மகளைத் தேடும் தாய்
பூமி அனாதைப் பிணமென
புழுங்கி நாறிக்கொண்டிருந்த
பின் மாலையில்
தன் மகளைக் காணவில்லையென
ஒருத்தி காவல்நிலையம் வருகிறாள்
விரைத்த மிருகக் குறிகளென
சிவந்த கண்களுடன்
எதிர்கொள்ளும் காவலர்கள்
அவள் நம்பிக்கையின்
சிறுபொறி மீது
காறி உமிழ்கின்றனர்
உடைந்த கண்ணாடித் துண்டுகளாய்
தொண்டையைக் கிழித்து வெளியேறும்
வார்த்தைகளை ஒட்டி
வரைய முயற்சிக்கிறாள்
தன் செல்ல மகளின் சித்திரத்தை
அரசியல்வாதிகள்
திரையுலகவாசிகள்
கிரிக்கெட் நட்சத்திரங்கள்
செல்வந்தர்கள் வீட்டுச்
செல்லப் பிராணிகள்
எவற்றின் சாயலுடனும்
ஒத்துப்போகாத அடையாளத்தால்
நேரத்தை வீணடிக்கும் அவளை
புடைத்து நீண்ட தடியால் விரட்டித் துரத்தினர்
சந்தைக்கு அனுப்ப
குவிக்கப்படும் இறைச்சிப்பொதிகள்
தரம் பிரித்து
இலச்சினையிடப்படுகிறது
அயிட்டம் சரக்கு சைடிஸ்
பணிப்பெண் பேபிசிட்டர்
ஐஸ்கிரீம் சாக்லெட்
குல்பி டெஸர்ட்
காக்டெயில் பூங்கொத்து
இடத்துக்கேற்ற விலை
விலைக்கேற்ற பெயர்
இரவுநேரத் தொடர்வண்டிப் பயணங்கள்
விருந்தினர் மாளிகை ஓய்வுகள்
பூங்கொத்துகளால் கௌரவித்துக்கொள்ளும்
அமைச்சர்கள் அதிகாரிகள்
வெப்பம் தேடி வந்த
அந்திய தேசத்தினன்
தனது முகநூலில்
சொர்க்கத்தைக் கண்டதாக
தகவல் பதிக்கிறான்
விலைமகள் விடுதியில் சரக்குடன்
கொண்டாடியதைப் பற்றிய கவிதைகளுடன்
தனது அடுத்த தொகுதி அறிவிப்பை
தருகிறான் கவிஞன்
மகள்களைத் தின்னும் தேசத்தில்
தேடும் தாயின் தடங்களை பற்றி வளர்கிறது
பெரும் தீ.
தீராநதியில் வெளிவந்த கவிதை
வலி……………