‘ரோசா’ – ரீட்டா டவ் ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிஞரான ரீட்டா டவ் – கவிஞர், ஆசிரியர், நாவலாசிரியர், நாடகாசிரியர் எனப் பல திறமைகளைப் பெற்றவர். கறுப்பினத் தடைகளைத் தாண்டி முக்கியமான பிரச்சனைகளைத் தன் எழுத்தின் மூலம் தொடர்ந்து எழுதி வருகிறார். கறுப்பினத்தவர் பற்றிய சிக்கல்கள், காதல் என அவரது தைரியமாக முன்வைக்கும் கருத்துகளுக்காகக் கொண்டாடப்படுகிறார். 1987 ஆம் ஆண்டில் கவிதைக்கான புலிட்சர் பரிசைப் பெற்ற இரண்டாவது ஆப்பிரிக்க அமெரிக்கர். தாமஸ் மற்றும் பியூலா என்ற கவிதைத் தொகுப்பிற்காக இவ்விருது கிடைத்தது. இத்தொகுப்பில் அதிகம் பேசப்பட்ட கவிதை ரோசா. அமெரிக்கச் சிவில் உரிமை இயக்கம் பற்றிய மிக முக்கியமான கவிதையாகப் பார்க்கப்படுகிறது.
ரோசா பார்க்ஸுக்குப் பேருந்தில் கிடைத்த அனுபவம் என்பது வெறும் நிகழ்வாக மட்டுமல்லாமல் வரலாற்றுப் பின்னணியுடன் சமூகப் பிரச்சனைகளையும் அலசும் விதமாக அமைந்தது. இப்படியாகத் தனது கவிதைகளில் பல்வேறு சமூகப் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தியுள்ளார்.சமீபத்தில் 1974 முதல் 2004 வரை எழுதப்பட்ட கவிதைகளின் மொத்தத் தொகுப்பினை வாங்கி வந்தேன். நானூறு பக்கங்களைக் கொண்ட அந்த நூலின் அட்டைப்படத்தில் குறிப்பிட்டிருந்த லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸின் மேற்கோள் வரிகள், ‘முற்றிலும் பிரமிக்க வைக்கக்கூடிய படைப்பு, சமகாலக் கவிஞர்களுள் வெகு சிலரே இவ்வளவு திறமையானவர்களாக, தீவிரமானவர்களாக, வாசிப்பதற்கு இனிமையான கவிதைகளைத் தரக்கூடியவர்களாக இருக்கிறார்கள்’ என்று பார்த்தவுடன் வாசிக்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியில் வாங்கிவிட்டேன். ரீட்டா டவின் கவிதைகள் அவருடைய தனிப்பட்ட அனுபவங்களுடன் வரலாற்று மற்றும் பண்பாட்டுச் சிக்கல்களை நவீன கவிதைகளாக படைப்பதினால் பரவலாகப் பாராட்டப்படுகின்றன.
அவருடைய கவிதைகள் பெரும்பாலும் தன்னுடைய இனத்தைப்பற்றியும், குடும்பம், மற்றும் உறவுகளின் சிக்கல்களில் ஏற்படும் குழப்பங்களையும் சொல்வதாகவே இருக்கின்றன.ரோசா என்னும் கவிதை, இன எதிர்ப்பைத் தெரிவிக்கும் மிகச் சிறிய கவிதை என்றாலும் மிகப்பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அமெரிக்கச் சமூகப் பிரச்சனைகளுக்கான எதிர் குரலாகவும் இருந்தது. ரோசா பார்க்ஸின் பேருந்தின் முன்பக்கத்திற்குச் சென்று அமருவதை மறுத்த காட்சியைப் பதிவு செய்திருக்கிறார்.
ரோசா
அன்று அவள் பேருந்தில் சென்றபோது
ரோசா பார்க்ஸ் மிகவும் சோர்வாக இருந்தாள்
அன்றைய வேலையினால் அல்ல
அவள் நின்றுகொண்டேயிருந்ததால்
பாதங்கள் வலித்தன
பேருந்து நிறுத்தத்திற்கு
வெகுதூரம் நடந்து வந்ததால்
அவளது கால்கள் வலித்தன
அதனால் பேருந்தின் முன்வரிசையில்
அமர்ந்துகொண்டாள்
அவள் புத்துணர்வோடு இருக்கிறாள்
இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறாள்
நீண்ட காலமாகப் போராடி
வெற்றியை நெருங்கும் தருவாயிலிருப்பதுபோல்
திடமாக இருக்கிறாள்.
இப்போது அவளிடம் கேட்கிறார்கள்
ஒரு வெள்ளையருக்கு இருக்கையைக் கொடுப்பதற்காக
அவளை எழச் சொல்கிறார்கள்
ஆனால் அவள் நகரவில்லை.
பேருந்தில் கூட்டம் நிரம்பியிருந்தாலும்
ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து
இப்படியான குரலை
எழுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள்
அந்தப் பேருந்தில் ரோசா பார்க்ஸிடம் மட்டுமே
இப்படிக் கேட்கிறார்கள்
ஆனால் அவள் முடியாதெனச் சொல்லிவிட்டாள்.
பார்க்ஸிக்கு நடந்தது வெறும் தனிப்பட்ட மனிதருக்கானது மட்டுமல்ல, எல்லோருக்கும் நடக்கக் கூடியது, குறிப்பாக கறுப்பினர்களுக்கு. தனக்கான உரிமையையும், சமுதாய மாற்றத்தையும் உண்டாக்கும் விதமாக இருந்தபடியால் மாற்றுச் சிந்தனைக்கான எதிர்ப்பைக் கிளப்பியது. டவ் இந்த வரிகளின் மூலம் உளவியல் போராட்டத்தை முன்னிருத்துகிறார். பார்க்ஸின் மனத்தில் உள்ள பயம் மற்றும் சிக்கலான உணர்வுகள் அப்போது அவளது மன நிலை எப்படி இருந்திருக்கும் என்றும் கவிதையில் கோடிட்டுக் காட்டுகிறார்.கிளிண்டன் ஆட்சியில் இருந்தபோது வெள்ளை மாளிகையில் கவிதை வாசித்தார். ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கவிதை இரவில் வாசித்த இன்னொரு கவிதை,
இதயத்தோடு இதயம்
இது
சிவப்பாகவோ
இனிப்பாகவோ இல்லை
இது உருகவோ
மாறவோ இல்லை
இது உடையவோ
கடினமாவதோ இல்லை
இதற்கு வலியையோ
ஏக்கத்தையோ
வருத்தத்தையோ
உணர முடியாது
இதயத்தை எடுக்க முடியாது, ஆடையாக அணியமுடியாதெனினும் அதைத் திறக்கக்கூடிய சாவியும் என்னிடமில்லை. ஆனால் என்ன உணர்கிறது என்பதைச் சொல்லமுடியும், என் இதயம் உங்களுக்கானது, எடுத்துக்கொள்ளுங்கள் என்னையும் சேர்த்து என்று முடிகிறது இக்கவிதை.அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க, அமெரிக்கக் கவிஞராக இருக்கும் ரீட்டா டவின் கவிதைகள் பெரும்பாலும் இனம், அடையாளம், நிறம் தாண்டி உடல்மொழியையும் ஆப்பிரிக்க அமெரிக்க அனுபவம் பற்றியும் அதிகம் பேசுகின்றன. ஓரளவே காதல் கவிதைகள் இத்தொகுப்பில் இருந்தாலும் சமூகப் பிரச்சனைகளையும், கறுப்பினத்தவர் அமெரிக்காவில் சந்தித்த அவலங்களையும் பல கவிதைகள் சித்திரிக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு அவரைப் பற்றிய ஓரளவு நல்ல புரிதலைக் கொடுத்தது எனலாம். சமகாலக் கவிஞர்களுள் வெகு சிலரே இவ்வளவு திறமையானவர்களாக, தீவிரமானவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான். –
03.02.2025