Thanks -http://tamil.thehindu.com/society/women/
இன்றைய நாகரிக உலகிலும் பெண் உறுப்புச் சிதைப்பு என்ற கொடூரம் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் பெருமளவில் அரங்கேறி வருகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மிக மோசமான வன்முறை இது. உலகம் முழுவதும் 15 கோடிப் பெண்கள் இந்த வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆண்டுதோறும் 30 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். பெண் உறுப்புச் சிதைப்பை எதிர்த்துப் போராடி வருகிறார் வாரிஸ் டைரி. உலகின் சூப்பர் மாடலாகவும் நடிகையாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றியவர். ‘டெசர்ட் ஃப்ளவர் ஃபவுண்டேஷன்’ மூலம் உலகின் பல நாடுகளிலும் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறார்.
வாரிஸ் டைரி, சோமாலியாவில் ஒரு கிராமத்தில் பிறந்தார். வறுமை தாண்டவமாடும் அந்த நாட்டில் மாடு மேய்ப்பது, தண்ணீர் கொண்டு வருவது, வீட்டு வேலைகளைச் செய்வதுதான் பெண் குழந்தைகளின் பணி. மற்ற ஆப்பிரிக்கப் பெண் குழந்தைகளைப் போலவே ஐந்து வயதில் வாரிஸும் அந்தக் கொடூரத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. அம்மாவிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார். கடவுளின் விருப்பம் இதுதான் என்றார் அம்மா. ‘கடவுளுக்கு என்னைப் பிடிக்க வேண்டாம். இப்படிப்பட்ட கடவுளை எனக்கும் பிடிக்கவில்லை’ என்ற வாரிஸின் பேச்சு அம்மாவுக்குக் கலக்கத்தை உருவாக்கியது.
மறுநாள் அதிகாலை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார் வாரிஸ். பழைய பிளேடால் அவரது உறுப்பு சிதைக்கப்பட்டது. உயிரே போனதுபோல அப்படி ஒரு வலி. ரத்தம் பெருகி ஓடியது. முட்களால் தையல் போட்டுவிட்டுச் சென்றார் மருத்துவச்சி. பல நாட்கள் வலியால் துடித்த வாரிஸ், கொஞ்சம் கொஞ்சமாகத் தேறினார். 13 வயதில் அடுத்த கொடூரம் அவருக்குக் காத்திருந்தது. 60 வயதுக்கு மேற்பட்ட ஓர் ஆணைத் திருமணம் செய்து வைக்க விரும்பினார் வாரிஸின் அப்பா. வாரிஸால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அம்மாவிடம் அழுது புலம்பினார். வீட்டைவிட்டு ஓடி, எங்காவது பிழைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டார் அம்மா.
வீட்டில் இருந்து விடுதலை
ஒருநாள் அதிகாலை. பணம், துணி, உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல். வெற்றுக் கால்களுடன் ஓட ஆரம்பித்தார் வாரிஸ். எங்கிருந்துதான் அவ்வளவு தைரியமும் தெம்பும் வந்ததென்று தெரியவில்லை. இரவு, பகலாகப் பாலைவனத்தில் ஓடிக்கொண்டே இருந்தார். ஒருநாள் தூங்கி விழித்தபோது, அருகில் ஒரு சிங்கம் அமர்ந்திருந்தது. தன்னுடைய அத்தனை முயற்சிகளும் இந்தச் சிங்கத்துக்கு இரையாவதில் முடியப் போகிறது என்று எண்ணி கண்களை மூடிக்கொண்டார் வாரிஸ். எலும்பும் தோலுமாக இருந்த வாரிஸை உற்றுப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டது சிங்கம். நகரை நெருங்கும் நேரத்தில் ஒரு டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்டார் வாரிஸ். விலங்குகளைவிட மனிதர்கள் ஆபத்தானவர்களாகத் தெரிந்தார்கள்.
300 மைல்களைக் கடந்து தன் சகோதரி வீட்டுக்கு வந்து சேர்ந்தார் வாரிஸ். அங்கு மிக மோசமாக நடத்தப்பட்டார். லண்டனில் உள்ள உறவினருக்கு வீட்டு வேலை செய்வதற்காக ஆட்கள் தேடிக்கொண்டிருந்தபோது, தானே வருவதாகச் சொன்னார் வாரிஸ். அங்கு சில ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் உறவினர் மீண்டும் சோமாலியாவுக்கே சென்றுவிட்டார். வாரிஸ் பாஸ்போர்ட் இல்லை என்று கூறி அங்கேயே தங்கிவிட்டார். மெக்டொனால்ட் உணவகத்தில் வேலை செய்துகொண்டு, ஆங்கிலம் கற்றுக்கொண்டார். அப்போது டெரென்ஸ் டொனொவன் என்ற புகழ்பெற்ற புகைப்படக்காரரிடமிருந்து அழைப்பு வந்தது. வருமானம் இல்லாமல் லண்டனில் வாழ முடியாது. தன் அம்மாவுக்கும் பணம் அனுப்ப வேண்டும் என்ற காரணங்களால் அழைப்பை ஏற்றுக்கொண்டார் வாரிஸ். 1987-ம் ஆண்டு புகழ்பெற்ற பைரலி காலண்டரில் அவரது புகைப்படம் வெளியானது. அதிலிருந்து வாரிஸின் மாடலிங் பயணம் ஆரம்பித்தது. லீவைஸ், ரெவ்லான், சானல் போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் வாரிஸ் வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தன. விரைவில் உலகின் சூப்பர் மாடலாக மாறினார். புகழ்பெற்ற ஃபேஷன் பத்திரிகைகளை அலங்கரித்தார். ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்திலும் நடித்தார்.
சிதைக்கப்படும் பெண் குழந்தைகள்
கனவிலும் எதிர்பார்க்காத வசதியான லண்டன் வாழ்க்கை, உலகப் புகழ் எல்லாம் கிடைத்தாலும் வாரிஸால் பெண் உறுப்புச் சிதைப்பை மறக்க முடியவில்லை. ஐந்து வயதில் ஏற்பட்ட கொடூரம் ஒவ்வோர் இரவும் அவரது தூக்கத்தைக் கலைத்தது. புகைப்படங்களில் அவர் புன்னகை செய்தாலும் அதற்குப் பின்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாத வலி நிறைந்திருந்தது.
‘ஐந்து வயதில் நிகழ்த்தப்பட்ட அந்த வன்முறையின் பாதிப்பு உயிர் உள்ள வரை போகாது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் உயிர் போய்விடும். மாதவிடாய் நேரத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உறுப்புச் சிதைக்கப்பட்ட நான்கு குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் நோய்த் தொற்றால் மரணத்தைச் சந்தித்துவிடுகின்றன. என் சகோதரி கூட மரணம் அடைந்துவிட்டாள். கன்னித் தன்மையைப் பாதுகாப்பதற்காக மதத்தின் பெயரால் இந்த வன்முறை நிகழ்த்தப்படுகிறது. திருமணத்தின்போதுதான் தையலை வெட்டிவிடுவார்கள். குடும்பம் நடத்துவதும் குழந்தை பிறப்பும் கஷ்டம்.
தாயும் குழந்தையும் இறந்துவிடும் அபாயம் அதிகம். ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் வசிப்பவர்கள் மட்டுமில்லை. அங்கிருந்து வந்து ஐரோப்பாவில் வசிப்பவர்கள்கூட எவ்வளவு படித்திருந்தாலும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு இதைச் செய்யாமல் விடுவதில்லை. மதம் என்று வந்துவிட்டால் அங்கே கேள்விக்கே இடமளிப்பதில்லை’ என்கிறார் வாரிஸ்.
1999-ம் ஆண்டு முதல் முறையாகத் தன் வாழ்க்கையையும் வலியையும் வெளியே சொன்னார் வாரிஸ். அதற்காக வாரிஸ் ஃபவுண்டேஷன் ஒன்றையும் ஆரம்பித்தார். பின்னர் அது ‘டெசர்ட் ஃபவுண்டேஷன்’ ஆனது. இந்தப் பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை வாரிஸுக்குச் சிறப்பு நல்லெண்ணத் தூதுவர் பொறுப்பை அளித்தது. ஐந்து ஆண்டுகள் அந்தப் பொறுப்பைத் திறம்படச் செய்தார் வாரிஸ்.
மாற்றம் சாத்தியமே
சூடான், எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, பெர்லின், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து போன்ற ஏராளமான நாடுகளில் வாரிஸின் ஃபவுண்டேஷன் இயங்கி வருகிறது. இவற்றின் மூலம் பெண் உறுப்புச் சிதைப்பைத் தடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களுக்குக் கல்வி அளிக்கப்படுகிறது.
தன்னுடைய வாழ்க்கையைப் ‘பாலைவனப் பூ’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார் வாரிஸ். 1 கோடியே 10 லட்சம் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்தது. பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்து உலகம் முழுவதும் பரவலான கவனத்தை ஈர்த்தது.
ஆண்-பெண் சமத்துவம், பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண் ஆரோக்கியம், மனித உரிமைகள் போன்றவற்றுக்காகப் போராடும் வாரிஸ் டைரி, நான்கு குழந்தைகளுடன் போலந்தில் வசித்து வருகிறார்.
‘என் வாழ்நாளில் ஒரு குழந்தைகூடப் பெண் உறுப்புச் சிதைப்பு என்ற வன்முறைக்கு இலக்காகவில்லை என்ற நிலையை எட்ட வேண்டும் என்பதே என் லட்சியம். ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் அரசாங்கங்களின் உதவி போதுமானதாக இல்லை. காலம் காலமாகக் கடைப்பிடித்துவரும் மத நம்பிக்கையைத் தகர்த்தெறிவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குப் பெண்கள் காரணமல்ல. அதனால் ஆண்களிடம்தான் புரிதலை ஏற்படுத்த வேண்டும். இரண்டு ஆண் குழந்தைகளின் தாயான நான், என் மகன்களிடம் தெளிவை உண்டாக்கிவிட்டேன். நீங்களும் அதைச் செய்தால் போதும். தொடர்ந்து போராடுவோம். பெண் குழந்தைகளுக்கான வன்முறைகளற்ற சமூகத்தை உருவாக்குவோம்’ என்கிறார் வாரிஸ் டைரி.