முன்னுரை:
‘மலையகா’ தொகுப்பு நூல் மலையகத்தின் 23 பெண் ஆளுமைகளின் 42 சிறுகதைகளை உள்ளடக்கியது. ‘ஊடறு’ வெளியீடான இந்நூலின் முகவுரையில், பேராதனைப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.ஜெயசீலன் “மலையகம் 200ஐ ஒட்டி இடம்பெற்று வருகின்ற ஆரோக்கியமான பணிகளுள் மகத்தான ஒன்றாக இத்தொகுப்பு முயற்சியையும் குறிப்பிடலாம்” என்று விதந்துரைத்தது போல் நீண்ட காலத்திற்குப் பின்னரான, இவ் அரிய முயற்சியைப் பாராட்டி, இது போன்ற பணி மேலும் தொடர வாழ்த்துகின்றேன்.
நான் மலையகத்து தோட்டத் தொழிலாளரை முதன்மைப் படுத்தி, அவர்கள் வாழ்வியலைப் பேசாத இரு எழுத்தாளர்களைத் தவிர்த்து, 21 எழுத்தாளர்களின் தலா ஒவ்வொரு கதைகளை எடுத்து, விமர்சனம் செய்கின்றேன். இது எனது வசதிக்கா மட்டுமேயாகும். வேறொரு விஷேட காரணமும் இல்லை.
இக்கதைகள் 1975 – 2015 காலப்பகுதியில் எழுதப்பட்டவையாகும். ஏறத்தாழ 40 வருட காலப் பகுதியைக் களமாகக் கொண்டவை. இற்றைக்கு 10 வருடங்களுக்கும் 50 வருடங்களுக்கும் உட்பட்ட கதைகளாயினும், இலங்கையின் மலையக வரலாற்றில், இக்காலப் பகுதியில் பாரிய வாழ்வியல் மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், இக்கதைகள் தற்போதைய நிகழ்வுகளிலிருந்து விலகிச் செல்வதாகக் கருத இடமில்லை என்பதே, யதார்த்த நிலையாகும்.
இற்றைக்கு சுமார் 200 வருடகால வரலாற்றைக்கொண்ட மலையக மக்கள் கடந்துவந்த இன்னல்கள், தடைகள் எல்லாம் முற்றாக நீங்கி விடவில்லை. அவற்றின் தொன்மையின் அடையாளமாக, லயத்து வாழ்வியல்முறை தொடர்கின்றன. மலையக நகரங்களில் குடியேறிய முதலாவது மலையக, மத்தியதர மக்களின் வாழ்நிலையில் சடுதியான ஏறுமுகம் காணப்படுகின்றது. அதனை ஒட்டியே தோட்டத்து மக்களும் ஓரளவு இடைநிலைக் கல்வியைப் பெற்று, நாடு பூராவுமுள்ள பெரு நகரங்களில் தொழில் தேடிச் சென்றுள்ளனர்.
மலையகப் பெருந் தோட்டங்களை 1970 களில் அரசு கையேற்றதன் விளைவாக, தோட்டப் பாடசாலைகளையும் அரசு கையேற்க வேண்டிய கட்டாயத்தின் நிமித்தம், அரச பாடசாலைகளுக்குரிய கட்டமைப்புக்களை வழங்குவதற்கு அரசு முற்பட்டது. அதில் ஏற்பட்ட தடைகளை ஜேர்மனி, சுவீஸ் நாடுகளின் அரச சார்பற்ற நிறுவனங்களின் (GTZ, SEEDA) துணையுடன், இலவசக் கல்வியைத் தரமுடன் தோட்ட மக்களுக்கு வழங்க முடியுமாகியது.
அதே காலப்பகுதியில் 402 ஆசிரிய நியமனங்களும் பின்னர் காலத்திற்குக் காலம் அரசின் மலையத்திற்கே விசேடமாகவும், நாடுதழுவிய திட்டங்களிலும் ஆசிரிய நியமனங்களும், தேசிய இடமாற்றக் கொள்கையால், குறிப்பாக வடபகுதி ஆசிரியர்களின் வரவாலும் மலையகத்தின் கல்வி, வளர்ச்சியை நோக்கி நகர்ந்தது. அதையொட்டியே எண்பதுகளுக்குப் பின்னர், மலையகத்தில் ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், தொழில் முனைவோர்களை உள்ளடக்கிய இரண்டாவது, மத்தியதர வர்க்கமொன்று தோற்றம் பெற்றது.
மலையக மத்தியதர வர்க்கத்தின் வளர்ச்சியுடன் கல்வி, பொருளாதர வளர்ச்சி மேம்பட்டது. அரச உத்தியோகங்கள், வர்த்தகம், தொழிலகங்கள், உயர் பட்டப்படிப்புக்கள் என்பவற்றோடு, 90 களில் ஏற்பட்ட ஆடைத் தொழிற்சாலைப் பெருக்கத்தால் மலையக யுவதிகள் பெருவாரியாக வேலை வாப்புப் பெற்றனர். மத்திய கிழக்கு நாடுகளுக்கும் வீட்டுப் பணிப்பெண்களாக ஒரு தொகைப் பெண்கள் சென்றனர்.
இவற்றின் விளைவால் சிறுவர்களின் படிப்பை நிறுத்திப் பெரு நகரங்களிலுள்ள வீட்டு வேலைகளுக்கு அனுப்புவது அருகியது. தோட்டத்து சிறுவர்கள் சாதாரண தரம்வரை கல்வி பயில்வது சாத்தியமாகியது. இம் மாற்றங்கள் நிகழ்ந்த 90 களில், அரச தோட்டங்கள் மீண்டும் தனியார் கம்பனிகளுக்குக் கைமாறியதால் புதிய தொழிற் பிரச்சினைகள் முளைத்தன.
70 களில் பெருந் தோட்டங்களை அரசு பொறுப்பேற்று, தொழிற்சங்கங்கள், தொழில் நீதிமன்றுகள் வலுவாக இயங்கத்தொடங்கிய பின்னர், தோட்ட நிர்வாகத்தின் முன்னைய அதிகாரங்கள் குறைக்கப்பட்ட, ஓரளவு ஜனநாயக உரிமையைத் தொழிலாளர்கள் வென்றெடுக்கக் கூடிய காலகட்டத்திலும், மீண்டும் தனியார் கம்பனிகள் புதிய அடக்குமுறைகளை ஆரம்பித்த காலப்பகுதியிலும் இங்குள்ள கதைகள் யாவும் எழுதப்பட்டுள்ளன.
மேலே விபரித்த மலயகத்தின் வரலாற்றுக் கட்டங்களில், சமூக அசைவியக்கம் ஏற்படவே செய்தன. புதிய நிகழ் நிலைக்கு ஏற்ப, புதிய புதிய முரண்பாடுகளும் பிரச்சினைகளும் உருவாகின. இங்கே விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்ட 21 கதைகளும் பேசும் கருப்பொருளுக்கு ஏற்ப, மலையகக் கல்வியின் முக்கியத்துவம், குடி போதையின் தாக்கம், பிஞ்சு மனங்களில் நெருடும் நினைவலைகள், மலையகத்தின் அன்றாடப் பிரச்சினைகள் என்று வகைப் படுத்துகின்றேன். இவை எனது கட்டுரை ஆக்கத்திற்கு மட்டுமேயாகும்.
1.மலையகக் கல்வியின் முக்கியத்துவம்:-
ஹட்டன் சாந்தராஜ், அக்னஸ் சவரிமுத்து, செல்வி சுந்தரி மலைசுவாமி, நளாயினி சுப்பையா, ரூபாராணி ஜோசப், இரா. சர்மிளாதேவி ஆகியோர் மலை மக்களின் விடிவுக்கு, கல்விதான் திறவுகோல் எற்பதை அழுத்திக் கூற முற்படுகின்றனர்.
ஹட்டன் சாந்தராஜின் ‘தோட்டத்து மண்’ கதையில் தோட்டப் பாடசாலையில் கற்று, தோட்டப்பாடசாலை ஆசிரிய நியமனம் பெற்றவர், தோட்டப் பாடசாலை செல்ல மறுக்கும் முரண் நிலையைச் சொல்லும் கதையாகும்.
பல கஷ்டங்களுக்கு மத்தியில் கடின முயற்சியால் கற்று முன்னேறிய இரு இளைஞர்களுக்கு, தோட்டப் பாடசாலை நியமனம் கிடைக்கின்றது. அதில் ஒருவர் அரசியல் வாதிகளை நாடி, நகரப் பாடசாலைக்கு மாற்றம் பெற்றதோடு, மத்திய தரத்திற்கே உரிய மனப்பாங்கால் தோட்டத்தை வெறுப்பதையும், நகரத்தில் படித்து பட்டதாரியாகி அங்கு சுகபோகமாக வாழ முற்படும் நிலையில், தகப்பனது மரணத்தின் பின்னர், தனது தங்கைகள் ஆதரவின்றி இருப்பதை உணர்ந்து, மீண்டும் தோட்டப் பாடசாலைக்கு வருவதே கதை.
இக்கதை மத்தியதர வர்க்கத்திற்கே உரித்தான, நிலை தடுமாறும் தனிமனித முன்னேற்றம் நாடிய சிந்தனைப் போக்கின் வெளிப்பாட்டினையும், தொழிலாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையிலான திரிசங்கு நிலைமையைச் சொல்வதோடு, தொழிலாளர்களுடனான உறவு, அவர்களை சமநிலைப்படுத்தும் என்பதையும் எளிமையாகப் புரியவைத்த கதை என்பேன்.
அக்னஸ் சவரிமுத்துவின் ‘செந்தாமரை’ கதையில், தோட்டத்துச் சிறுவன் பரசுராமன், பெற்றோரை இழந்து அநாதை ஆனதால் கொழுப்பில் வீட்டு வேலைக்காரன் ஆகின்றான். பாண் பேக்கரி தொழிலாளியுடன் ஏற்பட்ட பழக்கம், பாசமாகி, அவரின் மகனாகி, அவர் செலவில் படித்துப் பட்டம் பெற்று, தோட்டப் பிரதேசத்தில் கல்விப் பணிப்பாளராக உயர்கின்றான்.
காலச் சூழலால் அவனது வளர்ப்புத் தந்தையின் தொடர்பு இல்லாமல் போகின்றது. அவரது முதுமைக் காலத்தில் அவனது வீடுதேடி வந்த போது, பாசத்துடன் பணிவிடை செய்து, தமது மனைவி பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்வதே கதையாகும். கல்வியின் பயனும் அதுதான் என வாசகர்களையும் சிந்திக்க வைக்கின்றார். தமது செல்வந்த சகபாடிகளின் முன்னே பெற்ற தகப்பனையே, அவர்களது ஏழ்மைக் கோலத்தை இழிவாகக்கருதி, வேலைக்காரன் என்று சொன்ன சந்தர்ப்பங்கள் பலதுண்டு. அதையும் மீறி இளைய தலைமுறைக்கு நல்ல விழுமியத்தை சொல்லும் கதை.
செல்வி சுந்தரி மலைசுவாமியின் ‘தொடரும் சோகங்கள்’ எனும் கதை, தோட்டத்துக் குடும்பம் ஒன்று, தமது ஏகபுத்திரியைத் தமது கஷ்டத்தைத் பொறுத்தவாறு, அவள் முன்னேறு வதற்கான ஒரே வழியான கல்வி மூலம் உயர்வதற்குப் பாடுபடுகின்றனர். ஆனால் அவளோ பருவக்கோளாறில் சிக்கி, காதலனும் கைவிடக் கைக்குழந்தையுடன் பரிதவிக்கின்றாள். ஏமாற்றத்தில் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இறப்பதால் தோட்டமே சோகத்தில், அந்த அபலைப் பெண் கொழுந்துக் கூடையுடன் கொழுந்து மலைக்குப் போகின்றாள் என்று கதை முடிவது, இளைய தலைமுறை எதிர்கொள்ளும் சவாலை கண்முன்னே காட்டுகின்றார்.நளாயினி சுப்பையாவின் ‘சாபக்கேடு’ கதை, தோட்டத்துப் பிள்ளைகளின் கல்விக்காக வழங்கப்படும் இலவச சீருடையை விற்றுக் குடிக்கும் அளவுக்கு பெற்றோர் போதைக்கு அடிமையாகிய அவலத்தையும், கல்வியிலும் விளையாட்டிலும் கெட்டிக்காரப் பிள்ளைகளுக்கு நல்ல உடை, சப்பாத்து இல்லாமல் தமது திறமைகளை வெளிக்கொணரும் வாய்ப்பை இழப்பதோடு, அடுத்த தலைமுறைக்கும் லயத்து வாழ்க்கை கைமாறும் அவலம், அற்பத்தனமான போதைப் பழக்கத்தால் என்பதைச் சிந்திக்க வைக்கின்றார்.
ரூபாராணி ஜோசப்பின் ‘வறுமைப் பூக்கள்’ இடைத்தர வயதான தாய் ஒருத்தி, கணவனை இழந்து நோயாளியான போதிலும், நன்றாகப் படிக்கும் தன் மகனை, ஒரு வைத்தியர் வீட்டில் வேலை செய்து படிக்க வைக்கின்றார். அந்த வைத்தியர் குடும்பத்தை தனது காவல் தெய்வமாக நினைக்கின்றார். ஆனால் அவர்கள் தந்திரமாகத் தாயின் நோயினைக் காரணங்காட்டிச் சிறுவனை வீட்டு வேலைக்காரன் ஆக்குகின்றனர். அந்தத் தாய் இயலாமையால் பரிதவிக்கின்றாள். தோட்டத்திலிருந்து சிறுவர்களையும், சிறுமிகளையும் பெரு நகரங்களுக்கு அனுப்பும் தரகர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி, தமது வறுமையைப் போக்கப் பிள்ளைகளை அனுப்பியவர்கள் அனுபவித்த இன்னல்கள் பற்றிய கதைகள் ஏராளம் வந்துள்ளன. ஆனால் இக்கதை இவற்றிலிருந்து வேறுபட்டதாக அமைந்துள்ளது.
இரா.சர்மிளாதேவியின் ‘விதிவரைந்த பாதை வழியே’ தோட்டத்து ‘வாசுக்கூட்டியின்’ அவல வாழ்வின் சித்திரத்தை கண்முனே நிறுத்துகின்றார். தோட்டத் தொழிலாளிகள் தம்மை யார் யாரோ மதிக்கவில்லை என்று புலம்புபவர்கள், ஒரு நாளாவது தமது தோட்ட குடியிருப்புக்களைச் சுத்தம் செய்யும், சக தொழிலாளியைச் சாதாரண மனிதனாக எப்போதாவது மதித்ததுண்டா?! வாசல் கூட்டி முனியாண்டியை எழுத்தாளர் “தோட்டத்தில் அவன் கைபடாத இடமே இல்லை என்று கூறலாம் அவன் ஒரு தூரிகை” என்று அழகியல் உணர்வுடன் சொல்வது, அவரது பண்பட்ட மனப்பாங்கைக் காட்டுகின்றது.சகமனிதர்களின் அவமதிப்புக்களைச் சகித்துக்கொண்டு, தமது வாரிசுகள் அதை அனுபவிக்கக்கூடாது என்ற வைராக்கியத்துடன் தனது மகனைப் படிக்கவைத்து, தனது பரம்பரையைச் கல்வியால் உயர்த்த உழைக்கும் தந்தை, இறுதியில் அந்த மகன் அகால மரணம் அடைவதாக கதை முடிகின்றது. ஒரு பரம்பரையின் கனவு சிதைவதை சகிக்கமுடியாத மனநிலையே வாசிப்பவர் மனதிலும்.
- குடி போதையின் தாக்கங்கள்:-
பேபி இமானுவேல், ரோகினி முத்தையா, அரபா மன்சூர், லறீனா அப்துல் ஹக் ஆகிய நால்வரின் கதைகள் ஒரே பிரச்சினைகளை வெவ்வேறு அனுபவங்களாக வெளிப்படுத்தி உள்ளன. பிரச்சினைகள் பலவிதமாயினும் அதன் மூலம் குடியாகவே இருப்பதை இக் கதைகள் சொல்கின்றன. தோட்டத் தொழிலாளர் மட்டுமல்ல கல்வியால் உயர்ந்த சமூகத்திலும் இப்பழக்கம் பண்பாடாக அமைந்துள்ள அவலத்தினைச் சொல்லும் கதைகள் எழுதப்பட வேண்டியதன் அவசியத்தை இவ்விடத்தில் பதிவு செய்கின்றேன்.பேபி இமானுவேலின் ‘இது ஒன்றும் புதிதல்ல’ என்ற கதை, கதையோடு கதையாகக் கடந்து செல்லவில்லை. தோட்டத்துப் பெண்கள் அவஸ்தைப்படும், பாடுகளைப் பதிவு செய்கின்றார். அதிகாலை முதல் மாலைவரை கடுமையாக உழைத்து, வீட்டு வேலைகளும் தனித்தே செய்தவளை, இரவில் குடித்துவிட்டு வரும் கணவனின் அடி உதையோடு, அவனது உடற் பசிக்கும் இரையாகி, உடல், உள வலியுடன் மீண்டும் அதே சுழற்சி. தோட்டப் பெண்களுக்குத் தினசரி இம்சையாகவே அமைந்துவிட்ட வாழ்நிலையை விபரிக்கும் கதை.ரோகினி முத்தையாவின் ‘தீபாவளி அட்வான்ஸ்’ என்ற கதை, வறுமைப்பட்ட தோட்ட மக்கள் தமது உழைப்பு சுரண்டப்படுவதை உணராமல், வருடா வருடம் பண்டிகைகளிலும் விழாக்களிலும் தம்மை மறந்து, துளி இன்பமாவது அனுபவிக்கும் அவல வாழ்வினர். தீபாவழி அட்வான்சை வாங்கித் தமது சந்தோஷத்தை அடைவதற்குப் போராடியவர்கள், குடியால் தமக்கிடையே சண்டையிட்டு, வைத்திய சாலைக்கும் பொலிசுக்கும் அலைந்து, கிடைத்த அட்வான்ஸ் பணத்தைச் செலவிடுவதை, பொலிஸ்காரனின் எள்ளல் தமிழில் சொல்ல வைத்தமை நயத்தற்குரியது.
அரபா மன்சூரின் ‘வேண்டும் ஒரு பதில்’ சிறுகதை, லயத்தில் வாழும் ஒரேயொரு முஸ்லீம் குடும்பம், குடிப்பழக்கத்தால் கணவன் சீரழிந்ததோடு, எடுத்ததற்கு எல்லாம் கை நீட்டும் வன்முறையையும் தாங்குவது, தனது மகளின் படிப்பைப் பாதிக்கக் கூடாதென்ற ஒரே காரணத்திற்காகவே. இறுதியில் கணவனது அட்டகாசம் எல்லை தாண்டும்போது, குடிபோதையில் வரும் கணவனை வீட்டிற்குள்ளே அனுமதிக்காமல் .கதவை இறுக மூடுவது, இக்காலப் பெண்களும் செய்யத் தயங்கும் துணிச்சலான செயல்தான். ஒரு சதத்திற்கும் பெறுமதியற்ற கணவன் இருந்துதான் என்ன? இல்லாமல் தான் என்ன? என்ற வினா எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. லறீனா அப்துல் ஹக்கின் ‘ஆத்தா’, பொன்னாத்தா கிளவியின் கதையாகத் தோட்ட மக்களின் பண்பாட்டின் ஊடே விரிகின்றது. கிளவி தனது மகனின் ஆணாதிக்க எதேச்சதிகாரத்தை தமது இயல்பான வாழ்வியலாக எடுத்ததால், ஒருநாள் போதை மமதையில் மனைவியைக் கொன்றேவிட்டான். ஆனால் சாராயக்கடை முதலாளி, சட்டத்தின் ஓடிடையைப் பயன்படுத்தி, அவனைக் காப்பாற்றிவிட்டான்.
சாராய பாருக்கு சொந்தக்காரரான தொழிலாளர் கட்சித் தலைவர் கொழும்பில் ஆடம்பரமாக வாழ்வதற்காக, குடிக்கு அடிமையான தனது மகனையும், தொழிலாளர்களையும் பயன்படுத்துவதையும், அவர்களது தேர்தல் அரசியலையும் விஸ்தாரமாகப் பேசுகின்றது.தோட்டப் பாடசலைக்குப் புதிதாக வந்த இளம் ஆசிரியரின் முற்போக்கான செயல், மாணவர்களை கற்கத் தூண்டுவதோடு, அவர்கள் சமூகத்தின் சீரழிவுக்குக் காரணமான குடி அரக்கனை ஓழிப்பதற்கு, அம்மக்களின் பண்பாட்டுக் கூறான கூத்தினைப் பயன்படுத்துவதையும் சொல்லுகின்ற கதையாகும். ஆத்தா மெல்ல மெல்ல பேரன் குமாரின் முன்னேற்றத்திற்காகத் தனது பிற்போக்கான சிந்தனையிலிருந்து விடுபட்டுத் துணிச்சலான முடிவெடுக்கின்றார். தேர்தல் காலத்தில் சாராயம் விநியோகிக்கும் சட்டமீறலைப் பொலிஸுக்குத் தெரிவித்து, மகனைச் சிறைக்கு அனுப்புவதன் மூலம், அப்பாவி மருமகளின் சாவுக்கு நியாயம் தேடுகின்றார் ஆத்தா. இக்கதையை எழுதியவர் இம்மக்களின் பண்பாட்டுக்கு முற்றிலும் வேறுபட்டவர். ஆனால் அந்தச் சமூகத்தவர்களின் வாழ்வியலை உள்வாங்கி, வாசகரைச் சிந்திக்கத் தூண்டும் வகையிலும், யதார்த்தத்துடன் பொருந்தும் வகையிலும் கலைத்துவத்துடன் அபாரமாக எழுதியதோடு, தொகுப்பில் பெயர் சுட்டத்தக்க கதைகளில் இக்கதையும் ஒன்றாகும்.
3 பிஞ்சு மனங்களில் நெருடும் நினைவலைகள்:பிரமிளா பிரதீபன், புசல்லாவை இஸ்மலிஹா இருவரும் வித்தியாசமான கதைக்கருவை எடுத்து, சிறப்பாகவே வெளிப்படுத்தி உள்ளனர். சிறுவர்களின் நுண் உணர்வுகளை வெளிக் கொணர்வதற்கு மிகுந்த ஈடுபாடும் பயிற்சியும் தேவை. அவை இவர்களிடம் நிறையவே உள்ளதைக் கதைகள் சொல்லி நிற்கின்றன. இத்தகைய கதைகளை இவர்களிடம் வாசகர் நிறையவவே எதிர்பார்ப்பர் என்பது, எனது கணிப்பீடாகும். பிரமிளா பிரதீபனின் ‘சஞ்சம்மா’ கதை, தோட்டத்துச் சிறுவன் ஒருவன் தான் ஆசையுடன் வளர்த்த பசு, தனது கவனமின்மையால் சுகவீன முற்றதால், அதைச் சுகமாக்க முடியாத நிலையில் இறைச்சிக் கடைக்கு விற்பதை நினைந்து கவவலை கொள்கின்றான்.பசுவுடனான பசுமை நிறைந்த சம்பவங்களை, நினைவு கூர்வதே கதையான போதிலும் தோட்டத்து வாழ்வியலோடு, பசுவும் கலந்த துயர்மிகுந்த கதையாகும். மலையிலே அதனைப் புல்மேயவிட்டு, அது விரும்பி மேயும் புல்லையும் ஞாபகம் வைத்திருப்பதும், அதனை உடனே ஓடிச்சென்று எடுத்துவந்து, பசுவுக்கான இறுதி உணவூட்டலாக ‘தண்ணீர்க் கொடி’ கொடுப்பதும் சிறுவர்களின் ஜீவகாருண்யமும், அன்பும் வெளிப்படுகின்றன.
புசல்லாவை இஸ்மலிஹாவின் ‘காயம்பூவும் வாழை மரமும்’ கதை, தோட்டத்துச் சிறுவன் காயம்பூவின் வெகுளித்தனமும், இயலாமையும், ஒரு பூவாழைப்பழ ஆசை நிறைவேறாமையும் தோட்டச் சூழலுடன் எம்மையும் அழைத்துச் செல்கின்றார். ஒரு சிறுவனின் உளப்பாங்கை அழகுறச் சித்தரித்துள்ளார். “நீ ஒரு வாழை நாட்டிப் பழம் சாப்பிடு”. என்ற ஏழன வார்த்தை அவனை சாதனையாளன் ஆக்கியதோடு, தான் நட்ட வாழையைப் பாதுகாக்க அவன் எடுத்த கடினமான முயற்சியும், வாழைக் குலையைப் பாதுகாக்க அவன் பட்ட அவஸ்தைகளும், அவனுடன் சேர்ந்து எம்மையும் பதகளிக்க வைத்ததோடு, அம் மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும், பழக்க வழக்கங்களும் சொல்லப்பட்டதோடு, ஆவலுடன் எதிர்பார்த்த வாழைக்குலை பறிபோவதும், சடுதியாக அந்த ஏமாற்றத்தில் இருந்து மீண்டு, தனது தங்கையின் சிரிப்பில் எல்லாவற்றையும் மறக்கும் குழந்தைத்தனமும் அபாரமாகச் சொல்லப்பட்ட கதை.
- மலையகத்தின் அன்றாடப் பிரச்சினைகள்:-
செ.கோகிலவர்த்தனி, பவானி தேவதாஸ், சிவாஜினி சதாசிவம், சுகந்தி வெள்ளைய கவுண்டர், தியத்தலாவை எச்.எப்.ரிஸ்னா, பாலரஞ்சனி சர்மா, சாந்தி மோகன், மலைமதி சந்திரசேகரன், பூரணி ஆகியோரின் கதைகள் மலையகத்தின் தோட்டங்களில் சாதாரண நிகழ்வாகி விட்டனவற்றில் சிலவற்றைப் புதிய கோணத்தில் பார்க்கின்றன.செ.கோகிலவர்த்தனியின் ‘பென்ஷன்’ வயோதிபப் பெற்றோரின் பென்ஷனைப் பொறுப்புணர்வற்ற ஊதாரிப் பிள்ளைகள் அடாவடித்தனம் செய்து, ஆடம்பரத்திற்குச் செலவு செய்வதைப் படம்பிடித்துக் காட்டுவதோடு, உழைப்பின் அருமை தெரியாது, அப்பணத்தை தமது பகட்டுக்காகச் செலவழிக்கும் போக்கால், இறுதிக்கால சேமிப்பையும் இழந்து, ஒரு வேளை றொட்டிக்கும் அல்லாடும் பெற்றோரின் பரிதாபக் கதையினை விபரிப்பதாகும்.
பவானி தேவதாஸின் சமவெளிச் சிகரம்’ கதை மலையகத்தின் அன்றாடப் பிரச்சினையான மண்சரிவு பற்றிப் பேசுகின்றது. கந்தப்பளைத் தோட்டத்துச் சிறுமி பல கஷ்டங்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு சென்று உயர் கல்வியைத் தொடர்கின்றாள். அங்கு மீனவச் சிறுமியுடன் சிநேகிதம் கொள்கின்றாள். இவர்களின் நட்பின் ஆழத்தில் இரு பிரதேசத்தின் உழைக்கும் அடித்தட்டு மக்கள் என்ற உட்சரடு அவர்களை அறியாமலே இணைத்து வைக்கின்றது. 2004 சுனாமியால் நண்பி மரணிக்க, கந்தப்பளை மண்சரிவில் பெற்றோரை இழக்கும் மலையகப் பெண் நந்தினி, தனது நண்பியின் தாயைத் தனது தாயாகத் தத்தெடுப்பதே கதை. இதில் கல்வியின் முக்கியத்துவமும், இயற்கை அனர்த்தமும், ஆத்மார்த்த நட்பின் ஆழமும் கலைத்துவத்துடன் வெளிப்படுவது சிறப்பு.
சிவாஜினி சதாசிவத்தின் ‘லயக் காம்பறா’ கதையில், அந்தத் தோட்டம் நகரத்திலிருந்து தூரத்தில் உள்ளது. ஆரம்ப பள்ளியே அங்குள்ளது. டவுன் பாடசாலைக்குப் போகும் பிள்ளைகள் நேரத்திற்கு பஸ் இல்லாமல் பாடசாலைக்குப் பிந்திச் செல்கின்றனர். பாடசாலை நேர பஸ் சேவை போலவே ஏனைய நேர சேவைகளும் ஒழுங்கில்லாம் நினைத்த நேரத்திற்கு ஓடுவதும் நிற்பதுமாக இயங்கின. தமது அவசிய தேவைகளுக்காக டவுணுக்கு போய்வரும் மக்கள் கஷ்டத்தை எதிர்நோக்கினர். வலுவுள்ளோர் நடந்து போயினர். அதற்குத் தீர்வு காண்பதற்காக தோட்டத் தலைவர் தலைமையில், மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தயாராவதாகக் கதை முடிகின்றது.சுகந்தி வெள்ளையகவுண்டரின் ‘விடியல் எப்போது’ கதை, மூடப் பழக்க வழக்கத்தால் ஏற்படும் அவச்சாவின் பரிதாப நிலையினைச் சொல்கின்றது. தோட்ட மக்களிடம் இறை பக்தி, பண்பாட்டு விழுமியங்களுடன் கூடவே சேர்ந்துள்ளது. அவற்றுடன் மூட நம்பிக்கைகளையும் ஒன்றாகக் குழப்பி, தமது தனிப்பட்ட நலன்களுக்கும் அவாக்களுக்கும் அப்பாவி மக்களைப் பலிக்கடா ஆக்குவது, எப்போதுமே நடைபெறுகின்றன.
கொழுந்து மலையில் ஒரு பெண் தொழிலாளி மூர்ச்சையாகி விழுந்தபோது, மருத்துவரிடம் கொண்டு செல்லாது, பூசாரியிடம் சாமியாடி, அநியாயமாகச் சாகடிக்கும் சம்பவமே கதையாகும். இது போன்று பல சம்பவங்கள் தோட்டங்கள் தோறும் நிகழவே செய்கின்றன.தியத்தலாவை எச்.எப்.ரிஸ்னாவின் ‘வாக்குறுதிகள்’ மலைப்பாதை சீரின்மையால் விபத்துக்கள் அடிக்கடி நிழ்வதையும், மேட்டு லயத்துக்குச் சீரான நீர் விநியோகத் திட்டம் இல்லாமல் மக்கள் நீரள்ளக் குடங்களுடன் அலைவதையும், பாதுகப்பற்ற இடங்களில் குடியிருப்பதால் இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாவதையும் சொல்லும் கதை.மோசமான பாதையால் பஸ் விபத்துக்கு உள்ளாகி, தகப்பனின் கால் துண்டிக்கப் படுகின்றது. பின்னர் வீட்டோடு ஏற்பட்ட மண்சரிவில் தாயையும் தகப்பனையும் இழக்கும் சிறுவன், பாட்டியுடன் கஷ்டப் படுவதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நெஞ்சமும் வலிக்கவே செய்யும்.
பாலரஞ்சனி சர்மாவின் ‘பசி’, தோட்டத்தில் நிலவிய வரட்சி காரணமாக வேலை நாட்கள் குறைக்கப்பட்டு, பஞ்சம் நிலவியபோது பல தொழிலாளர்கள் நகரத்திற்கும், கிராமங்களுக்கும் கூலி வேலைக்குச் சென்று நிலைமையைச் சமாளித்தனர். நோயாளியும் வயதாளியுமான வடிவேலு பசி தாங்காமல், களவாணியுடன் கூட்டு வைத்தமை விபரீதமாக முடிகின்றது.தேயிலைத் தூள் களவாக விற்றுவரும் ஸ்டோர் கீப்பர், தனது மோசடிக்கு வடிவேலுவின் இயலாமையைப் பயன்படுத்தியதால், துரையிடம் மாட்டினாலும், காட்டிக் கொடுக்க மாட்டேனென்று, தான் செய்த சத்தியத்தை மீற முடியாமல் அஸ்த்தைப்பட்டுச் சிறையில் இறப்பதால், தோட்டத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வு, சரியான வழிகாட்டுதல் இல்லாமல், தொழிலாளர் போராட்டம் பிசுபிசுத்துப் போவதே கதை.சாந்தி மோகனின் ‘நெருப்புக்குள் வீடு கட்டு’ கதை, அரச தோட்டங்கள் தனியார் கொம்பனிகளுக்கு நீண்டகாலக் குத்தகைக்கு விடப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஆட்குறைப்பு, வேலை நெருக்கடி தொடர்பானது.அரச தோட்டத்தில் வேலை செய்யும்போது வழங்கப்படும் 10 நிமிட தேநீர் ஓய்வு நேரத்தையும் பிடுங்கி, அதேபோல் பல தொழிலாளர் உரிமைகளைப் பறித்து, உழைப்பைப் பிழியும் கொடுமையைப் படம்பிடித்துக் காட்டுவதோடு, தொழிலாளர் எதிர்ப்பு செல்லாக்காசு ஆகின்றதே கதை.
மலைமதி சந்திரசேகரனின் ‘அவள் விட்டில் பூச்சியல்ல’ கதை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தோட்டத்து மங்கையின் அவலத்தையும், அவள் அதிலிருந்து மீளவே முடியாத பண்பாட்டுக் குப்பையைத் தலையில் சுமப்பதையும் விபரிப்பது.பிறந்தபோதே தாயைப் பறிகொடுத்த, அந்த தோட்டத்துக் கங்காணியின் அழகு மகளை, தோட்டத்துச் சின்னத்துரை தனது, காமப் பசிக்கு இரையாக்குவதும். அந்த அபலை அந்த இடத்திலிருந்த அரிவாளால் அவனது, தலையைத் துண்டாடிச் சிறை சென்று மீண்டாலும், இயல்பான குடும்ப வாழ்வில் ஈடுபட முடியாமல், முதியோர் இல்லத்தின் சேவகியாவதோடு கதை முடிகின்றது”நடுத்தோட்டத்தைச் சுற்றி சுதந்திர உலாவந்த அந்தப் பூ வாடிவதங்கிச் சிதறிவிட்டது. மணம் வீசக்கூடிய மலர் கணப்பொழுதில் பிணம் போல விழுந்துவிட்டது. வேலு கங்காணியின் பேத்தியின் ‘கற்பு’ ஒரு இரக்கமற்ற மிருகத்தால் குதறி எறியப்பட்டு விட்டது. மலையக மாதா கண்ணீர் விட்டு அழுதாள்.”இங்கே கற்பு என்பது என்ன என்பதான புரிதல் இன்மையால், இன்னமும் கற்பு என்ற ஆணாதிக்க விலங்கை, பண்பாட்டுப் புனிதமாகப் பொத்திப் பொத்திப் பாதுகாப்பதால், பாலியல் பலாத்காரமான ஒரு குற்றச் செயலை, எவ்வாறு கற்பழிப்பாகப் பொருள் கொள்ளலாம், என்ற புரிதல் இன்னமும் ஏற்படவில்லை. எழுத்தாளரிடமும் இந்தப் புனிதம் ஒட்டியுள்ளதை அவரது விபரிப்பில் காணலாம்.
பூரணியின் ‘முடியாத கதைகள் பல’ பிராஜா உரிமை பற்றியதாகும். அத்தோடு வறுமையையும் உறவுகளின் பிரிவையும் பேசுகின்றன. சிறீமா – சாஸ்த்திரி ஒப்பந்தத்தால், பிரஜா உரிமை இல்லாமல் பிரிந்த சோகக் கதைகள் பல. ஆனால் இது வித்தியாசமான கதையாகும்.நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து, மலையகத்திற்கு கணவனுடனும் தம்பியுடனுன் வந்த பெண், தோட்டத் தொழிலாளியாகி வாழும்போது, தனது மகளைத் தம்பிக்குத் திருமணம் செய்து வைக்கிறார். தாயக உறவுகளுடன் தபால் மூலம் தொடர்புகளைப் பேணுகின்றார்.கணவன் இறக்க, மகளுடன் மனஸ்தாபப்பட்டு தனிக்குடித்தனம் போகின்றார். தான் இலங்கையில் பிறந்தது, அனாதையாக இருப்பதாகச் சொல்லி இலங்கைப் பிரஜா உரிமை பெறுகின்றார். அந்திம காலத்தில் மகளுடனும் தம்பியுடனும் நேசமாகின்றார். கறுப்புமை பூசப்பட்டு, தபாலில் வந்த பிரிவுச் செய்திகளால் தாயகம் போக முயல்கின்ற போது, முன்பு பெற்ற இலங்கைப் பிரஜா உரிமை இந்திய போவதற்குத் தடையாக முடிய, இறுதியில் தாய்நாடு போகும் கனவு நிறைவேறாமல் நிராசையுடன் இறந்து போகின்றார்.
முடிவுரை:
அந்தனி ஜீவா தொடங்கி பல தனி ஆளுமைகளும், அமைப்புக்களும் மலையகப் பெண் எழுத்தாள ஆளுமைகளை வெளிக்கொணர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர்களின் கதைகளைத் தேடி எடுப்பதிலுள்ள சிரமத்தால் கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய முக்கோண வலயதின் எழுத்துக்களே இதுவரை வெளிவந்துள்ளது.
கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, களுத்துறை பிரதேச எழுத்துக்களும் விரைவில் தொகுக்கப்பட வேண்டும் என்பதுடன், அப்பிரதேசத் தோட்டத்திற்கே உரித்தான பிரச்சினைகளைக் கருவாகக்கொண்ட கதைகள் சேர்க்கப்படுவதோடு, தற்காலப் பிரச்சினைகளும் பேசுபொருளாக இருக்கவேண்டும். அதன் மூலமே 200 வருட வரலாறுடைய மலையகத்தின் அசைவியக்கத்தை ஒருங்கே காணமுடியும். அதற்கான பொறிமுறையை ‘ஊடறு’ போன்ற நிறுவனங்களாலேயே முடியும் என்பதையும் பதிவு செய்கின்றேன்.