
பொதுவெளியும் பெண்களும்பொதுவெளியிலிருந்து பெண்களைத் துரத்த இந்த சமுதாயம் பல்வேறு உபாயங்களை தந்திரங்களை அவ்வப் போது செய்து கொண்டேயிருக்கும். திடீரென ஒருமையில் பேசுவது. அம்மா விகுதியை சேர்த்துக் கொண்டு ஒருமையில் பேசினால் டக்கென மற்றவர்களுக்கு அது மரியாதையின்மை என்பது புரியாது. திருப்பிக் கேட்டால் அம்மா என்பது மரியாதையான சொல்தானே …. உங்களுக்கு அம்மா என்கின்ற வார்த்தை பிடிக்காதோ என்று திருப்புவது. இதன் உச்ச பட்சமாக நீ ஒரு மோசமான பொம்பிளை என்கின்ற பொருளைத் தருகின்ற பல்வேறு சொல்லாடல்களை பயன்படுத்துவது
பெண்கள் மனநிலையை நேரிடையாக தாக்கி அவர்களைக் கோபப் பட செய்வது அல்லது பலமிழக்க செய்வது. அவர்கள் தொடர்ந்து விவாதப் பொருளில் பேச முடியாமல் திசை மாற்றி கொண்டு செல்வது. இந்த வழக்கமான உத்தியைத்தான் சுந்தரவல்லி விவாதத்தில் இராமஇரவிக்குமார் முயற்சித்தார். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக புலி பாய்ந்து குதறி விட்டது. நிகழ்வு இடைவேளையில் பேசுவது ஒளிபரப்புக்கல்ல. ஆனால்….அதுவும் நடத்தப் பட்டது. ஆண்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பொம்பிளை பேசுறது அசிங்கம்னு நீங்க எழுதி வைச்ச ஏட்டின் மறுபக்கத்தில் அப்படி பேசிட்டா ஆண்களுக்கு அது மகா அசிங்கம் என்று நீங்கதான் எழுதி வைச்சிருக்கீங்க. ஆனால் அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். சரி. இது ஒருபுறமிருக்கட்டும். இதற்குக் கொஞ்ச நாட்கள் முன்புதான் ஜோதிமணியை விவாதத்தில் பேச விடாமல் இதே உத்தியைக் கையாண்டீர்கள். அதன்பின் தோழர் சுபவீ உட்பட பலரைத் தாக்கி வீடியோ வெளியிட்டீர்கள்.
இந்த நாகரீகமற்ற செயலை சம்பந்தப் பட்டவர்களிடம் கண்டுகொள்ளாதீர்கள் என்று ஓரளவுதான் சொல்ல முடியும். இதனையே ஒரு கூட்டம் திட்டமிட்டு செய்கிறார்கள் என்றால் அரசு இதனைக் கவனிக்க வேண்டும். என்னுடைய உரைகளின் பின்னூட்டத்தில் கூட பல இழிமொழிகள் இடம் பெற்றிருக்கும். நான் வாசித்தே இருக்க மாட்டேன். ஒருநாள் என் பேத்தி படித்து விட்டு கலங்கி விட்டாள். என்னம்மா இப்படியெல்லாம் திட்டியிருக்காங்க… என்றாள். நாமெல்லாம் பெரியார் கட்சிக்காரங்கம்மா வசவும் அவமதித்தலும் புறக்கணித்தலும் நாம் பழக வேண்டிய அத்தியாவசிய நிலைகளம்மா என்று சொன்னேன். அந்த குழந்தைக்கு என்ன புரிந்ததோ தெரியாது. இதை இங்கு சொல்வதற்குக் காரணம் உங்களால் அவமதிக்கப்படும் ஒவ்வொருவரும் அதனை எந்த பாதிப்புமின்றி கடந்து செல்வது சாத்தியமில்லை. எனவே அரசும் சமுதாயமும் இதனை தனிநபர் பிரச்சினையாகக் கருதாமல் உரிய சட்டங்களுடன் அவற்றை நடைமுறைப்படுத்தி சமுதாயத்தின் ஒட்டு மொத்த கண்ணியத்தை பாதுகாத்திட முன்வர வேண்டும்.இறுதியாக நான் சில விசயங்களைச் சொல்ல விரும்புகிறேன். பல்வேறு பட்ட அரசியல் கட்சிகள் நிலைப்பாடுகள் இருந்தால்தான் அது ஒரு சுதந்திரமான சமுதாயம். மாற்று தரப்பினரை அழித்து விட்டுதான் அடுத்த வேலை என்று யார் நினைத்தாலும் அது தவறுதான். முன்பெல்லாம் தொண்டர்கள் தேநீர்க் கடைகளில் பேசினார்கள். ஆனால் இன்று முகநூலில் பேசுகிறார்கள். உலகமெல்லாம் கேட்கிறது. தயவுசெய்து தலைவர்கள் தொண்டர்களின் மொழியைக் கண்காணியுங்கள் பயிற்சி கொடுங்கள். இங்கு பலருக்கும் பொது எதிரியைப் பற்றி கவலை இல்லை. ஏன் கொரனாவைப் பற்றி கூட கவலையில்லை. அவரவர்க்கு பிடிக்காத அணியின் தலைவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று காத்திருக்கிறார்கள். நடந்து கொண்டிருக்கும் சமுதாய சிக்கல் மீதான ஒரு கொள்கைப் பிரச்சினையில் உடனே கருத்துக்கள் கண்டனம் தெரிவிக்கப் படலாம். ஆனால் இட்லி பிரச்சினை கூடவா உங்களுக்கு உயிர்ப் பிரச்சினையாகப் போய் விடுகிறது? நாட்டில் பல்வேறு அபாயமான சூழல்கள் நிலவுகின்ற போது அதற்கான கவனத்தை இது போன்ற காரியங்கள் திசை திருப்ப அனுமதிக்காதீர்கள். உண்மையில் இது போன்ற நிகழ்வுகள் இங்கு அரசு எவ்வளவு பலவீனமாக நியாயமற்றதாக இருக்கிறது என்பதன் அடையாளம்தான். அன்று சுந்தரவல்லிக்கு வந்த கோபத்திற்கு இராம இரவிக்குமார் இடையீடு மட்டும் காரணமல்ல. இது போன்ற விவகாரங்களில் பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது காவல் துறை விரைந்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதும் முக்கியமான காரணம். காவல்துறையும் அரசும் கவனியுங்கள். அதுதான் உங்கள் வேலை. ஒரு நல்ல நாட்டில் துப்பாக்கிகள் உங்களிடம் மட்டும்தான் இருக்க வேண்டும்.