மக்கள் பேசும் கலையாக கூத்தும் பெண்களின் வகிபங்கும்

 – வி.தீபகங்கா – நுண்கலைத்துறை- கிழக்குப் பல்கலைக்கழகம்:-

மக்கள் பேசும் கலையாக கூத்தும் பெண்களின் வகிபங்கும் - வி.தீபகங்கா -தமிழர்களின் பாரம்பரிய அரங்காக கூத்து விளங்குகின்றது. இக் கூத்துக்கள் தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற இடங்களில் இன்றும் பல சவால்களுக்கு முகம் கொடுத்து உயிர்த்துடிப்புடன் ஆடப்பட்டு வருகின்றது. பொதுவாக இக்கூத்க்களை ஆடி வருபவர்கள் ‘சமய நம்பிக்கையின் அடிப்படையிலும் பொழுது போக்கிற்காகவும் சமூகத்தை சீர் திருத்தும் நோக்கத்துடனும் ஆடி வருகின்றோம்’ என்று கூறுகிறார்கள். கூத்துக்கள் பல மாத பயிற்சிக்குப் பின்னர் இரவு முழுவதும் விடிய விடிய ஆடப்படுவது மரபாக இருந்து வருகின்றது.

பாரம்பரிய கூத்துக்கள் சமூக ஒன்றிணைவுடன் கோயில் வீதிகளில் அல்லது வெட்ட வெளிகளில் அமைக்கப்பட்ட களரியில் அளிக்கை செய்யப்படும் கலையாக விளங்குகின்றது. குறிப்பாக தமிழருக்கான கூத்தரங்கு என்பது அன்றைய சமூக சூழலில் ஆண்களுக்குரியதாகவே இயங்கியமை குறிப்பிடத்தக்கது. ஆனால் கூத்துக்களில் பெண் பாத்திரங்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ள போதிலும் பாரம்பரிய கூத்து அளிக்கைகளில் ஆண்களே பெண் பாத்திரங்களை ஏற்று நடிக்கின்ற ஒரு தன்மை நிலவியது.

இதற்கான காரணம் யாது? ஏன் பெண்கள் கூத்து அளிக்கைகளில் பாத்திரம் ஏற்று ஆடவில்லை? ஏன்று கூத்தாடிய அன்றைய கலைஞர்கள், அண்ணாவிமார்களிடம் கேட்ட போது அவர்கள் கூறிய பதில் ‘பொம்பிளையல் கூத்தாடுறல்ல. அவயளால ஆடேலாது. கூத்தாட உடம்பில சக்தி வேணும். அவயளுக்குப் பெலன் இல்ல, அதோட கூத்து கோயில்ல ஆடுறதால அவங்க ஆடுறது சரிப்பட்டு வராது’ என்று கூறினார்கள். எனினும் பிரசவ வலியையே தாங்கக்கூடிய வலிமை பெற்ற பெண்களுக்கு ஏன் கூத்தாட முடியாது?

theepa
அன்றைய சமூகச்சூழலில் கூத்து பழகி அரங்கேறும் வரையிலான காலப்பகுதியில் கூத்துக் கலைஞர்களுக்கும் அண்ணாவிமார்களுக்கும் கூடவே இருந்து உதவிகள் புரிவதில் பெண்களுக்கு கூடுதல் பங்களிப்பு இருந்துள்ளது. கூத்தர்களை உற்சாகப்படுத்துபவர்களாகவும் அவர்களுக்குத் தேவையான உணவுகளை சமைத்துக் கொடுப்பவர்களாகவும் இருந்துள்ளனர். கூத்துக்களை பழக்கும் அண்ணாவிமார்களாகவும் பெண்கள் இருந்துள்ளனர். அது மாத்திரமன்றி கூத்துத் தருக்களையும் தாளக்கட்டுக்களையும் கூத்தர்கள் மறந்து போகின்ற வேளை அதனை சொல்லிக் கொடுப்பவர்களாகவும் கூத்துக்களைப்பார்த்து விட்டு வந்து வீடுகளில் கூத்தாட்டங்களை ஆடிப் பார்ப்பவர்களாகவும் பெண்கள் இருந்துள்ளனர். கூத்துக்களைப் பார்ப்பதிலும் ரசிப்பதிலும் விருப்பம் கொண்டிருந்த பெண்கள் ஏன் அரங்கேற மட்டும் முடியாமல் போனது? இவ்வாறானதொரு கலையார்வம் கொண்ட பெண்கள் கூத்து ஆடுவதற்கு விருப்பம் கொண்டிருக்கமாட்டார்களா? ஏன் இந்த நிலமை பெண்களுக்கு? என்பது கலந்துரையாடப்பட வேண்டிய ஒரு விடயமே. கூட்டுவதற்கும் கழுவுவதற்கும் சமைப்பதற்கும்தானா பெண்கள் அன்றைய சமூகத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்?

நவீன அறிவுலகில் பாரம்பரிய கூத்தரங்கு என்பது வலுவான கலைச்சாதனமாக இன்னமும் இயங்கி வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமே. இன்றும் தமிழ் பிரதேசத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் பயில் நிலையில் முழுமை பெற்ற வடமோடி, தென்மோடி இயங்குவதனை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு இரவு முழுவதும் ஆடப்டபடும் ஊர்க்கூத்துக்களில் இன்றும் பெண்கள் ஆடுவதென்பது மிக அரிதாகவே நடைமுறையில் உள்ளது. இவ்வாறாக ஆடப்படுகின்ற ஊர்க்கூத்துக்களில் பெண்கள் கூத்தாடுவதிலுள்ள நடைமுறைச்சிக்கல்தான் என்ன? நவீன கல்விச்சூழலில் உருவாகிய படித்த சமூகத்திற்கு தங்களது தொழிலின் நிமிர்த்தம் விடிய விடிய கூத்து பார்ப்பதற்கான சூழல் இருக்கவில்லை. துமக்கு கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்கிற்காக கூத்தைப்பார்த்து ரசிக்கவே விரும்பினர்.இதனால் விடிய விடிய கூத்து ஆடப்படுவது போய் குறுகிய நேரத்திற்குள் கூத்தை பார்க்கும் வகையில் கூத்துக்கள் ஆடவும் தொடங்கினர் கூத்துக்கலைஞர்கள்.

நவீன கல்விச்சூழலில் உருவாகிய சமூகத்திற்கு தங்களது தொழிலின் நிமிர்த்தம் விடிய விடிய கூத்து பார்ப்பதற்கான சூழல் பொருத்தப்பாடுடையதாக இருக்கவில்லை. இவர்கள் தமக்கு கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்கிற்காகவே கூத்தைப் பார்த்து ரசிக்கவே விரும்பினார்கள். இத்தகைய ஒரு பின்புலத்தில் விடிய விடிய கூத்து ஆடப்படுவது போய், குறுகிய நேரத்துள் கூத்துக்களை ஆடுவதற்கான தேவைப்பாடும் எழலாயிற்று எனலாம். எனினும் இரவு முழுவதும் நிகழ்த்தப்படும் கோயில் சடங்குகள் (கண்ணகி அம்மன் குளிர்த்தி சடங்குகள் போன்றன) திருவிழாக்களில் இன்றும் கலந்து கொள்ளும் நவீன கல்வி அறிவு பெற்ற மக்கள் ஏன் இரவு முழுவதும் இருந்து கூத்தைப் பார்த்து ரசிக்க முடியாமல் போயுள்ளது. கூத்துக்கள் பல மாத பயிற்சிக்கு பின் ஒரு நாள் மட்டுமே இரவு முழுவதும் ஆடப்படுகின்றது. ஆகவே திருவிழாக்களையும் கோயில் சடங்குகளையும் ஒரு நாள் இரவு முழுவதும் குடும்பத்துடன் இருந்து பார்த்து மகிழ்ந்து உள ஆறுதல் அடையும் இச் சமூகத்திற்கு ஒருநாள் இரவு முழுவதும் இருந்து விடிய விடிய கூத்து பார்ப்பதில் உள்ள சிரமம்தான் என்ன? உண்மையில் இவ்வாறு இரவு முழுவதும் விடிய விடிய ஆடப்படும் முழுமை பெற்ற கூத்துக்கள் கூட மக்களின் அழகியல், உளவியல் தேவைகளை நிறைவேற்றுவதாகவே உள்ளது.

இன்றைய கால கட்டத்தில் நேரச்சுருக்கத்துடன் ஆடப்படுகின்ற கூத்துக்களில்தான் பெண்களின் பங்குபற்றல்கள் அதிகம் இருந்து வருகின்றது. இம் மாற்றத்துக்கான காரணம் என்ன என்று நோக்கின் கல்வி அறிவு வளர்ச்சியும் பெண்களின் தன்னம்பிக்கையும் தைரியமும் பெண்ணியம் பற்றிப் பேசும் அரசு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புமே என்று கூறலாம். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக்குழு போன்ற தளங்களினால் முன்னெடுக்கப்படும் கூத்துச் செயற்பாடுகளிலும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் கலைச் செயற்பாடுகளிலும் பெண்களின் பங்கு முதன்மையானது. பாடசாலை, பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் பெண்களே கூத்துக்களை ஆட முன் வருபவர்களாகவும் உள்ளனர். கூத்தில் பங்கு கொண்ட இப் பெண்கள் தாங்களும் பலசாலிகள் தைரியமானவர்கள் என்று கூறுமளவிற்கு சாதனை படைத்தவர்களே.

அந்தவகையில் அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களை கொண்டு வடமோடி தென்மோடி ஆகிய இருவகைக்கூத்துக்களும் பழகி அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கூத்துக்களில் பெண்கள் பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தமை கவனத்திற்குரிது.

‘மழைப்பழம்’ என்ற தலைப்பில் வடமோடி சிறுவர் கூத்து ஒன்றும் ‘கண்டி அரசன்’ என்னும் தென்மோடிக்கூத்தும் அரங்கேற்றம் செய்யப்பட்டு இருந்தன. கிரிஜா என்ற சிறுவர் கதையை அடிப்படையாக வைத்தே ‘மழைப்பழம்’ என்ற சிறுவர் கூத்தை சீலாமுனையைச் சேர்ந்த சிவநாயகம் என்ற ஏட்டண்ணாவியார் கூத்துப்பனுவலாக உருவாக்கியிருந்தார். இது ஒரு வடமோடிச் சிறுவர் கூத்தாக உருவாக்கம் பெற்றது.
பால்நிலை ஏற்றத்தாழ்வை நீக்குவதே இக்கதையினதும் படைப்பினதும் நோக்கமாக காணப்படுகின்றது. தன்னம்பிக்கையும் தைரியமும் துணிச்சலும் கொண்ட ஒரு பெண் பாத்திரமான சிறுமியே இக்கூத்தின் பிரதான பாத்திரமாக உருவாக்கப்பட்டிருந்தாள். இதுவரை காலமும் ஆண்களுக்குரியதாக சொல்லப்பட்டு வந்த கூத்து மரபை பெண்களுக்குரியதாகவும் கூறமுடியும் என்ற கருத்தையும் முன் வைக்கும் வகையில் ‘மழைப்பழம்’ என்ற சிறுவர்கூத்து உருவாக்கப்பட்டுள்ளமையானது சியப்பிற்குரியதே.

இவ்வாறாக பெண்கள் சமூகத்தில் இரண்டாம் பட்சமாக பார்க்கப்படும் தன்மையை மாற்ற கூத்தரங்குகளில் நிகழ்த்தப்படும் இம் மாற்றங்கள் கூட ஒரு முன் உதாரணமாக அமைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக களரிஏற்றம் கண்ட தென்மோடிக்கூத்தான கண்டியரசன் கூத்தில் பெண்பாத்திரங்களின் பங்களிப்பும் அதனை ஆடிய பெண்கள் எதிர் கொண்ட சிக்கல்களும் சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இக்கூத்தில் ஙசணி, தோழிமார் இருவர், மங்குலியம் ஆகிய பெண் பாத்திரங்கள் இடம்பெற்றிருந்தன. இக்கூத்தினை பழக்கிய அண்ணாவியார் கூறிய கருத்தினை இங்கு அவதானிக்கின்ற வேளை ‘தென்மோடிக்கூத்தில பெண்கூத்துக்குதான் ஆட்டமும் கொஞ்சம் கூட, விறுவிறுப்பான ஆட்டமும் கூட, ஆடுற கொஞ்சம் பொறுப்புத்தான்’ என்று கூறியிருந்தார்.

எனினும் அண்ணாவியார் நேரச்சுருக்கத்தையும் கவனத்தில்; கொண்டு குறைவான ஆட்டங்களையே பெண்களுக்கு பழக்கி இருந்தார். இக்கூத்தினை பழகும்வேளை கூத்தில் பங்கு கொண்ட பெண்கள் பல சிக்கல்களையும் எதிர்நோக்க வேண்டி இருந்தது. மனதளவில் பலமும் தைரியமும் கொண்ட பெண்கள் உடல் ரீதியாக பலவீனமான சந்தர்ப்பங்களும் ஏற்பட்டிருந்தன. மாதவிடாய் காலங்களில் கூத்தாட்டங்களை ஆடமுடியாமல் போனதாகவும் கூத்தரங்கேற்றம் கோயில்களில் இடம் பெற்ற போது கோயிலுக்குள் பெண்கள் துடக்கு காலங்களில் செல்லக்கூடாது என்ற சமூகக்கட்டுப்பாட்டை மீற வேண்டிய சந்தர்ப்பங்களில் சங்கடப் பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டாவது அரங்கேற்றம் மாமாங்கம் கோயிலில் இடம்பெற்ற போது பெண்கள் கூத்தாடியதை பார்த்த ஒரு சிலர் தெரிவித்த கருத்துக்களை இங்கு குறிப்பிடத்தக்கது.

‘இந்த கூத்தாடுறது மெய்யா பொம்பிளையள்தானா? ஆண் வலிமை பொருந்திய பொட்டையளா? இந்த ஆட்டம் ஆடுதுகளே….இவளுகள என்னெண்டு சொல்லுற…’என்று தெரிவித்தவர்களும் உள்ளனர்.

இவ்வாறான கேலிப் பேச்சுக்களையும் ஏளனக் கருத்துக்களையுத் பெண்கள் கூத்தாடும் போது கேட்டதாக சிலர் கூறினார்கள். பெண்கள் தைரியமாக எதையும் செய்ய முன் வருகின்ற போதிலும் இவ்வாறான ஒடுக்கு முறைகளுக்குள் இன்னமும் உள்வாங்கப்படுகிறார்களே அது ஏன்?

பெண்கள் மாதவிலக்கு காலங்களிலும் கூத்தாட முடியும். ஆனால் ஒரு சில பெண்களின் உடல் நிலையே அதற்கு அவர்களை முகங்கொடுக்க முடியாதவர்களாக பலவீனமாக்கிவிடுகின்றது. எனவே தங்களது உடல் நிலையை கருத்தில் கொண்டெ ஒரு சில பெண்களால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் கூத்தாட முடியாமல் போகின்றதே தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு கோயிலுக்குள் பெண்கள் தீட்டுக்காலங்களில் செல்லக்கூடாது என்ற சமூகக்கட்டுப்பாட்டை மீறிப் பெண்கள் கூத்தில் பங்குபற்றும் வேளை இவ்வாறான இறுக்கமான சமூகக்கட்டுப்பாடுகளை இன்னமும் கடைப்படிக்கும் மக்கள் கூத்தாடும் இப் பெண்களை எந்தளவிற்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் கேள்விக்குரிய விடயமே? மேலும் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவது இயற்கையான ஒரு நிகழ்வு. எனினும் அதனை சாட்டாகக்கொண்டு கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காமல் அதனை தீட்டு என்று சொல்லுவது எந்தளவிற்கு சாத்தியம் என்பதும் சர்ச்சைக்குரிய விடயமே.

அடுத்ததாக கூத்துக்களில் பெண்பாத்திரங்களின் நிலை எவ்வாறான நிலைப்பட்டதாக அமைந்துள்ளது என்று பார்க்கின்ற போது பாரம்பரிய கூத்துக்களின் பெண் பாத்திரங்களுக்கான தருக்களை கேட்கின்ற வேளை அவை கூடுதலாக பெண்ணின் அழகையும் உடல் உறுப்புக்களையும் வர்ணிப்பதாகவே அமைந்துள்ளன. கண்டி அரசன் தென் மோடிக்கூத்திலும் இதனைக்காணலாம். எடுத்துக்காட்டாக

‘கரி குழல் இவள் ஒரு கலை மானோ….’

‘கன்னல் கொளுந்தோ கட்டி முத்தோ கலந்த பாகோ பின்னல் சடையாள் சின்னத் தனங்கள் பிஞ்சு முத்தோ மாதுளங்கனியோ….’

ஆண் நிலை நோக்கிலான அதிகாரப் போக்கும் பெண் அடிமைத்தனமுமே மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதாக பாரம்பரிய கூத்துப் பனுவல்கள் விளங்குகின்றன. இருந்த போதிலும் ‘மழைப்பழம்’ என்கின்ற சிறுவர் கூத்து இதற்கு மாறான கூத்துப்பனுவலாகவே உருவாக்கப்பட்டிருந்தது. இக்கூத்தில் பெண் பாத்திரத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதனை காணலாம். அத்துடன் பெண்ணியம் சார்ந்து பெண்களால் எதையும் சாதிக்க முடியுமென்ற கருத்தை வலுப்படுத்துவதாக இக் கூத்துப்பனுவல் விளங்குகின்றமையும் பாராட்டத்தக்கது.

கூத்தையே ஏளனம் செய்யும் ஒரு சில கூட்டத்தின் மத்தியில் கூத்துக்களை ரசிக்கும் வேறு சிலரும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் கூத்துக்களில் பங்குகொண்டமையை பாராட்டி அவர்களைப் புகழ்ந்து உற்சாகப்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.

எனவே பெண்கள் கூத்துக்களில் பங்கு கொள்வதன் மூலம் பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளை ஒழிப்பதற்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு, சிறந்த ஒரு சமூகம் உருவாக இக்கூத்துக்கள் கூட சிறந்த ஒரு ஊடகமாக அமையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *