-யாழினி யோகேஸ்வரன்-
அம்மாவின் அறைக்குள் எத்தனை அதிசயங்கள்?
பலர் வருகிறார்கள்
திரும்பியும் செல்கிறார்கள்
வந்தவருள் சிலர் சிரித்த முகங்களோடும்
பற்பலரோ அறையப்பட்ட கவலை அப்பிய முகங்களோடும்
அம்மா
சிலரோடு சிரிக்கிறாள்
பலரோடு முறைக்கிறாள்
வசதியோடிருக்கின்ற புதிய முகங்களை
அம்மா திருப்திப்படுத்துகிறாள்
வலிமை இழந்த காய்ந்த முகங்கள்
மேலும் காய்ந்து போகும்.
எப்போதும் அம்மா “நாம் குடும்பம்” “நாம் குடும்பம்”
என கதை பேசுவாள்
ஆனால் அவள் குடும்பம் அதிகம்,
அடிமை வாழ்வில் சிக்கும் அவளாலேயே.
பிள்ளைகள் ,எம்மோடு அன்பில்லாதவள் அம்மா
எம் நலன் நோக்காதவள் அம்மா
பிள்ளைகள் எம் வலி புரியாதவள் அம்மா
புறக்கணிப்பு இவள் மனதோடு ஒட்டிப் போனது
ஒற்றை அறையினுள்ளும்
இருட்டு வாழ்வினுள்ளும்
காற்றுப் புக இயலா நாற்சுவர்களுள்ளும்
முட்டி மோதுகின்ற அம்மாவின் இதயம்
அடிபட்ட பிணத்தைப் போல
நாற்றமெடுக்கிறது
இவள் அறைகள் தாண்டிய,
பிள்ளைகள் தொலைத்த,
தன்னை நாடி வருவோர் தவிர,
தேசம் தாண்டிய இடங்களில் எல்லாம்
பெரும் பாசக்காரி
மிகக் கெட்டிக்காரி
நேர்மைமிகு தேர்ச்சிக்காரி
இதோ! என் தொப்புள் கொடி அம்மாவின் பெயரால்
அர்ச்சிக்கப்படும் இந்த அம்மா
மிகப் பிரபல்யமானவள்.
”பெற்றவள் மட்டுமா அம்மா?
பதவியின் பெயரால் பெயர் சொல்லி
அழைக்கப்படுபவர்கள் கூட அம்மா
ஆகிவிடுகிறார்கள்”
-இது நம் யாப்பில் இல்லாத நியதி-