தூக்கம்

-சலனி

தலை முழுதிலும்
அபரீதமான வலிகள்
நரம்புக் கணுக்களின்
அதிர்வுகளுக்குப் பிடிகொடுக்க முடியாது
மருகுகிறது சிந்தனை
களைப்பின் தாலாட்டு
உயிர்முதல் வருட
தூக்கம் தழுவிக் கொள்கிறது,
ஒரு தேவதைபோல.

கனவுகளுக்கான எந்த உத்தேசமுமில்லாத
கண் சுழற்றல்
அவ்வப்போதான துண்டுக் கணங்களில்
சரிவதைப் பார்க்கிறேன்.

மண் முழுதுமாய் நாணயங்களை
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்.
சலசலத்த நீரோடையில்
கால் வழுக்க இடறுகிறேன்.

திடும்மென்ற விழிப்புகளை
இருள் போர்த்திக் கொள்கிறது.

அயர்வுடனான கனவின்
இரண்டாம் பாகம்

பழமையான ஓவியத்தின்
புள்ளித் திரள்வுகளில்
இலைபோல, விசித்திர ஜந்துக்களாயும்
பலதும் உலவக் காண்கிறேன்.

தூக்கம் போய்
ஆழ்மனமெங்கும் பதுங்கிக் கொள்கிறது
கனவுடனான தவிப்பு மட்டும்
எனதாக
மூன்றாம் பாகத்தையும் மோதுகிறேன்.

அந்தரங்கங்களின் ஒவ்வொரு
கொலுக்கிகளும் நாகசுரர்களால் திறபட
நடன ஜனிப்புகளில்
உயிரதிர்வுகள் ஊமிக்கின்றன.

தூக்கம் முழுவதுமான
ஈறல்கள், ஸ்கலித்த
ஏதோவெல்லாமுடன் விழிக்கிறேன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *