கருப்பு + பெண் = வக்கிரமும் வன்முறையும்

jevva3

-பா. ஜீவசுந்தரிபாலன்-

jeeva2எங்களைப் போன்ற தலைமுறையினருக்கு தாத்தா, பாட்டி, அத்தை போன்றவர்கள் ஏராளமாகக் கதை சொல்லி வந்திருக்கிறார்கள். மாய. மந்திரங்களும், புராணங்களும் என எத்தனை விதமான கதைகள்… சொல்லச் சொல்லத் தீர்ந்தே போகாதவை அக்கதைகள். கதை கேட்டு வளர்ந்த தலைமுறை நாங்கள் என்று இப்போதும் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மகாபாரதக் கதை மறக்க முடியாதது. என்ன இருந்தாலும் நம் இதிகாசம் அல்லவா? பாஞ்சாலி துகிலுரியப்பட்டதை மிக நாசூக்காகவும், நாகரிகமான வார்த்தைகளிலும் சொல்லுவார்கள். வளர்ந்த பின் மகாபாரதத்தைப் படித்துப் பார்க்கும்போது அதன் தாக்கத்தை எதிர்கொள்வதில் சற்றே அதிர்வுகள் ஏற்பட்டன. வண்ண வண்ண மயமான சேலைகள் கண்ணனின் கையிலிருந்து வளர்ந்து கொண்டே இருந்தாலும், ஆண் மகன்கள் பலரும் நிறைந்திருக்கும் ஒரு அரங்கில் பெண் ஒருத்தி உடுத்தியிருக்கும் ஆடையை, மற்றொரு ஆண் களைய முற்படுவது எந்த விதத்தில் நாகரிகமான செயல், நியாயம் என்ற கேள்வி மூளைக்குள் உதித்தபோது அதன் கோர முகம் வெளிப்பட்டது. அதற்கான விடை கிடைக்கப் பல ஆண்டுகளானது. யுகங்கள் கடந்தும் பெண் மீது அது நிகழ்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. சூடான் நாட்டு மாணவர் ஒருவர், விபத்தை ஏற்படுத்தினார் என்றால், அந்த மாணவரை தண்டிக்க சட்டம் இருக்கிறது. அந்த மாணவருக்குச் சற்றும் தொடர்பில்லாத, தான்சானியா நாட்டு மாணவி ஒருவர் தாக்கப்படுகிறார். உடைகளைக் கிழித்து, களைந்து, பாலுறவுக்கு ஒப்பான வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார். 21 வயதான ஒரு இளம் பெண், நாடு விட்டு நாடு தன் கல்வியின் பொருட்டு வந்தவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நாமே அப்பெண்ணைக் கேவலப்படுத்தலாமா? இப்போதும் பெண் ஒருத்தி கையில் கிடைத்தாள் என்றால், வெறி கொண்டு நிற்கும் சமூகம் அவளை நிர்வாணப்படுத்தி வேடிக்கை பார்க்கவும், அவமானப்படுத்தவுமே முயல்கிறது என்றால், நாமெல்லாம் நாகரிக மனிதர்கள் என்று எவ்வாறு சொல்லிக் கொள்வது? நடந்த நிகழ்வுகளுக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? அப்படியே தொடர்பு இருந்தாலும், அந்தப் பெண்ணைத் தொடலாமா? அப்படியானால் பெண் இன்னமும் பணயப் பொருள்தானா? இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லப் போவது யார்?

jevva1கர்நாடக அமைச்சர் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் கருப்பினத்தினர் மீதான வெறுப்பு ஒரு காரணமில்லை என மறுக்கிறார். ஆனால், இங்கு நடைபெறுபவை அதை மறுப்பவையாகத்தான் இருக்கின்றன. ஆப்பிரிக்க நாட்டவர்கள் சிலர் இந்தியர்கள் பற்றியும் அவர்கள் தங்களை நடத்தும் விதம் பற்றியும் பகிர்ந்து கொண்டிருக்கும் சொந்த அனுபவங்கள் மிகுந்த கசப்புணர்வைத் தரக்கூடியவை. நாம் சந்தோஷம் கொள்ளும் விதத்தில் அவை இல்லை.கருப்பு என்னும் நிறம் எப்போதுமே இங்கு இரண்டாம் பட்சம். ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து வருபவர்கள் என்றால் இன்னும் கேவலம். அவர்கள் ஏதேனும் தவறிழைத்தால் மற்றொரு கருப்பினப் பெண்ணை அவமானத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளாக்க வேண்டும் என்பதும் கருப்பினத்தவர்கள் கீழ்மைப்பட்டவர்கள் என கொள்வதும் என்ன மாதிரியான சிந்தனை? கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என தண்டனை அளிக்கும் போக்கு மனதளவில் ஊறிப் போயிருப்பதைத்தான் இம்மாதிரியான சம்பவங்கள் வெளிச்சமிடுகின்றன. சட்டம், ஒழுங்கு, காவல்துறையின் கடமை. இவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு தாங்களே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள இவர்களுக்கு அதிகாரம் அளித்திருப்பது யார்? பொதுவாகவே கருப்போ, வெளுப்போ பெண் என்றால், அவளை உடல் ரீதியாகச் சிதைக்க நினைக்கும் போக்கு மிக மிக ஆபத்தானது. பல பேர் கூடும் பொது இடங்களில் பெண்ணுக்குப் பாதுகாப்பில்லை என்பதை அவ்வப்போது அறிவித்துக் கொண்டும், செயல்படுத்திக் கொண்டும் இருப்பதைக் கண்ணாரக் காண்கிறோம்.

பெண் என்றால் கீழானவள், அதிலும் கருப்பினப் பெண் இன்னும் கீழானவள் என்ற நம் வக்கிர மனப்பான்மையின் வெளிப்பாட்டைத்தான் பெங்களூரு சம்பவம் உணர்த்துகிறது,. மனிதர்களுக்குள் நிறத்தின் பொருட்டு காண்பிக்கப்படும் வன்மம் மிகக் கேவலமானது. காலம் காலமாக தங்கள் நிறத்தின் பொருட்டு ஒதுக்கப்பட்டு, அடக்குமுறைக்கு ஆளாகி அடிமைகளாகக் கிடந்த ஒரு இனம், விடுதலை பெற்று, நாடு விட்டு நாடு கல்வி கற்பதற்கு வருகிறார்கள் என்றால் அவர்களைப் பாதுகாப்பாகவும், கண்ணியத்துடன் நடத்த வேண்டியது நம் கடமை இல்லையா?

காந்தி தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் நிறவெறியை எதிர்த்துப் போராடியதை இன்னமும் நாம் மறந்து விடவில்லை. பல தலைமுறைகள் கடந்து இன்னமும் தங்கள் சொந்த நாடாகக் கருதி அங்கு வாழும் இந்தியர்கள் ஏராளம். நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிராகக் கலகக்குரல் எழுப்பி கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் சிறைவாசம் அனுபவித்தவர். வெள்ளையர் ஆதிக்கமும் நிறவெறியும் கோலோச்சிக் கொண்டிருந்ததால், உலக நாடுகளால், ஒதுக்கி வைக்கப்பட்டு 90 களில்தான் அந்த இழிவைத் துடைத்தெறிந்தது அந்த நாடு. அமெரிக்க மண்ணின் பூர்வ குடிகளான கருப்பின மக்கள், வெள்ளை ஆதிக்கத்தால் கட்டுண்டு கிடந்த நிலை மாறி, ஒரு கருப்பினத்தவர் அமெரிக்க அதிபராகி, தன் பதவிக் காலத்தை நிறைவு செய்யும் தருவாயில் இருக்கிறார்.

நம் இந்தியா மட்டும் என்ன வாழ்ந்தது? பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைகளாக்கப்பட்டு, அவர்களின் பார்வையில் கருப்பர்களாகத்தானே நாம் இருந்தோம். இன்னமும் நம் வெள்ளைத்தோல் எஜமானர்களின் பார்வையில் நாம் கருப்பர்களாகத்தானே ஒதுக்கி வைக்கப்படுகிறோம். சிவப்பழகு க்ரீம்களை அன்றாடம் பயன்படுத்துபவர்களாகத்தானே இருக்கிறோம். வெள்ளைத்தோல் மோகம் ஏன் பேயாய்ப் பிடித்து ஆட்டி வைக்கிறது? பெங்களூருவில் உள்ள ஆப்பிரிக்க மாணவர்களின் சட்ட ஆலோசகரான பாஸ்கோ கவீல்சி, “உள்ளூர்க்காரர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, 21 வயது மாணவி ஒருத்தி ஆடைகளின்றி சாலையில் ஓட விடப்படுகிறாள் என்பதைக் கேட்கும்போது, நாங்கள் இஸ்ரேலில் இருக்கிறோமா அல்லது இந்தியாவில் இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது.” என்று வருத்தத்துடன் கேள்வி எழுப்பும்போது, நாம் அதை எப்படி எதிர்கொள்வது? ”பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் மிக அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதை எங்கள் நாடு அளித்துக் கொண்டிருக்கிறது” என்று அவர்கள் கூறுவதைக் கேட்கும்போது வெட்க உணர்வுதான் மேலோங்குகிறது. நம் நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் படிப்பதற்காகச் செல்லும் மாணவர்கள், நிற வெறியின் அடிப்படையில் நடத்தப்படுவதாக மனம் கொந்தளிக்கும் நாம், ஆப்பிரிக்க மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் உணர வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *