– யதீந்திரா
பெண்கள் என்று தனித்து பார்த்தால் எங்கும் அவர்களது அவலக் குரல்தான் ஒலிக்கின்றது. தமது எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாத பல்லாயிரம் பெண் போராளிகளின் அழுகுரல் நமது செயல்வெளி எங்கும் வியாபித்திருக்கிறது. அது நமது கடந்தகால தவறுகளின் அழியாத சாட்சியாக இனிவரப் போகும் ஒவ்வொரு தலைமுறையின் மனச்சாட்சியை உலுப்பும். (மனமே இல்லாதவர்கள் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை) |
என்னளவில் ஊடறுவுடனான தொடர்பு கடந்த ஆண்டிலேயே ஏற்பட்டது. நான் ‘எழுத்தாளர்களும் எழுத்து தர்மமும்’ என்னும் தலைப்பில் கீற்று இணையத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அதனை ஊடறு மீள் பிரசுரம் செய்திருந்தது. அப்போது எனக்கு நன்கு பரிட்சயமான கவிஞை தில்லை ஊடறுவுடன் நெருக்கமாக இருந்தார். (மே 18இற்கு முன்னர் அவர் அடிக்கடி பேசுவார் ஏனோ அதன் பின்னர் அவரது தொடர்பைக் காணவில்லை.)
போர் உக்கிரமடைந்திருந்த காலமது. எங்கும் அவலக் குரல்கள், மரண ஓலங்கள். இந்த காலகட்டத்தில் போருக்கு எதிராகவும், மாபெரும் மனித அவலம் ஒன்றை தடுத்து நிறுத்த வேண்டிய காலப் பொறுப்பையும் உணர்ந்து கொண்டு தம்மால் இயன்ற முயற்சிகளை செய்தவர்கள் வரிசையில் ஊடறுவும் நின்றிருந்தது. விடுதலைப்புலிகள் குறித்து ஊடறுவிற்கு விமர்சனங்கள் இருப்பினும் ஒட்டுமொத்த தமிழர்களின் இருப்பு என்று வரும்போது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு அதனை எதிர்கொள்ள வேண்டியதன் கால அவசியத்தை ஊடறு குழுமம் உணர்ந்திருந்ததன் வெளிப்பாடே இது. தவிர பெண்களின் பிரச்சனைகள் தனித்துவமானவையாக இருப்பினும் அவர்களும் சமுதாயத்தின் ஒரு அங்கமே. சமூதாயத்தின் அங்கமாகிய அவர்கள் அந்த சமுதாயத்தின் ஏனைய விடயங்களிலிருந்து தம்மை முழுமையாக துண்டித்துக் கொள்ள முடியாது. இதனை ஊடறு நன்கு விளங்கிக்கொண்டதொரு தளம் என்றே நான் எண்ணுகிறேன்.
அதன் பின்னர் ‘புலமைத்துவத்தின் வறுமையும் புலமைத்துவத்தின் பெயர்வும்’ என்ற தலைப்பில் ஊடறுவில் எனது கட்டுரை பிரசுரமானது. ‘ஊடறு’ குழுமத்துடனான உறவில் மேலும் நெருக்கம் ஏற்பட்டது. அந்த கட்டுரை எழுதியபோது ரஞ்சி, நாங்கள் பெண்களின் வெளிப்பாடுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதுண்டு எனினும் கட்டுரையின் விடயதான முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பிரசுரிக்கிறேன் என்றார். அதில் எனக்கு முரண்பாடு இருக்கவில்லை ஆனால் பெண்களின் எழுத்துப் பரப்பு என்பது ஒரு தனித்த பிரிவாக மட்டுமே சுருங்கிப் போவதில் எனக்கு உடன்பாடில்லை. ஜந்தாவது ஆண்டில் காலடி எடுத்துவைத்திருக்கும் ‘ஊடறு’ இது குறித்து சிந்திக்கலாம் என்பது என் கருத்து.
பெண்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் மட்டுபட்டுக் கிடக்கிறது அல்லது ஆண்கள்வழி நடத்தப்படும் ஊடகங்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது உண்மை ஆயினும் பெண் வெளிப்பாடுகளுக்கான அங்கிகார எல்லைகளை விரிவுபடுத்துவதற்கு அதில் உடன்பாடும், ஈடுபாடும் உள்ள ஆண்களை இணைத்துக் கொள்வது சிறந்ததே.
ஊடறுவின் அடுத்த அம்சம். அது இயங்கும் தளமாகும். ஊடறு குழுமம் மேற்கின் பரந்த தனிமத சுதந்திர பரப்பிற்குள் இயங்குவதால் சுதந்திரமாகவும், தன்னிலைசார் தெளிவுடனும் இயங்க முடிகின்றது. ஒரு வேளை ஈழத்தில் ஊடறு செயற்பட்டிருந்தால் அதன் வெளிப்பாட்டு எல்லை மட்டுப்பட்டிருக்க அல்லது மட்டுப்படுத்தப்பட்டிருக்கவும் கூடும். இதில் அடுத்த விடயம் ஊடறுவின் சுதந்திர இயக்கத்திற்கு காரணம் அது புலம்பெயர் புலிகள்சார் இயங்கு தளத்துடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கவில்லை. ஒரு வேளை அது நிகழ்ந்திருந்தாலும் ஊடறு குழுமத்தின் சுதந்திர உரையாடல் வெளி ஒரு வரையறைகளுக்குள் முடங்க நேர்ந்திருக்கும்.
கடந்த ஜந்து வருட கால ஊடறுவின் இயங்குபரப்பு தமிழ் பெண்களது வெளிப்பாடுகளை ஈழம், புலம்பெயர், தமிழகம் என மூன்று தளத்தில் ஒருங்கிணைத்து வந்திருக்கிறது. இதுவும் ஊடறுவை ஏனைய பெண்கள் தளங்களிலிருந்து வேறுபடுத்தும் சிறப்பம்ச புள்ளியாகும்.
தற்போது ஈழம், புலம்பெயர் சூழல் எங்கும் குழப்பங்களும், தடுமாற்றங்களுமே மேலோங்கியிருக்கின்றன. எதிர்பாராத பல விடயங்கள் நடந்தேறிவிட்டதன் வெளிப்பாடது. மிக அதிக உயரத்திலிருந்து தமிழரின் அரசியல் வீழ்ந்து நொருங்கியதால் அடுத்து என்ன என்ற கேள்விதான் நமது சகலவிதமான உரையாடல் பரப்பையும் ஆக்கிரமித்திருக்கிறது. பெண்கள் என்று தனித்து பார்த்தால் எங்கும் அவர்களது அவலக் குரல்தான் ஒலிக்கின்றது. தமது எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாத பல்லாயிரம் பெண் போராளிகளின் அழுகுரல் நமது செயல்வெளி எங்கும் வியாபித்திருக்கிறது. அது நமது கடந்தகால தவறுகளின் அழியாத சாட்சியாக இனிவரப் போகும் ஒவ்வொரு தலைமுறையின் மனச்சாட்சியை உலுப்பும். (மனமே இல்லாதவர்கள் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை)
இப்படியானதொரு சூழலில்தான் ஊடறு தனது ஜந்தாவது வருடத்தை நிறைவு செய்கிறது ஊடறு. இந்த சவால்கள் நிறைந்த சூழலை முன்னரைக் காட்டிலும் அதிக உத்வேகத்துடன் ஊடறுவால் ஊடறுக்க முடியுமென்ற நம்பிக்கையுடனும் அதற்கான வாழத்துக்களுடனும் நிறைவு செய்கிறேன். தொடர்ந்தும் ஆக்க பூர்வமான முயற்சிகளுடன் கைகோர்ப்போம்.
நல்ல விமர்சனம் யதீந்திரா உண்மையில் உங்கள் விமர்சனம் என்னை கவர்ந்ததது. புதியமாதவியும் நல்ல விமர்சனம் ஒன்றை ஊடறு பற்றி எழுதியுள்ளார். தங்கள் வேலைப்பளுவிற்கிடையிலும் இந்த வேலையை செய்வது மிகப்பெரிய கஸ்டம் ஆயினும் சென்ற வருடம் போர் உக்கிரமடைந்திருந்த வேளை ஊடறு ஒரு கையெழுத்து வேட்டையை செய்து nதை ஐநா உட்பட பல மனித நேய அமைப்புகளுக்கு அனுப்பியிருந்தது. அதில் முழுக்க முழுக்க பெண்கள் அமைப்புகளும் மனிதநேய அமைப்புகளும் பெண்களுமே கையெழுத்திட்டார்கள் அதில் நானும் கையெழுத்து இட்டு இருந்தேன். தமிழ் நா இப்படியான முயற்சிகை புலம்பெயர் நாட்டில் உள்ள வேறு எந்த பெண்களும் மேற்கொள்ளவில்லை. இப்படியான சின்ன வேளைகளை செய்யாதவர்கள் இன்று புலம்பெயர் எழுத்தாளர்கள் இவர்கள் சமூக ஆர்வலர்கள் என்று தம்மை தம்பட்டம் அடித்துக் கும்மாளம் இடுவது இப்பொழுது புலம்பெயர் நாடுகளில் சர்வசாதாரணம் நீண்ட நாட்களுக்கு பிறகு யதீந்திரா நீங்கள் எழுதிய இவ்விமர்சனம் பாராட்டுக்குரியது. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை ஊடறுவில் காண அவா