ஃபஹீமாஜஹான்
இலக்கற்றுப் பறந்து கொண்டிருந்த
சிறு பறவை
விதியின் சுவரொன்றினருகே
வட்டமிட்ட பொழுது
யாருக்காவோ காத்திருந்த தளவாடியில்
சிறகடிக்கும் தனது துரதிஷ்டத்தின்
விம்பத்தைக் கண்ணுற்றது
பாவனை காட்டுமந்தக் கண்ணியில்
உள்ளம் சிக்கிவிட
உள்ளிருக்கும் அபூர்வத்தின்
ஸ்பரிசத்தைப் பெற முயன்ற தருணங்களிலெல்லாம்
வலிமை மிகுந்த தடையொன்றில்
மோதி மோதி விழுந்தது
அந்த வீட்டின்
கருணையற்ற காலடியோசைகள்
நெருங்கி ஒலிக்கத் தொடங்கும் பொழுதெலாம்
கண்ணாடிக்குள் உறவைக்
கைவிட்டுவிட்டுக்
காற்று வெளிக்குள் தெறித்து மறைந்தது
வசீகரிக்கும் நடனங்களையும்
உயிருருகும் பாடல்களையும்
ஒப்புவித்த பின்னரும்
உள்ளிருக்கும் உலகைத் தாண்டி
மாயப் பறவை வாராமற் போகவே
அதன் பார்வையில் படுமாறு
கூடொன்றைக் கட்டிமுடித்திடச்
சவால்மிகுந்த வனாந்தரங்களில் அலைந்து
சிறு துரும்புகளைக் காவி வந்தது
விரித்துத் திரிந்த சிறகுகளை ஒடுக்கித்
தன் சிறு கூட்டுள் வைத்தவாறு
இருள் தேங்கியிருக்கும் கண்ணாடியைப் பார்த்தவாறு
இரவுகள் தோறும் பயந்தவாறிருந்தது
ஒரு விடியலில்
அனைத்தையும் இடமாற்றிக் கொண்டிருந்த வீட்டின்
அதிகாரமிக்க கையொன்றிலிருந்து
குருவியின் விம்ப உலகம்
நழுவிச் சிதறியது.
ஏதுமறியாதது
சுவர் தின்ற தன் இணையைத் தேடி
அந்த இடமெலாம் கதறிப் பறந்தது
இன்று
எல்லாப் பறவைகளும்
விடைபெற்றுப் போய்விட்ட
வனமொன்றைச் சரணடைந்த குருவி
சுவரில் புதையுண்ட தனது விம்பத்தை
மீட்டெடுத்து வர முடியாமற் போன
சாபத்தை எண்ணி அழுகிறது