆனால் அகராதிகள் வேறு வேறாக இருக்கின்றன.
அவள் மொழிக் கிடங்கில்
ஆதித் தாயின் பிள்ளைகள்
இப்போதும் உயிரோடு இருக்கிறார்கள். அவளை வாசிக்க நீ கண்டங்கள் தாண்டி, கடல்கள் தாண்டி
வருவது இருக்கட்டும். அவள் ஆன்மாவை தரிசிக்க மொழி எதற்கு? //
பாறைகளின் மொழி என்றொரு கவிதை
//பறவைகளின் மொழியை
மரங்களின் மொழியைக் கூட
கேட்டதுண்டு.
பாறைகளின் மொழி?!
அது யுகங்களின் கதையைச் சுமந்திருக்கிறது .
அதனால்த்தான் கனமானதாகவும்
கெட்டியானதாகவும் மாறி இருக்கிறது.
உன்தலையிலிருக்கும் கனம்.
உன் மனசில் இருக்கும் கெட்டிக்காரத்தனம் மலையுச்சியிலிருந்து சரியும்போது
பாறைகள் மெல்ல மெல்ல பேச ஆரம்பிக்கும்.
பாறைகளின் மொழி புரியும்.//
துரோகத்தை சொல்லும் அவருடைய கவிதைகள் நெஞ்சை பிசைகின்றன
//துரோகங்கள் துரத்திக் கொண்டே இருக்கும்.
பிறவித் துன்பம்.
மரணத்தை வென்று
கல்லறையிலிருந்து மீண்டெழுகிறது ரத்தவாடை. //
//துரோகத்தின் வாசனையை துடைத்தெடுக்க ஒரு துளி நேர்மையைத் தேடி
ஆழ் மறதிக்குள் நீந்தும்
பிறவிப் பெருங்கடலின் ஒரு துளி
தாகம் தணித்துவிட முடியாமல்
பாலையாகிப் போன பருவம்.
காலப்பூவின் இதழ்கள் உதிர்கின்றன.//
தேசத்தின் எச்சில்ப் பருக்கை எனும் கவிதையில் அவர் இருத்தலியலின் துயரத்தை இப்படித் தொடங்குகிறார்
//எப்போதும் கிடைத்துவிடுவதில்லை என் இருத்தலுக்கான உணவு.
எப்படியோ மோப்பம் பிடித்து விடுகிறாய் நான் ஒதுக்கிவைக்கும்
எச்சில் பருக்கைகளை. ..
இருத்தலியலின் துயரத்தை
எரித்து எரித்து சாம்பலாக்கி
கரைத்துவிட முடியாமல்
காலநதி மணல்மேடாய். //
ஆக்டோபஸ் காதலி எனுமொரு சுவாரசியமான கவிதை
//யுகங்களின் கரைகளைக் கடந்துவிட்டேன்.
இனி தரைதட்டப் போவதில்லை.
ஆழ்கடலில் தவமிருக்கிறேன்.
ஆயிரம் கரங்கள் முளைக்கின்றன
இப்படித் தொடங்கும் அந்தக் கவிதை இவ்வாறு முடிகிறது.
ஃஃஆக்டோபஸ் காதலியர்
கலவிக்குப் பிறகு
அவனைத் தின்று பசி தீர்க்கும்
காமக் கதைகள்
நீ அறியாதவை. /7
அவரின் பூம்பூம் மாடுகள் எனும் கவிதை நவீன கவிகள் சிலரை சாடுகிறது.
//பூம் பூம் மாடுகள்…..
இவர்கள்தான் நவீனக் கவிஞர்கள்.
இதுதான் ஆகச்சிறந்த எழுத்து…..
…..பூம்பூம் மாடுகள் முட்டுவதில்லை.
அதனால் ஆபத்துமில்லை என்று விட்டு விடாதீர்கள்!!
முட்டுகிற மாடுகளைவிட
பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும்
மாடுகள்…
‘கால் ‘ நடைகளின் அவமானம். //
அவருடைய நான் கருப்பி எனும் ஒரு கவிதை எனை மிகவும் கவர்ந்தது.
//நான் கருப்பி
கறுப்பு என் நிறம் மட்டுமல்ல
அது என் உரம்இ திறம்இ வலி
உன் அழகியல் தோற்றுப் போன
யோனியின் சுழி…….
…தாகமெடுக்கும் போது
தண்ணீர் குடிக்காதே!
கார்மேக நீர்த்துளி…
கறுப்பின் அடையாளம் டே.
வேண்டாம்..
சிவப்பு வெள்ளையின்
மூத்திரம் குடி.
போடா போ..
நான் கருப்பி
கறுப்பு என் நிறம் மட்டுமல்ல!//
பசியில் அலையும் சொற்கள் எனும் கவிதையில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
// உடலற்ற பசியுடன் அலைகிறது
இப்போதும்
பால் வீதியில் அவள் சொற்கள்/7
ஆமாம் அவருடைய சொற்கள் கவிதை வடிவில் அவ்வாறே உடலற்ற பசியுடன் அலைந்து கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகின்றன.
இன்னும் சொல்ல எத்தனையோ அற்புதமான கவிதைகள் இந்தத் தொகுப்பில் கொட்டிக் கிடக்கின்றன.அவரது நவராத்திரிக் கவிதைகள் வெகு சிறப்பு.
கவிஞர் பழனிபாரதி அவைபற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார் ” நவராத்திரி கொலுவில் பொம்மைகளோடு பொம்மைகளாய் உறைந்திருக்கும் பெண்மையை உயிர்ப்பிக்கும் புதிய மாதவியின் குரல் மரணங்களைச் செரித்த ஒரு அமானுஷ்ய சன்னதமாக ஒலிக்கிறது”
இப்புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தபோது எனக்கு சற்றுக் குழப்பமாக இருந்தது. அது என்ன சிலை என்ற குழப்பம். ஆயினும் அவரது முகநூலில அதற்கான விளக்கத்தை வாசித்தபோது புரிந்து கொண்டேன். கி.மு 2500 ம் ஆண்டுகள் பழமையான மொகஞ்சதாரா பெண்தெய்வத்தின் சிலையது எனக் குறிப்பிட்டிருந்தார். வாவ். அருமையான இந்தத் தொகுப்புக்கு மிகுந்த அன்பு puthiyamaadhavi