ராஜஸ்தானில் 850 குழந்தை திருமணங்களைத் தடுத்துள்ள க்ரிதி பாரதி!

 ஆக்கம் : Sourav Roy – தமிழில்: Sowmya (yourstory.com/r)

எதிர்க்க வலுவின்றிச் சிறுபிள்ளையாக இருந்தபோது விஷம் கொடுக்கப்பட்டது முதல் க்ரிதி பல இன்னல்களைக் கடந்து வந்துள்ளார். இன்று இந்த 28 வயதான பெண் தன் வழியில் வாழ்வது மட்டும் இல்லாமல், ராஜஸ்தானின் குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தும் ஒரு களப் போராளியாகவும் இருக்கிறார். 29 குழந்தை மணங்களைச் செல்லுபடி இல்லாமல் செய்து, 850க்கும் மேற்பட்ட, நிகழவிருந்த திருமணங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கும் க்ருதி, “இது வெறும் தொடக்கம்தான்” என்கிறார். 5500க்கும் மேற்பட்ட பெண்களுக்கும் 6000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் மறுவாழ்வு அமைத்துக் கொடுத்திருக்கிறார்

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து குழந்தைத் திருமணங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை. ஆனால் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட உலகின் குழந்தைத் திருமணங்கள் இங்குதான் நடைபெறுகின்றன. பலவந்தமாக திருமணம் முடித்துவைக்கப் படும் பெண்கள் குடும்ப வன்முறை, குழந்தைப்பேற்றின் போது இறப்பு, பிறக்கும் குழந்தைகள் இறப்பு என்று பல மருத்துவ மற்றும் சமுதாயச் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். பெண் கல்வி மற்றும் அவளின் எதிர்காலத்தின் மீது குழந்தைத் திருமணங்கள் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பை மறக்க முடியாது.

இந்தியாவின் பெரும்பான்மை குழந்தைத் திருமணங்கள் நடக்கும் ராஜஸ்தானின், ஜோத்பூரைச் சேர்ந்தவர் க்ரிதி. 2011 ல் அவர் சாரதி அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் சமூக நீதியைக் கொண்டுவருவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார். அப்போதிலிருந்து எல்லா வழிகளையும் முறைகளையும் பயன்படுத்தி சில நேரம் உயிரையும் பணயம் வைத்துக் குழந்தைத் திருமணத்தில் தள்ளப்படும் பெண்களைக் காப்பாற்றுகிறார்.

 

“ஒரு பெண்ணைக் காப்பாற்றிய உடன் அப்பெண்ணை அந்தச் சமூகம் ஒரு ஒதுக்கப்பட்டவராகப் பார்க்கும். அந்தக் குழந்தைக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்து சமுதாயத்தின் ஒரு பங்காக ஆக்குதல் முக்கியம்” என்கிறார். 

அவருடைய நிறுவனம் வெறும் திருமணத்தை நிறுத்துவதோடு மட்டும் இல்லாமல், அந்தக் குழந்தை தனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவுகிறது. சாரதி அறக்கட்டளை குழந்தைகளுக்கு, குடும்பங்களுக்கு மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்குகிறது. க்ரிதியின் குழு காப்பாற்றப்பட்ட பெண்ணின் வாழ்க்கைச் சீரமைப்பிற்கு பொறுப்பேற்கிறது.

இந்தச் செயல் எளிதானது இல்லை. க்ரிதியும் அவரின் குழுவும் பெண்ணின் பெற்றோரை அணுகி திருமணம் செய்ய வேண்டாம் என ஒப்புக்கொள்ள வைக்கின்றனர். பல நேரம் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அவர்கள் மணமகன் தரப்பிலும் பேசிப் புரிய வைக்கிறார்கள். சிக்கல் என்பது ஊர்ப்பெரியவர்களை ஒப்புக்கொள்ள வைப்பதில்தான் இருக்கிறது. இதைத் தடுக்கப் போனால் அவர்கள் ஊரின் பெயரும் பண்பாடும் கெடுவதாக நினைக்கிறார்கள். “இரண்டு தரப்பிலும் புரிந்து கொண்டு திருமணம் நிறுத்தப்படுதல் ஒரு வரம். இந்த வருடம் வெறும் மூன்றே நாட்களில் ஒரு குழந்தைத் திருமணத்தை நிறுத்தினோம்” என்கிறார் க்ரிதி.

ஆனால் எப்போதும் அவ்வளவு எளிதாக நடப்பதில்லை. க்ரிதியும் அவர் குழுவினரும் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறார்கள். சட்ட உதவியுடன் இதை நடத்தியிருக்கிறார்கள். “அந்தக் குழந்தை காப்பாற்றப்படும் வரை எதுவுமே விஷயம் இல்லை” என்கிறார் நூற்றுக்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் பெற்ற க்ரிதி.

க்ரிதியின் தன்னார்வலர் குழு இரண்டு தளங்களில் செயல்படுகிறார்கள். ஒரு சாரார் சட்டத்தின் உதவியோடு திருமணத்தை நிறுத்துவதில் இயங்க, இன்னொரு சாரார் அந்தக் குழந்தையின் வாழ்வை சீரமைக்கத் தேவையான விஷயங்களைத் தயார் செய்கிறார்கள். அதில் கல்வி மற்றும் தொழிற்கல்விக்கு ஏற்பாடு செய்தலோடு சில நேரம் வேலைவாய்ப்பிற்கான தளமும் அமைத்துத் தரப்படுகிறது.

கிராமத்தின் அங்கன்வாடிகள், பள்ளி மற்றும் பொது இடங்களில் முகாம் அமைத்து குழந்தைத் திருமணம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். குழந்தைத் திருமணம் செய்துகொண்ட பெண்களை அழைத்து வந்து, அவர்கள் மூலம் அதன் தீமையைப் புரிய வைத்து இந்த சமூக அவலத்தை உடைத்தெறிய அறைகூவல் விடுகிறார்கள். அவரின் நிறுவனம் மாநிலத்தின் எந்த மூலையில் குழந்தைத் திருமணம் நடந்தாலும் அதைப் பற்றி புகாரளிக்க ஒரு உதவி மையத்தை நடத்துகிறது.

க்ரிதியின் கதை வியக்க வைக்கிறது. ஆனால் அவருடைய குழந்தைப் பருவம் சோகங்கள் நிறைந்தது. அவரின் தந்தை ஒரு மருத்துவர், ஆனால் அவர் க்ரிதி பிறக்கும் முன்பே க்ருதியின் தாயைப் பிரிந்து சென்று விட்டார். க்ரிதியைப் பெற்றெடுக்க அவரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவருடைய தாயை இரண்டாம் திருமணம் புரியச் சொன்னார்கள். க்ரிதி பிறந்தபின்னும் கூட அவரின் நிலையில் முன்னேற்றம் இல்லை. ஒருமுறை அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதனால் அவருடைய படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டியதாகி விட்டது. நீண்ட நாட்களுக்குப் பின் தன் கல்வியை முடித்த அவர் இப்போது குழந்தைப் பாதுகாப்பு என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார்.

இந்த மாதிரியான வீரச் செயல்களுக்காக பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். சமீபத்தில் இங்கிலாந்து அரசிடம் இருந்தும் தாம்சன் ராய்டர்ஸ் குழுமத்தில் இருந்தும் நிதியுதவி பெற்றிருக்கிறார். தன் குழுவையே தன் வெற்றிக்குக் காரணமாகச் சொல்கிறார். அந்தக் குழுவின் வியக்க வைக்கும் பணியால் தான் ராஜஸ்தான் இன்று குழந்தைத் திருமணத் தடுப்பில் முன்னிலை வகிக்கிறது. சாரதி அறக்கட்டளை இன்று வரை 29 குழந்தைத் திருமணங்களை சட்டப்படி செல்லாததாய் ஆக்கியிருக்கிறது. அவருடைய தனித்தனமை வாய்ந்த செயலுக்காக அவரின் பெயர் லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. நடுவண் அரசின் பாடத்திட்டத்தில் அவருடைய சாதனைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் க்ரிதி அடக்கத்துடன் தன் பயணம் இப்போதுதான் தொடங்கியிருப்பதாகவும் இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது எனவும் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *