பெண்ணாய் வாழ்தலில் ஆகக் குறைந்தபட்சம்; வெளியே கொட்டமுடியாத அவமானம்தான் வாழ்க்கை.

எஸ்.சத்யதேவன் –எழுதிய இவ் விமர்சனம் ஊடறுவுக்காக அனுப்பித் தந்தவர் சந்தியா இஸ்மாயில் 

35 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் அஷ்ரபா நூர்தீனின் முதல் தொகுதி ‘‘ஆகக் குறைந்தபட்சம்” என்னும் தலைப்பில் ‘நீங்களும் எழுதலாம்’ வெளியீடாக வெளிவந்திருக்கிறது. கணக்கற்ற கவிதைத் தொகுதிகள் வந்தபடி இருக்கின்றன. ஆனால் சில தொகுதிகளின் வீரியமும் மறுதலிக்க முடியாத நியாயமும் அக்கவிதைகளை முக்கியமானதாகக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்துகின்றன. அஷ்ரபாவின் தொகுதியும் அந்த அவசியத்தை ஏற்படுத்துகின்றது.

‘நுரைப்பூக்கள் அலைகடலில் – பொங்கும்

நொடிப்பொழுதில் அவையுதிர்ந்து – மங்கும்

கரைகளினைத் தொட்டவுடன்,

கடலினிலே புத்தலைகள்

நுரைப்பூவை உருவாக்கும் – எங்கும்’.

பொங்கித் ததும்பும் நம்பிக்கையும் இயல்பும் சந்தமும் துள்ள வாழ்வை எதிர்கொள்ளத் தயாரான கவிதை
‘வெளியே கொட்ட முடியாத
அவமானம்தான் வாழ்க்கை என்பதை
அணு அணுவாய் விபரிக்க முடியாது
தொலைந்து போ எனத்
தூக்கி எறிந்தது இதயம்!’
என வலிகளை, வார்த்தைகளில் விபரிக்க முடியாத இயலாமைகளை இயன்றவரை வெளிப்படுத்துவதாக மாறுகிறது. வெறுமனமே வலிகளைப் பற்றிபேசுவதாக அமையாமல் ‘பெண்ணுக்குரியதாக சமூகம் ஏற்றுக்கொள்ளும் ”வாழ்க்கை” என்பதையும் அதை பெண்கள் வாழ்தலையும் உரத்த கோசங்களோ பேரழுகைகளோ இல்லாமல் பெண்களின் வாழ்வுபோலவே விபரிக்கிறது; அஷ்ராபா நூர்தீனின் கவிதைகளின் பலம் இதுதான்.

‘ஆண்களே பெண்களுக்காய்
நீங்கள்
ஒவ்வொருவரும்
தாஜ்மகால் கட்ட வேண்டியதில்லை!
ஆகக் குறைந்தபட்சம்
உயிருள்ள ஒரு ஜீவன்
என்றாகிலும் உணர்வீர்களா?

மனிதர்களுக்கான அரசியலில் உரிமைகளில் ஆகக் குறைந்தபட்ச கோரிக்கைகளை முன்வைத்து அதை பெறுவதற்கே போராட வேண்டிய நிர்ப்பந்தத்தில் ”ஆகக்குறைந்த” என்பதன் அர்த்தத்தை அரசியலில் மிகவும் வலிமையாக உணர்ந்துள்ள தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்களாகிய நாம் எம்மில் சரிபாதியாகிய பெண்கள், தங்களை ஒரு மனித ஜீவியாக ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்கும் ஆகக் குறைந்தபட்ச கோரிக்கையின் அர்த்தத்தை கண்டுகொள்ளாமலே இருப்பது வேதனையான தரும் நிதர்சனம்.
வெறும் கனவைப் போன்றதல்லாததாக வாலிபமும் வயோதிகமும் தன் வெறிதீர்க்க குறி நிமிர்த்தி அலைகின்ற உலகானது பெண்ணாய் பிறந்த குழந்தைகள்கூட வாழ்வதற்கு பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது. நாய் நரி ஓநாய்கள் கூட இளம் குட்டிகளை புணர்வதில்லை.  தொந்தரவு செய்தில்லை. இயற்கையை வெற்றிக் கொண்ட பெரும்படைப்பான மனித இனத்தில்
‘வீடுகளில்,
பாடசாலைகளில்,
பயணத்தில்,
யாருமற்ற அனாதையாகி
ஆசிரமத்தில் இருக்கையிலும்
பச்சை குருத்துக்கள்
இச்சையுடன் தடவப்படுகின்றன.
ஆகவே பெண்ணே:
வெட்கம் மறந்து
உன் சின்னப் பெண்ணுக்கும்
இந்த விசர்நாய்களின்
வெறித்தனம் பற்றிய
விளக்கத்தைச் சொல்!’
பெண்ணாக வாழ்வதற்காக ஆகக்குறைந்தபட்ச  பாதுகாப்பு பற்றி ஒருதாயிடமிருந்து இன்னொரு தாய்க்கு எச்சரிக்கை ஒலியினை எழுப்ப வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.
நம் காலத்தில் நாம் அனுபவித்த குழந்தைமையைக் கூட அனுபவிக்க முடியாதவர்காளய் மாறிவிட்ட இக்காலக் குழந்தைகளின் நிர்க்கதியையும் நிம்மதியிழந்துவிட்ட தாய்மார்களின் அவஸ்த்தையையும் ஒருசேர அஷ்ரபாவால் சொல்லிவிட முடிகின்றமை தன் கவிதைகளை வாழ்வின் நிஜததிலிருந்து எடுத்துக்கொண்டதால்த்தான்.
படிக்கின்ற வயதினிலே
பாலைவன நாடு சென்று
உச்ச வெய்யிலில் உழைத்து
உருக்குலைந்து கறுத்துப் போய்
சின்ன வயசினிலே
சேர்த்த தொகையை வீடாக்கி
அக்காள் எனக்களித்து
கடமை முடிந்த
களிப்பினிலே உள்ள தம்பி
எப்படி நீ நினைப்பாய்?
என் வீட்டில் நான் அடிமை என. 
வாழ்க்கைத்துணையாக்கப்பட்ட சகோதரியின் வெளியிடமுடியாத துயரைப் பகிர்ந்து கொள்வதோடு அச்சகோதரின் துணைக்கு அத்துயரை அளிக்காமல் இருக்கவேண்டுமென்ற ஆசையும் கொண்டனவாக உள்ள இக்கவிதைகள் வலிந்த கோசங்களோ, வெற்று  ஆரவாரங்களோ, உரத்த பிராச்சாரங்களோ அற்று வாழ்வின் வலிகளிலிருந்து உருவாக்கப்பட்டதாக இருக்கின்றன.
குழந்தையாய், குமரியாய், ஊழியராய், நண்பியாய்,  மனைவியாய், தாயாய் என பெண் வாழ்வின் எல்லாநிலைகளிலும் பெண்களுக்கு ஏற்படுகின்ற சுமைகளையும் துயரங்களையும் இவ்வுலகிலிருந்து விரட்டுவதற்கான ஆகக் குறைந்த ஆசைகளோடு தன் கவிதைகளை எழுதியுள்ள அஷ்ராபா நூர்தீன்; திருகோணமலையின் செழுமையும் வீரியமும் மிக்க பெண்கவிஞர் ஆவர்.
மரபும் புதுக்கவிதையும் மாறிக்கொண்ட காலத்தின் தலைமுறையைச் சேர்ந்தவள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அவர் அவை இரண்டிலுமே தேர்ந்தவர் என்பதை இத்தொகுதியில் நீருபித்துள்ளார்.
கோசங்களையும் ஆரவாரங்களையும் விடுத்து பெண்கள் நிம்மதியாய் வாழ்வதற்கான உள்ளார்ந்த விருப்பத்தோடு இருப்பவர்கள் அஷ்ராபாவின் குரலோடு தங்களையும் இணைத்துக் கொள்வதை தவிர்க்க முடியாது. சிறந்த கவிதையையும் கவிஞையையும் உணர்ந்துகொள்ள அஷ்ரபா நூர்தீனின் ”ஆகக் குறைந்த பட்சம்’ நிச்சயம் உதவிசெய்யும்.
இவ்வளவற்றையும் எழுதிக் கொண்டிருப்பது அவரது அழுத்தமான கீழ்வரும் குரலின் தார்மீக நியாயத்தை புரிந்து கொண்டும் ஏற்றுக்கொண்டும் அதை மறுதலிக்காமலும்தான்
பெண்ணுக்கு நீ சுதந்திரம் வழங்குவது பற்றியும்
சமஉரிமை கொடுப்பது பற்றியும்….
சொல்லிக்கொண்டிரு………
முழுச் சுதந்திரங்களையும் அனுபவித்துக்கொண்டு!
உனக்கு தகுதியில்லை,
‘பெண் விடுதலை’ பற்றிப் பேச!

 


 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *