புஷ்பராணியின் “அகாலம்”

அருண்மொழிவர்மன் பக்கங்கள்

அகாலம்

புஷ்பராணி

ஈழத்தில் மயிலிட்டி என்கிற சிறிய கிராமத்தில் 1950 ல் பிறந்த புஷ்பராணி ஈழவிதலைப் போராட்டம் ஆயுதப்  போராட்டமாக உருவெடுத்தபோது அதில் பங்கெடுத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.  தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழீழ விடுதலை இயக்கத்திலும் அதன் ஆரம்ப காலம் தொட்டு பங்கெடுத்தவர்.  ஈழப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியபோது சிறை சென்ற முதல் பெண்போராளியும் ஆவார்.  அந்த வகையில் புஷ்பராணி எழுதிய அகாலம் மிகவும் முக்கியமானது.

குறிப்பாக ஓரு பெண் சைக்கிள் ஓடுவதே அதிசயமாகப் பார்க்கப்பட்ட ஒரு காலத்தில், பெண்கள் வேலைக்குச் செல்வதோ, மேற்படிப்புக்குச் செல்வதோ கூட அரிதாகவே நிகழ்ந்த 70களின் தொடக்கத்தில் அரசியலில் முழுமையாக அர்ப்பணிப்புடன் ஈடுபடுகின்றார் புஷ்பராணி.  அதனை அவர் பதிவுசெய்கின்றபோது அது பல்வேறு விடயங்களுக்கான பதிவாக மாறுகின்றது.

  • விடுதலைப் போராட்டம் ஒன்றில் ஈடுபடும் போராளி ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்களும், அவர் பெண்ணாக மேலதிகமாக எதிர்கொள்ளும் சிக்கல்களும்
  • அவ்வாறு போராட்டத்தில் ஈடுபவும் ஒருவரின் குடும்பம் எதிர்கொள்ளும் சிக்கல்கள்
  • தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பொதுவாழ்விற்கு வருகின்ற பெண் ஒருவர் எதிர்கொள்ளுகின்ற சிக்கல்கள்
  • ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் போராட்டம் வெகெஜனமயமாக்கப்படலும், அகிம்சை ரீதியான போராட்டம் ஆயுதப் போராட்டமாக நகர்தலும் நிகழுகின்ற ஒரு கால கட்டத்தின் பதிவு

குறிப்பாக விடுதலைப் போராட்டம் என்பதே அனேகம் சாகசவாதமாகவும், ராணுவ வெற்றிகளுமாகவே பார்க்கப்பட்ட எமக்கு, மிகுந்த எளிமையாக, மிகைப்படுத்தல்கள் இன்றி “உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கின்றது” என்று பதிவுசெய்யும் புஷ்பராணி மதிப்புக்குரியவராகவும், அவரது அகாலம் ஈழப்போராட்டம் பற்றிய ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய நூல் என்று பரிந்துரைக்கப் படவேண்டியதாகவும் அமைகின்றது.

1969ல் லண்டனில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்த லண்டன் முரசு நூலுக்கு ஆக்கங்களை அனுப்புகின்றார் புஷ்பராணி.  அவர் நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், அவ்விதம் அவர் அனுப்பிய கவிதைகள் அரசியல் பேசியவையாக இருக்கவேண்டும் – ஏனென்றால் அவற்றைப் படித்துவிட்டு “விமானத்தைக் கடத்திய பாலஸ்தீனப் போராளி லைலாவின் வீரத்தை உங்களிடம் காணுகின்றேன்.  நீங்கள் எம்முடன் இணைந்து செயலாற்ற வேண்டும்” என்று தமிழ் மாணவர் பேரவைத் தலைவராக இருந்த சத்தியசீலன் கடிதம் எழுதுகின்றார்.  தமது வேலைத்திட்டத்துடன் இணைந்து செயலாற்றக்கூடியவர்களை மிக ஆரம்பத்திலேயே இனங்கண்டு தம்முடன் இணைத்து தம்மை வலுப்படுத்தும் தலைமைத்துவப் பண்பு சத்தியசீலனிடம் மிளிர்ந்ததையும் இது காட்டுகின்றது. 1973ல் கீரிமலையில் புத்த விகாரை கட்டுவதைக் கண்டித்து தமிழ்ப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்வதே ஶ்ரீமாவோ அரசின் நோக்கம் என்று கட்டுரை எழுதுகின்றார் புஷ்பராணி.  புஷ்பராணியின் குடும்பமே தமிழரசுக் கட்சி ஆதரவாளராக இருந்திருக்கவேண்டும்.  அவரது வீட்டுக் கூரையில் கட்சிக் கொடி இருந்ததையும், தேர்தல் நேரத்தில் கட்சியின் அமைப்பாளர்கள் அவர் தந்தையைப் பார்க்க வந்து போய்க்கொண்டிருந்த்தையும் பதிவுசெய்திருக்கின்றார்.  எனவே சிறுவயதில் இருந்து புஷ்பராணியும்  கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கின்றார்.  1972ல் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் கூட்டணியாக இயங்குகின்றனர்.  அவர்கள் யாழ் நீதிமன்றம் முன்னால் ஒருங்கிணைத்த உண்ணாவிரதம் ஒன்றில் புஷ்பராணிய் கலந்துகொள்ளுகின்றார்.  இவ்விதமாக புஷ்பராணியில் அரசியல் பிரவேசம் மெல்ல மெல்ல நிகழுகின்றது.

இந்த இடத்தில் தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப்பட்ட சூழல் பற்றி பின்வருமாறு பதிவுசெய்கின்றார் புஷ்பராணி.

“தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதாகச் சொன்ன தமிழர் கூட்டணியின் நாடாளுமன்ற அரசியலில் தமிழ் இளைஞர்கள்  நாளுக்கு நாள் அதிருப்தி அடைந்து கொண்டிருந்தார்கள். தமிழ்ப் பிரதேசங்களில் ஓரளவு செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரிகளோ தமிழர்களுடைய தேசிய இனப் பிரச்சனை குறித்துப் பேசவே மறுத்தார்கள்.  தமிழர்கள் தனித்துவமான ஒரு தேசிய இனம் என்பதைக் கூட அவர்கள் ஏற்க மறுத்தார்கள்…”

இதே விடயத்தையே கணேசன் ஐயர் அவர்களும் சுட்டிக் காட்டியிருந்தார்.  இதுவே அரசியல் பிரக்ஞை உடைய அன்றைய தலைமுறை இளைஞர்களின் கருத்தாக இருந்திருக்கவேண்டும்.  இதற்கான மாற்றாக இளைஞர்கள் “தமிழ் இளைஞர் பேரவை” ஆக மாறிச் செயற்படுகின்றபோது அதே தமிழர் கூட்டணியினர் அவர்களை தமது கட்டுப்பாட்டின் கீழ், தமது நிகழ்ச்சிநிரலின் கீழ் கொண்டுவர முனைகின்றனர்.  கிட்டத்தட்ட தமிழர் கூட்டணியின் இளைஞர் அமைப்பே தமிழ் இளைஞர் பேரவை போன்ற தோற்றத்தை உருவாக்க முனைகின்றனர் கூட்டணியினர்.  தமிழ் இளைஞர் பேரவையின் உடைவிற்கும் இவ்விதத்தில் கூட்டணியினரே காரணமாகின்றனர்.  பிற்பாடு இளைஞர் பேரவையில் இருந்து புஷ்பராணி உள்ளிட்ட முக்கியமான செய்ற்பாட்டாளர்கள் விலகிய பின்னர், “களைகள் நீக்கப்பட்டு விட்டன” என்று மங்கையர்க்கரசியும் தமிழர் கூட்டணியுடன் இளைஞர் பேரவையை இணைப்பது குறித்துப் பேசிய காசி. ஆனந்தன் “தமிழ் இளைஞர் பேரவையிலிருந்து சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை  எடுக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டனர்” என்றும் அறிக்கை வெளியிடுகின்றனர்.  அரசியலில் தீவிர ஈடுபாடும், அர்ப்பணிப்பும் முற்போக்கு உணர்வும் கொண்ட இளைஞர்கள் பொது வாழ்விற்கு வரும்போது அவர்களை ஆதரித்து, வழிகாட்டி, அவர்களை சுயாதீனமாக இயங்க வைக்கவேண்டிய மூத்த தலைமுறையினரான  கூட்டணியினர் செய்த மோசமான செயலாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.

அதுபோல போராளிகள் கைதுசெய்யப்படும்போதும், சித்திரவதை செய்யப்படும்போதும் கூட வர்க்கமும், சாதியும், பாலினமும் எவ்விதம் நுட்பமாகத் தாக்கம் விளைவித்தன என்றும் புஷ்பராணி கூறுகின்றார்.  நாங்கள் அடையப்போகும் தமிழீழத்தில் சாதி வேற்றுமைகள் இருக்கக்கூடாது என்று விரும்பினோமே தவிர, சாதி தமிழீழத்தில் இருக்கக் கூடாது என்று முழங்கினோமே தவிர சாதியின் தோற்றம், அதனது வரலாற்றுப் பாத்திரம், இந்து மதத்திற்கும் அதற்குமுள்ள தொடர்பு குறித்தெல்லாம் நாங்கள் எந்தத் தெளிவுமற்றே இருந்தோம்.  அமையப் போகும் தமிழீழத்தில் இறுக்கமாகச் சட்டங்களைப் போட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்ற அளவில்தான் எமது அரசியல் புரிதல் இருந்தது என்கிறார் புஷ்பராணி.  சாதி ஒழிப்புத் தொடர்பான அக்கறையுள்ளாவர்கள் கவனிக்க வேண்டிய புள்ளி இது.  குறிப்பாக, இறுக்கமாகச் சட்டங்களைப் போடுவதன் மூலம் மாத்திரமே சாதியை ஒழித்துவிடலாம் என்ற நம்பிக்கையும் தற்காலத்தில் சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றது!

ஈழத்தின் அரசியல் கள நிலைமைகள் ஒரு முழுமையான வட்டத்தின் பின்னர் கிட்டத்தட்ட அன்றைய (1970கள்) நிலைக்குத் திரும்பி இருக்கின்ற இன்றைய காலத்தில் இவற்றை நாம் கற்றுக்கொண்ட பாடங்களாக உணர்ந்து அவதானமாக இருக்கவேண்டும்.  புதிதாக அரசியல் / பொதுவாழ்வுக்கு வருபவர்களை தமது நிகழ்ச்சி நிரலின் கீழ் கொண்டுவருவதற்கான மலிவு வேலைகளில் ஈடுபடுவதும், அவர்கள் மீது தமது அடையாளங்களை சுமத்துவதும் இவை இரண்டும் இல்லாது போகின்ற போது அவர்கள் மீது “துரோகி” அடையாளங்களையோ அல்லது வேறேதும் அமைப்புகளின் நிகழ்ச்சிநிரல்களின் கீழ் இயங்குவதாக முத்திரை குத்துவதும் இன்றுவரை நடந்துகொண்டே தான் இருக்கின்றது.  இதே முறையில் அன்றைய  ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பகாலங்களில் தமது சுய லாபங்களுக்காகப் பயன்படுத்தியும், தமக்கான அரசியல் பேரம் பேசவும் உபயோகித்த கூட்டணியினர் பிற்காலங்களில் ஆயுதப் போராட்டம் முழுமையான ராணுவ வாதமாக மாறியதற்கும் முக்கிய பங்காளிகளாகின்றனர்.

அகாலம்ஆனால், ஆச்சர்யமூட்டக் கூடிய வகையில் இந்நூலின் இறுதி அத்தியாயங்களில் புஷ்பராணி ஓரளவுக்கு அன்றைய தமிழ்க் கூட்டணி சார்ந்தவர்களுக்கு ஆதரவான / அல்லது நியாயம் கற்பிக்கின்றது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது.  குறிப்பாக அகாலம் என்கிற 30வது அத்தியாயத்தில் கூட்டணித் தலைவர்கள் மீது வைக்கப்படுகின்ற எல்லா விமர்சனங்களையும் பிற்பாடு ஆயுத இயக்கங்களின் தலைவர்களுடனும், அவற்றின் செல்நெறியுடனும் ஒப்பிட்டு கூட்டணித்தலைவர்களுக்கு நியாயம் கற்பிப்பதாகவே தோன்றுகின்றது.  இன்றுவரை முற்போக்குத் தமிழ்தேசியவாதம் ஒன்றினை முன்னெடுப்பதற்கான எல்லாத் தடைகளையும் அன்றைய கூட்டணித் தலைவர்களின் பாணியிலான உணர்ச்சி அரசியலை முன்னெடுப்பவர்களே செய்கின்றார்கள் என்பதையும் இங்கே சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது.  ஆயினும், பின்னாளைய ஆயுத இயக்கங்கள் சென்றடைந்த மோசமான பாதையும் அவற்றின் விளைவுகளும் போரின் இறுதியில் நிகழ்ந்த மானுட அவலங்களும் ஏற்படுத்திய விரக்தியே கூட்டணித் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்த புஷ்பராணி போன்றவர்களைக் கூட அவர்க்களே பரவாயில்லை என்னும் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கலாம் என்றாலும், அரசியல் ரீதியில் அது சரியான நிலைப்பாடு அல்ல என்றே கருதுகின்றேன்.

அதுபோலவே வரதராஜப் பெருமாள் பற்றிய புஷ்பராணியின் மதிப்பீடும் ஆச்சரியம் ஊட்டுகின்றது.  வரதராஜப் பெருமாள் குறித்த நேர்மறையான கருத்துகளைக் கூறும் புஷ்பராணி, “வட-கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர் அவர் எதிர்கொண்ட ஆபத்துகளும் துன்பங்களும் ஏராளம்.  இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறியடதன் பின்பாக  நீண்ட அஞ்ஞாத வாசத்தையும் வரதன் சந்திக்க நேரிட்ட்து” என்று குறிப்பிடுகின்றார்.  உண்மையில் ஆரம்பகால ஈபிஆர் எல் எஃப் போராளிகளுடன் பேசுகின்றபோதும், அவர்கள் பற்றி வாசிக்கின்ற போதும் எமக்கு எழும் கேள்வியே, ஒரு காலத்தில் இத்தனை உயரிய வேலைத்திட்டங்களை வைத்திருந்த ஈபிஆர் எல் எஃப் இனர் எவ்வாறு இந்திய ராணுவ காலத்தில் இத்தனை கொடூரங்களையும் நிறைவேற்றினர் என்பதே.  இவற்றுடன் நேரடியாகச் சேர்த்தே வரதராஜப் பெருமாளின் முதலமைச்சர் பதவிக் காலமும் பார்க்கவேண்டியதாகின்றது.  வரதராஜப் பெருமாள் மீது எந்த விமர்சனமும் இன்றிக் கடந்துசெல்லும் புஷ்பராணி, வட-கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர் அவர் எதிர்கொண்ட ஆபத்துகளும் துன்பங்களும் ஏராளம் என்று கூறுவதும் “இன்றைக்கிருக்கும் தமிழ்த் தலைவர்களில் மிகச் சிறந்த வரலாற்று அறிவும் தெளிவான அரசியல் பார்வையும் கொண்டவராக நான் வரதராஜப் பெருமாளையே சொல்வேன்.  எனினும் வரதராஜப் பெருமாளின் பாத்திரம் ஒரு சிந்தனையாளருக்கு உரியது மட்டுமே.  இன்றைய அரசியல் நெளிவு சுழிவுகளில் நீச்சலடித்து ஒரு முன்னணி அரசியல்வாதியாக விளங்க அவரது இயல்பு அவரை அனுமதிக்கப்போவதில்லை” என்று நற்சாட்சிப் பத்திரம் வழங்குவதும மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அமைகின்றது.

அதுபோல வெலிகடை சிறையில் இருந்த புஷ்பராஜாவைப் பார்க்க செல்லும்போது  சிறையின் மாடியில் இருந்து இன்பம், கலாபதி, கிருபாகரன் ஆகியோர் “அக்கா உங்களை வதைத்தவர்களை நாங்கள் பழி வாங்குவோம்” என்று கூறியதைக் குறிப்பிடுகின்றார்.  பின்னர் புஷ்பராணி சிறையில் இருந்த காலங்களில் பல்வேறு சித்திரவதைகளைச் செய்த அனேகமான காவல்துறையினர் புலிகளாலும் ரெலோ இயக்கத்தாலும் கொல்லப்படுகின்றனர்.  இந்தக் கொலைகளைப் பற்றி புஷ்பராணி குறிப்பிடும் தொனிக்கும் பிற்பாடு புலிகள் செய்த ஏனைய அரசியற் கொலைகளைப் பற்றிக் கண்டித்துக் குறிப்பிடுவதற்கும் தொனியில் பெரியதோர் வேறுபாடு இருக்கின்றது.  அன்றைய காலப்பகுதிகளில் வாழ்ந்த பெரும்பாலானோரின் மனநிலை கூட அனேகம் மேற்குறித்த காவல்துறையினரின் கொலைகளை ஆதரிப்பதாகவே அமைந்திருக்கவேண்டும்.  இது போலவே அரசியல் தலைவர்களின் கொலைகள் பற்றிக் கூறும்போதும் ஆரம்ப காலங்களில் கூட்டணித் தலைவர்களை புலிகளும் டெலோவினரும் கொன்றதைக் கூறுபவர், பின்னாட்களில் இதர தமிழ் ஆயுதக் குழுக்கள் செய்த அரசியற் கொலைகளுக்கு விலக்கம் அளித்துவிடுகின்றார்.

இந்த இடத்தில் ஈழத்து அரசியல் குறித்து வெவ்வேறு தலைமுறையினருடன் உரையாடல்களை நிகழ்த்துவதில் இருக்கின்ற சிக்கல் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.  எமக்கு முந்தைய தலைமுறையினரில் இருக்கின்ற அனேகம் பேரிடம் உரையாடுகின்றபோது ஈபிஆர்எல்எஃப் இயக்கம் உயரிக மதிப்பீடுகளுடன் அவர்கள் பார்வையில் இருப்பதை அவதானித்திருக்கின்றேன்.  எமது இள வயது  ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தின் வீழ்ச்சியை பார்த்து வளர்ந்தது.  புலிகளின் எழுச்சிக் காலம் அது.  அவர்களுடன் ஒப்புநோக்க வேறு இயக்கங்களும் கூட அன்றிருக்கவில்லை.  அதே நேரம் இன்றைய மாணவர்கள், குறிப்பாக ஈழத்தில் இருப்பவர்கள் எமக்கு அடுத்த தலைமுறையினர்.   புலிகள் மக்களை விட்டு விலகி, ராணுவமாக வளர்ச்சி பெற்ற காலத்தினை / ஒரு விடுதலை இயக்கமாக புலிகள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட காலத்தைப் பார்த்து வளர்ந்தவர்கள்.  அந்த வேறுபாடு அவர்கள் பார்வையிலும் தாக்கம் செலுத்தவே செய்யும்.  ஆயினும் ஆரோக்கியமான சில இளைஞர்களை என்னால் இனங்காணக் கூடியதாக உள்ளது.    இந்தத் தலைமுறைனர் அவர்களை நோக்கி வரும் மூத்த தலைமுறையினரிடம் விழிப்பாகவும், தெளிவாகவும் இருக்கவேண்டும்.       அவர்களுக்கான பாடங்களை அவர்கள் புஷ்பராணி போன்றவர்களின் பதிவுகளில் இருந்து அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *