புதியமாதவி, மும்பையிலிருந்து …
குழுச் சண்டை ஈழம் சார்ந்த பல்வேறு இணைய இதழ்களில் கொடி கட்டிப் பறக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஊடறுவுக்கும் சில அடையாளங்கள் உண்டு என்பதை நானறிவேன். ஆனால் அந்த அடையாளங்களைக் குழுச்சண்டையாக்கி விவாதங்களால் தங்கள் பக்கங்களை நிரப்புவதில் ஊடறு என்றைக்குமே ஈடுபாடு காட்டியதில்லை. |
“ஆதித்தாயின் கருவறைத் திறந்தது
அதிகாரவெளிகள் ஆட்டம் கண்டது
ஊடறுக்கும் அவள் குரல்
ஊடறுவில் அவள் முகம்”
ஊடறுத்தல் என்ற சொல் நடுவறுத்தல், வழக்குத் தீர்த்தல், ஊடுருவுதல் என்று பொருள்படும். அதிகார வெளியினை ஊடறுக்கும் பெண்குரல் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வெளிவரும் இணைய இதழ் ஊடறு. ஜூன் 2005 ஆரம்பிக்கப்பட்ட ஊடறு இணையம் ஜூன் 2010ல் ஐந்து வருடங்களைக் கடந்து வந்திருக்கிறது. ஆரம்ப காலத்திலிருந்து ஊடறுவைத் தொடர்ந்து வாசித்த அனுபவம் .. யார் இவர்கள் என்று தெரிந்து கொள்ள நான் எடுத்துக்கொண்ட கால அவகாசம், ஊடறு வெளியிட்ட பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளை வாசித்து இலக்கிய நண்பர்களுடன் அப்படைப்புகள் குறித்து விவாதித்து.. எது இவர்களை எழுத வைத்திருக்கிறது என்றெல்லாம் மண்டைக்காய ஆய்வுரைகள் நடத்திய அனுபவம் .. அதன் சில துளிகளைப் பகிர்ந்து கொள்வது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம்.
பெண்கள் இதழ் என்றால் காதல், கத்திரிகாய், அழகாக இருப்பது எப்படி?,கணவரைக் கவர்வது எப்படி?, படுக்கை அறை தலையணை மந்திரம், பிரசவக் குறிப்புகள், இளமையாக இருக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள், குழந்தைகள் பராமரிப்பு, பாட்டி வைத்தியம், சமையல் குறிப்புகள், புதிதாக வந்திருக்கும் புடவைகள், சுடிதார்கள்… இத்தியாதிகளுடன் பிரபலமான பெண் ஒருவரின் செவ்வி.. என்பது தான் பெண்ணிய இதழ்களின் குணாம்சம். புகழ்பெற்ற ஆங்கில பெண்ணிய இதழ்களும் இதில் விதிவிலக்கல்ல. அச்சு ஊடகம் மட்டுமல்ல, காட்சி ஊடகங்களும் இந்தப் பாதையைவிட்டுவிலகாமல் பயணம் செய்யும் மரபைப் பார்க்கலாம். பெண்குரல் என்று ஒலிக்க ஆரம்பித்த ஊடறுவில் ஆரம்பத்திலிருந்தே இத்தியாதி எவ்விதமான பெண்ணிய மசாலாக்களும் இடம் பெறவில்லை. அடையாளப்படுத்தியதிலும் நோக்கத்திலும் அதை நோக்கி நகர்ந்த தன் பாதையிலும் ஊடறு எவ்விடத்திலும் திசைமாறாமல் பயணம் செய்திருப்பது பாராட்டுதலுக்குரிய முதல் அம்சம்..
பிரச்சனைகளை அலசுவதை விட அந்தப் பிரச்சனைகளை எழுதுபவர், பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் இவர்களுக்கான அடையாளங்களுடன் நடக்கும் குழுச் சண்டை ஈழம் சார்ந்த பல்வேறு இணைய இதழ்களில் கொடி கட்டிப் பறக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஊடறுவுக்கும் சில அடையாளங்கள் உண்டு என்பதை நானறிவேன். ஆனால் அந்த அடையாளங்களைக் குழுச்சண்டையாக்கி விவாதங்களால் தங்கள் பக்கங்களை நிரப்புவதில் ஊடறு என்றைக்குமே ஈடுபாடு காட்டியதில்லை. வரலாற்றில் தனக்கான சமூகக்கடமை, பொறுப்பு அதைச் செயலப்டுத்துவதில் காட்டும் நிதானம், பொறுமை ஊடறுவின் இன்னொரு சிறப்பம்சம். நிதானம் , பொறுமை என்பதாலேயே ஊடறு எல்லா பிரச்சனைகளையும் காயப்போட்டு காலம் கடத்தியது என்று சொல்வதற்கில்லை.
தனிப்பட்ட மனிதர்கள்சார்ந்த செய்திகள் அறிக்கைகள் விசயத்தில் நிதானம் காத்த ஊடறு சமூக பிரச்சனைகளைக் கண்டு அறச்சீற்றம் கொண்டு ஒவ்வொரு பிரச்சனைகளுக்குமான உலகாளாவிய பார்வையை விரித்தது. குறிப்பாக ஈழத்தில் நடந்த வன்கொடுமை, தமிழின அழிப்பின் போது விடுதலைப் புலிகளின் கடந்த கால பக்கங்களைத் தாண்டி வந்து வன்னியில் தவிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் உலகளாவிய அளவில் என்ன செய்யமுடியும்? என்ற கரிசனத்துடன் உலகச் செய்திகளையும் ஐ.நா. அமைப்பின் அறிக்கை, செயல்பாடுகள், உலகத் தொண்டு நிறுவனங்களின் அறிக்கை, செயல்பாடுகள் என்று அனைத்தையும் தன் பக்கங்களில் செய்திகளாக்கியது.
அனுபவத்தை வாசகனின் அனுபவமாக்கும் திறமை கொண்டவன் எழுத்தாளன் என்றால் அந்த அனுபவத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணிகளாக இருப்பவை இன்றைய எழுத்துகளில் இடமும் காலமும் என்றே சொல்ல வேண்டும். ஊடறுவின் குரல் ஈழத்தைத் தாண்டி வந்த காரணத்தால் மட்டுமே என்று புலம்பெயர்வை மட்டுமே காரணமாக்கி ஊடறுவின் சிறகுகளை வெட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. எனினும் மார்ச் 1, 2009ல் யதீந்திரா எழுதியிருக்கும் கட்டுரை ஊடறுவுக்கும் பொருந்தும் என்றே எண்ண தோன்றுகிறது. “புலமைத்துவத்தின் வறுமையும் புலமைத்துவத்தின் பெயர்வும் ” என்ற தன் கட்டுரையில் யதீந்திரா
“ஈழத்தில் இருந்த நிலைமையைக் காட்டிலும் புலம்பெயர் சூழலில்தான் இது அதிகம் வெளிப்பட்டது. புலம்பெயர் சிந்தனைகளின் பிறிதொரு போக்காக தலித்தியம் குறித்த சிந்தனைகள் மற்றும் பெண்ணியம் குறித்த சிந்தனைகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக தலித்திய சிந்தனைகளை முன்னிறுத்துவோர் தமது சிந்தனைகளுக்கான பின்புலமாக யாழ் சாதிய அமைப்பு முறைகளையும் அதற்கு எதிராக அன்று வெளிக்கிளம்பிய செயற்பாடுகளையும் வேராக கொள்கின்றனர். அன்றைய யாழின் கொடூர சாதிய ஒடுக்குமுறைப் போக்கை தோண்டியெடுத்து, எதிர்ப்பு அரசியல் வடிவம் கொடுக்க முயலும் இவ்வாறான சிந்தனையாளர்கள் இதுவரை கால போராட்ட சூழலினால் விழைந்த உடைவுகளை கருத்தில் எடுத்து சிந்திக்க முடியாதவர்களாகவே இருக்கின்றனர். இந்த நிலைமை இவர்களது தலித்தியம் குறித்த சிந்தனைகளை எதிர்த் தமிழ்த் தேசிய வட்டத்திற்குள்ளேயே கொண்டு சேர்க்கிறது. பெண்ணிய சிந்தனைகள் இவ்வாறான போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டதொரு தளத்தை பிரதிபலிப்பதாகவே தெரிகிறது அத்துடன் ஏனையவர்களோடு ஒப்பிட்டால் மிகுந்த தெளிவுடனும் அதே வேளை ஒட்டுமொத்த பிரச்சனைகள் குறித்த கரிசனை உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். நான் நினைக்கிறேன் இது பெண்கள் அமைப்பிற்கு மட்டுமே உரித்தான சிறப்பம்சமென்று. பெண்கள் அமைப்புக்கள் மட்டுமே பெண்களுக்காக குரல் கொடுக்கும் அதே வேளை ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனைகள் குறித்த உணர்வும் ஈடுபாடும் உள்ளவர்களாக இருக்கின்றனர். “
யதீந்திரா பெண்கள் அமைப்பு குறித்து சொல்லியிருக்கும் மேற்கண்ட கருத்தை ஊடறுவின் இந்த ஐந்து வருட பயணத்தையும் அதில் ஊடறு எடுத்து வைத்த -மிகவும் கவனத்துடன் கடந்து வந்தப் பாதையையும் பார்க்கும் போது புலம்பெயர்ந்த ஈழத்தின் பெண்ணாக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பூமி உருண்டையின் பெண்ணியக்குரலாக, சாதி மதம் நாடு மொழி அடையாளங்களைக் கடந்து வந்து அதிகார வெளியினை ஊடறுக்கும் சக்தியாக தன்னை வளர்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
2005ல் சுவிஸ்ஸில் தமிழ்க்குடும்பத்தில் நடந்தக் கொலையை வெறும் செய்தியாகப் பதிவு செய்திருந்த ஊடறு 2010ல் பாரீசில் இசுலாமியப் பெண்கள் பர்தா அணிவதை அரசு தடைச் செய்தது என்பதை வெறும் செய்தியாக்காமல் அந்தச் செய்திக்குள் புதைந்திருக்கும் மதம் என்ற அதிகார வெளி, மதம் என்ற அதிகார வெளிக்குள் இருக்கும் ஆண் என்ற அதிகார வெளி, பர்தா அணிவதைத் தடைசெய்வது தனி மனித சுதந்திரத்தைத் தடைசெய்வதாகும் என்று விவாதிக்கும் அறிவு வட்டத்தின் அதிகாரவெளி… என்று ஒவ்வொரு அதிகாரவெளியையும் அடையாளம் காட்டி வெளிவருகிறது.
ஆக 30, 2005ல் செல்வி காணமால் போய் 14 வருடங்கள் கடந்துவிட்டன என்ற உண்மையை அச்சமின்றி நினைவு படுத்தி செல்வியின் கவிதைகளை அவள் நினைவாக தன் இணைய பக்கத்தில் ஏற்றி பெருமைச் சேர்க்கிறது.”புரளும் நினைவு” என்ற தலைப்பில் …
“1991 ஆகஸ்ட் 30 ம் திகதி விடுதலைப் புலிகளால் செல்வி கைது செய்யப்பட்டு காணாமல் போய் 14 ஆண்டுகளாகின்றன. செல்வி வவுனியா சேமமடுவில் பிறந்தவர். இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் நாடக அரங்கியல் மாணவியுமாவார். இவர் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளதுடன் கவிஞராகவும் திகழ்ந்துள்ளார். ஈழத்துப் பெண் கவிஞர்களின் தொகுப்பாக வெளிவந்த சொல்லாத சேதிகள் என்ற கவிதைத் தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்துள்ளன. ஐவெநசயெவழையெட PநுN என்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் கூட்டமைப்பு 1992ம் ஆண்டுக்கான தனது சிறப்பு பரிசை கவிஞர் செல்விக்கு வழங்கியது. அராஜக அரசுகளால் சிறையில் வைக்கப்பட்ட -தஸ்ரிமா நஸ்ரின் போன்ற- சமூகப் புத்திஜீவிகள் பலருக்கு இப் பரிசு விடுதலையை வாங்கிக் கொடுத்தது. ஆனால் செல்வியை விடுதலைப் புலிகளிடமிருந்து இது மீட்டுத்தரமுடியாமல் போனது. இது சர்வதேச ரீதியில் கவனத்துக்குள்ளானது. செல்வி ஈழத்தின் நெருக்கடியான போராட்ட சூழ்நிலையில் சேவைபுரிந்தமைக்காகவும் சிறந்த போராட்ட கால இலக்கியங்களை உருவாக்கியமைக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டது. மானுட விழுமியங்களை நோக்கிய அவரின்; ஆத்மாவின் குமுறல்களை அவரின் எழுத்துக்களில் காணலாம். ஆயுதக் கலாச்சாரத்தில் அமிழ்த்தி வைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் மௌனம் காத்து ஒதுங்கியோர் மத்தியில் நியாயத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருந்த செல்வி என்கின்ற அந்தக் கவிஞரைத் தொலைத்து 14 வருடங்கள் எந்தவித சலனமுமின்றி கழிந்திருப்பது எமது சமூகத்தின் ஜனநாயகத்தைக் கோடிடுகிறது. அவரது இழப்பு வரலாற்றில் பதியப்பட வேண்டியது. நினைவில் மீட்கப்பட வேண்டியது.”
அதிகாரவெளி யார் யாரை எல்லாம் எதிர் எதிர் திசையில் நிறுத்தி பகை முரண்களாக்கி இன்று வன்னியை ரத்தக் காடாக்கிஇருக்கிறது! செல்வியை நினைவுறுத்தியதால் தேசத்துரோகி, இனத்துரோகி என்று கூட ஊடறு விமர்சிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் உண்மையை ரத்தம் சொட்ட சொட்ட வலியுடன் ஆறாதக் காயத்துடன் சொல்லாத சேதிகளை தன் பக்கங்களில் பதிவு செய்ததில் ஊடறு தனித்து நிற்கிறது என்று தான் சொல்ல வேண்டும் சுசிலா அவர்கள் எழுதிய “ஆமென்” என்ற புத்தகத்தின் விமர்சனம் ,
கிறித்துவம் தழுவிய சகோதரி ஜெஸ்மினின் வாழ்க்கை சரிதம். அந்நூலைப் பற்றி விமர்சனத்தில் தமிழ் இலக்கியத்தில் சற்றொப்ப இதே கருவைக் கொண்டு எழுதபப்ட்ட இன்னொரு சகோதரியின் வாழ்க்கை சரிதம் பாமாவின் “கருக்கு”. விமர்சனம் எழுதியிருக்கும் சுசிலா தேவையான இடங்களில் இரு சகோதரிகளின் படைப்புகளையும் ஒப்புமைப் படுத்தி இருக்கிறார். மத நம்பிக்கையின் மீது கட்டப்பட்டிருக்கும் பொய் முகத்தை இந்தப் பெண்களின் எழுத்துகள் வெளிச்சத்துக்கு கொண்டுவருகின்றன.
லதா ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் நாடகம் “மீண்டும் மணிமேகலை”. அரசியலும் எள்ளல் சுவையும் கலந்து நிகழ்கால அரசியலையும் சமுதாய நிலையையும் காட்டும் நாடகத்தின் கடைசிப் பகுதி ஆண்-பெண் காதல் உறவை மிகவும் சரியாகவும் சிறப்பாகவும் எடுத்துக்காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறது. நாடகப் பாத்திரமான நிகழினி சொல்கிறாள்… “மணிமேகலை.. அன்பை அனுபவித்து இழத்தல் என்பது அன்பை அனுபவங் கொள்ளாமலேயே இருப்பதைவிட ஆயிரம் மடங்கு மேல்” என்று. அதனால் தான் நிகழினி உதயக்குமாரனை மணிமேகலைக்காக மண்ணுலகுக்கு மீண்டும் வரவைக்கிறாள்… தயங்காதே மணிமேகலை.. உதயகுமாரனிடம் செல்இ உன்னை முழுமொத்தமாக அவனுக்குக் கொடு, அன்புமயமான மனிஷி நீ.. அப்படியிருக்க , நீ விரும்பும் அன்பிலிருந்து உன்னை நீயே வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டு ஏன் உடல் அளவிலும் மனசளவிலும் உன்னைப் பட்டினியில் வாட்டி வதைத்துக் கொள்ள
வேண்டும் மணிமேகலை? ” என்று கேள்வி கேட்கிறாள். பெண்ணின் இயல்பான மன உணர்வுகளை விலக்கி அதன் மூலமே அரிய காரியங்களைச் செய்ய முடியும் என்ற மாயையான கருத்தை மீண்டும் மணிமேகலை உடைத்திருக்கிறது. ஊடறுவும் பல்வேறு கட்டுரைகளில்… இக்கருத்தை முன்வைத்துள்ளது. இலங்கையில் பாதிக்கப்பட்ட இசுலாமிய பெண்களாகட்டும், போராளிகளின் படைகளில் சேர்ந்த பெண்களாகட்டும்.. இவர்களின் எதிர்காலத்தை கரிசனத்துடன் வெளியுலகம் அறியச் செய்தது ஊடறு.
பூமிதின்னி என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் இன்பா சுப்ரமணியம்
கவிதை :
அவன் பூமி தின்னி –
வாழ்விடங்களை விட்டு
பூர்வ குடிகளை
புலம் பெயர்ப்பவன்
அவன் நர மாமிசி-
குடிகளை தீயிலிட்டு
சிதைத்து
சிங்கங்களிடம் தின்ன கொடுப்பவன்
அவன் ஸ்த்ரி வேட்டையன் –
வயது வேறுபாடின்றி பெண்களை
வன் புணர்வில்
யோனி சிதைத்தவன் தேசம் முழுவதையும்
இடுகாடாக்கி தன் சகாக்களோடு
மையத்தில் அமர்ந்து
பிணவாடை நுகர் கிளர்ச்சி அடைபவன்
கூரால் சூல் கொண்டவளை பிளந்து
குழந்தை கண்டு
குழந்தையின்
வயிறு பிளந்து
சுடு குருதி குடித்தலைபவன்
அப்ப்பூமி தின்னியின்
உடலெங்கும் பரவிஇ
கிளைதுக்கிடகிறது நச்சுக்கொடி.
பூமியெங்கும் நிரவிக்கிடக்கிறான்
சுடு குருதி குடித்த அந்நர மாமிசி
போரின் கொடுமையை விவரிக்கும் இக்கவிதைக்கு வந்த சுஜாதா எழுதிய பின்னூட்டம்
(ipadi ezthuvathum,athai padithu vethanai paduvathumaaga varalaaru kruthyaal ezuthikondu irupathumaaga ethanai kaalam pogavendum? ) ) இப்படி எழுதுவதும் அதைப் படித்து வேதனை படுவதுமாக வரலாற்றைக் குருதியால் எழுதிக்கொண்டு இருப்பதுமாக எத்தனைக் காலம் போகவேண்டும்? என்ற கேள்வியை முன்வைக்கிறார். அந்தக் கேள்வியில் இருக்கும் நியாயம் இ கரிசனம் சத்தியமானது. இம்மாதிரியான கவிதைகளை மட்டுமே ஊடறு வெளியிடுவதில்லை என்பது ஊடறுவின் இன்னொரு சிறப்பம்சம். தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதிலும் அதற்கான செயல்பாடுகளிலும் திசைமாறவில்லை ஊடறு என்று ஆரம்பத்தில் இக்கட்டுரையில் எழுதியதை மீண்டும் வாசிக்கவும்.
ஊடறு பெண்குரலின் தாய்வீடாக தன்னை தகவமைத்துக் கொண்டிருப்பதை அதன் ஐந்துஆண்டு நடந்த வந்தப் பாதை நமக்குக் காட்டுகிறது. குறிப்பாக ஓரினச்சேர்க்கை குறித்து எழுதி இருக்கும் ஓவியாவின் கட்டுரையைச் சொல்லலாம்.
“சிறுபான்மையினராக இருப்பதாலேயே அவர்களின் வாழ்க்கை உரிமைகளை மறுக்க மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? மேலும் ‘ஆண் தன்மைஇ ‘பெண் தன்மை’ மீதான இறுக்கமான கருத்தமைவுகளை நாம் எதிர்த்தே ஆக வேண்டும். ஆண்மை’ என்ற மாயையை சமூகத்திலிருந்து ஒழிக்கவும் சமூகத்தின் தலைவன் ஆண் என்ற ஆதிக்க நிலையைத் தகர்க்கவும் இந்த ஆண் பெண் என்ற இரண்டு பாலினத்தவர்களுக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தவரின் இருத்தல் மிகப் பெரிய பங்காற்ற முடியும்.
மேலும் கற்பு, புனிதமான காதல், பிள்ளை பெறுதல் இவற்றுடன் தொடர்பில்லாத தளத்தில் இயங்கும் ஓரினச் சேர்க்கை இந்த ஆதிக்கக் கற்பிதங்களை தகர்த்தெறியும். மேலும் பிள்ளை பெற முடியாத இருவர் அமைத்துக் கொள்ளும் உறவில் அவர்கள் தத்தெடுத்து உருவாக்கும் குழந்தை வளர்ப்பில் இரத்த சொந்தத்தினால் உருவாகும் உடைமை உணர்வு தகர்ந்து போகும். இது போன்ற உறவுகள் வெளிப்படையாக அங்கீகரிக்கப்படும் போது அவர்கள் அனுபவங்களும் நமக்கு இலக்கியமாக்கப்பட்டு நம்முன் வைக்கப்பட வேண்டும். அதன் மூலமாகவே நாம் அவர்களை அறிந்து கொள்ள முடியும்” என்று சொல்கிறது. ” ஓரினச்சேர்க்கை ஆதிக்க கற்பிதங்களைத் தகர்த்தெறியும் என்ற பார்வையை முன்வைத்திருப்பதை ஊடறு மிகச்சரியாகவே அடையாளம் கண்டு இக்கட்டுரைக்கு ஊடறுவில் இடம் கொடுத்துள்ளது.
பெண்ணியாவின் கவிதைத் தொகுப்பு (என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்ற தலைப்பு வை), மலையகப் பெண்களின் கவிதைத் தொகுப்பு (இசைபிழியப்பட்ட வீணை),
ஊடறு (பெண்படைப்பாளிகளின் ஆக்கங்கள்) பெண்கள் சந்திப்பு மலர்கள், “மை” -உலகளாவிய பெண்கவிஞர்களின் கவிதைகள் என்று பதிப்பு துறையில் தடம்பதித்து பெண்ணிய இலக்கிய வரலாற்றில் ஊடறு தனக்கென தனியிடத்தைப் பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறது. ஊடறு வெளியிட்டிருக்கும் ஒவ்வொரு தொகுப்புகளும் நாளைய இலக்கிய வரலாற்றின் பெண்ணியத்தைப் பேசவரும் அனைவரும் தொட்டுச்செல்ல வேண்டிய மையப்புள்ளியாக இருப்பது ஊடறுவின் மிகப்பெரிய சாதனை – அதிகார வெளிகளால் அழிக்க முடியாத வரலாற்று ஆவணங்கள்.
மேலும் 49 கவிஞைகளின் கவிதைகள், 9 ஓவியர்களின் ஓவியங்கள், 27 ஆவணப்படம்ஃகுறும்படங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக 13 பெண்ணிய நூல்களை மின்வடிவில் தன்னுள் அடக்கி கம்பீரமாக வலம்வருகிறது ஊடறு. சராசரியாக ஒரு மாதத்தில் ஊடறுவின் பக்கங்களை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை 1400.
ஊடறுவில் இன்றுவரை இடம்பெற்றுள்ள பெரும்பான்மையான கட்டுரைகள் ஊடறுவு இணையத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. பிற அச்சு ஊடகங்களில் வெளிவந்தக் கட்டுரைகளை எழுத்தாளர்கள் (நான் உட்பட!!) ஊடறுவுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். சில எழுத்தாளர்கள் அதை மறைக்காமல் குறிப்பிட்டுள்ளார்கள். சில கட்டுரைகளை ஊடறுவே பிற அச்சுஃமின்னிதழ்களிலிருந்து ‘நன்றி’ என்ற
அடிக்குறிப்புகளுடன் வாசிக்க கொடுக்கிறது. இதனால் பல்வேறு இதழ்களில் வந்திருக்கும் பெண்ணியக்குரல்களின் சேமிப்பு பெட்டகமாக ஊடறு திகழ்கிறது என்று சொல்லலாம்.
கைப் பிடித்து நடந்தக் குழந்தை…
தானே நடக்க வேண்டும்.
தானே ஓட வேண்டும்…
இனி வரும் காலத்தில் ஊடறுவுக்கென்றே கட்டுரைகள் பெரும்பாலும் எழுதப்பட வேண்டும். அதை பிற இதழ்கள் ஊடறுவிலிருந்து எடுத்தாள வேண்டும்.
புலம்பெயர்ந்த வாழ்வு, வாழ்க்கைச் சூழல், வேலைப்பளு இவைகளுக்கு நடுவில்
என் போன்றவர்களின் இந்த எண்ணம் பேராசையாகவும் கனவாகவும் இருக்கலாம்.
“மாபெரும் உலக அதிகாரம் கனவுகளை அழிக்கக்கூடிய ஆயுதத்தை இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை. அத்தகையதோர் ஆயுதத்தை அது கண்டுபிடிக்கும் வரையில் நாம் தொடர்ந்து கனவு கண்டுகொண்டிருப்போம் -அதாவது நாம் தொடர்ந்து வெற்றிபெற்றுக் கொண்டிருப்போம். – Zapatistas இன் துணைத் தளபதி மார்க்கோஸ்”
ஊடறு ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துகள்.
அதிகார வெளியினை ஊடறுக்கும் உங்களில் ஒருத்தியாக இருப்பதில்
பெருமையும் மகிழ்ச்சியும் கொண்ட புதியமாதவி, மும்பையிலிருந்து …