சமூகப்பணியிலும் அரசியலிலும் ஈடுபடுபவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நேர்மையுடனும் அறத்துடனும் அமைத்துக்கொள்ள வேண்டும். தனிமனிதர்களுக்கு உள்ள சுதந்திரம் அனைத்தையும் இவர்கள் எடுத்துக் கொள்ளவதுகூட முடியாது, ஏனெனில் இவர்கள் தனிமனிதர்கள் அல்ல ஒரு அரசியல் மற்றும் கொள்கையின் பிரதிநிதிகள். இவர்கள் சமூகத்தின் முன்னோடிகளாகவும் முன்னுதாரணங்களாகவும் போற்றப்படுகிறவர்கள். இவர்களுக்கு கிடைக்கும் மரியாதை, வசதிகள் அனைத்தும் இவர்களின் அரசியல் பணிக்காக அளிக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட சமூக மதிப்பைப் பெற்றுக் கொண்டு சமூகநீதியை எழுத்திலும் மேடையிலும் மட்டும் முழங்குவதும் அவற்றை தன் வாழ்க்கையில் கடைபிடிக்காமல் திமிர்த்தனமான நடந்து கொள்வதும் சமூகப் பொறுப்பற்ற ஏமாற்று வேலை.
லட்சியவாதி, போராளி, புரட்சியாளன், கலைஞன் என்ற பெயர்களில் இளமையில் தனது உடற்தேவைக்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக்கொள்வதும் கொஞ்சம் பிரபலமாகி ஊடக வெளிச்சம் கிடைத்தபின் லட்சியத்துக்கும் ஆளுமைக்கும் தகுதியற்றவளென்று அப்பெண்ணையையும் தனது குழந்தையையும் தவிக்கவிட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் வாழவேன் என்று சொல்வதும் மிக இழிவான தந்திரம். தனக்குக் கிடைத்த மதிப்பு, ஊடக அந்தஸ்து இவற்றைப் பயன்படுத்தி பாதுகாப்பற்ற சில பெண்களை ஏமாற்றித் திரிய இப்படிப்பட்டவர்கள் முயல்கிறார்கள் என்பதுதான் இதில் உள்ள கொடுமையான எதார்த்தம்.
பொதுமனிதர் என்கிற பிம்பத்தைப் பயன்படுத்தி ஆணாதிக்க ஆணவத்தை நிறைவேற்றிக் கொள்ளும் இந்த வகையான ஆண்கள் எதனைச் சொல்லியும் தங்கள் குற்றத்தை நியாயப்படுத்த முடியாது. பெருமுதலாளிகளும், ஊடக முதலாளிகளும் பல பெண்களுக்கு வேலை கொடுக்கிறோம், வாழ்க்கை கொடுக்கிறோம் இரண்டொரு பெண்களிடம் வன்முறையாக நடந்துகொண்டால் என்ன தவறு, அதனை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? என்று கேட்பது போன்ற திமிர்பிடித்த குற்ற மனோபாவம்தான் இது போன்ற ஆண்களிடம் உள்ளது. இவர்களுக்கு அரசியல் அறம், சமூகநீதி பற்றியெல்லாம் பேசுவதற்கான உரிமையோ யோக்கியதையோ இல்லை.
கவிஞர் தாமரை தான் மணவாழ்க்கையில் ஏமாற்றப்பட்டது பற்றியும் தன் குழந்தையைத் தன் கணவரான தியாகு கைவிட்டு சென்றது பற்றியும் அரசியல், சமூகப்பணியில் ஈடுபட்டுள்ள, நம்பிக்கை வைத்துள்ள அனைவரிடமும் நீதி கேட்கிறார். தான் பிரிந்து தனியாக வாழ்வது பற்றித் தனக்குக் கவலையில்லை என்றும் தன் மகனை வளர்க்கும் பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளும் தியாகு அவர்களின் முயற்சி கயமையானது என்றும் அவர் சொல்கிறார். இதனை பொது வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் ஒருவர் திருமண உறவுக்குள் வருவதும் பிரிவதும் பிரச்சனையல்ல. குழந்தை பெற்றுக்கொள்வதும் பின் அக்குழந்தையை முழுமையாகப் பெண்ணின் பாராமரிப்பில் விட்டுவிட்டு தப்பித்துச் செல்வதும் இழிவான தந்திரம். குழந்தையைப் பராமரிப்பது ஆண் பெண் இருவரின் சமூகக் கடமை, தனது குழந்தையைக் காப்பாற்ற மனமற்ற, பொறுப்பற்ற ஒருவர் மக்களுக்கான சமூகநீதியை அரசு அதிகாரத்திடம் கேட்பதில் என்ன நியாயமிருக்க முடியும்?
தனக்கும் குழந்தைக்கும் அநீதி இழத்துவிட்டு சமூகப் போராளி, புரட்சியாளர் என்று சொல்லிக் கொள்ள ஒருவருக்கு என்ன தகுதியிருக்கிறது என்பதைத்தான் தாமரை தன் முறையீடாக நம்முன் வைத்திருக்கிறார்.