லக்ஷ்மி (பிரான்ஸ்)
Khady Mutileé என்கின்ற இந்தப் புத்தகத்தை வாங்கியதும் வாசிக்கத் தொடங்கவில்லை. வழக்கம் போலவே சிறிது காலதாமதமாகவே அதனைச் சாத்தியப்படுத்த முடிந்தது.
சில புத்தகங்கள் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடக் கூடியவையாக இருக்கும். சில அந்தக் கணத்திலான மனநிலைக்கு உகந்ததாக இருப்பதில்லை. சில ஏற்கனவே எங்கோ படித்த ஒன்றைத் திரும்பவும் இன்னொரு வடிவத்தில் சொல்வது போன்றிருக்கும். இன்னும் சில, இதுவரை சிந்திக்கத் தோன்றியிராத ஒரு கோணத்தைக் காட்டித் தரும். சில தூக்கத்தைத் தொலைக்கும். இப்படி எத்தனையோ விதமான அனுபவங்களை வாசிப்புத் தந்திருக்கின்றது. மேற்குறிப்பிட்ட இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட நான்கு மாத இடைவெளிக்குப் பின் இப்போது வாசித்து முடிக்க முடிந்திருக்கின்றது. ஆனால் அதனூடான பயணம் தொடர்ந்தபடி….
முதற் தடவை ஏறத்தாழ கால்வாசிவரை வாசித்தேன். ஒரு குழந்தையாக அவளின் பெண்குறிக் காம்பு (Clitoris) சிதைக்கப்பட்ட வலி என்னை அதற்கு மேல் நகர முடியாமற் செய்துவிட்டது. அந்த வலி எனக்குத் தந்த உபாதையை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. சில நாட்களின் பின் ஆரம்பத்தில் இருந்து மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். அப்போதும் முதற் தடவை நிறுத்திய பக்கத்திற்கு அப்பால் நகர முடியவில்லை. நிறுத்தினேன். மூன்றாவது தடவையாக, மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்கி நூலின் இறுதிப்பக்கம் வரை தொடர முடிந்திருக்கின்றது. ஆனால் இன்னும் அதிலிருந்து மீள முடியவில்லை.
ஆபிரிக்க நாடொன்றைச் சேர்ந்த ஒரு பெண் அவளது குழந்தைப் பருவத்தில் தனது பெண்குறிக் காம்பு சிதைக்கப்பட்ட விதம் குறித்தும் அது அவளது வாழ்க்கையில் ஏற்படுத்திய விளைவுகள் குறித்தும் பேசுகின்ற அதேவேளையில் தன்னைச் சுற்றியிருக்கின்ற சூழல் குறித்தும் மிகவும் அந்நியோன்னியமான முறையில் விபரிக்கின்றார். அவருடைய நீண்ட வாழ்க்கைப் பயணம், ஆபிரிக்க சமூகத்தில் நிலவுகின்ற திருமணமுறை, குழந்தைகள் மீதான அணுகுமுறைகள், கல்விய+ட்டல் பற்றிய விழிப்புணர்வின்மை, மற்றும் திருமணத்திற்குப் பின் ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், சவால்கள் என்பன பற்றி மிகவும் இலாவகமாகக் கூறிச் செல்கின்றார்.
பெண்குறிக் காம்பு சிதைக்கப்படுகின்ற நிலை இன்னும் எத்தனையோ நாடுகளில் நடந்துகொண்டிருக்கின்றது. இது குறித்த விழிப்புணர்வை, குறிப்பாக, ஆபிரிக்கப் பெண்களிடத்தில் ஏற்படுத்துவதற்கு, அமைப்பு ஒன்றுடன் இணைந்து இன்றும் தொடர்ந்து செயற்பாட்டளராக இயங்கிக் கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் புத்தகத்தில் –
ஆபிரிக்காவில் இருந்து பிரான்சிற்கு எப்படி வந்தது. தன்னுடைய சுற்றத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட்டவளாக தன்னை உணர்ந்தது. பிரான்சில் தன்னை எவ்வாறு உணர்ந்து கொண்டது, அங்கு தங்கியிருந்த இடத்தில் தன்னை எப்படிப் பார்த்தார்கள், அப்போது தன்னுடைய நாட்டவரைக் கண்ட பிடித்து உறவு கொண்டது என்பன பற்றியும், தன்னுடைய நாட்டில் ஆண்கள் பலதார மணம் செய்து கொண்ட போதும், அந்தப் பெண்கள் தங்களிற்குரிய ‘சுதந்திர’த்துடன் எப்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள் என்றும் – அதனை அந்தப் பெண்கள் எவ்வாறு எடுத்துக் கொண்டார்கள் என்றால், தங்கள் கணவனின் பாலியல் தேவையை நிறைவு செய்வதற்கு, சுற்றுமுறையில் தங்களுடைய நாட்கள் வருவதை தங்களிற்கு சாதகமானதாக அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் கூறுகின்றார். அதே மரபை வெளிநாடுகளில், குறிப்பாக, பிரான்சில் இருக்கும் ஆண்கள் வெறும் பண உதவிகளுக்காக மட்டும் எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதையும் விபரிக்கின்றார்.
எல்லாவற்றிற்கும் அப்பால், தான் குழந்தையாக இருக்கும்போது தன்னுடைய பெண்ணுறுப்பில் ஏற்படுத்தப்பட்ட காயத்தின் தாக்கத்தில் இருந்து இன்று வரை விடுபட முடியாமல் இருக்கின்றது என்றும் ஒவ்வொரு தடவையும் தனது கணவன் தன்னைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினான் என்றும் ஒவ்வொரு தடவையும் தான் பிணமாகக் கிடந்தேன் என்றும் ஒவ்வொரு பிள்ளைப் பேறின் போதும் தான் பட்ட துயரத்தையும் என்று இப்படி எத்தனையோ விடயங்கள்பற்றி விபரித்துக்கொண்டு செல்கின்றார்.
இந்த னழஉரஅநவெ இல் எழுதப்பட்டுள்ள விடயங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து, ஒன்றும் புதிதல்ல என்ற தோற்றப்பாட்டைக் கொடுத்தாலும் பெரும்பாலான பெண்கள் ஏதோ ஒரு வடிவத்தில் இந்தக் கொடுமைகளை எதிர்கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவைகள் எவ்வளவு தூரம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் எந்தப் பெண்ணுக்கும் அடிவயிற்றில் வலி ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அந்தக் கொடுமையான அனுபவங்களை எனக்குள் நுழைய வைத்த எழுத்துப் பாங்கு (எந்தவிதமான ஆலாபரணங்களுமற்ற மொழிநடையில் இருப்பது) உண்மையில் இருந்து பிறந்தது என்பதன் பொருட்டானது.
இது பிரெஞ்சு மொழியில் உள்ளது. பிரெஞ்சுமொழியில் வாசிக்க முடிந்தவர்கள் நிச்சயம் இதனை வாசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
20-04-2014