-உமா- (ஜேர்மனி)
-கடத்தப்படும் பிள்ளைகளின் திசையறியா
பெற்றோரின் விம்மல்களும்
சிதைக்கப்படும் பெண்ணுடலின் மௌனங்களும்
என்னிலும் கூரியதாய் என்னைக் காயப்படுத்தின-
****
தன் புத்தம் புது
இறகுகளைக் கொண்டு
பறந்து திரிந்து
களைப்புற்ற குருவிக்குஞ்சொன்று
என் மேல் அமர்ந்ததும்
அகப்பட்டுத் தன்னைக் கிழித்துக்ககொண்டது.எனக்கு அப்பால்
பரந்து விரிந்திருக்கும் சூனியப் பெருவெளியில்
வாழ்வைத் தொலைத்தவர்
அதிகாரக் குப்பைத் தொட்டியில்
குப்பைகளெனக் குவிக்கப்ப்ட்டிருந்தனர்
சேலைத் தலைப்பைச் சூப்பி
உறங்கிய மகன் கடத்தப்பட்ட போது
அவள் விட்ட பெருமூச்சுகளின்
வெப்பத்திலும் ஈரம் காயாது
தெப்பமாக இருந்த
ஒரு தாயின் சேலைத்தலைப்பு
என் மேல் பட்டு கந்தலானது.
அதிலிருந்து துண்டுகளைக் கிழித்தெடுத்த
பெண்கள் தம் மாதவிடாய்
காலத்தில் கட்டுவதற்கு
மறைவிடங்களைத் தேடினர்
அவலம் நிறைத்த கண்கள்
நிச்சயமற்ற பொழுதுகளை நொருக்கி
என் மேல் எறிந்து கொண்டிருந்தன
கடத்தப்படும் பிள்ளைகளின் திசையறியா
பெற்றோரின் விம்மல்களும்
சிதைக்கப்படும் பெண்ணுடலின் மௌனங்களும்
என்னிலும் கூரியதாய் என்னைக் காயப்படுத்தின
தன்னை விடுவிக்க எத்தனிக்கும்
அக்குருவிக்குஞ்சின்; கீச்சிடும் குரல்
ஓலமாக மாறுகின்றது
அதன் உடலிலிருந்து
சொட்டுச் சொட்டாக
இரத்தம்
என் மேல் வடிந்துகொண்டிருக்கிறது.