சந்திரலேகா கிங்ஸ்லி – மலையகம் இலங்கை
போர் என்பதையும்
போராட்டம் என்பதையும்
அடக்குமுறை என்பதையும்
இனப்படுகொலை செய்தமையையும்
ஓட்டு மொத்தமாய்
மறந்தே போனது போன்ற மனதும் உலகும்
ஆனால் பெண்ணே
போர் பூமியின் புதுமைப் பெண்ணே
உன் புன்னகை மட்டுமேன்?
போரை எனக்கு கொடிதாய் மட்டும்
அச்சொட்டாய் ஞாபகப்படுத்துகின்றது.
அது எப்படியாம்
புன்னகையை சிரிப்பென்றும்
மகிழ்ச்சியென்றும் புதிதென்றும்
அழகென்றும்
மோனாலிசாவின் புதிரென்றும்
வர்ணித்து மொழிபெயர்த்தார்கள்
போர் பூமியின் புதிர் பெண்ணே
உன் புன்னகையை
அப்படி மொழி பெயர்க்க
நானொன்றும்
உன் வலி தெரியாத
வன தேவதையல்ல
கந்தக பூமியின் கணதிப் பெண்ணே
உன் புன்னகையை
இப்படி மட்டுமே மொழிபெயர்க்கின்றேன்.
உன் புன்னகை
அதிகார வெறியர்களின்
ஆணாதிக்க நரிகளின் காமத்தினால் காய்ந்துப்போன
கருப்பு மலர்களோ
ஆதிக்கத் திணிப்பின்
அடக்கு முறையின்
அகதி வாழ்வில் அது
அணையாத் தீயோ
பசி, தாகம் மறந்து
மானம் காக்கப் புறப்பட்ட
மதிலோ
கொஞ்சம் கணவனின்
குரல் ஓலம் கேட்டும்
நஞ்சாகிப் போன நகலோ
தொப்பூள் கொடி உறவொன்று
தொலைந்துப் போன ஏக்கத்தில்
துயரத்தின் வேரோ…
அடைக்கலம் புகுந்த
அகதி முகாம்களின்
அனல் வீசம் காமுகனின் கணலோ?
எரிந்துப் போன
விதவை வாழ்வில்
எல்லாம் போனபின்
காய்ந்து சறுகாகிபோன கவியோ?
தனல் வேகும் நெருப்பில்
தவித்து வெந்து சாம்பலான
உறவின் உயிரின்
வெறுத்த துடிப்பில்
இயல்பாய் வந்த இளம் சுவையோ
போர் பூமியின் பெண்ணே
உன் புன்னகையை
இனியேனும் சிரிப்பாய் புதிராய்
மொழி பெயர்க்க
நானொன்றும் வன தேவதையல்ல
உன் வலி உணர்ந்து
விழி நிறைந்து
வழிந்தோடும் நீர் துடைத்து
பூமி பிளந்து புயலென்றெழுந்து
விலங்கொடிக்கும்
தீச் சிறகு பெண்
நானொன்றும் வனதேவதையல்ல