என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி

 – பரமேஸ்வரி(இந்தியா)

woman1

பெண்ணெனப்படுவது…

நடிகர் ஜெயராம் ஒரு மலையாளச் சேனலுக்கு அளித்த செவ்வியில் “ என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி. போத்து (எருமை) மாதிரி இருப்பாள் “ என்று கூறியதைக் கேட்ட தமிழர்கள் வழக்கம் போலச் சினந்தனர்.

உலகம் முழுவதுமே கறுப்பு தாழ்ந்தது என்ற எண்ணப்போக்கு அலை பரவிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்

நடிகர் ஜெயராம் ஒரு மலையாளச் சேனலுக்கு அளித்த செவ்வியில் “ என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி. போத்து (எருமை) மாதிரி இருப்பாள் “ என்று கூறியதைக் கேட்ட தமிழர்கள் வழக்கம் போலச் சினந்தனர்; பொங்கி எழுந்தனர். வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு அடித்து நொறுக்கப்பட்டது. பிறகு அவர் “நானும் தமிழன்தான்” என்று மீண்டுமொரு முறை தமிழர்களுக்கு நினைவூட்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டபிறகு பிரச்சனை அடங்கி விட்டது.ஆனால் இனப்பார்வையோடான அணுகுமுறையோடு இப்பிரச்சனை முடிந்து விடுகிறதா என்பதே நம் கேள்வி.

பெண் தனக்காகவே படைக்கப்பட்டவள் என்ற ஆண் மனோபாவம், தனக்குக் கீழே வேலை செய்பவர்கள் எல்லாம் தம் அடிமைகள் என்னும் முதலாளித்துவப் போக்கு, கறுப்பு அழகற்றது – சிவப்பு உயர்ந்தது என்னும் நிற அரசியல் இத்தனையும் நடிகர் ஜெயராமின் இந்தத் திமிர் வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது.

திரைப்படத்தில் வேலைக்காரியிடம் சபலப்படும் ஆணாக நடித்த ஜெயராமிடம் “நீங்கள் வீட்டிலும் இப்படித்தான் இருப்பீர்களா ?” என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் தொடங்கியது இந்த விபரீத விளையாட்டு.ஆனால் இந்தப் பதில் ஜெயராமுடையது மட்டுமல்ல. காலங்காலமாக ஒலித்துக் கொண்டிருக்கும் அதிகார ஆண்வர்க்கத்தின் குரல் இது. பெண் ஒரு தனி உயிரி. அவளுடைய உடல், மனம் அவளுக்கானது என்ற சிந்தனையே இல்லாமல் ‘அவள் ஆணுக்காகவே படைக்கப்பட்டவள்’என்று அகங்காரத்துடன் ஒலிக்கும் ஆணாதிக்கக்குரலைத்தான் ஜெயராம் எதிரொலிக்கிறார். அவளுடைய உடல் போகத்துக்கு மட்டுமேயானது என்ற எண்ணத்தோடு இரண்டாம் இடத்தில் கூட அவளை வைத்துப் பார்க்க மனம் இல்லாத, சார்பு நிலையிலேயே வைத்திருக்க விரும்புகின்ற ஆணியப் பார்வைப்போக்கையே இது காட்டுகிறது. பெண்ணை இப்படி இழிவுபடுத்தியிருக்கிறாயே என்று எவரும் அவரைக் கேட்கவில்லை; அதற்காக அவர் வருந்தவில்லை; மன்னிப்பும் கேட்கவில்லை.

இன்னமும் நம் பத்திரிகைகளில் வேலைக்காரியைக் கண்டு வீட்டு முதலாளி சபலப்படுவதும் மருத்துவரின் சின்ன வீடாக நர்ஸ் இருப்பதும் போன்ற நகைச்சுவைத் துணுக்குகள் சாகாவரத்துடன் உலவி வருவது உடல் உழைப்பு சார்ந்து இழிவான, அதனை மதிக்காத ஒரு போக்கு புரையோடிப்போன நம் சமூகத்தில் இருப்பதையே உணர்த்துகிறது. நாம் எல்லோருமே வேலை செய்கிறோம். அப்படிப் பார்த்தால் நாம் எல்லோருமே வேலைக்காரர்கள்தான். ஆனால் ஆசிரியர், மருத்துவர் என்ற ‘அர்’ விகுதியும் பால்காரன், கீரைக்காரி என்ற ‘அன்’ சிறுமை விகுதியும் அவரவர் தொழில் சார்ந்தே இடப்படுகிறது. இங்கே வேலையில் உயர்வு தாழ்வு என்று பேதம் பிரிக்கும், அதன் மூலம் மனிதர்களைச் சிறுமைப்படுத்தும் உயர் வர்க்க மனப்பான்மை வெளிப்படுவதை ஏன் எவரும் கேள்வி கேட்கவில்லை? தன் வீட்டில் தனக்குக் கீழே வேலை பார்ப்பவள் என்று சிறுமையாக நினைக்கும் போக்கை ஏன் எவரும் கண்டிக்கவில்லை? அவர், வீட்டு வேலை செய்பவர் என்றால் இவர், திரையில் நடிப்பவர். அவரவர் தேர்ந்த வேலையை அவரவர் செய்கின்றனர். இதில் உயர்வென்ன? தாழ்வென்ன? வீட்டுவேலை செய்ய எவரும் முன்வராவிட்டால் இவர் போன்ற பணக்கார வர்க்கத்தாரின் கதி என்ன? தன் வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பதில் உதவி செய்ய்யும் ஒருவருக்கு இவர் காட்டும் மரியாதை இது தானா? ஜெயராமின் இந்தச் சொற்கள் அப்பெண்ணின் மனத்தை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும்? அது பற்றி எவரும் கவலைப்படவுமில்லை. ஜெயராம் அதற்காக மன்னிப்புக் கேட்கவுமில்லை. தமிழர்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு முன்னதாக முதலில் அந்தப் பெண்ணிடம்தான் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். தனக்கென்று பேச யாருமற்ற, சூழலின் நெருக்குதலில் இன்னமும் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கின்ற அந்தச் சகோதரியின் உறைந்த மௌன அலறல் கேட்காத அளவிற்கு நம் காதுகள் செவிடாகி விட்டன. வர்க்கப் பார்வையின்றி கண்கள் குருடாகி விட்டன.

உலகம் முழுவதுமே கறுப்பு தாழ்ந்தது என்ற எண்ணப்போக்கு அலை பரவிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். பல்வேறு சேனல்களில் சிகப்பழகு கிரீம்கள் இதைத்தான் கூவிக்கூவி வலியுறுத்திக்கொண்டிருக்கின்றன. கறுப்பு என்றால் ‘துக்கம்’, கறுப்பு என்றால் ‘சிறுமை’, கறுப்பு என்றால் ‘தாழ்வு’ என்றே நாம் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றைக்குக் கறுப்பைப் புரட்சியின் நிறமாகக் கூறத் தொடங்கியிருந்தாலும் ஆழங்கால்பட்ட அந்தக் குருட்டு எண்ணம் அகலாமல், அழியாமல் நம்மை உருட்டிக் கொண்டிருக்கிறது. அது தான் தன் வீட்டு வேலைக்காரி அழகற்றவள் என்று சுட்டும் விதமாக ‘கறுத்த’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் தூண்டியிருக்கிறது.அப்படிச் சொன்னதற்காக நடிகர் ஜெயராம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை.

இனப் பார்வையோடு மட்டுமே பேசப்பட்ட இந்தப் பிரச்சனை, இன்று தமிழர்களால் மிக்க பெருந்தன்மையுடன் மன்னிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டுக்குள் வரும்போது தமிழராகவும் கேரளாவுக்குள் புகும்போது மலையாளியாகவும் மாறிவிடும் நடிகருக்கு, அப்போதைக்கு மலையாளிகளைக் குஷிப்படுத்தப் பேசிய பேச்சாகவும் பிறகு தமிழர்களின் சினம் தணிக்க மன்னிப்பும் எழுதிய வசனம் ஒப்பிப்பது போல ஒப்பித்தாகி விட்டது. ஆனால் நாம் கவனிக்க வேண்டியது இந்த விஷயங்களைத்தான். கவனிக்குமா தமிழ்ச் சமூகம்?

தடாகத்திலிருந்து யசோதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *