-யோகி – (மலேசியா)
தலைப்பு : மரணமூறும் கனவுகள் (கவிதை தொகுப்பு)
எழுதியவர் : யாழினி
பதிப்பகம் : அணங்கு பதிப்பகம்
என்றோவோர் காலத்தில், ஏழேழு கடல்களுக்கும்
ஏரேழு கண்டங்களுக்கும் அப்பாலுள்ள
தனித்ததோர் தேசத்தில் .. சிந்தனையும்இ
மலைநாகத்தையும் புணர்ந்து களித்த
மலைமுகடொன்று நீலநிற உதடுகளுடன்
குழந்தையொன்றைப் பிரசவித்ததாம்
என்றவாறாகத்தான் ஆரம்பிக்கின்றன
கதைசொல்லிகளைப் பற்றியதான கதைகளும்.. ஏன்
அவர்களது மரணமுங்கூட…
இலங்கை எழுத்தாளரான யாழினியின் ‘மரணமூறும் கனவுகள்’ கவிதைத்தொகுப்பின் முதல் கவிதையின் தொடக்க வரிகள் அவை. ஒரு புத்தகதில் தொடக்கம் சரியாக அமைவது மிக முக்கியம். வாசிப்பாளனை அந்த புத்தகத்தினூடே பயணம் செய்ய வைக்க குறிப்பாகச் சொல்லப்போனால் வாசிப்பாளனை அந்த புத்தகம் வாசிக்கத்தொடங்க நூலின் தொடக்க வரிகள் மிக முக்கியமானதாக அமைத்தல் முக்கியமாகிறது. யாழினியின் இந்த புத்தகத்தில் அது சரியாக அமைந்திருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் பிறந்து, கொழும்பில் வளர்ந்து, தற்போது ரொறண்டோவில் வசித்துவரும் யாழினிக்கு கவிதையில் சொல்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. அதை சரியாகவும் பயன்படுத்தியிருக்கிறார் யாழினி.
எனக்கு தனிப்பட்ட முறையில் யாழினியின் சில கவிதைகள் நெருக்கமானதாக இருக்கின்றன. வனங்களையும் வனதேவதைகளையும் உவமைகளாக பாதித்து அவர் எழுதியிருக்கும் கவிதைகள் வீரீயம் மிகுந்ததாக இருக்கிறது.
இப்போது நீங்கள் தொடரும் வழித்தடம்
யானையினுடையதாக விருந்தாலும்… சில
அடிகளுக்கப்பால் அது நீர்யானையாவதையும்
பின்னர் காண்டாமிருகமாவதையும்… அதன்
பின்னர் காட்டுப்பன்றியாகி… குரங்காகி… மானாகி
இறுதியில்இ சிறுத்தைப் புலியாகி.. ஒரு பாழடைந்த
குகையில் வந்து முடிவடையக்கூடுமென
அனுமானித்தீர்களென்றால்….இ நீங்கள்
உயிர்வாழ்வதற்கான எவ்வித
அருகதையுமற்றவர்கள்..
இருத்தலியல் பற்றிய பதிவுகளை வசீகர வர்ணனைகளோ அல்லது அலங்கார வார்த்தைகளைக் கொண்டோ யாழினி புனைந்துவிடவில்லை. “ஒரு பாழடைந்த குகையில் வந்து முடிவடையக்கூடுமென” வார்த்தையில் அடங்கியிருக்கிறது கவிதையின் மொத்த வலியையும் தடங்கள் புதிர் நிறைந்தவை என கூறிமுடிக்கிறார்.
வனங்கள் குறித்த யாழினியின் மற்றுமொரு கவிதை
“ஒருகாலத்தில் இதே காடுகளில்தான் நானும்
வசித்து வந்தேன். அப்போதெல்லாம் காட்டுச்
சூரியன் மறைவதில்லை… அதனால்
உதிக்கவேண்டிய அவசியமும் அதற்கிருக்கவில்லை
ஃஃஃஃ காடுகளைக் கடந்தவருக்கு நிலவின் வதனத்தைக் பார்க்கக்
கொடுப்பினையில்லையென்று…
வனதேவதைகளற்ற எந்தக்காடும்
முழுமையடைவதில்லை…
என்றுக்கூறும் யாழினி தொடர்ந்து
வனதேவதைகள் தாமாக அவதரிப்பதில்லை;
கடவுளர்களின் சாபங்களோடு அவர்கள்
தோற்றுவிக்கப்படுகிறார்கள்…
என்கிறார். இங்கே கடவுளர்களின் என்ற வார்த்தை விவாதிக்க வேண்டிய விடயமாக இருக்கிறது. கடவுளர்களின் என்ற உவமையை உடைக்கும்போது மேலும், தெளிவான திரப்பு கவிதை திறக்கிறது. இவ்வாறான தனது கவிதைகளில் யாழினி தனி முத்திரை பதிந்துச் செல்கிறார்.
மரணமூறும் கனவுகள் என்ற தொகுப்பில் இருக்கும் யாழினியின் கவிதைகள் 2006- ஆண்டிலிருந்து 2008-ஆம் ஆண்டு கால இடைவெளியில் எழுதப்பட்டதாக கூறுகிறார். ஆனால், தற்போதைய சூழலுக்கும் அக்கவிதைகள் பொருந்தி வருவதாக இருக்கின்றன. இடம்பெயர்தல் புலம் பெயர்தல் போன்ற விடயங்கள் புடமிட்டு யாழினிக்கு கவிதைக்கான வெளியை திறந்து விட்டிருக்கிறது. மனிதர்கள் குறித்து தனது அனுமானங்களை மிக அழகாக கூறியிருக்கிறார் யாழினி.
‘மனிதர்கள் நேசிப்பவளெனினும்
காற்றில் கலந்த என் குரலை
சூரியன் விழுங்கி ஏப்பம் விட்டதாக
அவர்கள் பேசிக்கொண்டார்கள்’
மற்றுமொரு கவிதை
நிழல்கள் உருவங்களை விழுங்கத்
தொடங்கியக்கணத்தில் என் பட்டாம்பூச்சிகள்
மயிர்க்கொட்டிகளாக மாறின…
மனிதவியலை பகடை என மாற்றி உருட்டி நம்மை கேள்வி எழுப்புகிறார் யாழினி. பிரக்ஞைகள் மனிதவியலை சுற்றி அங்கு நாம் என்னவாக இருக்கிறோம் என கேள்வி எழ வைக்கிறது.
‘கொண்டாட விரும்புகிறேன்இ நான்
சூனியக்காரியொருத்தியின் புன்னகையைப் போல
மரணத்தையும்’
என்கிற கவிதையில் ஒளிந்திருக்கும் சொல்லாடல் உள்ளார்ந்த அரசியல் பேசுவதாக நான் பார்க்கிறேன். எழுத்தாளனுக்கு உள்ள கடப்பாடுகளில் அரசியல் பார்வையும் ஒன்றள்ளவா?
இவ்வாறான அரசியல் பார்வையுடைய பிறிதொரு கவிதையாக
மயிர்க்கொட்டிகளுக்குக் கேள்வி கேட்கத்
தெரியாதென நினைக்காதீர்கள் அற்பர்களே
அவற்றில் நீல உதடுகள் அகலப்பிளவுறுமோர்
நாளில் உங்கள் வானங்கள்
வெளிறிப்போய்விடக்கூடும்
யாழினியின் இந்த கவிதை தொகுப்பில் நிரம்பி இருப்பது வலிதான். பெண் உடல் சார்ந்த விடயத்தையும் பெண் சுயத்தையும் யாழினி பேசுகிறார். ஆனால்இ சில இடங்களில் பெண் உடல் சார்ந்த வார்த்தைகளை தவிர்த்திருக்கலாமோ என தோன்றுகிறது. புத்தகத்தின் அட்டை புத்தகத்தின் மற்றொருமொரு பலம். அதே ஒரு கவிதையாக தனியே விவாதிக்கலாம். புத்தகத்தின் உள்வடிவமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என தோன்றுகிறது. பெண்ணிய பதிப்பகமான அணங்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த கவிதை புத்தகம் தரமான ஒரு புத்தகம் என்பதில் சந்தேகமில்லை.
‘நீயற்ற கணங்களிலிருந்து
தப்பியோடி தப்பியோடி
காலமற்ற வெளிநோக்கி
தொடருமென் பயணம்
உன் வாசலில் வந்துமுடியக் கூடுமென
இந்தக் கவிதை தொகுப்பில் எனக்கு பிடித்த கவிதை
நீங்கள் காடுகளைப் பற்றிப் பேசுகிறீர்கள்
எனக்குத் தெரிந்த எந்த வனதேவதையும்
தொலைந்துபோன காடுகளைப்பற்றி
பேசவிரும்புவதில்லை
நீங்கள் சிறகுகளைப்பற்றி அக்கறைப்படுகிறீர்கள்
எனக்குத் தெரிந்த எந்த வனதேவதையும் உதிர்ந்து
போன சிறகுகளைப்பற்றி அக்கறைப்படுவதில்லை…