சை.கிங்ஸ்லி கோமஸ்
மலையக இலக்கிய பரம்பலில் விரல் விட்டு என்னக் கூடிய அண்மை காலத்து சஞ்சிகை இலக்கியங்களில் இனம் காணப்பட வேண்டியதுவும், பலராலும் திட்டமிட்டு இரட்டிப்பிற்கு உள்ளாக்கப்படுவதுமான சஞ்சிகைகளில் நந்தலாலா சஞ்சிகையும் ஒன்றாகும். ஆரம்ப காலங்களில் தீர்த்தக்கரை என்னும் பெயரில் வெளிவந்த மலையகத்தின் மாற்று இலக்கிய சஞ்சிகையும், பாட்டாளிவர்க்க சிந்தனையுடன் மக்கள் இலக்கியங்களுக்காக இதழ் விரித்த தீர்த்தக்கரை சஞ்சிகை, என்றும் நினைவில் நிற்கும் சஞ்சிகையாகும். அதனைத்தொடர்ந்து அதே பாசரையின் இலக்கிய உள்ளங்களின் ஒருங்கினைப்பின் நந்தலாலா இலக்கிய வட்டமும,; அதன் வெளியீடாக நந்தலாலா சஞ்சிகையும் வெளிவரத்துவங்கியது. மலையக இலக்கிய பாரம்பரியத்தின் மாக்ஸிய கருத்தியல்களை அடிநாதமாக கொண்டு செயற்பட்டு பெரும் நந்தலாலா இலக்கிய வட்டம் சஞ்சிகை, ஓவியகண்காட்சிகள், நூல் வெளியீடுகள் என்பனவற்றுடன் தனது அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதற்காய் நிர்மானிக்கப்பட்டு மலையகத்தில் ஆசிரியர்களின் இடர்களுக்கு தீர்வு காணும் முகமாக மலையக ஆசிரியர் ஒன்றியமும் தீர்மானிக்கப்பட்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
நந்தலாலா இலக்கிய பாசரை வளர்த்து எடுத்த மலையகத்தின் அடையாளம் காணப்பட்ட மாற்று இலக்கியவாதிகளான ஜேம்ஸ் விக்டர், கோணேஸ்வரர், ஓவியர் சிவப்பிரகாசம், மகேந்திரன், போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சட்டத்தரணிகளான சாந்திகுமார், ஜோதிகுமார், விரிவுரையாளர் வி.டி செல்வராஜ், ஆசிரியர் சிவப்பிரகாசம் ஆகியோரின் வழிகாட்டலில் இயங்கி வரும் நந்தலாலா கலை இலக்கிய அமைப்பு நீண்ட அமைதிக்கு பின் நந்தலாலா சஞ்சிகைக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளமை மகிழ்வுக்குரிய விடயமாகும். மருதநிலமும் அதன் அமைதியையும் எடுத்தியம்பும் அட்டைப்படமும் மருத நிலம் ஒன்றின் வணப்பு மிக்க ஓவியத்துடனான சாருமதியின் கவிதைத் தொகுதியான அறியப்படாத மூங்கில் சோலை நூலின் முகப்பு படத்துடனான பின் அட்டையையும் உலகின் சூழல் இயல் கருத்தியல்களையும் எதிர்காலம் உணவுக்கான போரையும் நீருக்கான போரையும் எதிர்நோக்க தயாராக வேண்டும் என்னும் கருத்தியல்களைக் குறிகாட்டுவதாய் அமைந்துள்ளது.
ஐந்து கவிதைகளையும், ஒரு சிறுகதையினையும் நாடகம் தொடர்பான பகிர்வும், நீர்வைப்பொன்னையன் பற்றிய நூல் பகிர்வும், சாருமதியின் கவிதைகள் தொடர்பான பகிர்வும் அதில் தெரிவு செய்யப்பட்ட கவிதைகளும் மூட்டப்பட்ட தீயாக காணப்படுகின்றது. நந்தலாலாவின் தீ – 5 தீண்டல் 10 – 11 இல் மேலே சுட்டிக்காட்டிய எழுத்தாக்கங்கள் மலையக இலக்கியத்தின் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து நோக்கப்பட வேண்டிய இலக்கியங்களாகும். நந்தலாலா தீ -03 தீண்டல் 6,7 இதழில் இன்குலாப் கவிதைகள் அவைப்பிறப்பெடுத்தப் பின்னணி என்னும் கட்டுரை கவிஞர் இன்குலாப் கவிதைகள் பற்றிய மிக உயர்ந்த பார்வையினை வாசகனுக்கு வழங்கியப்பெறுமை நந்தலாலாவை மாத்திரமே சாரும் . நந்தலாலா கடந்து வந்த பாதையும் அதன் காத்திரமான படைப்புக்களும் மறக்க முடியாதவை எவராலும் இரட்டிப்பு செய்ய முடியாதவை. ஏனெனில் நச்சு இலக்கியங்கள் புதர்களாய் வளர்ந்திருக்கம் காடுகளில் நல்ல இலக்கியங்கள் மக்கள் இலக்கியங்களாக பெரு விருட்சமாய் உயர உயர வளர வேண்டும்.
நந்தலாலா தீ -03 இல் ஆசிரியர் தலையங்கமான தீக்குள் விரலை வைத்தால் என்னும் பகுதியையம் தீ -05 இன் ஆசிரியர் தலையங்கத்துக்கம் இடையேயான வித்தியாசம் சற்று நிதானித்து நோக்கத்தக்கது. சிறந்த வாசகன் ஒருவன் சஞ்சிகையோ நூலையோ வாசிப்பதற்கு முன் அதன் ஆசிரியர் தலையங்கத்தினை வாசித்ததின் பின்பே நூலையோ சஞ்சிகையோ வாசிப்பதா இல்லையா என்று தீர்மானித்ததினை எடுப்பான் விமர்சன நோக்கிலும் கடந்த காலங்களின் ஆசிரியர் தலையங்களையும் நோக்குகையில் அதன் தரம் தொடர்பாக விமர்சனத்தினை உள்வாங்க வேண்டியதும் சுய விமர்சனம் செய்துக் கொள்ள வேண்டியதுவும் முற்போக்காகும்.
அண்மைக்கால இலக்கிய போக்குகம் அதன் உள்நோக்கங்களையும் எதிர்க்க வேண்டியதுவும் காலத்தின் தேவையாகும். என்ற போதும் மக்களின் இறுப்பும் நசிந்து வரும் மக்கள் வாழ்வியலும் அச்சுறுத்தும் நுகர்வு கலாசாரமும், நம்பிக்கை இலக்க செய்யும் சூழலியல் சவால்களும், உயிர் குடிக்க காத்திருக்கும் அணு ஆயுத யுத்தங்களும் கோரமான யுத்த ஆயுதங்களும், இலங்கையின் சிறுபான்மை மக்களுக்கான எதிர்காலம் அடித்து பரிக்கப்படும் புதுவிதமான யுத்த நுனுக்கங்களும் தோட்ட நிலங்கள் பெரும் பான்மையின் சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு பகிர்ந்து கொடுத்து அவர்களுக்கு வங்கிகளில் விஸேடமாக வழங்கப்படும் வங்கிக்கடன்களும் இலவச கல்வியை தனியார் பல்கலைக்கழகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ணு புள்ளி முதல் கொண்டு புலமைப்பரிசில் பரீட்சை வரை அழைக்களிக்கப்படும் இலங்கையின் இலவச கல்வியும் பின்னிருத்தி தனி மனித விமர்சனத்திற்காய் 26 பக்கங்கள் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
காணும் இடங்களில் தங்கள் காட்சிகள் உயர்ந்தவை என்று கூறும் நிலையை ஓடுகாலி சித்தாந்தம் என்பார்கள், இதில் காணும் இடத்தில் தான் காணும் ஒடுக்குதலுக்கு எதிரான செயற்பாடு முற்போக்காகும். எங்கெல்லாம் ஒடுக்கப் படுதலுக்கு எதிரான போராட்டம் நடைபெறுகின்றதோ ? அது எனது தாய் நாடு என்று இளைய புரட்சியாளன் சேகுவேரோ கூறியதற்கமைய ஒடுக்குதலும் அவை தொடர்பான தேடலும் சரியான முடிவுகளை காண காரணிகளாக அமையும். அண்மைக்கால பின் நவீனத்துவமும் அதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியிலும் சிந்தனைகளிலும் தாக்கத்தினை விலைவித்து வரும் தீண்டாமை சிந்தனைகளும் இலங்கையின் இலக்கிய செயற்பாடுகளில் தலை நீட்டுவது யுத்தத்தின் பின்னான இலங்கையில் காணக் கூடியதாய் உள்ளது. இலங்கையின் கோர யுத்தத்தின் சூத்திரதார நாடுகளில் பெரும் பங்கினை கொண்டிருந்த இந்திய நாடு அதன் கபட நாடகங்களின் ஒரு அங்கமே இலங்கைக்குள் சாதிய ஒடுக்கமுறையினை மிகைப்படுத்தி முற்போக்காளர்களி;ன் என்னங்களை கவர்வதற்கான செயற்பாடுகளாகும். இவற்றின் பால் ஈர்க்கப்பட்டவர்கள் தங்களின் இலக்கிய போக்கினை மாற்றியமைத்துக் கொண்டு பயணிக்க துணிவது கண்ணதாசனின் கறுப்பு சட்டைக்கும் காவி உடைக்குமான தொடர்பிற்கு ஒப்பானது இந்த நிலமையில் இருந்து இலங்கையின் இலக்கிய போக்கினை அவதானித்தல் அறிவு சார் தேவையாகும். இந்தத சிந்தனைகளை மனதில் இருத்தி நந்தலாலாசஞ்சிகையின் முதன்மை கட்டுரையினை நோக்குதல் சிறப்பானதாகும்.
கைலைநாதன் எழுதியுள்ள தினக்குரலில் பிரசுரமான திரு. மதிவானனின் “ ஆசிரியன்” குறிப்பு தொடர்பிலான ஓர் எதிர்வினை என்னம் கட்டுரையை கைலைநாதன் மிகுந்த சிரமப்பட்டு அதி உயர் தேடலினூடாக வெளிக்கொணர்ந்துள்ளமை பாராட்டப் படவேண்டிய விடயமாகும். கைலை நாதன் தனது கடந்த கால இலக்கியப் படைப்புக்களில் முனடனெடுத்த தற்துணிவு இந்தக்கட்டுரையிலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. விமர்சகன் ஒருவன் சித்தாந்தங்களை உருவாக்கவும் மாற்றி அமைக்கவும் எடுக்கும் முயற்சிகள் தனிமனித விமர்சனங்களுக்குள் புதையுண்டு காணாமல் போகும் நிலைமையினை மிக நாசுக்காக கைலைநாதன் எடுத்தியம்பி இருப்பது மாத்திரம் அன்றி தனது விமர்சனத்தினை மிகவும் நாகரீகமாகவும் கோட்பாடு அடிப்படையிலும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இணையத்தளத்தில் கட்டுரைகளையும், பின்னூட்டங்களையும் அவதானிக்கும் போது பின்னூட்டங்களின் அநாகரீக வார்த்தை பிரயோகங்கள் மலையகத்தவர்கள் தொடர்பாக அநேகமானவர்கள் கொண்டிருக்க கூடிய தரம் குறைவான என்னத்தினை வழுப்படுத்துவதாய் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே கைலை நாதனின் மொழி நடையும் விடயங்களை எடுத்தியம்பும் பாங்கும் மிக உயர்ந்த நாகரீகத்தினை எடுத்து காட்டுகின்றது.
கைலை நாதனின் எதிர்வினை ஆய்வார்களின் தேடலுக்கு பல சான்றுகளை வழங்கியிருப்பதுடன் தன்னைத் தானே முதன்மைப்படுத்திக்காட்ட நினைக்கும் ஆய்வாளர்களுக்கு சான்றாதாரங்களை சுட்டிக்காட்ட அஞ்சும் மேதாவித்தன எழுத்தாளர்களுக்கும் தங்களின் எழுத்துக்களை மறு பரிசீலனை செய்யவும் சுயவிமர்சனத்திற்குட்படுத்தவும் தூண்டும் வகையில் படைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ஜீலை 2012 நந்நலாலாவும் தீண்டல் 10-11, தீண்டல் 6,7 நந்தலாலாவையும் ஒப்பிட்டு பார்க்கும் இடத்து தீண்டல் 6,7 இன் முதலாவதும் பிரதானமானதுமான அமெரிக்காவின் அதிபயங்கர ஏவுகனைத்திட்டம் என்னம் தலைப்பும் “ ஆசிரியன்” குறிப்பு தொடர்பிலான எதிர்வினையும் தொடர்பாக நோக்கும் இடத்து எது பிரதானமானது என்னம் விமர்சனத்தினை வாசகர்களின் விமர்சனத்திற்காய் வைத்து ராமைய்யா முருக வேலின் திரட்சி என்பது என்னம் சிறு கதையின் மென்மையும் இதயத்தின் அடியில் பதிந்து செல்லும் வடுக்களும் எத்தனைக்காலம் தான் ஏமாற்றவார்கள் என்னும் மலையக தொழிலாளியின் உரிமைக்கான குறிப்பம் ஜேம்ஸ்விக்டரின் எம் குழந்தை பருவத்து – இன்பமெல்லாம் இணைந்த இவ் லயங்களின் திண்ணை கூடவே அதோ தெரியும் எம் மிளாரு சிம்மாசனம் என்னும் மண்வாசனையுடனான கவிதைகளையும் எதிர்பார்த்து இன்னும் பல உலக நட்புக்களையும் எதிர்பார்த்து விரிக்கப்பட்ட தீண்டல் 10-11 எம்மை வேறு பாதையில் நகர்த்தியது வாசக நோக்கில் அல்ல வாசகர்களை நேசிப்பவனின் நோக்கில் சுட்டிக்காட்ட வேண்டியது மக்களுக்காய் எழுதநினைப்பவர்களின் கடமையாகும்.
மொத்தத்தில் குறிப்பிட்ட சில விடயங்களை மாத்திரம் தாங்கி வந்தாலும் காலத்திற்கு தேவையானதும் சிறந்த வாசகர்ளின் என்னத்தில் பதியப்பட வேண்டியதுமான தகவல்களை தாங்கி வந்திருக்கும் நந்தலாலா எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டியதுடன் எதிர் வரும் தீண்டல்கள் இன்னம் காத்திரமாக வெளிவர வாழ்த்ததல் சிறப்பாகும்.