http://ramasamywritings.blogspot.in/2015/12/blog-post_29.html
எளிய மனிதர்களின் வாழ்க்கையின் அவலச்சுவையை- பொருளாதாரம் சார்ந்த வறுமை நிலையை பேச்சுவழக்கில் எழுதிக் காட்டியவர் மலர்வதி. (தூப்புக்காரிக்காக “யுவபுரஸ்கார்” விருதுபெற்றவர்) அவரது கதை: இது ஒனக்கான ஓர்மையிக்கி…, ( குமுதம் தீராநதி, 53 -57 )
இவரது கதையைப்பற்றிப் பேசுவதற்கு முன்பு இவரது மொழிநடைபற்றிய குறிப்பொன்றைச் சொல்லிவிட விரும்புகின்றேன். ஒருவர் தனது வட்டாரத்தின் பேச்சுமொழியை நுட்பமாகப் பயன்படுத்தும்போது நேர்மறை விளைவுகள் ஏற்படுவதுபோலவே எதிர்மறை விளைவுகளும் ஏற்படும். எழுத்தாளர் ஒருவர் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் வாழிடத்தின் பேச்சுமொழி வாசிப்பவர்களை நம்பச் செய்யும் என்பது நேர்மறையான முதல்நிலை. ஆனால் ஒரு வட்டாரத்தின் மொழி இன்னொரு வட்டாரத்தின் வாசகர்களைத் தொடர்ந்து வாசிப்பதைத் தடுத்து விலகிச்செல்லத் தூண்டுமென்பதும் உண்மை. இது எதிர்மறைநிலை. மலர்வதியின் எழுத்து நடையில் எதிர்மறைத்தன்மையே அதிகம் இருக்கிறது.
“எனக்கச் சின்னப்பிராயத்துல இதுதான் உன் ஊருண்ணு வளத்து விட்டதுனால இங்கதான் நான் வாழப்போறேண்ணு நினச்சிப்போட்டேன். அதனாலே இங்க உள்ள மிக்கேல காதலிச்சேன். ஓ எனக்கு இங்க ஒரு காதலுண்டு அந்தக் காதலுக்க ஈரத்த எப்ப தாங்கியிட்டு நிக்க உள்ளவலிமைக் கிடைக்குமோ அப்பதான் இந்த ஊருக்கு வருவேண்ணு எனக்க கல்யாணத்துக்கு எடுத்த முடிவ இப்பதான் எனக்கு மாத்த முடிஞ்சிருக்கு.
எனச் சிந்து என்னும் பெண்ணின் காதல் கதையைச் சொல்லத் தொடங்கும் மலர்வதியின் கதை, சிந்துவும் மிக்கேலும் திருமணத்திற்குப் பின் கிடைத்த வாழ்க்கையை இயல்பாய் ஏற்றுக்கொண்டதாயும் நகர்த்தியுள்ளது. அந்த நகர்த்தல், கிராமத்து வாழ்க்கையில் ‘காதல்’ என்பதோ, அதில் ஏற்படும் ‘பிரிவு’ என்பதோ பெரிய அளவில் உலுக்கிவிடும் ஒன்றல்ல என்ற நடப்பியல் நிலைக்கு நகர்த்தும் தன்மைகொண்டது. அதன்வழி, நவீனக்கதையாகும் வாய்ப்பு கொண்டது. அந்த வாய்ப்பைக் கைவிட்டுவிட்டு இல்லாமையின் துயரச் சரடுகளுக்குள் நகர்த்துவதன் மூலம் தனது அறியப்பட்ட அடையாளத்தை உருவாக்குகிறார் மலர்வதி. அது கதைக்கு செயற்கையான திரும்பத்தையும் முடிவையும் தரும் என்பதைப் பற்றியெல்லாம் அவர் நினைக்கவில்லை. வாசிப்பவர்களை சோகத்தின் உச்சத்திற்குக் கொண்டுசெல்ல நினைப்பதே அவரது முதன்மை நோக்கம். அதற்காகச் சிந்துவின் பழைய காதலனான மிக்கேலின் குழந்தைகளைச் சந்திக்கும் திருப்பத்திற்குள் வாசகர்களை அழைத்துப்போகிறார். அவள் அந்தப் பிள்ளைகளோடு நடத்தும் உரையாடலும் முடிவும் இப்படி இருக்கிறது:
“ஒனக்கப்பேரு என்னம்மா?” தவிப்பா கேட்டேன். ‘சிந்துராணி’
”யாரு ஒனக்கு இந்தப்பேரு போட்டா” இன்னும் எனக்குத் தவிப்பு கூடிப்போச்சி,
‘ எங்கப்பா’ ‘அவரு ஒன்ன எப்பிடி கூப்பிடுவாரு ‘ என் உயிரு துடிச்சுக் கேட்டேன்.
‘சிந்..தூண்ணு விளிப்பாரு.. ஆனா இப்ப விளிச்ச மாட்டாரு?’ ‘ஏன்?’ என் பிராணன் நடுங்க கேட்டேன். “அவரு செத்துட்டாரு.?
செத்தாப் போனான்? எனக்க ஈரக்கொல அத்துவிழுந்ததுப்போல நொப்லம் திருகிக்கொடுக்க கிடுகிடுண்ணு ஆடியிட்டேன்.
“ ஒனக்க ஓர்மையிக்காக இனி வருசாவருசம் ஒனக்கமொவளுக்கு வேண்டி நான் வரக்குள்ள மன தைரியம் கிட்டுமா?”
இந்தச் சந்திப்பு தற்செயலாக நடப்பதாக ஒரு மாயத்தை -தர்க்கமின்மையைக் கதைக்குள் கொண்டு வந்து தலைப்போடு பொருத்தம் உண்டாக்கி முடித்துவிடுகிறார்.
ஊடறுவில்
தூப்புக்காரி மலர்வதியுடனான நேர்காணல்
தூப்புக்காரி: விளிம்புநிலை மனுசியின் குரல்
“தூப்புக்காரி” என் சொந்தக்கதை மட்டுமல்ல, என் சொந்தங்களோட கதை