தயவுசெய்து யாரும் என் எழுத்தை வாசிக்காதீர்கள்! – ஒரு கடிதம்

குட்டி ரேவதி (இந்தியா)

broken pens இக்கடிதத்தை சிலவாரங்களுக்கு முன்பே வலைப்பதிவில் எழுத எண்ணியிருந்தேன். இப்பொழுது தான் சமயம் வாய்த்தது. அன்பார்ந்த நேயர்களே! என் எழுத்துகளை தயவுசெய்து யாரும் படிக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் மறைமுகமாக உங்களை வாசிக்க வைக்கும் தந்திரம் ஏதுமில்லை.

என் எழுத்தை பத்து வாசகர்களுக்கு மேல் படிப்பதை நான் விரும்பவில்லை. அத்தகைய எழுத்து குறித்த சந்தேகங்கள் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்தே இன்னும் ஆழ ஆழ வேரோடிக் கொண்டே இருக்கின்றன என்னுள். எண்ணிக்கை நிமித்தமான வாழ்க்கை எத்தகைய பேதலிப்பைத் தரும் என்பதை எல்லா வகையிலும் மேலும் மேலும் நான் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்.

 என்னுடன் வதியும் மனோ கூட என் கவிதைகளை வாசித்திருக்கமாட்டார். அத்தகைய பாதுகாப்பை என் எழுத்துகளும் பெற்றிருக்கின்றன என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவ்வளவு சொற்பமான இடத்தைத் தான் எழுத்து வாழ்க்கையில் கொண்டிருக்கிறது. மேலும் அதிகமானோர் வாசித்தால் என் எழுத்தில் ஏதோ குறையிருப்பதான ஒரு குற்ற உணர்வு என்னைத் தொற்றிக்கொள்ளும். ஆகவே, தயவு செய்து யாரும் என் எழுத்தை வாசிக்காதீர்கள்! தமிழகத்தில் கவிதையை வாசித்தோ விவாதித்தோ வாழ்வதற்கான உரையாடலையும் இன்முகத்தன்மையையும் இலக்கிய அரசியல் இழந்து விட்ட நிலையில் என்னிடம் பராதிகள் ஏதும் இருக்கமுடியாது அல்லவா? எழுதிய கவிதையை வாசித்துக்காட்டி அதன் நுணுக்கங்களைப் பற்றி விரிவாக உரையாடுவதற்கான பெருந்தன்மைகள் அபூர்வமானவை. நான் எனக்காக மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறேன். வலைப்பதிவு என்பதையும் ரகசியமான ஒரு நாட்குறிப்பேட்டைப் போன்றதொரு வெளியாக உணர்கிறேன். அத்தகைய அக உலகிற்கான பிரவேசங்கள் மிகக் குறைந்த நபர்களுக்கே சாத்தியமானது என்பதை நீங்கள் அறிந்ததில்லையா? என் எழுத்தின் இறுக்கத்தைத் தாண்டி செல்வதற்கான துணிவை எடுத்துக்கொள்வோருக்காக மட்டுமே நான் எழுத்தைத் திறந்துகொடுக்கிறேன்.

மெல்லிய குறட்டை சத்தங்கள் என் வரிகளுக்கிடையே ஒளிந்திருக்கக்கூடும். என் வாழ்வின் சுவாரசியங்கள் குறித்த சத்தியங்களை எழுத்தின் வழியாக செய்து கொள்ளவேண்டிய அவசியமில்லை தானே! அத்தகைய சத்தியங்கள் வேட்டைநாய்களுடையவை என்று ஒரு பழமொழி உண்டு. நான் நிறைய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். அதில் எழுதுவது என்பது என் தீவிரத்தை ஆற்றுப்படுத்தும் ஒரு பணி. நிறைய பயணம் செய்தல், வேறு வேறு உலகங்களை என் ஆழ் மனநிலைக்கும் உடல்நிலைக்கும் பரிச்சயப்படுத்திக்கொள்ளல் என…அதில் எழுத்தை மட்டுமே அதிகாரமயமாக்காமல் வைத்துக்கொள்ள முடியுமானால்… என் கவலைகள் எல்லாம் என் அக உலகம் பற்றியது தான். அதை எழுத்தில் கொண்டு வருவதற்கான மூர்க்கமும் ஆதங்கமும் எனக்கு இல்லவே இல்லை.

 எந்தப் பட்டியலில் அடக்கினாலும் அடக்காவிட்டாலும் என் பெயர் காலத்தின் நதியில் மிதந்து செல்லும் ஒற்றைச் சருகு. எல்லாருடைய பெயரும் அப்படித்தானே? வாசிக்க வாசிக்கத் தெவிட்டாத எழுத்தாக, இத்தனை வருடங்களுக்குமான ஊக்கத்தைத் தன்னகத்தே கொண்ட கவிதைகளாக இருப்பவை இளங்கோவடிகளின் வரிகள் மட்டுமே. நல்ல வேளையாக தன் பெயரை ஓர் குறியீடாக வைத்து அரசியல் செய்வதற்கான காலம் அவருக்கு இல்லை என்பது அவரின் கவிதை உலகத்திற்குள் பயணிக்க என்னை அனுமதிக்கிறது. எளிதாகவும் இருக்கிறது. கண்ணகியை கவிதை படைக்க ஒரு சாக்காகவே வைத்து தன் அறங்களைப் பயின்றிருக்கிறார். இன்று வரை அவர் இடம்பெற்ற பட்டியலில் வேறு எந்த எழுத்தாளர் பெயரும் இல்லை.

 இன்னும் மிச்சம் இருக்கிறது என்னுடைய வாதம். பெண்ணாகப் பிறந்துவிட்டதாலேயே என்னைப் பெண் என்றும் அதற்கான நியமங்களையும் என் மீது சுமத்தாதீர்கள் என்பதே அது. நான் பெண் அல்ல. ஆனால் பெண்ணின் இயலாமைகள் துயரங்கள் எல்லைகள் உச்சங்கள் இவற்றிற்கிடையேயான தொடர்புகள் பொருத்தப்பாடுகள் பற்றிய சிந்தனைகள் என்னிடம் தீராதவையாக இருக்கின்றன. ஆனால் என் வாழ்வில் சம்பந்தப்படாத நபரையோ பெண்ணையோ பற்றி விமர்சிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அவர்கள் என்னிடமிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றனர்.

 இதை எழுதுவதற்கு முற்றிலும் காரணமான சத்தியாவின் கடிதத்திற்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். சத்தியா, தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல எனது தெரு எவர் வீட்டு வழியாகவும் நீள்வதில்லை என்பதால் அவர் கொடுத்திருக்கும் பட்டியலை திரும்பப்பெற்றுக் கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

 சத்தியா கவிதையின் வரலாற்றில் ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுவதா என்று அநியாயத்திற்குக் கவலைப்பட்டிருந்தார். கவிதையின் வெளி பொது. அல்லது தேவதேவன் சொல்வதைப் போல சொர்க்கம் அது.

 தேவதேவனின் ‘அறுவடை’ கவிதை:

 நீரில் தெரியும் நெற்கதிர்கள் 

சொர்க்கத்தின் விளைச்சல்கள் 

நாம் அதனை  

நேரடியாய் அறுக்கமுடியாது. 

 

அன்புடன்,

குட்டி ரேவதி

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *