கீட்சவன்http://l.yourstory.com
ஆனால், அவர் 37 ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய சமூகப் பிரச்சினைகள் அனைத்துமே இன்னும் உயிர்ப்புடன் நாம் தங்கவைத்திருப்பதை நினைத்து, யாரும் அறியாத தருணத்தில் ஒரே ஒருமுறை செல்ஃபி வழியாக துப்பிக்கொள்வோம்!
– சமகால வாழ்க்கை முறையும் ஆண்களின் பார்வையும் அடங்கிய நையாண்டியும் கோபமும் கொண்ட உதாரணங்களுடன் பிரியா தம்பி எழுதிய பதிவின் முழு வடிவம் படித்தவுடன், ‘அவள் அப்படித்தான்’ மஞ்சு (ஸ்ரீபிரியா) சட்டென நினைவுக்கு வந்தார்.
அதே படத்தில், பெண்களின் சுதந்திரத்துக்காக பேசும் அருண் (கமல்ஹாசன்) கதாபாத்திரத்தின் 2.0 வெர்ஷனின் அணுகுமுறையோடு, ஆனந்த் குமாரின் பதிவை ஓரளவு பொருத்திப் பார்க்க முடிகிறது.
‘அப்படின்னா, தியாகுவை (ரஜினி) நினைகூரும்படி ஒரு போஸ்ட் கூடவா உங்களுக்குக் கிடைக்கவில்லை?’ என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.
பெண்களை தெய்வமாக ஆராதிக்கும் ஆண்கள், அந்த ஆராதனையை மெய்சிலிர்த்து ஏற்கும் பெண்கள், பெண்களை சில பல மேட்டர்கள் சொல்லி கலாய்க்கும் ஆண்கள், அந்தக் கலாய்ப்பை ரசித்து லைக்கிடும் பெண்கள்… இந்த நான்கு வகையறா பதிவுகளை இட்ட பலருடன் வெளிப்படையாகவோ அல்லது ஒளிந்துகொண்டோ ஹாயாக உட்கார்ந்துகொண்டிருக்கிறார் தியாகு!
அவள் அப்படித்தான்… ஒரு குடும்பத்தின் மோசமான சூழலில் வளர்ந்தவள், சிறுமியாக இருந்தபோதே சீரழிக்கப்பட்டவள், காதலனால் வைத்து செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டவள். இத்தகைய பின்னணியால் ஆண்கள் மீதே வெறுப்பு. அதையும் தாண்டி, பெண் சுதந்திரம் மீது ஈர்ப்பு. எந்த நிலையில் தன் கெத்து தனை விட்டுத் தராததால் சுற்றி இருப்பவர்களால் டிசைன் டிசைனாக குத்திக் காட்டப்படுபவள். அவள்தான் மஞ்சு.
காலையில் பக்திப் பட்டை, இரவுகளில் மட்டை. ஆணாதிக்கவாதி, பெண்களைப் பின்னுக்குத் தள்ளுவதில் முன்னிலை வகித்தாலும் அவர்களின் பெண்மையைப் பிடிக்கும். அதை அடையத் துடிக்கும் பக்தர். கருப்புப் பக்கங்களை மறைத்து வெள்ளுடை வேந்தராக வலம் வரும் சாதாரண மனிதர் தியாகு.
பெண்களை மதிப்பது மட்டுமின்றி, சமூகத்தில் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளில் இருந்து விடுவிக்க தன்னால் ஏதாவது செய்ய முடியாதா என்று ஏங்குபவர். அதற்காக தன்னளவில் முயற்சிகளை எடுப்பவர். பெண் சுதந்திரம், பெண் சமத்துவம் மீது நம்பிக்கை உள்ளவர். மொத்தத்தில் நல்ல சமூகம் உருவாக விரும்பும் நம்பிக்கை இளைஞர் அருண்.
பெண்கள் குறித்து ஆவணப் படம் எடுக்கும் நண்பன் அருணுக்கு உதவ, தன் விளம்பர நிறுவனத்தில் பணிபுரியும் மஞ்சுவை அனுப்புகிறார் தியாகு. அருணுக்கும் மஞ்சுவுக்கும் தொடங்கும் உறவில் இடைவெளி குறையத் தொடங்குகிறது. ஆனால், வாழ்க்கைத் தந்த அனுபவப் பாடங்களும், அதனால் விளைந்த குணாதிசயங்களும் ஆட்டம் காட்டுகின்றன. இதற்கிடையே தியாகுவின் திருவிளையாடல் வேறு. மஞ்சுவுக்கு என்னதான் ஆச்சு?
– இப்படி கூட ரொம்ப மேலோட்டமாக ‘அவள் அப்படித்தான்’ பற்றி சொல்லலாம். ஆனால், அந்தப் படத்தைப் பார்த்தவர்களும், பார்க்கப் போகிறவர்களும் ‘அடப்பாவி… என்ன மாதிரியான படம் இது… இப்படி சப்புன்னு சொல்லிட்டியே’ என்று என்னைத் திட்டலாம். ஏனென்றால், ‘அவள் அப்படித்தான்’ பேசிய திரை மொழி அப்படி!!!
| சமகால இளைஞர்கள் – சினிமா ஆர்வலர்களில் பலரும் இன்னமும் இப்படத்தை பார்க்காதவர்களாக இருக்கக் கூடும். அவர்களுக்கு ஏற்படுகின்றன புத்தம்புது அனுபவத்தை சீர்குலைக்க விரும்பாத காரணத்தால், ‘அவள் அப்படித்தான்’ படத்தை அணுஅணுவாக சிலாகித்து விவரிக்காமல் என் விரல்களைக் கட்டிப்போடுகிறேன். |
நம்மிடம் நம்பிக்கையும் திறமையும் மட்டுமே மேம்பட்டிருக்கிறது. அங்கும் இங்குமாக கொஞ்சம் கொஞ்சம் உறுதுணைகள் கிடைக்கும். இருக்கும் இந்த சொற்ப வசதி வாய்ப்புகளை வைத்துக்கொண்டு, ஒரு செமத்தியான முன்முயற்சியில் ஈடுபடுவது சாத்தியமா?
ஏன் முடியாது..?
‘அவள் அப்படித்தான்’ உருவான விதத்தைத் தேடித் தெரிந்துகொள்ளுங்கள். நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கை உதிக்கும். கிடைத்த வாய்ப்புகளில் ‘ரிசல்ட் வர்ற அளவுக்கு வந்தா போதும்’ என்றெல்லாம் சலிப்புடன் சமரசம் ஏதும் செய்துகொள்ளாமல், இயன்றவரையில் சிந்தித்ததை திரை வடிவில் கொண்டுவந்த இயக்குநர் ருத்ரய்யாவும், அவரது டீமும் செம்ம!
நான் அறிந்தவரையில், ‘அவள் அப்படித்தான்’ எனும் படைப்பு உருவான விதத்தை தனிப் படமாக்கினாலே அதுவும் ஒரு ப்யூர் சினிமாவாக வாய்ப்பிருக்கிறது. அதை எழுத்து வடிவில் வடித்தால், ‘டீம் ஒர்க்’ பற்றிய உலகின் ஆகச் சிறந்த வழிகாட்டுதல் நூலாக புகழ்பெறவும் வாய்ப்பு உண்டு.
உதாரணமாக, இரண்டு காட்சிகளைச் சொல்கிறேன். மஞ்சுவுடன் பழக ஆரம்பித்த பிறகு, தியாகுவை சந்திக்கிறான் அருண். தியாகுவும் அருணும் பேசுகிறார்கள். அது நீண்டதோர் உரையாடல். நன்றாக கவனித்தால் தெரியும். இருவரும் சேர்ந்து அமர்ந்திருப்பது போல் ஒரு ஷாட் கூட வராது. ஒரே இடம்; ஆனால் தனித்தனியாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ரஜினியும் கமலும் பிஸியாக இருந்த காலக்கட்டத்தில், அவர்கள் ஃப்ரீயாக இருக்கும்போது இந்தப் படப்பிடிப்பு நடக்கும். இருவரும் ஒன்றாக வர முடியாத சூழலில், தனித்தனியாக படமாக்கப்படும். பின்னர், எடிட்டிங்கில் கச்சிதமாக வெட்டி ஒட்டப்படும். இதேபோல், காரில் ரஜினியும் கமலும் பேசிக்கொண்டு செல்லும் காட்சியிலும் தெளிவாகப் பார்க்கலாம்.
கதைக்கும் காட்சிக்கும் கச்சிதமான வசனம், பக்கவானா கேமரா ஆங்கிள்கள், தேவையான இடங்களில் க்ளோசப், நறுக்கான எடிட்டிங், சப்ஜெக்ட் இல்லாமலேயே நம்முடன் ஆள் பேசுவதாக கற்பனை செய்து மிகையில்லாத நடிப்பாற்றலை வெளிப்படுத்திய நடிகர்கள்… இந்த அபாரமான கூட்டு முயற்சியும் ஒத்துழைப்பும் சேர்ந்துதான், ருத்ரய்யா கையாண்ட சினிமா மொழியில் எளிதில் பிழைகளே கண்டுபிடிக்க முடியாத வகையில் அற்புதம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
‘நமக்கு கிடைத்த வசதிகள் இவ்வளவுதான். இதில் என்ன வருமோ அதைச் செய்யலாம்’ என்று ருத்ரய்யா குழு அலட்சியமாக இருந்திருந்தால், தமிழின் பெருமித சினிமா ஒன்றை நாம் இழந்திருப்போம் என்பதை கீதப்பிரியனின் இந்த முக்கியமான பதிவும் தொகுப்பும் உணர்த்துகின்றன.
திருமணத்துக்கு முந்தைய பாலுறவு, சட்டப்பூர்வ கருக்கலைப்பு, அரசியலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, பெண் சுதந்திரம், ஆணாதிக்கம், பெண்ணியம், குடும்பக் கட்டுப்பாடு, பர்தா உள்ளிட்ட உடைக் கட்டுப்பாடுகள் முதலான சமூகப் பிரச்சினைகளை கொஞ்சம் கூட பிரச்சார நெடி இல்லாமல் சினிமா மொழியிலேயே பேசியது, 1978-ல் வெளியான ‘அவள் அப்படித்தான்’.
குறிப்பாக, சமத்துவத்துக்காக போராடும் பெண்களையும், எதையும் தைரியாமாக அணுகும் பெண்களையும் ‘அவங்க கிட்ட இருக்கிறது
ரெண்டு. ஒண்ணு காமவெறி; இன்னொன்னு தன் கால்மேல நிக்கணும்ன்ற வெறி’ என்றும், ‘அவங்கள தள்ளி இருந்துதான் ரசிக்க முடியும். கூண்டில் அகப்பட்ட புலி’ என்றெல்லாம் சமூகம் பார்க்கும் விதத்தை, தியாகு உதிர்க்கும் முத்துக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது.
தன்னை இந்தச் சமூகம் எப்படிப் பார்த்தாலும் பரவாயில்லை, இயல்பை மாற்றிக்கொள்வது இல்லை என்ற மஞ்சுவின் நெஞ்சுறுதி அழுத்தமானது. அதேவேளையில், மனிதம் போற்றப்படும் இடத்தில் மண்டியிடத் தயங்கமாட்டாள் என்பதற்கு, ‘அருண் காலில்கூட விழுகிறேன்.. போதுமா?’ என்று கலாவிடம் கேட்கும் காட்சி காட்டுகிறது.
புரட்சிகர கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், இந்தச் சமூகத்தில் அதன் போக்கில் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று தவிக்கும் போராளிகளுள் ஒருவன்தான் அருண். இறுதிக் காட்சியில் மஞ்சுவின் முக்கியமான ஸ்டேட்மென்ட் ஒன்றுக்கு, அருண் நெளியும் இடம் இருக்கிறதே… அது, புரட்சி பேசிய இளம் தோழர் ஒருவரின் திருமண விழாவில், விருந்தினர்கள் கண்ணில்படும்படி நிறுத்தப்பட்டிருந்த புத்தம் புது காரின் சிவப்பு நிறத்தை நினைவூட்டியது.
எல்லாம் போகட்டும். காதலுணர்வுக்கு இணையானதும் புனிதமானதும்தான் காமம். இந்த 2016-ல் செக்ஸ் பற்றி ஒரு பெண் சுதந்திரமாக பேச முடிகிறதா? கருத்துகளையும் விருப்பங்களையும் பகிர முடிகிறதா? ஆண்களிடம் அல்ல… பெண்களுக்கிடையே கூட இதுபோன்ற உரையாடல்கள் நிகழ்வது அரிது.
அவர் பெயர் ஷைலஜா. பாலியல், உளவியல் குறித்து ஈடுபாட்டுடன் படிப்பவர். தனக்கு மட்டுமின்றி, தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் தடுமாறும் வேளையில் நெறிப்படுத்த முனைபவர். தன் நம்பிக்கைக்குரிய நண்பர்கள், உறவினர்களிடம் செக்ஸ் பற்றி ஜாலியாக பேசுவார். தகவல்களும் சுவாரசியங்களும் நிறைந்த அந்த உரையாடலை ஆரம்பத்தில் கேட்பவர்கள் சற்றே பதற்றம் அடைவர். பிறகு, ஷைலஜாவை புரிந்துகொள்வர்.
ஆனால், ‘நம்மிடம் இவள் இவ்ளோ ஓப்பனாக பேசுகிறாளே… ஓப்பன் பண்ணியும் காட்டுவாளோ..?’ என்கிற ரீதியில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் நண்பர்கள், உறவினர்கள் சரிசெய்யும் நோக்குடன் அழைப்பு விடுத்தது உண்டு. அந்த அழைப்பின் தன்மைக்கு ஏற்ப, பேசிப் புரியவைக்கவோ அல்லது அலட்சியப்படுத்தி உணரவைக்கவோ முயற்சி செய்வார் ஷைலஜா. அப்படி புரிந்துகொண்டவர்களில் பலருடனும் முன்பு போலவே இயல்பாக பழகுவார். எதைப் பற்றியும் விவாதிப்பர். புரிந்துகொள்ளாத மிகச் சிலர் கழண்டு ஓடுவர்.
ஷைலஜாவிடம் நான் பழக ஆரம்பித்தபோதும், அவரை அப்படிச் சாதாரணமாக நினைத்தது உண்டு. ஆனால், அப்படி அவரைச் சாதாரணமாக நினைத்துத் தடுமாறும் அளவுக்கு என்னை இந்தச் சமூகம் வளர்த்திருக்கிறது என்பதை பிறகுதான் புரிந்துகொண்டேன்.
“எனக்கு இந்த சொசைட்டி பத்தி கவலையில்லை. எது சரின்னு படுதோ அந்த மாதிரியே இருப்பேன். என்னை சுத்தி அறியாமையில் இருக்கிறவங்களுக்கு புரியவைப்பேன். புரியாதவங்கள பத்தி ஐ டோன்ட் கேர்..” என்பார் ஷைலஜா.
தன் செல்போனில் ஒருபோதும் உளவு பார்க்காத கணவர், தன் சுதந்திரத்தில் தலையிடாத நட்புறவுகள் கொண்ட ஷைலஜா போல் நம் சமூகத்தில் மஞ்சுகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக பெருகி வருவது கவனிக்கத்தக்கது. உங்களுக்குள்ளும், உங்கள் அருகிலும் ஷைலஜாக்களைக் கண்டுணரலாம்.
எனினும், பொதுவெளியில் பெண்ணியம் – பெண் சுதந்திரம் சார்ந்து இயங்கும் பெண்களும் ஆண்களும் கலாய்ப்புகளுக்கும், சிரிப்பு மீம்களுக்கும் ஆளாவது அப்படியே நீடிக்கிறது. சில நேரங்களில் இப்போது தியாகுகள் பல மடங்கு பல்கிப் பெருகிவிட்டனரா என்றுகூட நினைக்கத் தோணுது.
37 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த ஒரு தமிழ்த் திரைப்படத்துக்காக, இயக்குநர் ருத்ரய்யா இன்றும் நாளையும்கூட கொண்டாடப்படுகிறார் என்றால், அவர் கையாண்ட சினிமா மொழியின் மகத்துவத்தை எடுத்துச் சொல்வது தேவையற்றது. அவர் பெயரை உச்சரித்து வேண்டுமானால் பெருமிதம் கொள்ளலாம்.