புலம்பெயர் இலக்கியத்தில் தமிழ் பேசும் பெண் சிந்தனைகளின் பரிமாணம் : லக்ஷ்மி

‘புது உலகம் எமை நோக்கி’ சிறுகதைகள் தொகுப்பு – நூல் மதிப்பீடு

சிறுகதைகள் பற்றிய பார்வைக்கு முன்…

பெரும்பாலான தமிழ் பேசும் பெண்களின் புலம்பெயர் நாடுகளிற்கான பிரவேசம் என்பது பெரும்பாலான தமிழ் ஆண்களைப்போல் சுயமானதல்ல. ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆணிடம் (அது சகோதரனிடமோ, தந்தையிடமோ, கணவனிடமோ, காதலனிடமோ, திருமண பந்தத்தால் இணையப் போகிறவனிடமோ) தான் வந்து சேர்கிறாள். இப்படியான இடப்பெயர்வின்போது பெண்கள் பௌதீக ரீதியாக இடம் மாற்றப்படுகிறார்கள். உடனடியாக அவர்கள் மாற்றுச் சூழலுடன் தம்மை இணைத்துக் கொள்வதற்கான வாசல்கள் பெரும்பாலாக திறக்கப்படுவதில்லை. அதாவது இவர்கள் அங்கிருந்து வரும்போது அவர்களுடன் பிணைந்திருக்கும் சகல அம்சங்களுடனும்தான் இங்கும் வாழும் நிர்ப்பந்தம் உள்ளது. இந்தப் பெண்கள் இங்கு முகம் கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு இடையில் இவர்களுடைய எழுத்துலகப் பிரவேசம் என்பது மகத்தானதுதான். 

புற உலகை இப்பெண்கள் தரிசிப்பதற்கும், புதிய அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அவர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கூட அவர்கள் ஆண்களின் நுகத்தடியில் நின்று அவற்றைக் கண்டு கொள்ள மட்டுமே நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இப்பெண் சிந்தனையின் வெளிப்பாடானது ஆண்களினதும் ஆணதிகாரத்தினதும் எதிர்கொள்ளலையே பெரும்பாலும் வெளிப்படுத்தி நிற்கிறது. 

கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து  கொண்டிருக்கும் பெண்கள் சஞ்சிகையான சக்தி (நோர்வே) யினால் ‘புது உலகம் எமை நோக்கி’ என்ற தலைப்பில், தொகுத்து வெளியிடப்பட்டிருக்கும் 23 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு பல வகைகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஈழத்து இலக்கிய வரலாற்றிலும் புகலிடத்து இலக்கிய வரலாற்றிலும் வெளியீட்டுத் துறையில் இத்தொகுதி முக்கியமான ஒரு பாதச்சுவடு என்று கூறுவது மிகையானதல்ல.

ஈழத்துப் பெண்களின் கவிதைகள் ‘சொல்லாத சேதிகள்’ ஆக ஈழத்திலும் ‘மறையாத மறுபாதி’ ஆக புகலிடத்திலும் ஏற்கனவே தொகுக்கப்பட்டு வெளிவந்த போதிலும், பெண் சிந்தனைகளின் மற்றுமொரு தொடர்ச்சியாக சிறுகதைகள் முதல் முறையாக தொகுத்து வெளியிடப்பட்டிருக்கிறது. ஈழத்தில் இப்படியான சாத்தியக்கூறு இதுவரை இல்லாமல் இருப்பது கவலைக்குரியது. தமிழ்நாட்டிலும் இப்படியான தொகுப்புகள் வெளிவந்ததாக பெரிதாக அறிய முடியவில்லை. அண்மையில் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் (இலண்டன்) வேண்டுகோளின் பெயரில் கோவை ஞானியின் முயற்சியில் ‘காயங்கள்’ என்னும் சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டிருக்கிறது.

புலம்பெயர் சஞ்சிகைகளிலும் புலம்பெயர் இலக்கியத் தொகுப்புகளிலும் ஏற்கனவே வெளிவந்த இருபத்துமூன்று சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன. ஆண்களின் அதிகாரத்திற்கு எதிரான விழிப்புணர்வுகள், பொதுவாக ஆண்களால் ஒடுக்கப்பட்டிருத்தல் போன்றவற்றை இனங்கண்டு கொள்ளுதல் போன்ற இப்படியான வெளிப்பாடுகளைக் கொண்ட எத்தனையோ படைப்புகள் ஏற்கனவே வெளிவந்த போதிலும் இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அத்தனையும் பெண்களாலேயே படைக்கப்பட்டிருப்பதனால், விசேடமான அந்தப் பிரச்சினைக்குரிய தனித்துவமான இடத்தைப் பெறுகின்றன. 

சிறுகதைகளை இப்படித்தான் எழுத வேண்டும் என்று திட்டவட்டமான வரையறைகள் போட முடியாவிட்டாலும், ஒரு படைப்பில் பிரச்சார தன்மை நேரடியாக இருக்கும்பொழுது, ஆத்மார்த்தமாக மனதை ஊடுருவும் அனுபவத்தைத் தருவதில் அந்தப் படைப்பிலக்கியம் தோல்வியடைகிறது அல்லது அந்த அநுபவத்தை இழக்கிறது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் கருத்து ரீதியாக  ஒரு விடயத்தை ஆய்வு செய்வதற்கும் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளினூடாக ஒரு பிரச்சினையையோ அல்லது பல பிரச்சினைகளையோ இனம் கண்டு அதனை படைப்புக்குள்ளாக்குவதற்கும் இடையே ஆழ்ந்த வேறுபாடு உள்ளது. இத்தொகுதியில் இடம்பெறும் கதைகளில் சில இவற்றைக் கருத்தில் கொள்ளாமலும் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அவதானிக்க முடிகிறது.

இச் சிறுகதைத் தொகுதியில் உள்ள கதைகளுடன் ஒட்டாமலும், முற்றிலும் வேறுபட்ட ஒரு கதையாக காவேரியின் ‘நீயும் ஒரு சிமோன் தி போவுவா போல’ 

என்னும் சிறுகதை அமைந்துள்ளது. இப்படியான தொகுப்புகளை வெளியிடும்போது சில அவதானங்கள் தேவைப்படுவதை தொகுப்பாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். காவேரி மும்பையில் வசிப்பவர். இவர் தமிழ் இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர். இவரின் இப்படைப்பானது புலம்பெயர் இலக்கியத்துக்கும் அடங்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

இன்னும் ஒரு முக்கியமான விடயம், இத்தொகுப்பில் இடம் கொள்ளும் சில பெண்கள் தங்களுடைய பெயர்களை கணவனுடைய பெயருடன் அல்லது தந்தையின் பெயருடன் இணைத்து தங்களை அடையாளம் காட்டுவது பெரும் முரணாகத் தெரிகிறது. ஒரு ஆணின் பெயருடன் தங்களுடைய பெயர்களை இணைத்துத்தான் தங்களை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்ட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இப் பெண்கள், இந்த ஆணாதிக்க சமூகத்தில் இருக்கும் ஆண்கள் தங்களை அடையாளம் காட்டுவதற்கு எந்தப் பெண்ணின் பெயரையும் (தாயோ அல்லது மனைவியோ) தாங்க வேண்டிய அவசியமில்லாமல் இருக்கும்படி அந்த ஆணாதிக்கச் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டு கொள்வது அல்லது கண்டு கொள்ள முனைவது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமாகிறது. அத்துடன் இந்த விதமாக பெண்களை அடையாளப்படுத்துதல் என்பது பெண்கள் சுதந்திரமற்றவர்களாக ஆக்குவதற்கான ஒரு விடயம் என்பது மிகவும் அவசியமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

தொகுப்பாளிகள் குறிப்பிலிருந்து…

பெண்களுடைய உணர்வுகளும், கருத்துக்களும், எண்ணங்களும் இலக்கிய வடிவம் பெறுவதற்கும், இலக்கிய ஆக்கம் தொடர்பான அவர்களது திறன்களை வளர்த்தெடுப்பதற்கும் பெண்களது ஆக்கங்களைத் தனியே தொகுத்து நோக்கவேண்டும். பெண்களுக்கான ஒரு கலை இலக்கிய நெறி இதனால் உருவாகும் என்ற கருத்து வலுப்பெறும்.

ஈழத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் முடிவிலா யுத்தம் மக்களை உலகத்தின் நாலா பக்கமும் ஓட வைத்துள்ளது. ஓடி வந்த இடத்தில் எம்மை ஒட்ட வைத்துக் கொள்வதற்கு நாம் நிகழ்த்தும் போராட்டச் சிக்கல், மன உளைவுகள் என்ற சூழலிலும் புலம்பெயர்வு பல சிறப்புக்களைக் கொண்டுள்ளதாக இருக்கின்றது என்று நாம் ஆழ்ந்து நோக்கும்போது புரிகின்றது. புலம்பெயர்வு பல பெண் எழுத்தாளர்களை ஈழத்து இலக்கியத்திற்கும் பெண்கள் இலக்கியத்திற்கும் தந்துள்ளது. இச் சிறுகதை தொகுதி புலம்பெயர் இலக்கியத்தில் பத்தோடு பதினொன்றாக மறைந்துவிடாமல் இருக்கவேண்டும் என்பது எமது அவா.

சிறுகதைகளினினுள்ளே…

முகம் – உமா, ஜேர்மனி 

பெண்விடுதலை குறித்த கருத்துக்களை மட்டும் அறிந்து வைத்திருக்கும் ஆண்கள், அவர்களுடைய செயற்பாடுகளில் எவ்வளவு துாரம் முரண்பட்டவர் களாக இருக்கின்றார்கள் என்றும், வெளிப்பார்வைக்கு அவர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் பெண்ணுக்கு ஆதரவாயிருப்பவர்கள் போல இருந்தாலும், கருத்துரீதியாக அப் பெண்கள் மீது எவ்வளவு துாரம் மேலாட்சி செலுத்துபவர்களாக இருக்கின்றார்கள் என்பது அந்த ஆண்களுடன் நெருங்கிப் பழகும் போதுதான் தெரியவருகின்றது. மேலும் பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுவதற்கு சித்தாந்தம், கோட்பாட்டு ரீதியாக வளர்ச்சியடைந்து இருக்கவேண்டும் என்றும் அப்படியில்லாவிட்டால் போராட முடியாதென்றும் ஒரு ஆணினால் கூறமுடியாது என்பதனை மிகவும் ஆணித்தரமாகக் கூறுகின்றது. ஒரு பெண் பெண்ணாக இருந்து பிரச்சினைகளைக் கண்டு கொள்வதே பெண்விடுதலைப் போராட்டத்தின் முதற்படி என்பதை வலியுறுத்துகிறது.

இதில் பெண்விடுதலை பற்றி எவரெவர் பேசலாம், எவரெவர் பேசக்கூடாது என்பது குறித்த விவாதத்தை இரண்டு கதாபாத்திரங்களுக்கிடையிலான உரையாடல் மூலம் தெளிவாகக் காட்டுகின்றார் உமா. 

பெண்விடுதலை பற்றி பேசும் அல்லது பிரக்ஞை கொள்ளும் பெண்கள் அனைவருமே தங்கள் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக பல ஆண்களுடன் உறவை ஏற்படுத்த மட்டுமே பெண்நிலைவாதம் பேசுகிறார்கள் என்று சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் கருதுவதற்கு கிஞ்சித்தும் குறைவில்லாமல்தான் பெண்விடுதலை குறித்து மேடைகளில் முழங்குகின்ற ஆண்களும் கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கதை தெளிவாகச் சொல்லுகிறது. 

இங்கு முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இன்னொரு விடயம் என்னவென்றால், சமூக அக்கறை கொண்ட, விழிப்புணர்வு கொண்ட ஒரு பெண்ணுடைய செயற்பாடுகள் ஒரு ஆணுடன் சேர்ந்திருக்கும் போது அதனை அதற்கான முழுப்பரிமாணத்துடன் நிறைவேற்றமுடியாமல் இருப்பதும், அதுவும் அந்தப் பெண்ணுடன் சேர்ந்து வாழும் ஆண் சமூகம் மீதான அக்கறை கொண்டவனாக இருக்கும் பட்சத்தில் அப் பெண்ணுடைய செயற்பாடுகள் இன்னும் மோசமாக முடக்கப்படுவதுதான் நடைபெறுகின்றது. அதாவது ஒரு பெண்ணின் மீதான ஆணின் ஒடுக்குமுறை என்பது செயற்படும் தளங்களில் வேறுபடுகிறதேயன்றி எங்கும் எதிலும் விரவிக்கிடக்கின்றது. கதையின் பின்புலமும் சொல்லவந்த விடயமும் அங்கிங்கென்று இழுபடாமல் கதைசொல்லலின் உணர்வுகளுடே திறமையாகக் கட்டமைக்கப் பட்டுள்ளது.

சுரண்டலின் கொடுக்குகள் – தேவா, ஜேர்மனி 

வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் எப்படி சுரண்டலுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் (பாலியல் சுரண்டல் உட்பட) என்பதை, வீட்டு வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணின் கதையினுாடாகவே மிகவும் அற்புதமாக நகரத்தியிருக்கும் கதாசிரியை எந்த இடத்திலும் குறுக்கிட்டுத் தன்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயத்தைச் சொல்லாமல் இருப்பது இக் கதையின் சிறப்பென்று கூறலாம்.

பொய் முகங்கள் – சுகந்தி, ஜேர்மனி

சாதி ஒழிப்பு, முற்போக்கு என்று மேடையில் பேசுவதன் மூலம் தங்களை உயர்த்திக் காட்டிக் கொள்பவர்கள் திருமண பந்தம் என்று வரும்போது தங்கள் குடும்ப நிலைமை, சகோதரிகளின் எதிர்காலம் என்பன குறித்து சிரத்தையுடன் இருப்பதாகக் கூறி தப்பித்துக் கொள்ளும் போலிகளை இனம் காட்டுகிறார் சுகந்தி. சூழல் பற்றிய விபரிப்பு மிகவும் இயல்பானதாக இருக்கிறது. எந்தக் காலகட்டத்தில் இது நிகழ்ந்திருக்கலாம் என்று ஓரளவு ஊகிக்கக் கூடியதாக கதை நகர்த்தப்படுகிறது. இப்படியான கதைகள் வரலாற்றுப் பதிவுகளாகின்றன.

கடையில் முன்புபோல் வருமானம் இல்லை. இராணுவமும் இயக்கங்களும் பொடியளைப் பிடித்துக் கொண்டுபோய் தாங்களே மொட்டையடித்து விட்டார்கள். ரவுனுக்கை ஆமிக்காரர் சுடுகினம் எண்டு சனம் அடிபட்டு ஓடிச்சுதுகள் இப்ப பார்த்தா இப்பிடி என்று மேல் சாதியினர் என்று கருதப்படுகிறவர்களால் இப்பொழுதும் தாங்கள் எப்படி நடத்தப்படுகிறோம். ஒடுக்கப்படுகிறோம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கும் கௌரி தெட்டத்தெளிவாக எடுக்கும் நிலைப்பாடும், அதே நேரத்தில் மேல் சாதிக்காரர்கள் என்று எண்ணக் கூடிய சிவாவும் கரனும் தடுமாறும் நிலையும் பிரச்சார வாடையின்றி தெளிவாகக் கதையில் கொண்டுவரப் பட்டுள்ளது.

நீயும் ஒரு சிமோன் திபோவுவா போல – காவேரி, நோர்வே 

ஒரு பெண்ணை சிமோன் திபோவுவா என்னும் தத்துவவாதியுடன் பெண்நிலைவாதியுடன் ஒப்பிட்டு அவளைத் தங்களுடைய தோழியாக்கும் கைங்கரியம் வாய்ந்த ஆண்கள் எவ்வளவு துாரம் தங்கள் முட்டாள்தனத்தைக் காட்டுகின்றார்கள் என்பதை இச் சிறுகதை தெளிவாகக் காட்டுகிறது. சிமோனும் சார்த்தரும் இணைந்து வாழ்ந்தது ஒரு பெண்ணியப் பார்வையில் எப்படி ஏற்றுக் கொள்ள முடியாத வாழ்க்கை என்பதை ஒரு சில உரையாடல்கள் மூலம் மிகத் தெளிவாகத் துல்லியமாகக் காட்டுகின்றது சிறுகதை. 

சிமோன் என்னதான் பெரிய தத்துவவாதியாக இருந்தாலும் அவருடைய செயற்பாடுகள் அனைத்தும் சார்த்தரைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டிருந்தன என்பதும், அவர் சார்த்தரில் தங்கியிருந்தது போன்ற நிலையிலேயே அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன என்பது பற்றியும் தொண்ணூறுகளில் உள்ள பெண்நிலைவாதிகள் எவ்வளவு ஆத்திரமும் மனக்கிலேசமும் அடைந்துள்ளார்கள் என்பதைக் காட்டுகின்றார் படைப்பாளி.

மேலும் ஒரே வாக்கியம் நீயும் ஒரு சிமோன் தி போவுவா போல, சொற்களில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு பெண்ணின் வளர்ச்சிப்படியின் ஒவ்வொரு கால கட்டங்களிலும் வெவ்வேறு ஆண்களால் அச்சொட்டாக ஒப்புவிக்கப்படும்போது அவளுடைய அனுபவங்கள் அவளுடைய கற்றல்கள், அவளுடைய தேடல்கள் எவ்வாறு தன்னை நோக்கிய விமர்சனமாகவும் அதேநேரம் மற்றவர்களைக் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கின்றது என்பதைக் கூறுகின்றார். 

இளமைக் காலத்தில் அதாவது போதியளவு அனுபவங்கள் பற்றிக் கொள்ளாத ஒரு காலத்தில் ஆணின் புகழுரைகள் தன்னுடைய நுண்ணிய உணர்வுகளைத் தாங்கிக் கொள்ளும், ஒரு அதனை மெருகேற்றும், உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கூடிய இன்ப சுகத்தில் ஒரு பெண் தன்னை இழந்து போவதையும் வாழ்க்கை அனுபவங்கள் ஒன்றுசேரும் போது இப்படியான போலியான வர்ணிப்புக்கள் எல்லாம் அவளை ஒன்றுமே செய்துவிடாது தனியே சுயாதீனமாகச் சிந்தித்து செயலாற்றக் கூடிய ஒரு நிலைக்குத் தள்ளுவதையும் கண்டு கொள்ளக் கூடியதாகவுள்ளது.

சிமோனது சார்த்தருடனான வாழ்வுமுறையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் காவேரி ஓரிடத்தில் கோட்டை விட்டு விடுகிறார் என்றுதான் தோன்றுகிறது. சார்த்தரின் மீதுள்ள ஆத்திரம், வெறுப்பு அல்லது சிமோன் சார்த்தரை விட்டு விலகிப் போய்விட வேண்டும் என்னும் ஆதங்கம் அவரை இப்படி சொல்ல வைக்கிறது. அதாவது நெல்சன் ஆல்கிரேனை சிமோன் மணந்து கொண்டு சார்த்தரை விட்டு விலகி இருந்திருக்க வேண்டும் என்று. 

திருமண பந்தமில்லாமல் வாழும் சிமோனும் சார்த்தரும், சார்த்தரை விட்டு விலகமுடியாதிருக்கும் சிமோனும் என்று கூறிக் கொண்டு செல்லும் படைப்பாளி ஏன் சிமோனை திருமண பந்தத்திற்குள் தள்ள முனைகிறார் என்பதுதான் தெளிவானதாக இல்லை. திருமண பந்தம், அதன் சட்டதிட்டங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் ஆணாதிக்கம் கொண்டவை என்பதும், ஏன் நெல்சனுடன் மட்டும் சென்று சேர்ந்து வாழவேண்டும் என்று படைப்பாளி நிர்ப்பந்திக்கிறார் என்பதும் முரணாக உள்ளது. கொதிக்கின்ற எண்ணைச் சட்டியினுள் இருந்து எரியும் நெருப்புக்குள் தள்ள முனைகின்றாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. 

சிமோன் சார்த்தருடன் என்னதான் நண்பியாக வாழ்ந்தாலும் அவளுடைய மிகநுண்ணிய உணர்வுகளை விழிக்கவைக்க அல்லது அதனைக் கண்டுகொள்ள நெல்சனால்தான் முடிந்தது என்பதை அழகாகக் கூறுகிறார்.

கோட்பாட்டு ரீதியான பார்வைகள் ஒரு போராட்டத்தை எடுத்துச் செல்வதற்கான முனைப்புக் கொண்டவர்களுக்கு அதனை வென்றெடுப்பதற்கான அமைப்புக்களிற்குத் தேவை. அதேநேரம் தனிநபர்களுக்கிடையேயான உணர்வுப் பரிமாற்றங்கள், ஒருவரில் ஒருவர் (ஒருத்தியில் ஒருத்தி, ஒருவனில் ஒருவன், ஒருவனில் ஒருத்தி, ஒருத்தியில் ஒருவன்) தங்கள் தங்களை இழந்து போவது என்பது மிகவும் நுண்ணியமான உணர்வுகள் சார்ந்த விடயம். அந்த உணர்வுப் பகிர்தலில் ஒருவரில் ஒருவரை இழந்து போவதும் ஒருவரின் கருத்தாளுமையின் கீழ் ஒருவர் முடங்கி தங்களை இழந்து போவதையும் ஒன்றில் இருந்து மற்றதைப் பிரித்துப் பார்க்காமல் சேர்த்து அடையாளம் காண்பது அபத்தம் என்றுதான் தோன்றுகின்றது. நெல்சன் கூட சார்த்தரிடம் சிமோன் திரும்பிப் போவது குறித்து எரிச்சல் படுகிறான். என்னிடம் வந்து இருந்துவிடு என்று மறுபக்கத்தால் பலவந்தப்படுத்துகிறான். சிமோனால் முடியும் முடியாது என்பது ஒரு புறம் இருக்க, அவள் தனக்கென்று முழுமையாக இருந்தால் என்ன என்ற ஆதங்கம் தான் நெல்சனிடமிருந்தும் வெளிப்படுகிறது. 

சார்த்தரும் சிமோனும் இணைந்து வாழும் வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்ட பின் என்ன நடந்ததென்று கதாசிரியர் கருதுகின்றாரோ அதே நிலைமை நெல்சனுடன் சேர்ந்திருக்கும் போது ஏற்படாதென்றோ அல்லது சிமோன் சார்த்தரின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தாரென்றோ சொல்லமுடியாது. ஒருபுறம் என்னதான் கோட்பாட்டு ரீதியான விளக்கங்களுடன் சிமோன் இருந்தாலும் அவரில் அகவயமான மாற்றம் முற்றுமுழுதாக ஏற்பட்டுவிடவில்லை என்று கொள்ளத்தான் தோன்றுகிறது.

அடுத்த காலடிகள் – நளாயினி இந்திரன், இலண்டன்

ஒரு பெண் தனது உரிமைகள் மறுக்கப்படும்போது அதற்காகப் போராடுவாள், போராடுவதற்கு முனைவாள் என்று சொல்ல முனைகிறார் படைப்பாளி. கதை அவர் சொல்ல வரும் விடய த்தை இறுக்கமாகக் கட்டமைக்க ஒத்துழைக்கவில்லை. இக் கதை பல விடயங்களை தொட்டுச் செல்கிறது.

தஞ்சம் தாருங்கோ – நிருபா, ஜேர்மனி

இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு வருவதற்குப் புறப்படும் ஒவ்வொரு பெண்ணும் ஏஜென்சிக்காரர்களாலும் அவர்களுடன் சேர்ந்து பிரயாணம் செய்யும் அல்லது அவர்கள் சந்திக்கும் ஏனைய ஆண்களாலும் எவ்வாறு கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்பதில் ஏற்படும் வேதனையை, மனக்கொதிப்பை, ஆதங்கத்தை இன்னும் அதனால் ஏற்படும் அவலங்களை மிகவும் நேர்த்தியாக வாசகியின் அல்லது வாசகனின் நெஞ்சைத் தொடும் வண்ணமான மொழிநடையில் கூறுகின்றார் நிரூபா.

இந்தத் தொகுப்பில் உள்ள ஏனைய கதைகளுடன் ஒப்பிடும்பொழுது இந்த எழுத்து நடை மிகவும் வித்தியாசமானது. எங்களுடைய நிலையைப் பாருங்கோ, உங்களுக்கு மனதில் ஈரமே இல்லையா என்று இங்கு ஏற்கனவே தஞ்சம் புகுந்திருக்கும் இலக்கிய கர்த்தாக்கள் அல்லது இங்கு வந்ததனால் இலக்கிய கர்த்தாக்களானவர்கள் அனைவரும் இந்தத் துயரங்களைப் படைப்புக்களாக்கியதுடன் நின்று விட்டதையும் அமைப்பு ரீதியாக இந்தக் கொடுமைகளிற்கு எதிராகப் போராடுவதற்கு எந்த முயற்சியும் எடுக்க முனையாமல் இருக்கும் இந்த முற்போக்காளர்களோ அல்லது இலக்கியவாதிகளோ இவ்வளவு காலமாகத் தங்கள் சொந்த விடயங்களை மட்டும் கவனித்துக் கொண்டிருப்பதை ஆவேசமாகக் கேள்வி கேட்கிறாள்.

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருத்தியும் சந்திக்கும் இடர்கள், அவலங்கள் நல்ல இலக்கியத்தரமாக வித்தியாசமான மொழிநடையுடன் மிகவும் இலாவகமாகப் படைக்கப்பட்டிருக்கின்றது. கதை நேரடியாகச் சொல்லப்பட்டாலும் கதையின் மொழிஓட்டம், உரையாடல்கள் என்பன மிகவும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் இலக்கியத்திற்கு சாட்சியாக அமையும் நல்ல கதைகளில் இதுவும் ஒன்று என ஆணித்தரமாகக் கொள்ளலாம்.

ஒரு சிறு நெருடல்.

ஓரிடத்தில், உங்களுடைய சோசல் காசு கிடைக்காமல் போனாலும் எண்டு அரசாங்கத்த எதிர்க்கமாட்டியள் என்று இங்கு ஏற்கனவே தஞ்சமடைந்திருப்பவர்களிடம் கேட்கும் கதைசொல்லி, அடுத்த பந்தியில் பொலிசுக்காரன் தோளில் கை வைக்க திருப்பி கதைத்தால் தஞ்சம் தரமாட்டாங்கள் என்று தனக்குள் பேசி அந்த இம்சையை தாங்கிக் கொள்கிறாள். இரண்டையும் ஒரே தளத்தில் வைத்து ஒப்பிடமுடியாவிட்டாலும் அங்கிருந்து தப்பி இங்கு வருபவர்கள் தஞ்சம் தரும் நாடுகளுக்குள் புகுந்து பாதுகாப்பாக இருக்க இடம் கிடைத்துவிட்டால் போதும் என்ற தன்மை இரண்டு உரையாடல்களிலும் தொக்கி நிற்பது தெரிகின்றது.

கதையின் இறுதிப் பகுதியில் அமையும் படிமக் குறிப்பு மிகவும் அழுத்தமானதும் கதைக்கு மேலும் உரம் சேர்ப்பதாகவும் அமைகிறது.

வல்லைவெளி தாண்டி – சந்திரா இரவீந்திரன், லண்டன் 

தாயகத்தின் யுத்த சூழல் அதற்குள் ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரிடையேயும் உள்ள மென்மையான உணர்வுகள். இவை எல்லாவற்றையும் மிக லாவகமாக எடுத்துச் சொல்லி எங்களையும் தன்னுடன் பயணித்துச் செய்ய வைக்கிறார் படைப்பாளி. போர்ச்சூழல், இயக்கங்களின் நடமாட்டம், இராணுவக் கெடுபிடிகள், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது இராணுவ இடைமறிப்புக்கள், கேள்விகள், பதில்கள், மனக்கிலேசங்கள் என்று கதை நகர்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருமித்து வளர்ந்த சகோதரர்கள் கூட நினைத்தவுடன் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கு முடியாத யுத்தசூழல் மிகவும் நயத்தோடு நகர்த்தப்படுகிறது.

அக்கா, தங்கை, தம்பி பாசத்தினுாடு ஓடும் மெல்லிய இழைகள், ஒரு ஆண் போராளி தனது மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம். தங்களுடைய சகோதரன் போராளியாக இருக்கின்றான் என்பதைப் பெருமையாகக் கருதும் அதேநேரம் அதனைப் பொறுப்பாகவும் கருதும் சகோதரிகள். இப்படி ஒரு யதார்த்த சூழலை இலக்கிய நயத்துடன் லாவகமாகச் சொல்கிறார். ஒருத்தி இயற்கையை என்னமாய் ரசிக்க முடிகிறது, எப்படி இயற்கையுடன் ஒன்றிப் போகமுடிகிறது. மனசு பட்டாம்பூச்சி போல் பறக்கும் மனநிலை எல்லாவற்றையுமே மிகவும் அற்புதமாகப் படைத்திருக்கிறார். என்னதான் யுத்த சூழல் நிலவினாலும் அங்கேயும் எல்லாமே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை அலட்டிக் கொள்ளாமல் நயமாகச் சொல்கிறார் படைப்பாளி.

எய்தவர் யார் – ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், லண்டன் 

ஆசிய நாட்டவர்கள் தங்களுடைய நாட்டில் வந்து குடியேறுவது தங்களுடைய இருப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதும் மேலைநாட்டு இளைஞர்கள் எப்படியான குரோத உணர்வுடனும் இனவெறியுடனும் நடந்து கொள்கிறார்கள் என்பதை அனுபவங்களினுடாக வெளிப்படுத்துகின்றார். குடும்பம் என்ற பந்தத்தினுள் வரும்போது அதனுடைய இறுக்கம் எவ்வாறு இரண்டு நபர்களின் உறவுமுறையைப் பாதிக்கின்றது என்பதையும் பொருளாதரா நெருக்கடி உறவுகளின் மீது செலுத்தும் பாதிப்புக்களையும் கதையில் சொல்கிறார். எந்த உறவும் பொருளாதாரத்தின் மீதுதான் கட்டப்படலாம் என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

கதையில் சித்தரிக்கும் இரண்டு குடும்பங்களிலும் குடும்ப அமைப்பையும் கௌரவத்தையும் காப்பாற்றுவதற்கு என்ன செய்யவேணடும் என்பதையும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் வாழ்க்கை எவ்வாறான நிர்ப்பந்தங்களை வாழ்க்கையில் ஏற்படுத்து கின்றது என்பதையும் சொல்லுகின்றது. நிறவெறியைத் தூண்டியவர் யார் என்ற கேள்வியை எழுப்புகிறார். 

அதற்கான பலமான கட்டமைப்பில் கதை இல்லை. 

விலங்குடைப்போம் – சந்திரவதனா, ஜேர்மனி 

இக் கதையானது தாலிக்கும் உறவுக்குமான பிணைப்பின் பிரமையை உடைக்க வேண்டும் என்ற உணர்வில் எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் கதாசிரியையின் நோக்கம் நிறைவேறவில்லை என்றுதான் கூறமுடியும், தாலி கட்டினால் மட்டும் கணவனாக முடியுமா? என்று கேள்வி எழுப்பும் அதே நேரத்தில், தாலி கட்டாமல் ஒரு மேற்கு நாட்டுப் பெண்ணுடன் குடும்பம் நடத்த முடியுமென்றால், அதாவது கணவன் மனைவி உறவைப் பேண முடியுமென்றால் அந்தத் தாலியின் பாத்திரம் என்ன? தாலியைக் கழற்றி வைத்தவுடன் அந்த உறவு கழன்று போகின்றதா அல்லது ஏற்கனவே கழன்று போயிருந்த உறவினால் தாலியைக் கழற்றினாளா? இது கேள்வி.

தாலி என்பது அடையாளச் சின்னமாகத்தான் இருக்கின்றது. உண்மையில் ஒருத்தி ஒருவனை அகவயமாக கணவனாக வரித்துக் கொள்வதில் இருந்து மீள்வது எவ்வளவு துாரம் சாத்தியமாகின்றது என்பது இன்னும் கேள்விதான்…

கல்யாணச் சீரழிவுகள் – சுகந்தி அமிர்தலிங்கம், ஜேர்மனி

கலியாணத்திற்காக இருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்றுக் காசாக்கி திருமணம் நிச்சயிக்கப்பட்டவனிடம் அனுப்பி வைக்கப்படும் ஒரு பெண் இங்கு வரும்போது பெரிய எதிர்பார்ப்புக்கள் எதுவும் இல்லாவிட்டாலும், இப் பெண் இங்கு வந்த பின்பு எந்தவித உரையாடல்களும் இன்றி இரண்டு பேரும் தனித்தனியாக ஒரே வீட்டில் வசிப்பதும் அவளுக்குப் பழக்கப்படாத இந்த ஊரில் ஒரு அறைக்குள்ளேயே கொட்டுக் கொட்டென்று இருப்பதும் கொடுமை. ஏற்கனவே திருமணத்திற்காக நிச்சயிக்கப் பட்டிருந்தவன் அப் பெண்ணை தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறியதும் ஒருகணம் நிலைகுலைந்து போனாலும் அவனுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று அடம் பிடிக்காது தனியே வெளியே சென்று தன்காலில் நிற்கக் கூடிய ஒரு வாழ்வைத் தேடிக் கொள்கிறாள். ஒரு பெண் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது.

மாறியது நெஞ்சம் – விக்னா பாக்கியநாதன், ஜேர்மனி

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழும்போது இருவரும் வீட்டிற்கு வெளியே சென்று தொழில் புரிபவர்களாக இருக்கும்போது ஆண்கள் தங்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாயம் என்றுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை எடுத்துச் சொல்கின்றார். பிரச்சினைகள் இருக்கும்போது தீர்த்துக் கொள்ளலாம் ஆனால் சந்தேகம் இருக்கும்போது சேர்ந்து வாழ முடியாது என்று தீர்மானித்து மனைவி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பலவிதமான எடுத்துக் காட்டுகளுடன் ஆண் பெண் பக்கங்களை விபரிக்கின்றார் கதாசிரியை. கதையின் இறுதியில் கோசத்துடன் கொடிபிடிக்காமல் இருந்திருந்தால் சிறுகதையின் ஆழம் மேலும் ஒருபடி உயர்ந்திருக்கும்.

வேலைக்காரிகள் – உதயபானு, ஜேர்மனி

பணிப்பெண்களாக தொழில் புரிவதற்காக வெளிநாடுகளுக்கு ஏஜென்சிகளால் ஏற்றி அனுப்பி வைக்கப்படும் பெண்களின் வேலை அனுபவங்களையும் அவர்கள் அங்கு வீட்டு முதலாளி அம்மாக்களால் நடத்தப்படும் விதங்களையும் அப் பெண்களின் மன உளைச்சல்களையும் பின்னணியாகக் கொண்டு கதை பின்னப்பட்டுள்ளது. இப்படிப் பணிபுரியும் பெண்களில் சிலர் தாங்கள் தனியே சந்திக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் பரிமாறிக்கொள்ளும் விடயங்களினூடாக காத்திரமான விவாதங்களைக் கொண்டு வந்திருக்கிறார். கதாசிரியை.

பெண்களை தன்னம்பிக்கை அற்றவர்களாக வளர்க்கும் பெற்றோர்களையும் சமூக நிலைமையையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் யாராவது ஒரு ஆண் பொறுப்பு என்று உளவியல் ரீதியில் தயாரிக்கப்பட்டுள்ளதால் உரிமை, கடமை என எண்ணும் ஆண்கள். அந்த ஆண்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதில் சுகம் காண முயலும் சகோதரிகள். சகோதரிகளைக் காப்பாற்றவென்று தங்கள் உழைப்பினால் முடியாமல் சீதனத்திற்காகத் தள்ளப்படும் ஆண் வர்க்கம். ஆண்களினால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு அதன்பின் செய்யப்பட்ட கொலைகளை தற்கொலை என்று செய்தி ஊடகங்கள் வெளிச்சமிட்டுக் காட்டும் தன்மை. இவைகளிற்கு எதிராகப் போராட முடியாமல் இருக்கும் அந்தப் பெண்களின் உதிரி நிலை என்பவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறார் கதாசிரியை. எவ்வளவு மனச்சுமைகளுடனும் இந்தப் பணிப்பெண்களின் உழைப்பு ஈவிரக்கமின்றி உறிஞ்சப்படுகின்றது என்பதை தெளிவாகக் காட்டுகிறது சிறுகதை.

கானல்நீர் – சுகந்தி, ஜேர்மனி

 ஒருவரை ஒருவர் காணாமல் ஜாதகப் பொருத்தத்தை மட்டும் பார்த்துச் செய்யப்படும் திருமணங்கள் ஒருபோதும் பொருந்தப் போவதில்லை என்பதையும், வெளிநாடு என்ற மயக்கத்தில் முன்பின் தெரிந்திராத ஒருவரிடம் ஒரு பெண் வந்து படும் இன்னல்களைக் கூறுகின்றது. அதேநேரம் உள்ளுரில் இருக்கும் ஆண்கள் யாராக இருந்தாலும் எங்கள் ஆண்களைப் போல் அவ்வளவு மோசமாக இருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையையும் கொடுக்கின்றது. ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை கஸ்டப்பட்டு ஏதோ ஒரு நம்பிக்கையில் தங்கள் பெண்பிள்ளையை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு பெற்றோரின் மனநிலையும் என்றுமே தெரிந்திராத ஒரு ஆணைச் சந்திப்பதிலுள்ள மனப் பயங்கள், நடுக்கங்கள் என்பன எடுத்துக் காட்டப்படுகின்றன. இங்கு வந்தவுடன் எதிர்கொள்ளும் புதிய சூழ்நிலையில் அந்நியன் ஒருவனுடன் (எதிர்காலத்தில் கணவனாகப் போகும்) சகஜமாகப் பழக முடியாது ஒரு பெண் இருக்கும் நிலை எவ்வளவு கடினமானது என்பதையும் அப் பெண்ணுக்கு ஆதரவாக இன்னொருவர் கிடைக்கும்போது இங்குள்ள சூழ்நிலைகளும் சேர்ந்து ஒரு பெண் தனியே வாழ்வதற்கான முடிவை மிக இலகுவாக எடுப்பதற்கு முடிகின்றது என்பதை கதையாகச் சொல்கிறார்.

கசப்பான பலாக்கனி – மல்லிகா, ஜேர்மனி 

ஒரு ஏழைக் குடும்பத்தின், எந்த ஆதரவுமற்று இருக்கும் ஒரு விதவைத் தாயின் மனப்போராட்டங்களையும் வாழ்க்கையில் அவள் எதிர்கொள்ளும் கஸ்டங்களையும் இளமைப் பராயத்தின் ஏக்கங்கள் எவ்வாறு முன்பின் தெரியாத ஒருவனை நம்பி ஏமாறுவதற்குத் துணை போகின்றன என்பதையும் தனக்கேயுரிய மொழிநடையில் மல்லிகா எழுதியிருக்கிறார். இச் சிறுகதையைப் படிக்கும்போது இது உண்மைச் சம்பவமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சம்பவத்தை எதுவித கலப்புமின்றி அப்படியே பதிவு செய்திருக்கிறார் கதாசிரியை. தனித்து வசிக்கும் ஒரு பெண் இந்தச் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூறுகிறது கதை.

மூளைக்குள் ஒரு சமையலறை – நந்தினி, ஜேர்மனி

குடும்பத்தலைவியாக(?) இருக்கும் ஒரு பெண் நாள் முழுவதும்

ஓடியோடி உழைத்த பின்பும், ஓய்வெடுக்கவென்று படுக்கைக்குச் சென்ற பின்பு கண்ணயரும் வரை கிடைக்கும் கணப் பொழுதில் கூட, அடுத்த நாளைக்கான வேலை அட்டவணையை தயாரிக்கும் வேலையில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கும் நிலையை, அன்றாட வேலைச் சுழற்சியை கதை கூறுகிறது. இதில் இன்னுமொரு முரண்நகை என்வென்றால் ஒவ்வொரு வேலையைப் பற்றி சிந்திக்கும் பொழுதும் அந்த மனிசன் என்ன சொல்லுமோ என்பதைக் கவனத்தில் கொண்டுதான் அவளுடைய அன்றாட நேர அட்டவணையைத் தயாரிக்கிறாள். தனக்கு புருஷனாக அல்லது கணவனாக இருக்கும் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டிருப்பவன் மீது எந்தவிதமான பரிவோ அவனுக்காக ஏக்கமும் இல்லாதபோதும் கூட அவனுடைய மறைமுகமான ஆதிக்கத்தின் கீழ்தான் அவளுடைய அனைத்துச் செயற்பாடுகளும் கட்டமைக்கப்படுகின்றன என்பதை ஒவ்வொரு நிகழ்விலும் சுட்டிக்காட்டுகிறார் படைப்பாளி. தன் குடும்பத்தைச் சுற்றியே அனைத்து வேலைகளையும் கட்டமைத்துக் கொண்டிருக்கும் அவள் தன்னுடைய பசியைப் பற்றியோ தன்னுடைய ஆடையணிகளைப் பற்றியோ, இன்னும் தன்னை வேலைப்பளு அமுக்குகின்றது என்பதைப் பற்றியோ கவலைப்படாமல் இருப்பதை மிகவும் சிக்கலில்லாதபடி கதாசிரியை நகர்த்திச் செல்கிறார். கதாசிரியை இடையில் புகுந்து அபிப்பிராயம் சொல்லாமல் இருந்திருந்தால் கதை இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கும்.

சுபைதா ராத்தாவின் பொழுது – நந்தினி, நோர்வே

இஸ்லாமியப் பின்னணியைக் கொண்ட கதை. குடும்பத்தில் மனைவி என்ற ஸ்தானத்தில் அமர்த்தி வைத்திருக்கப்பட்ட ஒரு பெண், எந்த நேரமும் கணவனின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப நுனிக்காலில் நின்று கொண்டு சுழன்றோடி திரிந்து கொண்டிருக்க வேண்டும். வீட்டில் என்ன நடக்கின்றது, போகின்றது, வருகின்றது என்பதற்கான மேற்பார்வைப் பணியை செய்யும் கணவன் அந்தஸ்தைப் பெற்றிருக்கும் ஆண். வீட்டில் இருக்கும்போது சகலரையும் (சகல ஆண்களையும்) அத்துடன் வீட்டிற்கு வரும் சகல விருந்தினர்களையும் ஒரு சிறு குறைகூட விடாமல் கவனித்துக் கொண்டிருப்பவளாகவும் சிறிது ஓய்வு கூட கிடைக்காது உழைப்பதும் அதை எவரும் கண்டு கொள்ளாமல் இருக்கும் அவலமும் இக் கதையில் மிக அருமையாக வெளிப்படுத்தப் படுகின்றன. இங்கு பெண்ணாக இருப்பதால் ஏற்படும் துன்பங்களுடன் சேர்ந்து ஒரு முஸ்லீம் பெண்ணாக இருப்பதானால் ஏற்படும் கஸ்டங்களும் சேர்ந்து இரட்டிப்பு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் சுபைதா.

இஸ்லாமியக் குடும்பச் சூழலின் பேச்சு வழக்கு இயல்பாக வந்திருக்கின்றது. வீட்டில் இருந்து உழைக்கும் அவளுக்கு நேரத்திற்கு சாப்பாடு கிடைக்கிறதா? சீ என்ன நேரத்திற்கா? சாப்பாடு கிடைக்கிறதா என்று பரிவு கொள்வதற்குக் கூட ஆளில்லாமல் அல்லது சாப்பாடு இருக்கும்போது சாப்பிடுவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் அந்தப் பெண்ணின் உழைப்பை, உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத, உணர்ந்து கொள்ளாத ஜடங்களாக இந்த ஆண் ஜென்மங்கள் இருக்கிறார்கள் என்பதை மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் நந்தினி.

கமலா காத்திருக்கிறாள் – கருணா, ஜேர்மனி

தன் மனதுக்குப் பிடித்தது போல் ஒரு வாழ்க்கைத் துணைவன் தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஒரு பெண், ஒரு வருடத்திலேயே ஒரு குழந்தைக்குத் தாயாகி திருமணத்தின் பின் ஊனமாக்கப்பட்டு விட்ட கணவனுடனும் வாழ்க்கை நடத்துவதென்பது எத்துணை சிரமம் என்பதைக் கூறும் கதை. இடையிடையே ஆணின் சில உணர்ச்சி வெளிப்பாடுகள் கூறப்பட்டாலும் அந்தப் பெண்ணுடைய ஏக்கங்கள் அபிலாஷைகள், குழந்தைக்கும் அவளுக்கும் இடையேயான உணர்வுப் பரிமாற்றங்கள், குழந்தைக்கும் தந்தைக்குமிடையிலான தொடர்புகள் பற்றி எந்தவிதமான விபரிப்புகளும் இல்லாமல் கதை நகர்த்தப்படுகிறது. வெறும் நம்பிக்கையோடு காத்திருக்கும் கமலா. அவள் படும் துன்பத்தைப் பொறுக்க மாட்டாத தந்தை கருணைக் கொலைக்கு சம்மதிக்க வேண்டுகிறார். இவைகள் எல்லாவற்றையும் மீறி அவள் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்கிறாள்.

ஒத்தைத் தண்டவாளமும் ஒரு கறுப்பு நீள முடியும் – சுருதி, சுவிஸ்

ஒரு ஒத்தைத் தண்டவாளம் தனது வாழ்நாளில் கண்ட ஒரு கோரத்தைப் பற்றிச் சொல்லுகிறது. கதை சொல்லும் முறை மிக நேர்த்தியாக

அமைந்துள்ளது. ஒரு பெண்ணின் தற்கொலையையும் ஒரு குழந்தையின் கொலையையும் இத் தண்டவாளம் மூலமாக சமூக யதார்த்தங்கள், சமூகத்தில் உள்ள சிக்கல்கள் அந்தக் கொலையினதும் தற்கொலையினதும் மீதான கேள்விகள், சமூகத்தின் மீதான விமர்சனங்கள் என்பவற்றை கேள்விகள் கேள்விகளாகவே கதாசிரியை கேட்கிறார். இக் கேள்விகள் அனைத்தும் கேட்கப்படக் கூடிய வெளி கதையில் இருக்கிறது. ஒரு முடிந்த முடிவாக ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் தான் கொலையும் தற்கொலையும் நடந்திருக்கக் கூடும் என்று ஒரு பக்கக் காரணியை மட்டும் காட்டி நிறுவ முனையாமல் சமூகத்தின் மீது கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றார். இந்தக் கேள்விக்கான பதிலைத் தேட வைப்பதும் அதற்கான 

நகர்வும்தான் கதாசிரியையின் நோக்கமாக இருக்கலாம். இந்தக் கேள்விகளிற்குப் பதில் தேடுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதுதான் இதன்மீது தொக்கி நிற்கும் கேள்வி.

ஒரு மானுடத்தின் குரல் – ஆர்த்தி, நோர்வே

ஒரு பெண் தனது மாதவிடாய் வரும் காலத்தை அடையும்போது அவள் மீது எவ்வளவு கட்டுப்பாடுகள் சுமத்தப்படுகின்றது என்பதைப் பற்றிய அங்கலாய்ப்புக்கள் சமூகத்தின் மீதான விமர்சனத்துடன் முன்வைக்கப்படுகின்றன. கதை சொல்லும் நிகழ்காலம் ஒரு பெண்ணின் முதல் மாதவிடாய் வந்த காலம். பெண்களைப் பண்டப் பொருளாகப் பார்க்கும் விடயமும், உற்பத்தி இயந்திரமாகக் கருதும் விடயமும் கருத்துக்கள் மூலமாக வெளிப்படுத்தப்படுகின்றன.

அத்துமீறல்கள் – ராஜினி, நோர்வே

ஒரு பெண்ணின் அன்றாட வாழ்க்கையில் ஆண் பஸ் கண்டக்டர்

தொடக்கம் தன்னுடன் நெருங்கிப் பழகும் நண்பன் வரை தன் உடலை தன் சம்மதமின்றி உரசும் இந்த ஆண் ஜென்மங்களின் வக்கிரங்களைச் சகித்துக் கொள்ள நேரிடுகிறது என்பதையும், இதுவும் ஒருவகையில் விபச்சாரம் தான் என்பதைக் கூறிச் செல்கிறார் கதாசிரியை. இந்துமதக் கோவில்களில் இருக்கும் சிற்பங்கள் எல்லாம் பெண்ணை அம்மணமாகக் காட்டுவது ஏன்? ஆணை அம்மணமாகக் காட்டமுடியவில்லையா? ஆண்களின் பாலியல் இச்சைகளைத் தீர்ப்பதற்காக சஞ்சிகைகள், திரைப்படங்கள் போல் எங்களுடைய கோயில்களின் சிற்பங்களும் அவர்களிற்கு (ஆண்களுக்கு) பாலியல் தணிப்பைக் கொடுப்பதற்காகவே படைக்கப் பட்டிருக்கின்றன. விளம்பரத்திற்குப் பெண்ணுடல் பண்டமாகப் பாவிக்கப்படுதல், பெண்ணின் உடலை நிர்வாணமாகக் காட்டுவதுதான் கலை என்று கூறுதல். இப்படி நிறைய விடயங்களை உதாரணங்களினுடாகச் சொல்லிச் செல்லும் கதாசிரியை தன்னுடைய கருத்துக்களை இடையில் செருகுவது படைப்பின் மீது பிரச்சார வாடையைக் கொடுக்கிறது.

வடிகால் – வசந்தி, கனடா 

கதையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஒரு பெண் குழந்தைகள் மீது எவ்வாறு கரிசனை கொண்டிருக்கிறாள் என்பதையும் தன்னால் காதலிக்க முடிந்த ஒரு ஆண் எடுத்த எடுப்பிலேயே தனது குழந்தைகளுக்குத் தகப்பனாகிவிட முடியாது என்பதில் நிதானமாகவும் உறுதியாகவும் இருக்கிறாள். ஆனால் ஆணின் சிந்தனை எப்போதும் தாங்கள் இருவரும் தங்களிற்கு இடையேயான காதல் என்றில்லாமல் சமூகம் என்ன நினைக்கும் என்ற கேள்வி முதலில் எழுகின்றது. 

சமூகத்தில் உள்ள நடைமுறைகளுடன் ஒத்துப்போகக் கூடிய உறவென்றால் பாதுகாத்துக் கொள்வோம் அல்லது துண்டித்துக் கொள்வோம் என்பது ஆணின் பக்கம். அந்தப் பெண் தன்னுடைய எதிர்காலம் பற்றி நிதானமாக யோசிக்கிறாள். 

அப்படியிருந்தும் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் உறவின் அடிப்படையில் திருமணம் செய்து கொள்ளும்படி அந்த ஆண் கேட்கும் போது அவள் என்ன சொல்கிறாள், அப்படியென்றால் இந்த உறவை நான் முறித்துக் கொள்கிறேன். நீங்கள் கணவன் அந்தஸ்தைப் பெறுவதற்கு அல்லது உங்களுக்கு மனைவி ஸ்தானத்தில் ஒருத்தி தேவை என்றால் அதற்கு இன்னொரு பெண்ணை நீங்கள் தேடிக் கொள்ள வேண்டியதுதான். 

எக் காரணம் கொண்டும் அவள் தன்னை ஒரு இறுக்கமான திருமண பந்தத்தில் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதில் அவள் தெளிவாகத்தான் இருக்கிறாள். ஆணின் உரையாடல்கள்தான் அவளுடைய முடிவு சரியா பிழையா என தடுமாற வைக்கின்றன.

இங்கு சம்பந்தப்படும் ஆண் காதலனாக இருந்தாலும் அவனை ஒரு ஆணாக உணர்வது முக்கியமான விடயம். ஒருத்தியினுடைய காதலனாக இருப்பதனாலேயே அவனுக்கு அவள் மீதான எல்லாவித உரிமையும் இருக்க முடியாது என்பதிலுள்ள தெளிவு மிக நன்றாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தெளிவாக இருக்கும் அந்தப் பெண், அவனுடைய வீட்டில் இருக்கும்போது அவனின் மகனுக்கான சாப்பாட்டைத் தயாரிப்பது, மகனைப் பாடசாலையில் இருந்து கூட்டிக் கொண்டு வருவதை ஞாபகப்படுத்துவது என்பன ஒரு பெண்ணிற்கென வரையறுக்கப்பட்ட கடமைகளை மேற்கொள்வதற்கான எதிர்பார்ப்பையும் ஆணின் அதிகாரத்திற்கு கட்டுப்படுவதற்கான நிர்ப்பந்தத்தையும் மீண்டும் கொண்டுவர முனைகிறது.

சதுரங்கம் – தயாநிதி, நோர்வே

கதையினுாடு இரண்டு இழைகள் ஓடுகின்றன. வித்தியாசமான உத்தி முறையில் கதை எழுதப்பட்டுள்ளது. தாயையோ தகப்பனையோ அறிந்திராத, அகதி முகாம் ஒன்றில் தனது அடிப்படைக் கல்வியை பெற்றுக் கொண்ட ஒரு அகதியின் விண்ணப்பம் ஏதோ ஒரு தகவல் உண்மையில்லை என்பதன் அடிப்படையில் நிராகரிக்கப்படுகின்றது. வாழ்வதற்கு இடமில்லாது அலையும் அகதி ஒருபுறம், எங்கு வாழ்வது என்ற தெரிவுகளுடன் உள்ள மனித உயிரி ஒருபுறம். கதைசொல்லும் பாத்திரம் இறுக்கமாகக் கட்டமைக்கப்படவில்லைப் போல் தெரிகிறது.

அக்கரைப்பச்சை – றஞ்சி, சுவிஸ் 

அகதி வாழ்க்கை அக்கரைமாட்டுக்கு இக்கரை பச்சை என்று நாடு விட்டு நாடு மாறும் தன்மை. கணவனும் மனைவியும் சேர்ந்து வாழமுடியாத நிலை. வாழ்க்கையை ஸ்திரமாகத் தொடங்கு முன்னரே அது நிலைகுலைந்து போவது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பமாகி வாழும் அகதி வாழ்க்கையிலும் சின்னச் சின்ன ஆசைகள். கடைசியில் எதுவும் இல்லாமல் சிதைந்து போவதையும், அடுத்ததொரு வாழ்க்கைக்கான காத்திருத்தலையும் படாடோபம் எதுவும் இல்லாமல் மிகவும் சுருக்கமாகச் சொல்கிறார்.

முன் அட்டையில் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியுடன் தன் முகத்தை இரு கைகளிலும் ஏந்தியபடி, தாங்கியபடி இருக்கும் ஒரு பெண். செம்மையாகவும்,

எளிமையாகவும், நேர்த்தியாகவும் ரவி(சுவிஸ்)யினால் வடிவமைக்கப்பட்டு நூலுருப் பெற்றிருக்கும் ‘புது உலகம் எமை நோக்கி’ எல்லோர் கவனத்தையும் பெறும் என்பதில் ஐயமில்லை. இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் எந்தக் காலத்தில் வெளிவந்தவை என்பது பதியப்படாமல் இருப்பது, இத்தனை நிறைவுகளுக்கிடையிலும் ஒரு குறையாகவே இருக்கிறது.

இந்த விமர்சனக் குறிப்பு நோர்வேயில் இருந்து வெளிவந்த ‘சக்தி’ சஞ்சிகையின் 1999 (யூலை – செப்டெம்பர், ஒக்டோபர் – டிசம்பர்) இதழில் வெளியாகியது.

https://nluxmy.wordpress.com/2021/08/30/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A/

https://www.panippookkal.com/ithazh/archives/21656

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *