இன்னும் வராத சேதி
“””””””””””””””””””””””””””””
ஊர்வசியின் கவிதைகளில் ஒன்று:
புதிதாகப் பெயர்ந்த சோளகத்தில்
தெற்கிருந்து பூவாசம்
உன் வீட்டுப் பக்கம்தான்
எங்கேனும்
கோடை மழைக்குக் காட்டுமல்லி
பூத்திருக்கும்.
இங்கே,
முற்றத்து மல்லிகைக்குத்
தேன்சிட்டும் வந்தாச்சு
‘விர்-‘ என்று பின்னால்
அலைகின்ற சோடியுடன்…..
வெள்ளையும் மஞ்சளுமாய்
வண்ணத்திப் பூச்சிகளும், படையாக
செவ்வரளி வரிசைகளில்
காற்றில் மிதந்தபடி.
வீட்டுக்குப் பின் தோப்பில்
மரங்கள் சலசலக்க
குருவிகளின் வம்பளப்பு
தினமும்தான் புதுசாக.
ஆனாலும்,
நீ சொன்ன சேதியை
இன்னும் ஒன்றுமே தரவில்லை
காற்றுங் கூட.
—————
இன்னும் வராத சேதி – ஊர்வசி
காலச்சுவடு பதிப்பகம்
விலை. 60