–– தாரா கணேசன் (இந்தியா)
அறுந்துபோன
விநோத கனவுப்பாடல் போலிருந்த
இரவின் குரல்
பறவையின் சிறகசைப்பென
மீண்டுமொரு முறை கிசுகிசுத்தது
நேற்றைய கனவின் புதிரை
அல்லிகள் இதழ் அவிழ்க்கும்
நுண்ணொலி மிகுந்த இரவின்
பரந்த நெடு முதுகில்
உதிரம் பெருக உலவும்
அவளோ மொழியின் ஆவி
கூழாங்கற்கள் நிரம்பி
நதிகள் சலசலக்கும் வனாந்திரமெங்கும்
களவு போன வார்த்தைகளைத் தேடியலைந்தவள்
களைத்தொரு விழுதில் தொங்கிய
பின்ஜாமப் பொழுதில்
இருள் பிளந்தது
சொப்பனங்களின் பூமிக்குள்ளிருந்து
ரத்தினங்கள் உருள
சொற்களின் கனாப் பிரளயம் எழும்பி
ஆகாயம் சுருட்டி
பெருவெளி நிறைத்த வேளை
நகரத் தொடங்கியது
ஒற்றை ஆலிலையில்
அடுத்த யுகாந்திரத்திற்கான
அவளின் ஆதிகவிதை