கெகிறாவ சுலைஹா
உன் செவிகளுக்கென்ன பசி மகளே,
கதைசொல்லக் கேட்கிறாய் என்னை?
சின்;னஞ்சிறு பயல் கண்முன் நீளும்
இமாலய மலையின் பிரமிப்புகளாய்
உன் அறிவுக்கெட்டுமோ
நினைவிலடங்கா என் நீள்கதைகள்…?
எங்ஙனம் சொல்வேன் மகளே,
அழிவின் கனமழை தொடங்க
துடைத்தழிக்க முடியாப் பெருந்தீயாய்
நீடித்த வெறியுடனும்,
துவேஷ உமிழ்தல்களுடனும்
என் பக்கத்துவீட்டுப் பருவப்பெண்ணை
துண்டம் துண்டமாய் நானே
துகிலுரிந்து துவம்சம் செய்த கதையை?
மூச்சடங்கி அவள் முற்றிலுமாய் அழிந்த பின்னம்,
நீடித்த வெற்றிடங்களில்
பொய்மையின் ஒய்யாரத்தை இட்டு நிரப்பிய
என் சாமர்த்தியத்தனத்தை?
பின்னர் அவளைத் தொங்க விட்டேன்
மரக்கிளையொன்றில்.
அமுக்குதலின் அழுத்தம் தாளாமல்
துயரங்கள் வெடிக்குமோ கண்ணீரின் பொட்டலமாய்..?
இழினள் என்பதனால்
காலந்தோறும் அவளைத் துரத்திய
பட்டினியும், சாவுப்பயமும் நூற்றாண்டுகளாய்
கூரிய கத்தியாய் விரட்டித் தொடருமோ
பெருங்கதையாய் இனி என்னை…?
ஆற்றங்கரையோரத் தென்றலும்,
தென்னந்தோப்புகளின் வருடலுமாய்
அந்திமந்தாரை பூப்பூத்து நறுமணங்கள் கோர்த்துத்தர
அவளைப்பற்றி எழுதுதற்காய்
பிரியப்பட்டுக் கோர்த்த வார்த்தைகளை
என் வழியெங்கணும் சுமந்த மரக்காடுகளுள்ளும்,
எட்டியெட்டிப்பார்த்த புதர்களுக்குள்ளும்
முற்றிலும் தொலைத்தேன் வேறுவிதமாய்…
நிறங்களையே குடித்து முடித்திடும்
ஓவியங்களின் தீராத்தாகமாய்
உணர்வுகளை அள்ளியள்ளிப் பருகிற்று
என் கயமை வெறி.
கட்டிலில் பக்கத்தில் துயில் கொள்ளும்
என் இல்லாளும் அறியாதபடி
மெல்ல எழுந்து வந்து
என் இரவின் பெரு நுளம்புகள்
அவளைத் தீரக் குடித்து முடித்தன.
தற்கொலையாம் என்று ஊர் சொல்லும் விதமாய்
பிணமாய் அவளை மரக்கிளையில் தொங்கவிட்டு
பச்சோந்தி முகம் காட்டிய பொழுதிலும்
அடிமரம் பற்றி அழுததென் நெஞ்சம்
உயர்சாதிக் கொழுப்பெடுத்த
திமிர்த்தனத்துக்கு அப்பாலும்….
அலங்காரங்கள் யாவும் தொலைத்த
கரிசல் காடென மாறிவிட்டதென் நிலப்பரப்பு
மலர்தல்களுக்கான சாசுவதங்கள் எதுவுமில்லை.
மொழி தொலைத்த மௌனத்துள் நான் உறைகின்றேன்
மகளே,
உனக்குச் சொல்லத்தக்கதாய் ராஜகம்பீரத்துடன்
எந்தக் கதைகளும் என்னிடத்திலில்லை….
(தலித் இளம் பெண்ணொருத்தியை பாலியல் வன்முறை செய்து கொன்று கொன்று மரக்கிளையில் தெங்கவிட்டிருந்த காட்சியைப் புகைப்படமாய் கண்ட பின்னர் எழுதப்பட்டது இக்கவிதை)