-ஆழியாள்-
எல்லா விதைகளின் பின்னாலும்
ஒரு மரமிருக்கிறது
கறுப்புத் தோலில் சுண்டித் தெறிக்கும்
அவனது இளமையின் வனப்புக்குப் பின்னால்
கோடுகள் விழுந்த அடிவயிற்றில்
மெல்லிய சுருக்கங்கள் கொண்ட
ஓர் தாய் நினைவுக்கு வருகிறாள்.
நந்திக்கடலின் பின்னால்
அணுவாயுத வல்லரசுகளின்
சதுரங்கப்பலகை அலைகளில்
ஆடிக் கொண்டு கிடக்கிறது.
ஒன்றன் பின் ஒன்றாய் நிகழ்த்திய
பெரும் துரோகங்களின் பின்
சிகரெட்டைப் பிடித்தபடி – ஆசுவாசமாய்த்
தன் தலை கோதி நிற்கிறான்
கடுகளவும் கருணையற்றவன்.
மனசாட்சியை
மீண்டும் மீண்டும் நள்ளிரவில் எழுப்பும்
கதவின் பின்னால்
[i]நோபேட்டினதும், [ii]ராஜினியினதும் கைகள்
இன்னமும் தட்டிச் சோர்ந்து போய்விடவில்லை.
துக்கமே தன் முகச்சாயலாய்ப் படிந்த
ஆதிவாசிக் கிழவியின் கண்களின்
பின்னால் இருந்து
ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது
பெருந்தன்மை எனும் அணையா ஒளிச்சுடர்.
16/02/2014
[i] ‘புதியதோர் உலகம்’ நாவலை எழுதிய கோவிந்தன் எனும் நோபேட்.
[ii] ‘முறிந்த பனை’ ஆசிரியர்களுள் ஒருவரான ராஜினி திராணகம.