ஊடறு வெளியீடான #மலையகா சிறுகதைத் தொகுப்பை, சென்னை புத்தகக் காட்சி தொடங்கிவிட்ட இவ்வேளையில் கவனப்படுத்த விரும்புகிறேன். _ஆதவன் தீட்சன்யா 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் உள்கட்டமைப்புப் பணிகளுக்காகவும் பெருந்தோட்ட உருவாக்கத்திற்காகவும் தமிழ்நாட்டில் இருந்து காலனியாட்சியாளர்களால் புலம்பெயர்த்தி இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்கள் இன்று அங்கு மலையகத்தமிழர்கள் என்கிற தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளனர். இந்த இருநூறாண்டுகால வாழ்வில் அவர்கள் எத்தகைய வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை மலையகத்தைச் சேர்ந்த 23 பெண் எழுத்தாளர்கள் எழுதியுள்ள இத்தொகுப்பின் கதைகள் அறியத்தருகின்றன. கண்ணியமான பணியிடச்சூழல், உழைப்புக்கேற்ற ஊதியம், வேலைநேரக் குறைப்பு, பணிப்பாதுகாப்பு, சட்டப்பூர்வமான உரிமைகள் என்று உலகத் தொழிலாளர்கள் முன்னேறிச் சென்றுகொண்டிருக்க, மலையகத்தமிழர்களாகிய தொழிலாளர்களுக்கோ – அதிலும் பெண்களுக்கோ இவையெல்லாம் இன்னமும் தொலைதூரப் பெருங்கனவாகவே இருக்கும் அவலத்தை இந்தக் கதைகள் பேசுகின்றன.
இக்கதைகளின் அழகியல், இவை பேசும் உண்மைதான். தோட்டக்காடுகளுக்குள் பிணைக்கப்பட்ட அந்த மக்கள் ஒரு நவீனச் சமூகத்தின் எந்தக் கட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்பதையும் அவர்களது அகவுலகம் எவ்வளவு மட்டுப்படுத்தப்பட்டதாய் இருக்கிறது என்பதையும் அறிகிறபோது ஒருவகையான அவமானவுணர்வு நமக்குள் தோன்றுகிறது. நமது தொப்புள்கொடி உறவு என்று ஆரவாரமாக சொல்லிக்கொண்டே அவர்கள் குடியுரிமை தொடங்கி வாழ்வின் மீச்சிறு முன்னேற்றத்திற்கும்கூட எப்படி போராடவேண்டியிருக்கிறது என்பதை கண்டுங்காணாமல் கடப்பதற்கு பழக்கப்பட்டுள்ள நம்மிடம் இக்கதைகள் தொந்தரவை உண்டுபண்ணக்கூடியவை. மலையகப் பெண் எழுத்தாளர்களின் முன்னுரிமைகளாக இருக்கும் விசயங்கள் அங்குள்ள சமூகநிலைமையையே பிரதிபலிக்கின்றன. அவை இலங்கையின் இந்தியாவின் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் முன்னுரிமைகளுக்கு இணைவைத்துப் பார்க்க முடியாத நிலையில் உள்ளன. பின் தங்கியுள்ள தமது நிலையிலிருந்து மீள தனிமனித அளவிலும் கூட்டாகவும் நடக்கும் எத்தனங்களையும் இக்கதைகள் பேசியபோதிலும் அவர்களது அகவுலகம் சமகாலத்தன்மைக்குரியதாய் வீறுகொள்ளவியலாதபடிக்கு புறச்சூழல் ஒடுக்குமுறை நிறைந்ததாய் உள்ளது. இனம், பால்நிலை, வர்க்க நிலை ஆகியவற்றின் பேரால் நிகழும் சுரண்டல்களையும் ஒடுக்குமுறைகளையும் உலகத்தின் முன்னால் சொல்வதும் கலகப்பண்பின் ஒருகூறு தான் என்றால், அது இக்கதைகளில் சரியாக வெளிப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன். #மலையகாஊடறு வெளியீடு தொடர்புக்கு: விடியல் பதிப்பகம்0422 2576772, 9443468758நன்றிhttps://www.facebook.com/share/p/1WhxqQH66E/