ஒலிக்காத இளவேனில் – நூல் விமர்சனம் (- கு.உமாதேவி)

olikkatha+ilavenilஇந்த மண்ணில் அதிகாரம் சார்ந்த மொழி, மதம், சாதி, எல்லை, ஆகிய இன்ன பிறவும் வலிமை இழந்த ஒடுக்கப்பட்ட கறுப்பர்களின் தலித்துகளின் தேசமிழந்தவர்களின் பெண்களின் திருநங்கைகளின் குழந்தைகளின் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. புறக்கணிக்கப்பட்ட இவற்றை குறைந்தபட்சம் தம் அடிப்படை வாழ்விற்காகவேனும் அடைந்துவிடப் போராடும் காலத்திலேயே அவர்களின் வாழ்க்கையும் முடிவடைந்து விடுகிறது. இத்தகைய போராட்டத்தினூடே – தான் பெற்ற மொழியாடலில் எழுத்தை நிலைநிறுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இயந்திரச் சூழலில் சிக்கித் தவிக்கும் வாழ்வுத் தேடலில், எல்லாம் பெற்றவர்களுக்கு அவ்வப்போது கவிதை ஒரு இளைப்பாறலைத் தரக்கூடியதாக அமைந்து விடுகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் கவிதை ஆக்கம் என்பது வெறும் சுயமன இளைப்பாறலுக்கானதாக எப்போதுமே இருந்ததில்லை. அதுவொரு அரசியல் தனத்தோடு வெளியெழுந்து உலக அளவில் மிகமுக்கிய அரசியல் பங்கெடுப்பைத் தகவமைத்து வந்துள்ளது. தனக்கான மொழி ஒன்றை வரித்து, ஏற்கெனவே சொல்லப்பட்ட மரபுசார் வாழ்விலக்கண எல்லையை மீறுகையில் இவர்களின் எழுத்து இன்னும் கூர்மையுறுகிறது.
ஈழத்தமிழர்கள் நேரடியாகக் கடந்த நூற்றாண்டில் அனுபவித்த வன்முறைகளும் வாழ்வின் அவலங்களும் அவர்களின் புலம்பெயர்வுக்கு அடிப்படைகளாகின்றன. 1980 களுக்கு முன், 1980 களில், 1990-95 களில், 2000 இல் 2009 களுக்கு பின் என்ற அளவில் நிகழ்ந்த புலம்பெயர்வுகள் ஈழத்தமிழர்களை உலகெங்கும் சிதறச் செய்தது. சிதறலில் தனக்கான இருத்தலையும் இயங்கலையும் தேடும் முயற்சியாய் ஈழப்பெண்களின் எழுத்து எழுச்சியுற்றது. இவர்கள் அனைவரையும் இலங்கைப் பெண்கள் என்ற பொதுக்கூட்டில் இணைக்கும் முயற்சியாக வெளிவந்துள்ளது ‘ஒலிக்காத இளவேனில்.’

2009 – ஆண்டில் வெளியான, ‘ஒலிக்காத இளவேனில்’, கவிதைத் தொகுப்பு புலம்பெயர்ந்த இலங்கை பெண் கவிகள் வன்முறையாலும், தனிமையாலும் பெற்ற சமகால வாழ்வைப் பதிவுச்செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுவெளியை உருவாக்கும் சக்தி வாய்ந்த எழுத்தில் தனக்கான பாடுபொருளை நுழைத்து பதாகை தூக்கும்போது பெண்ணின் அரசியல்வெளி இன்னும் வலுவடைகிறது.

ங்கே என்னுடைய இயற்கை ரசிப்பும்
இனிமையான ஒரு மாலைக் காட்சியும்,
எதிகாலத்தின்
வாழ்க்கைப் போக்கைப் பற்றிய கற்பனையும்
எழுதப்படாமற் போய்விட்டன.
(கிருஷாந்தி ரட்ணராஜா)

என்ற கவிதையூடு ஈழவாழ்வின் இயல்பைப் பிரதிபலித்துத் தொடங்கும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள எழுபத்தி ஒன்பது கவிதைகளும் ஐந்து தலைப்புகளின் கீழ் பதினெட்டு கவிஞர்களிடமிருந்து பெறப்பட்டவைகளாகும். யுத்தம் உருவாக்கி வைத்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அற்ற வாழ்க்கையை, புலம்பெயர்வு தேசத்தின் பொருளாதாரத் தேடலும் உருவாக்கி இருக்கிறது. எப்படியும் வாழலாம் என்ற

புதிய கலாச்சார தேசங்களுக்குள் நுழையும்போது,காதலுடன் சார்ந்த வாழ்வின் மீதான அன்பும் நம்பிக்கையும் காயப்படுத்தப்படுவதை,

நிச்சயமற்ற வாழ்விற்குப் பழக்கப்பட்டவர்கள்
எதற்காகவும் காத்திருப்பதை விரும்புவதில்லை
இன்றைய நிமிடத்தினை வாழ்வதுடன்
நாளைய நிமிடத்தை எதிகொள்ளவும் தயாராகிறார்கள்
குறிகளும் யோனிகளும் இன்று இப்படித்தான் எதற்காகவும்
யாருக்காவும் காத்திருப்பதில்லை அவை தமது நிமிடத்தினை
வாழ்ந்து விடவே விரும்புகின்றன
காதலனுக்காக காதலியும்
மனைவிக்காக கணவனும் என்ற
எல்லை தாண்டப்படுகின்றது
நம்பிக்கைகள் காயப்படுத்தப்படுகின்றன.
(ரேவதி)

ஆண்களால் வெல்லப்பட்ட உடம்பு
பொய்களால் கொல்லப்பட்ட மனசு
தந்திரம் மிக்கவர்கள் மத்தியில்
தனித்துவமாக மாட்டானா என்ற நம்பிக்கை….
நம்பிக்கையோடு காத்திருந்த கனவுகள் மட்டும்
எங்கோ பறந்து கொண்டிருக்கின்றன
எதையோ தேடி
(சரண்யா)

காதலும் காமமுமாய்
என் கனவுகளில் அமர்ந்து கொண்டு
கனக்கின்றன இன்று…..
காத்திருப்புப் பற்றித் தெரியாத உனக்காய்
எத்தனை வருடங்கள் தான் காத்திருக்க?
(இந்திரா)
போன்ற கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

olikkatha+ilavenil

அதிகாரங்களால் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் இச்சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர் தனக்கான இருத்தலைத் தக்க வைத்துக்கொள்வதற்கு பெரும் முயற்சியும் போராட்டமும் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இத்தொகுப்பில் காணப்படும் பெரும்பான்மையானக் கவிதைகள் தம் சுயசார் அனுபவங்களாக மட்டும் இல்லாமல் அதிகாரக் கட்டமைப்புகளுக்கு எதிரான கருத்தாக்கத்தை விதைத்துச் செல்கின்றன. அவ்வகையில் படைப்பாளிகள் தன்விடுதலைக் குறித்த தன் தேசவிடுதலைக் குறித்த கனவுகளையும் நம்பிக்கைகளையும் நுண்ணுணர்வுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.

எனக்குமென்று ஒருநாள் வரும்.
பவுர்ணமி நிலவொளியில் …..
தென்னை மரங்களின் சலசலப்பினூடு
எலுமிச்சைகளின்
இனிய மணத்தினை நுகர்ந்தபடி….
திறந்த ஓலைக் கொட்டிலுக்குள்……
சாக்குக் கட்டிலின்மீது
நீட்டி நிமிர்ந்து உறங்குவேன் நான்
நீங்கள் மட்டுமல்ல…
வேறெவருமே
என்னை ஏனென்று கேட்க முடியாதபடி

நிவேதா)
நோயில் வீழ்ந்த தேசமொன்றில்
நிர்பந்திக்கப்பட்ட வாழ்தலுக்காகவும்
……………………………………………………
……………………………….
எப்படியும் நெஞ்சு வெடித்து
என்றென்றைக்குமாக இறந்து போவேன்
யாரும் எதிர்பாரா பிரளயமொன்றிற்கு வித்திட்டபடி.
(நிவேதா)
எனக்குள் ஒரு ஜிப்சி,
எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறாள்
அவள் –
வரம்புகளை உடைத்தெறிந்து
ஒரு புறாவைப் போல பறந்திட
ஏங்கிக் கொண்டிருக்கிறாள்.
நாடற்று
நிலமற்று
சுதந்திரமில்லா இந்த வாழ்வற்றும் பறந்திடக் காத்திருக்கிறாள்.
(இந்திரா)

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் போரினால், அன்றாடம் தமிழர்கள் கைது செய்யப்படுவதும் காணாமல் போவதும் உயிர் இழந்து போவதுமான நிகழ்வுகள் எஞ்சியிருந்த ( புலம் பெயர்தலுக்கான பொருளாதாரம் வாய்ந்த ) தமிழர்களை தேசாந்திரிகளாக்கியது. அந்நிய தேசத்தில் அடையாள அட்டை தீர்மானிக்கும் சுதந்திரமானது ‘குருட்டுப் பிச்சைக்காரனுக்கு மறுக்கப்பட்ட வர்ணக் கனவாக‘ மட்டுமே இருந்துக்கொண்டிருக்கிறது.
பொதுபுத்திக்குள் திணிக்கப்பட்டிருக்கும் ஆதிக்க – அதிகார வெறியின் பிரதிநிதிகள் ஒருபோதும் இதன் கட்டை அவிழ விடுவதில்லை. ஏனெனில் அவர்களே இங்கு சாதிய – மத – தேச – மொழி – உடல் ஒடுக்குமுறைகளின் பண்பாட்டாளர்களாகவும் பயன்பாட்டாளர்களாகவும் திகழ்கிறார்கள்.
பொதுச்சமூகத்தில் பெண்ணானவள் தொடர்ந்து ஆணாதிக்க , சாதி ஆதிக்க , வர்க்க ஆதிக்கங்களின் கீழ் முடக்கப்பட்டே வருவதும் அவளைச் சுற்றியே ஒட்டுமொத்த சமூகத்தின் பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் செயல் வடிவமைப்பதும் நிதர்சனம். ஆண் / பெண் உறவுச் சிக்கலில் எழும் கேள்விகள் பெரும்பாலும் பெண்ணை நோக்கியதாகவே உள்ளன. ஆணுக்கான அயோக்கியத்தனங்களை ஆமோதித்து பெண்ணுக்குத் தேவையான அடிப்படைத் தார்மீக நியாயங்களைக்கூட அங்கீகரிக்காத இப்பொதுச் சமூகவெளி மிகக் கீழ்நிலைப்பட்டதே. இதனைப் பின்வரும் கவிதைகள் குறித்துச்செல்லக் காணலாம்.

உன்னோடு: அருகில் நான்
உனக்கான முகமன்கள் வரவேற்புகளுடன்
பெருங்கூட்டம்.
உனக்கோ,உன்னிடம் வந்தவர்களுக்கோ
(பெரிய உருவமாய் இருந்தும்) என்னைத் தெரியவில்லை.
சுழன்றோடி வரும் சிரிப்புகளும் உபசரிப்புகளும்
தடைப்பட்டு நின்று விட்டன உன்னோடு.
அருகில்: கணவனை விட்டு
வேற்று ஆணுடன் உறவு வைத்திருக்கும்
மனைவியாய் மட்டும் நான்.
தொடரும் உறவுகளில் திளைத்திருக்கும்

உன்னை அங்கீகரிக்கவும்
துணிவும் தன்னம்பிக்கையுமுள்ள
என்னை நிராகரிக்கவும்
இந்த அநியாய சமூகத்திற்கு
அங்கீகாரம் கொடுத்தது யார்?
அடிபட்ட மனசுடனும்
கேலிச் சிரிப்புடனும்
மீண்டும் உறவில் உன்னோடு.
(சரண்யா)

திணிக்கப்பட்ட காலை.
திணிக்கப்பட்ட எழுத்து.
திணிக்கப்பட்ட ரசனை.
திணிக்கப்பட்ட குறி.
(ஜெபா)

எந்த சிதையில் எரிகின்றது
என் உடல் ?
எந்த மழைக்குள் கரைந்தது
என் கவிதை ?
யாருடைய அறையில் தொங்குகிறது
என் ஓவியம் ?
யாருடைய வர்ணங்களில் இருக்கின்றன
எனது நிறங்கள் ?
எவருடைய கனவுகள் சுமக்கின்றன
என் கண்களை ?
கேட்காத செவிகளைத் தட்டித் தட்டி
என் இருதயம் – ஏன்
பாடிக்கொண்டே இருக்கிறது ?
(அனார்)
பொதுப்பண்பாட்டு உருவாக்கத்தில் பதியப்பட்டுள்ள பெண்சார் குறியீட்டின் அடையாளங்களை சிதைப்பதும் புனிதங்களைக் கட்டுடைப்பதும் மாற்றுச் சிந்தனையுள்ள விடுதலைக் குறியீட்டினை கட்டமைப்பதிலும் ஆழியாள் கைதேர்ந்தவர். இப்பணியை தனது ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று‘ என்ற கவிதையில் செய்துள்ளார். பொருளுக்காக, வாழ்வுக்காக, கல்விகாக என சுற்றத்தை – நட்பை பிரிந்தோ இழந்தோ இருப்பவர்கள் புகலிடத்தில் விரக்தியையும் வெறுமையையும் தனிமையையும் ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் சுமந்தபடி காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தனிமையில் அடையும் ஏமாற்ற மனநிலை மரணத்தினும் கொடியதாக இருப்பதை கீழ்க்காணும் கவிதைகள் மூலம் அறியலாம்.
தங்கா,
நீ எப்போது வருவாய்
தனிமையில் இருக்கும் ஒருவளின் துயரை
யார் உன்னிடம் சேர்ப்பிப்பார்
(தான்யா)
ஒற்றைக் குயிலின் அழுகையின் நீட்சியில்
எழுகிறது என் சோகம்
பொழியும் மழையின் ஒவ்வொரு துளியிலும்
வழிகிறது என் கண்ணீர்
தனிமை தனிமை தனிமை
தனிமை தலைவிரித்தாடுகிறது
சீக்கிரம் வந்துவிடு
(தமிழினி)

அம்மாவைத் தேடி அலையும் இக்கவிதையைப் போன்று ‘விலகலுக்கான நெருக்கத்தில்’ கவிதையும் நண்பனுக்கான அன்பைத் தேக்கி வைத்திருக்கிறது. காதலுக்கான அன்பு, கணவனுக்கான அன்பு, குழந்தைகளுக்கான அன்பு என உறவைத் தேடி ஏங்கும் கவிதைகள் இன்றைய இயந்திர வாழ்க்கைக்கு பலியாகி இருக்கும் எல்லோரையுமே கனக்கச்செய்கின்றன. வாழ்வதற்காக வரைந்து வைத்திருக்கும் கனவுகளையும் கற்பனைகளையும் (இயந்திரமயமாக்கல் – மொனிக்கா) சுக்குநூறாக்கினாலும், எப்படியேனும் தமது விடுதலையை மீட்டெடுக்கும் தலைமுறையை பிரசவித்துவிடும் (ஆயிரத்து நூறு யுகங்களுக்கு அப்பாலிருந்து – மைதிலி) நம்பிக்கையை நமக்கு கொடுத்துச் செல்கிறது ’ஒலிக்காத இளவேனில்’.
எந்த ஒரு சமூகம் தனது அடையாளமாக்கி வெளிப்படுத்திக் கொள்ளும் மேன்மைமிகு தத்துவத்திற்கும் வாழ்வியல்சார் நடைமுறைக்கும் கிஞ்சித்தும் பொருத்தம் இல்லாமல் இருக்கிறதோ அச்சமூகம் போலி பிற்போக்குத்தனத்தை கைக்கொண்டிருப்பதோடு மேன்மை மிகுந்த அத்தத்துவத்தையே அழித்தொழிப்பு செய்யும் அபாயமும் உள்ளது. தன் வாழ்நாள் இலக்காக ஊர்கள்தோறும் நடந்து அன்பையும் சமத்துவத்தையும் போதித்த கருணையன் புத்தர். வன்முறைக்குத் துணைபோகாத புத்தரை ஏற்றுக்கொண்டிருக்கும் சிங்களவர்கள் பவுத்தத்திற்கு எதிரான செயல்பாடுகளையே செய்து வருகின்றனர். போருக்கு எதிராக அன்பும் சகோதரத்துவமும் வேண்டும் தமிழர்களாகிய நாம் ’புத்தரை மீட்டு வருவோம்’ (விரும்பாமை – கவுசலா) . ஒரு இனத்தை அடையாளம் காட்டுவதும் உயிரோடு வைத்திருப்பதும் மொழிதான். என்றாலும் ‘வஞ்சனையை மனித விரோதத்தை பகைமையை கொண்டு ஆடுகிற மொழி அழிந்தால் என்ன?’ (உனது இனம்.அரசியல்.ஆண்.மொழி – பிரதீபா) என்று மொழியாடும் பிரதீபாவின் நியாயமான கோப வரிகள், அதிகாரம் வாய்த்த அனைத்து ஜாதி – மத – இன வெறியர்களுக்கும் பொருந்துமெனில் தமிழும் அழிய சாத்தியமுண்டு.

‘ஒலிக்காத இளவேனில்’ தந்திருக்கும் ஒவ்வொரு கவிதைகளும் ஒரு தெரிப்பை / அரசியலை, நேர்த்திப்பெற்ற அழகியலோடும் படிம – குறியீடுகளோடும் முன் வைத்துள்ளன. புலம்பெயர்ந்து வாழும் இலங்கை பெண்களின் வாழ்வியல் சூழலும் முறைமையும் எந்தெந்த மையங்களில் நிர்பந்திக்கப்பட்டுள்ளன என்பதை புரிந்து கொள்வதற்கு இத்தொகுப்பை முழுமூச்சாய் வாசித்து விடுவது அவசியமாகிறது. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய / வரலாற்று எல்லையை நீட்டிப் பரப்பும் பொறுப்பும் கடமையும் கொண்டவைகளாக, ஒடுக்கப்பட்டோரின் சிந்தனை எழுச்சியுறும் என்ற நம்பிக்கையோடு உரத்துப் பேசுகிறது ஒலிக்காத இளவேனில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *