மண்குளித்து – அதிசயங்கள் நிகழுமெனும் தாகம்கரைச்சிப் பிரதேச சபையினர் நடாத்திய பண்பாட்டு விழாவில் மண்குளித்து நாடகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. திறந்த வெளி அரங்கில் மிகவும் நவீனமான இயல்புகள் நிறைந்திருந்த பூர்வீகத்தின் அழகையும் தாகத்தையும் பேசுகின்ற நாடகப் படைப்பு. நாடகத்தின் அமைப்பு, கதை சொல்லல்முறை, ஒளிமையப்பு, பாடல்கள், வாசனங்கள், காட்சிகள், கதாபாத்திரங்கள் என அத்தனையிலும் இருந்த நேர்த்தி ஆச்சரியப்பட வைத்தது. கலைக்காகவும் நாடகத்திற்காகவும் அதன் வழி மண்ணுக்காகவும் வாழ்கின்ற இளைய கலைஞர்களின் தாகத்தால் தான் இது சாத்தியமாயிற்று
ஒரு இனத்தை வீழ்ச்சியுற வைத்து பெறுகின்ற வெற்றியும் ஆட்சியும் முடியும் நிலைத்துவிடுவதில்லை என்ற இலங்கைத் தீவின் அரசியல் உண்மையை ஒரு குடும்பத்தையும் ஒரு மக்கள் சமூகத்தினரையும் மையமாக வைத்து சித்திரிக்கும் இந்த நாடகம், அரங்கு முழுவதும் குறியீடுகளை நிறைத்திருந்தது. சிரிப்பு, காதல், துயரம், வீழ்ச்சி, எழுகை என ஈழ வாழ்வும் பண்பாடும் புலமாக ஒளிர்கிறது.காணாமல் ஆக்கப்படுதலின் அடிவலி, அதசியம் நிகழுமென விதிக்கப்படும் நம்பிக்கைகளும் தாகங்களும் என்று இருளும் ஒளியும் கலந்த மேடையில் மிகப் பிரமாண்டமாக சுமார் ஐம்பது நிமிடங்கள் மக்களை கட்டி வைத்திருந்த கதை. நம் காலத்தின் மிக முக்கிய படைப்பு. அரங்கில் மாத்திரமே காணவும் அர்த்தங்களை விரித்தளிக்கவும்கூடிய படைப்பு.





