12. காஷ்மீர்ப் பெண்களின் அவலம்

(நாகூரைச் சேர்ந்த தோழர் ஒருவர் ஓராண்டுகளுக்கு முன்பு எனது வீட்டிற்கு வந்தபோது மு.குலாம் முகம்மது தமிழில் மொழிபெயர்த்த மூன்று நூற்களை அளித்தார். கர்கரேயை கொலை செய்தது யார்? – தீவிரவாதத்தின் உண்மை முகம், கஷ்மீரில் பாதி விதவைகள், கசாப்-ஐ இரகசியமாக தூக்கிலிட்டது ஏன்? என்ற குறுநூல் உள்ளிட்ட மூன்று நூற்கள் அவை. இவையனைத்தும் ‘வேர்கள் வெளியீடாக வந்தவை. இன்று (டிசம்பர் 04, 2015) சென்னையில் சீதக்காதி அறக்கட்டளை சார்பில் நடைபெறும் ஓர் விழாவில் ‘சீதக்காதி’ விருது எழுத்தாளர் மு.குலாம் முகம்மது அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அ.மார்க்ஸ் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சுமார் 50 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள குலாம் முகம்மது ரயில்வேயில் பணியாற்றியவர். அவரது ‘கஷ்மீரில் பாதி விதவைகள்’ மொழியாக்க தொகுப்பு நூல் குறித்த பதிவு இது.)

ஆகஸ்ட் 30 ஆம் நாளை அய்.நா.சபை காணாமற்போனோர் நாளாக அறிவித்துள்ளது. போர், தீவிரவாதிகள் கடத்தல், பேரிடர் போன்ற பல காரணங்களால் மக்கள் காணமற் போகின்றனர். காஷ்மீரில் அரசின் பாதுகாப்புப் படையினரால் 15,000 க்கு அதிகமானோர் வலுக்கட்டாயமாகக் (Enforced Disappearance) காணாமால் ஆக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக காஷ்மீரில் நமது ராணுவம் ‘Half Widows’ என்னும் புதிய சொல்லை உலகிற்கு தந்திருக்கிறார்கள். ராணுவம் மற்றும் பல்வேறு துணை ராணுவப்படைகளால் விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் ஆண்கள் பலர் வீடு திரும்புவதில்லை. இவர்களது உடல் அல்ல்து பிரேதப் பரிசோதனை அறிக்கை கூட அவர்களது குடும்பங்களுக்குக் கிடைப்பதில்லை. இவ்வாறு காணாமலடிக்கப்பட்டவர்களின் மனைவியரைத்தான் பாதி விதவைகள் (Half Widows) என்று அழைக்கப்படுகின்றனர். என்ன கொடுமை இது!

 

இதிலுள்ள கட்டுரைகள் பல் இதழ்களிலிருந்தும் ‘Widows and Half Widows Saga of Extra – Judicial Arrests & Killings’ என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. இதைப் படிக்கும் எவரும் கலங்காதிருக்க இயலாது.மெட்ரிகுலேஷன் (நம்ம ஊரில் +2) தேர்ச்சியை விடிந்ததும் கொண்டாடவிருந்த ஜாவித் அஹமத், அவரது மாமா முமது ஷாபி ஆகியோர் 1990 ஆகஸ்ட் 19 நள்ளிரவில் நள்ளிரவில் ராணுவப்படைகளால் இழுத்துச் செல்லப்பட்டனர். மகனைத்தேடி ஒவ்வொரு படை முகாமாய் அலைந்த தாய் பர்வீனா ஆகங்கர் இறிதியாக நீதிமன்றத்தில் ஆட்கொணர் மனு செய்தார். இதைப் செய்ய பலர் நீதிமன்றத்தில் கூட, கணவர்களை, மகன்களைத் தேடும் பெற்றோர்களைக் கொண்டு உருவானது ஓர் அமைப்பு. (Association of Parents Disappeared Persons – APDP) இவ்வமைப்பு உலகளவில் செயல்படும் Asian Federation Against Involuntary Disappearence (AFAD) என்கிற அமைப்புடன் இணைந்து செயலாற்றுகிறது.அதிகம் படித்திராத 12 வயதில் திருமணம் முடிக்கப்பட்ட பர்வீனாவிற்கு அவரது 12 ஆம் வகுப்பு முடித்த மூத்தபெண் செய்மா உதவி புரிகிறார். உலக அளவில் கவனம் பெற்ற இவர்களது போராட்டத்தை எதிர்கொள்ள 20 லட்சம் இழப்பீடு, மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் என்பதாக பேரம் பேசப்பட்டது. மறுக்கவே நீதிக்கான இவர்களது போர் தொடர்கிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இதைப் போன்ற கண்ணீர் கதைகள் ஏராளம். பாராமுல்லாஹ் பகுதியைச் சேர்ந்த ஹாஜ்ரா பானுவுக்கு நான்கு ஆண்குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற 3 பிள்ளைகள் வீடு திரும்பவில்லை. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பிணமாக கிடைத்தார்கள். மீதமிருந்த மற்றொரு மகனும் நள்ளிரவில் இழுத்துச் செல்லப்பட்டார். அவரும் வீடு திரும்பவில்லை. கணவரும் துயரில் மடிந்துபோல தனக்கென தோண்டிய குழி மற்றும் கபன் (இறந்தவர்கள் உடலை மூடும் இரு வெள்ளைத்துணிகள்) –உடன் கப்ருஸ்தான் (அடக்க ஸ்தலம்) செல்லக் காத்திருக்கிறாள்.இத்தகைய கொலைகள், கற்பழிப்புகள், சித்ரவதைகள், வன்கொடுமைகளைப் புரிய பாதுகாப்பு படைகளுக்கு துணிச்சல் தருவது எது? ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள ‘அப்சா’ எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Forces Special Power Act) அவர்களைப் பாதுகாக்குகிறது. இம்மாதிரியான வன்கொடுமைகளை மீண்டும் மீண்டும் நிகழ்த்த ஒப்புதல் அளிக்கிறது.ஹாலிதா அக்தரின் கதி மிகக்கொடுமையானது. நள்ளிரவில் ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப் படையினர் வீடு புகுந்து பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் தாக்கி, தந்தை, கணவர், தம்பிகள் அனைவரையும் இழுத்துச் சென்று ராணுவ வண்டியில் ஏற்றிச்சென்றனர். (ஜூலை 2001)
இவர்களைத்தேடி ஒவ்வொரு படை முகாமாக அலைந்த ஹாலிதா அக்தரை இங்மங்கும் அலைகழித்தனர். ஒருகட்டத்தில் ராணுவம் இவரை இரண்டு நாள் அடைத்து வைத்து சித்திரவதை செய்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். இவர் மீது தீவிரவாத முத்திரை குத்தி சிறையில் அடைத்தனர்.நீண்ட நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அவருக்கு பிணை கிடைத்தது. மீண்டும் சட்டவிரோத வதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு சொல்லெணக் கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்டார். மீண்டும் சிறை. ஆறு மாதங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஹாலிதா அக்தர் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்தும் ராணுவத்தினர் மீது வழக்குத் தொடர அனுமது கேட்டுக் கடிதமெழுதினார். அதற்குப் பதில் ஓர் நாள் ராணுவ ஊர்தியில் வந்தது.ராணுவத்தினரும் காவல்துறையினரும் ஹாலிதாவை ரன்பீர் பீனல் கோடு பிரிவு 212 (Ranbir Penal Code section 212) இன் படி கைது செய்தனர். அவருக்கு ஒரே துணையாக இருந்த அவரது அழுது புலம்பி நினைவிழந்தார். கோமா நிலைக்கு சென்றவருக்கு பிறகு நினைவு திரும்பவேயில்லை.
மீண்டும் ஆறு மாதச் சிறைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஹாலிதா அக்தர் தானே வாதிட்டார். காவல்துறையினரை எச்சரித்த நீதிபதி ஹாலிதாவை விடுதலை செய்தார்.ஜூலை 2006 இல் பாதுகாப்பு படையினர் லஷ்கரே தொய்பா, ஜெய்ஸே முகம்மது போன்ற அமைப்புக்களுடன் தொடர்பு இருப்பதாக கதை புனையப்பட்டது. தனது தந்தை, கணவர், தம்பிகளைத் தேடி இந்நிலைக்கு ஆளான ஹாலிதாவைத் தேட இப்போது யாருமில்லை. ஜனவரி 27, 2007 இல் ஹாலிதாவின் உடல் ஓர் பழத்தோட்டத்தில் உடலெங்கும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்து சல்லடையாக்கிய உடல் கண்டெடுக்கப்பட்டது. கோமாவில் இருந்த அவரது அம்மாவிற்கு கூட இவரது கொலை தெரியாமற்போனது.இதுதான் இன்றைய காஷ்மீரத்துக் கண்ணீர்க் கதை. இதைபோல் எண்ணற்ற, நெஞ்சை உறையவைக்கும் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
“ என்னை யாரும் கொலை செய்திட முடியாது. ஏனெனில் நான் ஏற்கனவே இறந்துவிட்டேன்.”, என்று சொல்லியபடியே தனது காணமற்போன கணவரைத் தேடி ராணுவ முகாமுக்குள் நுழையும் தஸ்லீமா பானு, காஷ்மீர் முதல்வருக்கு கடிதம் மூலம் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைச் சொல்லும் ஆசிமா, திகார் சிறையில் அடைபட்ட காஷ்மீர் இளைஞர் பர்வேஷ் அஹ்மத்தின் கடிதம் என அரச வன்முறைகளுக்கு சாட்சியாக இந்நூல் உள்ளது.இந்தச் சூழ்நிலையில் குழந்தைகள் எப்படி இருப்பார்கள்? சிறுவர்களை வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்துவதற்காக தனியார் அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் போட்டிகளை ஏற்பாடு செய்தன. இவற்றில் வண்ணந்தீட்டுதலும் உண்டு. இதில் என்கவுண்டர்கள், போர்கள், சவ ஊர்வலங்கள், அழும் பெண்கள், குண்டடி பட்டு சிதறும் உடல்கள் என்பது போன்ற சித்திரங்களே தீட்டப்பட்டன.வெளியிலிருந்து பார்க்கும் பலருக்கு காஷ்மீரின் இயற்கை எழில், அழகு போன்றவை நினைவுக்கு வரலாம். ஆனால் இக்குழந்தைகளுக்கு அத்தகைய எண்ணம், சிந்தனை இல்லை. அரச பயங்கரவாதமும் ராணுவமும் துணை ராணுவப்படைகளும் அவர்களை மனநோய்க்கு ஆட்படுத்தியுள்ளன. இந்தக் குழந்தைகளின் எதிர்காலமும் காஷ்மீரின் எதிர்காலமும் எப்படி இருக்கும்? நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.தமிழ் ஊடகங்கள் பொதுவாகக் கண்டுகொள்ளாத ஆதாரப்பூர்வமான இக்கட்டுரைகளைப் பொறுப்போடு மொழியாக்கிய நண்பர் மு. குலாம் முகம்மது மற்றும் வெளியிட்ட ‘வேர்கள்’ அமைப்பையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கஷ்மீரில் பாதி விதவைகள்
தொகுப்பும் மொழியாக்கமும்: மு.குலாம் முகம்மது
வெளியீடு: வேர்கள்
முதல்பதிப்பு: செப். 2013
மறுபதிப்பு: நவ. 2013
பக்கம்: 140
விலை: ரூ. 70
தொடர்பு முகவரி:
வேர்கள்,
52/1, மண்ணடித் தெரு,
மண்ணடி,
சென்னை – 600001.
அலைபேசி: 9444239594
8148129887
இணையதளம்: www.darulislam.in

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *