சிமோன்தீ
நீண்ட நெடுமூச்செறிந்த மௌனங்கள் தாங்கிய
அந்த நிமிடங்களை எவ்வாறோ கடந்தாக வேண்டும்
எப்படி?
கிருஷ்ணனின் தசாவதாரத்தில் பெண்கள்
பலிக்களங்களில் என எழுதி வைத்தார்கள் போலும்
புராணர்கள் அவர்களின் தினவெடுத்த
குறிகளின் அதிகாரத்துடன்
யாரும் அக்கறைப்படாத பூக்களின் அழகியல்கள்
கசக்கிப் பிழிந்து முகர்ந்து வீசப்படுகின்றன
இருப்பகற்றி இதழ் பிடுங்கி குருதிப்புனலில்
அலைந்தழிந்த அந்தச் சின்னஞ்சிறிய வதனங்களை
தாகங்கொண்ட நாகங்கள்
கொத்திக் கொத்தி சுவை பார்த்தன
செவ்விய நீர் பெருக்கெடுக்க பிஞ்சுகளின்
தொடைகள் பிரிக்கப்பட்டு
இமாம்களால் பிடுங்கியெறியப்பட்ட கிளிட்டோரியஸின் நுனிகள்
எகிப்தின் சாலையோரங்களிலும்
நைல் நதியின் ஆழத்திலும்
துடிதுடித்திறந்த சேதிகளை
என்னென்று நான் சொல்ல?
(2007 ஊடறுவில் வெளியான கவிதை Dece 07)