– ஆதிலட்சுமி
காவடிமேளமும் கர்ப்பூர
வாசனையும் அடங்கி
வேப்பிலைகள் காய்ந்தபின்
விரதச்சாப்பாடு உண்டகளைப்பில்
கையெறிந்து கால்பரப்பி
ஊர் உறங்கும் பொழுதினிலே
மூலைக் குடிசையினுள் இருந்தபடி
மூச்சிரைக்க சாபமிடுகிறாள் அவள்.
மூடிக்கிடக்கும் வானம் மெல்ல இறங்கி
முகத்தில் அறைந்து அழுகிறது.
நாறிக்கிடக்கும் மனங்களின்
நாற்றம் தாங்கமுடியாமல்
தடுமாறுகிறது அவள்மூச்சு.
குளத்தைக் கலக்கிவிட்டு தன்
குஞ்சுகளைப் பிடித்து விருந்தாக்கும்
;கூட்டத்தின் நிலை கண்டு
விம்முகிறது அவள் நெஞ்சம்.
நேற்று நிலவு குளித்த மண்ணில்
காற்றுக்கறுப்பு வந்து
கண்ணுக்குள் குத்துதையோ
வேருக்கு நீராக வாழ்ந்தோம் இப்போ
வேடிக்கைப் பொருளானோம் என
முகட்டைப்பார்த்து தலையில் அடித்தவள்
நிலம் வறுகி மண்ணெடுத்து,
இப்படிப் பாடுகின்றாள்.
உப்புக்கடலோரம் உள்ள என் தாயாரே
உன்னிருப்பு உண்மையென்றால்
பிள்ளைகளைப் பிடித்துண்ணும்
இந்தப் பேய்களின் ஈரற்குலை கருகட்டும்..
இருதயத்தின் வாசல்கள் இறுக்கி
வெடிக்கட்டும் இரத்த குழாய்கள்..
விரலால் வழித்தெடுத்த கண்ணீரை
காற்றில் வீசுகிறாள் அவள்.