-அன்புடன் -ஆயிஷாபாரூக்

பெத்த மனம் அங்கே இருக்க
பிள்ளை மனம் இங்கே ஏங்கி நிக்க
உன் பொறப்ப குறை சொல்லி
வீட்டை விட்டு போக சொல்லி
அழுத மனம் ஆறுதல் தேட
என் மடி தலை சாயி செல்ல மகளே….
முடமோ பிறந்தாலும் மனநிலை திரிந்தாலும்
தான் பெற்ற பிள்ளை தனது ஆகாதோ
பாலியல் மாறி பிறந்த நம்ம மட்டும்
ஊருசனம் பேச்சை கேட்டு ஒதுக்குவதேனோ
நம்ம பொறப்பு ஒசந்த பிறப்படி
நீ உறங்கு பெண்ணான ஆண்மகளே….
கருத்தரிக்க வழியுமில்லை
கர்ப்பம் சுமக்க பையும் இல்ல
ஆனாலும் நான் மலடி இல்ல
தாய்மையை உணர்ந்து ஏன் மகளா
தத்து எடுத்தேன் வாழ்க்கை முழுக்க
கவலையின்றி நீ தூங்கு தெய்வ மகளே….