புதியமாதவி – மும்பை
குங்குமம் தோழி இதழ் – எண்ணங்கள் வண்ணங்கள் பகுதியில் -வெளியாகி இருக்கும் என் ஜன்னல் – நன்றி குங்குமம் தோழி,
யு.எஸ். போய்விட்டு இந்தியா திரும்பும் வழியில் என் தம்பி சுப்புரத்தினத்தின் குடும்பம் அபுதபியில் இருப்பதால் அங்கு நான்கு நாட்கள் தங்கிவிட்டு திரும்பினேன். பெரிய பெரிய கட்டிடங்கள் முன்னால் நின்று போட்டோ எடுத்து அதை முகநூலில் போடுவதிலும் லைக் வாங்குவதிலும் மகிழ்ச்சி அடையும் கூட்டத்தில் நானில்லை என்பதை ஓரளவு என் தம்பியும் அறிந்திருந்தான். அரபுநாட்டில் நான் பார்க்க விரும்பியது பாலைவனம் தான் என்பதைச் சொன்னவுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து என்னை அழைத்துச் சென்றான்.
-இடம்: பாலைவனப் பச்சையம்- இணையம்: ஊடறு-நூல்: நீ அழும்போது அவர்கள் கேட்டார்களா?.-
– சினிமா: முள்வேலியைத் தாண்டி
இடம்: பாலைவனப் பச்சையம்
அபுதபியில் இருக்கும் பாலைவனத்திற்கு. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல் மேடுகள், மணல் குவியல்கள்.அந்த மணல் குவியலுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு இரவில் வானத்தின் நட்சத்திரங்களைப் பார்க்கும் போது பூமித்தாய் தன் கைகளையே தொட்டிலாக்கி தாலாட்டுவது போல இருந்தது. ரோஜா தோட்டங்களைவிட அழகானவை பாலைவனங்கள் . ஆனால் அந்த ரோஜாவில் இருக்கும் முட்களைப் போல இந்தப் பாலைவன நினைவுகளின் ஊடாக இப்போதும் என்னைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது பாலைவனத்தில் ஒட்டகங்களைப் பராமரிக்கும் பாகிஸ்தான் சகோதரன் முகமும் சுற்றுலா பயணிகளுக்கு உணவு பரிமாறிய தமிழ், மலையாள இளைஞர்களின் முகங்களும்..
அந்தப் பாலைவனத்திற்கு நடுவில் ஒரு மரத்தைப் பார்த்தேன். ஒரே ஒரு மரம். எப்போதெல்லாம் தனித்திருக்கின்றேனோ மனம் கனத்திருக்கின்றேனோ அப்போதெல்லாம் அக்காட்சி எனக்குள் விரிகிறது பச்சையமாக..
இணையம்: ஊடறு
சுவிச்டர்லாந்தில் வாழும் தோழி றஞ்சியும் ஆஸ்திரேலியாவில் வாழும் தோழி ஆழியாளும் சேர்ந்து நடத்தும் கூட்டு முயற்சி
“ஊடறு” இணைய இதழ் பெண்களுக்கான இணையம். பெண்களைப் பற்றிய கட்டுரைகள், கவிதைகள், குறும்படங்கள் , ஓவியங்கள், உலகளாவிய பெண்கள் பற்றிய பிரச்சனைகள், பன்னாட்டு பெண்களின் படைப்புகள், செவ்விகள், என்று விரிகிறது இதன் பக்கங்கள்..
இந்த இதழின் முதன்மையாசிரியராக இருக்கும் தோழி றஞ்சி , ஒரு களப்பணியாளர். ஊடறு இணைய இதழுடன் பெண்களின்
படைப்புகளை தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு ஒரு முறை புத்தகமாகவும் கொண்டு வருகிறார்கள்.
நூல்: நீ அழும்போது அவர்கள் கேட்டார்களா?.
“நீ அழும்போது அவர்கள் கேட்டார்களா..? = DO THEY HEAR YOU WHEN YOU CRY ” ” என்ற புத்தகம் 1999 களில் நான் வாசித்தப் புத்தகம். இப்போதும் அந்தப் புத்தகத்தின் அதிர்வுகள் வெவ்வேறு அலைகளில் பல்வேறு தருணங்களில் என் மறுவாசிப்புக்குள்ளாகிறது. பவ்ஷியா கசின்ட்ஜா FAUZIYA KASSINDJA)) எழுதிய சுயசரிதை. ஆப்பிரிக்க மண்ணில் டோகா வில் பிறந்து வளர்ந்தவள், தன் 17வது வயதில் நான்காவது மனைவியாக அலங்கரிக்கப்பட்டிருந்த தருணத்தில் தன் சகோதரியின் உதவியுடன் நள்ளிரவில் ஆப்பிரிக்காவை விட்டு தப்பி ஓடுகிறாள். ஜெர்மன் வழியாக (அமெரிக்கா )- யு,எஸ்.ஏவில் நுழையும் போது இமிகிரேஷன் அதிகாரிகளால் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறையில் இருக்கிறாள். சிறைச்சாலைகளும் சிறைச்சாலை கொடுமைகளும் உலகமெங்கும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கின்றன. நிர்வாணமாக நிறுத்தும் அதிகாரிகள், அமெரிக்க குளிரில் குளிர்ந்த நீரில் நிர்வாணக் குளியல், மாதவிலக்கின் போது கூட மாற்றுத்துணி கொடுக்க மறுக்கும் பெண் அதிகாரிகள்.. இவர்களுக்கு நடுவில் என்றாவது தங்களுடைய வழக்கு நிதீமன்றத்திற்கு வரும் என்றும் நீதிபதியின் முன்னால் தங்கள் கோரிக்கையை வைக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் பலமாதங்கள் சிறையில் தவிக்கும் பெண்கள்..
. ஆப்பிரிக்க மண்ணில் அதிலும் குறிப்பாக ஒரு மதத்தில் (இசுலாமியர்களிடம்) திருமண உறவுக்கு முன் பெண்ணுக்கு நடத்தும் ஒரு சடங்கு CIRCUMCISION என்றழைக்கப்படும் .FEMALE GENITAL MUTILATION என்பார்கள். அதாவது பெண்குறி மூலமும் (CLITORIS) யோனியின் உதடுகளும் (LABIA) ) சிதைக்கப்பட்டோ முழுமையாக துண்டிக்கப்பட்டோ சிறுநீர் கழிக்கவும் மாதவிடாய் ரத்தப் போக்கிற்கு சிறுதுவாரமும் விட்டு பெண் உறுப்பைச் சிதைக்கிறார்கள். கத்தி, கத்திரிக்கோல், துருப்பிடித்த ப்ளேடு, உடைந்தக் கண்ணாடி துண்டுகளையே ஆயுதங்களாகக் கொண்டு இச்சடங்கை நடத்தும் கொடுமை.வேறு. இச்சடங்கை செய்வதன் மூலம் அப்பெண்ணின் பாலுணர்ச்சி மட்டுப்படுத்தப்படுவதுடன் அவளுடைய “கன்னித்தன்மை” “கற்பு” இத்தியாதி சமாச்சாரங்கள் பாதுகாக்கப்படுவதாக இப்போதும் நம்புகிறார்கள்!
இன்றைக்கும் உலகில் 150 மில்லியன் பெண்கள் இந்தக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்தச் சடங்கு செய்யாத பெண்ணைத் தூய்மையற்றவள் என்று சமூகம் ஒதுக்கி வைக்கிறது. இந்தச் சடங்கு செய்யும் நாளில் தான் பவ்சியா இரவோடு இரவாக ஓடி வருகிறாள். இக்கதைக்கரு ஒரு பெண்ணின் சுயசரிதையை ஒரு சமூகத்தின் சுயசரிதையாக மாற்றிவிடுகிறது. பவ்ஷியாவின் உண்மைக்கதை ஏப் 1996 நியுயார்க் டைம்ஸில் கவர் ஸ்டோரியாக வெளிவந்தவுடன் அங்கிருக்கும் பத்திரிகைகள் , தொலைக்காட்சி ஊடகங்கள் பெண்ணுரிமையை, மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமையை, இக்கொடுமையிலிருந்து தப்பிக்க ஓடிவந்த பெண்களுக்கு அடைக்கலம் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. விளைவு.. அமெரிக்கா அரசு தன் கொள்கையில் திருத்தங்கள் செய்கிறது. பவ்ஷியாவுக்கு விடுதலை. அகதியாக அடைக்கலம். பவ்ஷியாவின் கதையைப் புத்தகமாகக் கொடுத்திருப்பவர் லைலி மில்லர் பஷீர். பன்டெம் புக்ஸ் வெளியிட்டிருக்கிறது.(BANTAM BOOKS)
சினிமா: முள்வேலியைத் தாண்டி
தி பாய் இன் ட ஸ்டிரிப் பைஜாமாஸ் (The boy in the striped pyjamas) திரைப்படம் ஹோலோகொஸ்ட் கொடுமைகள் குறித்து எடுக்கப் பட்ட திரைப்படங்களில் முக்கியமானது. ஹோலோகொஸ்ட் என்பது கிரேக்கச் சொல். அதன் பொருள் தீயில் பலியிடல், acrifice by fire யூதர்களை இப்படித்தான் கொன்று குவித்தான் இட்லர். உலக மகாயுத்தத்தில் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட கொடுமைகளின் களம் ஹோலோகொஸ்ட்.
யூதர்களை அடைத்து வைக்கும் ஒரு கேம்ப் அந்த இடத்திற்கு பணிமாற்றலாகி வரும் இராணுவக்குடும்பம். அந்த அதிகாரியின் மகன் புருனோவுக்கு வந்த இடத்தில் விளையாட அவனை ஒத்த நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.தனியாக விளையாடும் அவன் ஒரு நாள் யூதர்களின் முகாம் எல்லைவரை வந்துவிடுவான். அவன் விளையாடும் பந்து அந்த எல்லையிம் முள்வேலியைத் தாண்டி விழும். முகாமில் இருக்கும் இன்னொரு யூதர் சிறுவன் அந்தப் பந்தை எடுத்துக் கொடுப்பான். சிநேகம் வளர்க்கும் புன்னகையைப் பரிமாறிக் கொள்வார்கள். நட்பு வளரும். முகாம் வாழ்க்கை குறித்து நண்பன் சொல்ல சொல்ல . அதைப் பார்க்கும் ஆர்வத்தில் ஒரு நாள் முள்வேலி தாண்டி தன் நண்பனுடன் புருனோ முகாமுக்குள் நுழைவான். அகதிகள் பைஜாமாவை அணிந்துக் கொண்டு இருக்கும் தருணத்தில் ஹோலோகொஸ்ட் ஆர்டர் வரும்.
முகாமில் இருக்கும் அனைவரும் வரிசையாக நடப்பார்கள். ஒரிடத்தில் அடைக்கப்படுவார்கள். அப்போதுதான் வீட்டில் ப்ருனோவைக் காணவில்லை என்று அவன் தாய் தேடுவாள். தன் கணவன் , இராணுவ அதிகாரியுடன் சேர்ந்து தேடும்போது முள்வெளி தாண்டி அவன் சென்றிருக்கும் அடையாளம் தெரியவரும். முகாமிலோ ஹோலோகொஸ்ட் ஆர்டர் … அதிகாரி ஓடிப் போவதற்குள் எல்லாம் முடிந்திருக்கும். ஆம் கூட்டமாக அனைவரும் ஓரிடத்தில் அடைக்கப்பட்டு விஷவாயு செலுத்தி பஸ்பமாக்கப்பட்டிருப்பார்கள்.
இதுதான் அந்தக் கதை. .
இப்படத்தில் புருனோவாக நடித்த இராணுவ அதிகாரியின் மகன், அவன் நண்பனாகும் யூதர் முகாமிலிருக்கும் சிறுவன் , இருவரின்
நடிப்பும் ஹோலோகொஸ்ட் கொடுமையை உணர்த்தும் வகையில் அமைந்தக் கதையும் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அக்காட்சி
சொல்லாமல் சொல்லும் வரலாற்று நிகழ்வுகளும்.. இத்திரைப்படத்தை உலக சினிமா வரிசையில் 100 திரைப்படங்களில் ஒன்றாக நிறுத்துகிறது