-யாழினி யோகேஸ்வரன்-
நாட்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன
கண்கள் சொருகிப் போயும்
காதுகள் மூடப்பட்டும் கிடக்கின்றன
விரல்களற்ற கைகள் எழுத்தைத் தொலைத்து
தேடி அலைகின்றன
கால்கள் கூட பாதை அறியாது
இரவோடும் சேர்ந்தே நடக்கின்றன
தசைகள் மிகப் பருத்ததாயும்
வழிந்து தொங்குவதாயும்
விரிவடைந்தே செல்கின்றன
தொங்கு தசைகளின் வழித்தடங்கள்
வேர் படர்ந்த நிலத்தைப் போல்
ஊடுருவிச் சேர்கின்றன
புலன்கள் மீதான விருப்பங்களும்
தேக்கத்தோடு இடை நிறுத்திக் கொண்டன
குரல் கூட வன்புணர்வாக்கப்பட்டது போல்
கேவலோடு பேசுகின்றது
உணர்வுகள் மெதுமெதுவாய் செத்தபடியேவாழ்ந்து கொண்டிருக்கின்றன
படிமங்களும் சைகைகளும் மௌனங்களும் மட்டுமே
வார்த்தைகளாகிப் போயின
இந்த மௌனப் பெரு நதியை
நடந்தே கடக்கின்றேன்
வற்றிப் போகும் அதுவென்ற நம்பிக்கையோடு
நாட்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன.