
பாலியல் தொழிலாளியாக இருந்தவர் அதிலிலிருந்து மீண்டு வந்து கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகளை வென்றிருக்கிறார் நளினி ஜமீலா
ந ளினி ஜமீலா: இந்தப் பெயர் தமிழக மக்களுக்கு பரிட்சயம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கேரளாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபலம். 15 வருடங்கள் முன் இவர் எழுதிய ‘ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை’ புத்தகம் கேரள தளத்தில் மிகப்பெரிய விவாதமாக பேசப்பட்டது. அப்போது அதிகம் விற்கப்பட்ட புத்தகமும் அதுதான். இதேபோல், ‘ஒரு பாலியல் தொழிலாளியின் காதல் சந்திப்புகள்’ என்ற புத்தகமும் இவருடைய எழுத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த நளினி ஜமீலா. 3ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நளினி, இளம் வயதிலேயே திருமணம் முடித்தவர். அதேபோல், தன்னுடைய, 24 வயதிலேயே கணவனை இழந்து விதவையானார். அதன்பின் தனது இரண்டு குழந்தைகளை இழந்து நிர்கதியாக நின்றவருக்கு பாலியல் வேலையை ஒரு தொழிலாக எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. காலத்தின் சூழ்நிலையால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட நளினி, அதிலிருந்து மீண்டு பாலியல் தொழிலாளிகளின் உரிமைகளுக்காக போராடி வருகிறார்.
2005 முதல் பிரபல எழுத்தாளராக அறியப்படும் நளினி ஜமீலா, பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உறுப்பினர் என பல அடையாளங்களுடன் சமூகத்தில் பயணித்து வருகிறார். இப்போது தனது 69வது வயதில் நளினி ஜமீலா பொதுசமூகத்தில் பாராட்டுகளை பெற்றுவருகிறார். அதற்குக் காரணம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள்.
மணிலால் என்பவர் இயக்கிய, ‘பாரதப்புழா’ திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த எழுத்தாளர் நளினி ஜமீலாவுக்கு கேரள மாநில அரசின் சிறப்பு விருது அறிவித்துள்ளது. இதற்குத் தான் தற்போது நளினிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
“இந்த விருது உண்மையில் எதிர்பாராதது. என் வாழ்க்கையில் முதன்முறையாக நான் ஒரு திரைப்படத்துக்கு ஆடை வடிவமைப்பை செய்தேன். அதற்குக் கிடைத்த இந்த கெளரவத்தை என் வாழ்வின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக நான் மதிக்கிறேன். நல்லதோ கெட்டதோ எனக்கு கிடைத்த அனுபவங்கள் தான் எல்லா முரண்பாடுகளையும் எதிர்த்துப் போராடி வாழ்க்கையின் இந்த நிலையை அடைய வைத்தது,” என்றுள்ளார்.
பாரதப்புழா திரைப்படம் பாலியல் பிரச்சினைகளைக் கையாளும் பெண்ணை மையமாகக் கொண்ட கதை. நடிகை சிஜி பிரதீப் என்பவர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவம் தொடர்பாக எழுத்தாளர் நளினி பேசுகையில், “கதாபாத்திரத்துக்கான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும் போது, உண்மையில் அந்த பெண்ணின் உருவத்தில் என்னைப் பார்த்தேன். ஆம், என் சிறு வயதில் நான் ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்தேன். இதுவரை, வாழ்க்கையில் விலையுயர்ந்த புடவைகள் அல்லது ஆபரணங்களை நான் பயன்படுத்தியதில்லை. இந்த குணாதிசயங்களை படத்தில் கதாநாயகியின் ஆடை வடிவமைப்பில் பிரதிபலிக்க முயற்சித்தேன்,” என்றார்.
ஆடை வடிவமைப்பு மட்டுமின்றி, ஒரு பாலியல் தொழிலாளியின் நடத்தை மற்றும் உடல் மொழியை கதாநாயகிக்கு கற்றுக் கொடுத்தேன். இந்தப் பணியைச் செய்தபோது கடந்த காலத்தில் நான் சந்தித்த கொடூரமான நினைவுகள் மீண்டும் என் கண்முன் வந்துச் சென்றன. படத்தில் என் வாழ்க்கையுடன் தொடர்புடைய காட்சிகள் இருக்கின்றன. மிகவும் சவாலான சூழ்நிலையில் தான் இந்தப் பணியைச் செய்தேன், என்று பேசியுள்ளார்.
தகவல் உதவி: ஏசியாநெட் | தொகுப்பு: மலையரசு