இணைய இதழ் அறிமுகம் – ஊடறு.காம் –பெண் குரல்கள் பதிவாகும் பெருவெளி இணையத்தில் அவரவர் தங்களுக்கான, தனித்தனிவலைபூக்களை ஏற்படுத்தி, கண்டதையும் எழுதி பயனில்லாப் பதிவுகளை போட்டு நேரம் வீணடித்துக் கொண்டிருக்கும்சூழலில்… |
ஆதியில் தான் இழந்த சொற்களை மீட்டெடுத்துள்ளது பெண்மை. பெண்மையின் மனக்குகையில் நூற்றாண்டுகளாய் புதையுண்டு கிடந்த பொக்கிஷங்கள் வெளிப்பட்டு வருகிறது. பெண்மையின் புது மொழிப் பதிவுகள் பலப்பல ஆக்கங்களாய் பதிவு செய்யப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாய் படைப்புத் துறையில் பெண்களின் சாதனை வியப்புக் குரியதாய் இருக்கிறது. இவர்களுடன் போட்டிக்கு இனி யாரும் வர முடியாது என்பது உறுதி.
இணையத்தில் அவரவர் தங்களுக்கான, தனித்தனி வலைபூக்களை ஏற்படுத்தி, கண்டதையும் எழுதி பயனில்லாப் பதிவுகளை போட்டு நேரம் வீணடித்துக் கொண்டிருக்கும் சூழலில், ஆக்கமான படைப்புகளால் காலத்தால் அழியாத பதிவுகளை செய்து கொண்டிருக்கும் ஒரு தளம்தான் ஊடறு.காம்.
ஊடறு இணைய இதழ் ஜூன் மாதம் 2005ம் ஆண்டு துவக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க பெண்மையை பதிவு செய்ய வேண்டி துவக்கப்பட்ட இந்த இதழ் சுவிட்சர்லாந்திலிருந்து ‘றஞ்சி’ மற்றும் ஜெர்மனியிலிருந்து ‘தேவா’ ஆகிய இருவரையும் ஆசிரியர்களாகக் கொண்டு வருகிறது.
உலகின் பல நாடுகளிலிருந்து இந்த தளத்தில் பெண்களின் பலவித படைப்பு பங்கீடுகளைக் காண முடிகிறது. தளமெங்கும் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், நூல் மதிப்புரைகள், விமர்சனங்கள் மற்றும் பல புது முயற்சிகளும் காணப்படுகின்றன. பெண்களுக்கான தளம் என்றதும் வடாம் பிழிவது பற்றியும், கணவரின் சட்டையில் படிந்த தேனீர் கறையை நீக்குவது பற்றியும் சமையல் மற்றும் அழகு குறிப்புகள் என இதுவரையில் இருந்த வழக்கம் முற்றிலுமாக மாற்றப்பட்டிருக்கிறது.
நூல் மதிப்புரைகள் ஒரு புதிய பரிணாமத்தை உணர்த்துகிறது. கவிதைகளின் மொழியில் அத்தனை நேர்த்தி. அன்புக்கு ஏங்கும் அபலை மொழிகளில் மட்டுமே கவிதைகள் இருக்கும் என்று கற்பனை செய்பவர்கள் ஏமாந்து போவார்கள். சமூக அக்கறையோடும், விடுதலை உணர்வோடும் இயல்பாக எழுதப்பட்டுள்ளன பலரின் கவிதைகள்.
உலகெங்கும் இருக்கும் பெண்களின் படைப்புகளை இந்தத் தளத்தில் ஒருங்கே காண முடிகிறது. இதழியல் என்ற பகுதியில் நூல் அறிமுகங்கள் மற்றும் மதிப்புரைகளும் மின்னூல்கள் சிலவும் படிக்கக் கிடைக்கின்றன. விமர்சனங்கள் பகுதியில் மிக ஆழமான மற்றும் நுண்நோக்குடன் கூடிய விமர்சனங்களை பார்க்க முடிகிறது.
செவ்வி என்ற பகுதியில் பேட்டிகளும், உரையாடல்கள் பகுதியில் விவாதங்களும் கருத்துகளும் குறும்பட நிகழ்வுகள் மற்றும் அவை பற்றிய குறிப்புகளும் கூட காணக் கிடைக்கிறது. இத்தனையும் பதிவு செய்யப்பட்டுள்ள இதில் நாடகத்திற்கும் அரங்கியல் என்ற தலைப்பில் இடமொதுக்கி உள்ளனர். மடல்களுக்கும் அறிவிப்புகளுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது எங்க ஏரியா உள்ளே வராத என்ற அறிவிப்பு பலகை மாட்டப்படாத குறையாக, வாசிப்பாளராக யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் படைப்புப் பங்கீடு பெண்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு மூன்று கால் விஷயத்தை இந்தத் தள நிர்வாகிகள் தளர்த்திக் கொண்டால் சிறப்பு.
மேலும் பக்க இணைப்புகள் எளிமையாகவும், ஏற்றப்பட்டுள்ள படைப்புகள் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களுடன் வசீகரிக்கின்றன. இத்தளம் முழுக்க முழுக்க பெண்களுக்கான இணைய தளம் என்பது மட்டுமல்லாமல் இது ஒரு முழுமையான தளம் என்று சொல்வதே இன்னும் சிறப்பாக இருக்கும்.