இந்த நேர்முகத்தை படித்து முடித்த இரவு கண்களில் நீர் கோர்த்துக்கொண்டன.
நல்லதோர் வீணை இதழுக்காக எடுத்த சாமானியன் பேட்டி. மிகச் சாதரணமாக அந்த பெண் பேசினாலும் அந்த வார்த்தைகளை கடந்து வர எனக்கு ஒரு யுகம் தேவைப்பட்டது .
சாமானியன் பேட்டி
-புதியபரிதி
சாமானியன் பேட்டிக்காக பாலியல் தொழிலாளி ஒருவரை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சந்தித்தோம்.ஆரம்பத்தில் தயங்கி தயங்கி பேசியவர்.பேட்டி முடிகையில் பல நாள் பழகியவரைப் போல் பேசினார். கிளம்பும் போது”வெளி ஆளுங்க கிட்ட எல்லாம் இந்த மாதிரி பேசி ரொம்ப நாளாச்சு தம்பி” என்றார். அவர்களது மன நிலையை முழுமையாக இல்லை என்றாலும் 1 சதவீதமாவது இப்பேட்டி பிரதிபலித்திருக்கிறது என நம்புகிறோம். அவரது நன்மை கருதி அவரது பெயரும்,புகைப்படமும் வெளியிடப்படவில்லை.
1.எப்போது எவ்வளவு மணி நேரம் தூங்குகிறீர்கள்?
இத என்கிட்டே கேட்டா நானா முடிவு செய்யுறேன்.என்கிட்டே ஆளுக வரும்போது நல்லா பளிச்சுன்னு இருக்கறதுக்கு மதியம் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிப்பேன். ராத்திரியிலனா எப்பத் தூங்க விடுறானுங்களோ அப்போ தான் தூங்க முடியும்.
2.உங்களுக்கு கனவு வருமா?வந்தால் எந்த மாதிரி கனவுகள் வரும்?
மனசுல என்ன இருக்கோ அது தான் கனவா வருமாமே. தொழிலுக்கு வந்தப்ப தூங்க நேரம் இருக்காது.
மீறி கொஞ்ச நேரம் தூங்குனா நிறைய கனவு வரும்.அதுல முக்கால்வாசி அசிங்க அசிங்கமான கனவுகள் தான் வரும். கொஞ்ச நாள் கழிச்சு அசிங்கங்க நின்றுச்சு.அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ஊரையும் வீட்டையும் பாத்து ஓடிப்போற மாதிரி கனவு வரும். இப்போ கனவெல்லாம் வாரதில்ல.
3.ஓய்வு நேரத்தை விரும்புகிறீர்களா?
எனக்குத் தோணும் போதுதான் தொழிலுக்கு போவேன்.அதனால எனக்கு ரெஸ்ட் எடுக்கனும்னு எல்லாம் தோணாது.இளமையா இருக்குறப்பவே எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாரிச்சிக்கோனு ப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க.ஆனா என்னாத்துக்குனு நான் அப்படி போறதில்ல… ஜாலியா கண்ண மூடி பாட்டு கேட்டுகிட்டு இருப்பேன்.
4.உங்களுக்கு குழந்தை இருக்கா? இல்லை என்றால் பெற்றுக் கொள்வீர்களா?
குழந்தை இல்ல. பெத்துக்கிறதுக்கான வாய்ப்பும் கம்மி தான். அப்படி பெத்துக்கிட்டா பொம்பளப் பிள்ளை பெத்துக்குவேன். நான் பட்ட கஷ்டம் எல்லாம் படாம வளப்பேன். என்ன ஒன்னு அது வளந்த பிறகு நம்மளப் புரிஞ்சிக்கிறனும் அவ்வளவு தான்.
5.மனித வாழ்க்கையில் மிகப் புனிதமாக எதை நினைக்கிறீர்கள்?
என் வாழ்க்கையில புனிதமானதுன்னு எதுவும் இல்ல.
6.மனித வாழ்க்கையில் அதிகத் துயரமானது எது?
சோறு இல்லாம இருக்கிறது. ஆரம்பத்துல இந்த தொழில் வாரதுக்கு முன்னாடி கொஞ்ச நாள் பிச்ச எடுத்தேன்.அப்போ எல்லாம் சாப்பிடுறதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு தோணுச்சு. இந்த தொழிலுக்கு வந்ததே நல்லா சாப்பிடலாம்னு தான்.
7.நீங்கள் இந்த சமூகத்தில் எப்படி அழைக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
நிறைய பேர் பாலியல் தொழிலாளினு தான் சொல்றாங்க. அழகிகள் கைதுனு பேப்பர்ல போடுவாங்க.ஆனா எங்கள ஐட்டம்,தேவடியானு கூப்பிடுறவன் எங்ககிட்ட வாரவனுங்களையும் அப்படித் தான் கூப்பிடனும் முடியாதுனா எங்களையும் கவுரவமா தான் கூப்பிடனும்.
8.காதல் என்றால் என்ன?
(சிரிக்கிறார்) இப்படி கேட்டா என்னா சொல்றது. சினிமால ஹீரோ ஹீரோயின் பண்றது. இன்னும் சொல்லனுமா? ம் ..ஓவரா குடிச்சா கஸ்டமருங்க சில பேர் காதல் பண்றதாவும் கல்யாணம் பண்ணிகிறதாவும் சொல்லுவாங்க.. ஆனா போதை தெளிஞ்சதும்.. அந்த பேச்சே இருக்காது. வேணும்னா குடித்தால் வருவதுனு போட்டுக்கங்க.. ரைமிங்கா இருக்கும்.
9.ஆண்களும் கற்போடு இருப்பதற்கு என்ன செய்யலாம்?
இப்ப ஏற்கனவே கற்போட தான இருக்கானுக. கற்ப இழந்தாலும் கற்பு இழந்தவன்னு எவனையாச்சும் சொல்ற தைரியம் இருக்கா உங்களுக்கு?
10.உங்களிடம் வரும் ஒழுக்கங்கெட்ட ஆண்கள் சாதி வேறுபாடு, மத வேறுபாடுகளை காட்டுகிறார்களா?
(கொஞ்சம் கோபமாக ) அதென்ன எங்ககிட்ட வந்தா ஒழுக்கம் கெட்டவங்களா. பஸுல உரசுரவன், காதலிச்சு ஏமாத்தி வேலையக் காட்டிட்டு எஸ் ஆகுறவன் இவனுங்கள விட எங்க கிட்ட வர்ரவனுங்க ஒழுக்கமானவங்க தான். என்ன கேட்டிங்க? (கேள்வியை மறுபடியும் சொன்னோம்). எங்கிட்ட வந்த எவனும் சாதி சர்டிபிகேட் கொண்டுவந்ததும் இல்ல, கேட்டதும் இல்ல.ஆனா எம் ப்ரெண்டு கிட்ட வந்த ஒருத்தன் சாதி, குலம், கோத்திரம் எல்லாம் விசாரிச்சிட்டு தங்கச்சி மொறனு சொல்லி,காசு மட்டும் கொடுத்திட்டு எதுவுமே பண்ணாம சும்மா போய்ட்டானாம்.( சிரிக்கிறார் )
11.உங்கள் வாழ்கையில் எந்த ஒரு சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் நீங்கள் இத் தொழிலுக்கு வந்திருக்க மாட்டீற்கள்?
கல்யாணம் நடக்காமல் இருந்திருந்தா வந்திருக்கமாட்டேன்.இத்தனைக்கும் அம்மா பாத்து வச்ச மாப்பிள்ளை தான். சென்னைக்கு வந்த கொஞ்ச நாள்லயே ஓடிட்டான்.ஆதரவு இல்லாம நின்ன நானு பிச்சை எடுத்தேன். காசுக்காகவும் கெளரவத்துக்காகவும் எது வேணும்னாலும் செய்யலாம்ன்ற ஊர்ல சோறு வேணும்னு இந்த தொழிலுக்கு வந்துட்டேன்.
12.இந்த வாழ்க்கையில் இருந்து எந்த ஒரு சம்பவம் தங்களை விடுவிக்கும் என நினைக்கிறீர்கள்?
இருக்கிறவரைக்கும் இந்த வாழ்க்கையில் தான் இருக்க முடியும்.இனிமே எல்லாம் யாரும் என்னை கல்யாணம் பண்ணிகிற மாட்டாங்க. இல்லைனா யாருக்காவது சின்னவீடா இருக்கனும். அப்படி இருந்தா இன்னொரு பொம்பளையோட வாழ்க்கைய புடுங்கிக்கிற மாதிரி இருக்கும். எதுக்கு நமக்கு அந்த பாவம்?
13.கடவுள், போலிஸ்,கோர்ட் இவற்றுக்கிடையே இருக்கும் ஒற்றுமை என்ன?
இந்த தொழில்ல வந்ததில் இருந்து போலிசும் கோர்ட்டும் பழக்கம் ,கடவுள் எனக்கு பழக்கம் இல்ல. எல்லோரும் எங்ககிட்ட காசு கொடுத்துட்டு இருப்பாங்க. நாங்க கோர்ட்டுக்கு காசு கொடுத்துட்டு சில போலிஸ்ங்க கூட இருக்கனும். ஆனா போலிஸ்ல நல்லவங்களும் இருக்காங்க.அவங்களுக்கு கேசு தேவை
இல்லைனா விட்டிருவாங்க.
14.திருநங்கைகளை கிண்டல் செய்துள்ளீர்களா?
கிண்டல் பண்ணது எல்லாம் இல்ல.முன்ன அவங்களப் பாத்தா அருவருப்பா இருக்கும், இப்போ எல்லாம் அவங்களும் நம்மள மாதிரி மனுசங்க தானேனு நினைப்பு வரும்.
15. இப்படி விவரங்களைக் கேட்டு விட்டுப் போகிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எங்களுக்கு நல்லது பண்றதுங்கறது ஒரே நாள்ல நடக்கிறது இல்ல. இப்படி கேள்வி கேட்டுட்டுப் போய் நாலு பேர்கிட்டச் சொல்றதுனால அத அவங்க தெரிஞ்சுக்கிறதுனால எங்களுக்கு எந்த நல்லதும் நடக்கப் போறதும் இல்ல . இதுனால எழுதுறவங்களுக்கு வேணும்னா நல்ல விளம்பரம் கிடைக்கலாம். ஒன்னு சொன்னா கோச்சுக்கமாட்டிங்களே. நீங்க எல்லாம் எங்க கிட்ட காசு கொடுக்காமலே எங்களால சந்தோசம் அடையிறவங்க. (சிரிக்கிறார்)-
Thanks to -www.facebook.com/pu.ko.saravanan/posts/813517495345995 பூ.கொ. சரவணன்