கனடிய இளம் படைப்பாளியான தான்யாவின் ”சாகசக்காரி பற்றியவை” என்ற கவிதை;தொகுப்பு வெளிவந்துள்ளது ”தாத்தாவின் வயலில்,துணையை இழுத்து,மெல்ல நடக்க,விருப்புற்றேன்,போக முடியாத,என் தேசத்துள்,அமிழ்ந்து போகிறேன்” என கூறும் தான்யாவின் கவிதைத் தொகுப்பு தமிழ் இலக்கிய பரப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்நதது.
– சசிகலா பாபு.
“தன் வீடு, தன் நிலம், தன் நாடு” என வாழப்பெறுதல் என்பது மட்டுமே வாழ்வின் மிகப்பெரிய கனவாய் இருப்பவர்களின் மனவெளிப்பாடுகள், சொந்த நாட்டில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு செயல்பாடிலும் தன் பங்கு இருப்பதை இறுமாப்புடன் எண்ணிக்கொண்டு, இயலாமையின் வெடிப்புகளில் தன் நிலத்தைத் தானே பல சமயங்களில் சாடிக் கொண்டும் இருப்பவர்களால் எக்காலத்திலும் துல்லியமாய் உணரமுடியாது. உலகின் பொதுப் பிரஜையென வாழும் புலம்பெயர்ந்தவர்களின் ஆழ்மன இருப்புகள் குறித்தும், அகதியாகவோ தாம் வாழும் நாட்டின் குடிமக்களாய் இல்லாதவராகவோ இருப்பதின் சமூக சிக்கல்கள் குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகுதியாய் உள்ளன.
இவற்றினுள் வெகு இயல்பாய் மறக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் யாதெனின், புலம்பெயர்ந்த பெண்களின் குடும்ப வாழ்வு, காதல் மற்றும் இவை சார்ந்த தடுமாற்றங்களும், நிரப்பப் படாமல் வெற்றாய் கிடக்கும் மன இடைவெளிகளும் தாம். போரும் வெறுமையும் தனிமையும் பிரிவும் பின்னிக் கிடக்கும் இந்த நிலையில் கவிதைகளை உருவாக்குவது என்பது ஒரு அசாத்திய காரியம் எனவே நினைக்கிறேன். மேலும் இந்தக் கவிதைகள், கவிஞரின் மன எழுச்சியின் ஒரு பெரு வெடிப்பாகவும் அதன் மூலம் வடிந்துவிட்ட உணர்வுகளாகவும் கூட எனக்குத் தோன்றுகிறது.
ஒவ்வொரு கவிதையையும் எழுதி முடித்ததும், உள்ளடுக்குகளில் புரையோடி கிடக்கும் சீழ்கட்டுகள் உடைந்தபின் உடலுக்குக் கிடைக்கும் வலி குறைந்த ஒரு பேரமைதி போலவே கவிஞர் மிகவும் சாந்தமான ஒரு சூழலில் தன்னைக் கண்டடைந்திருக்க வேண்டும் எனவும் நம்புகிறேன். போர்ச்சூழல் தந்தப் பிரிவுகளும், உறவுச் சங்கிலிகளின் பிணக்கும் அதன் விளைவான தனிமையும் இவரின் கவிதைகளில் பெருவாரியாய் பிரதிபலிக்கிறது. பொதுவாய் பெண்கள் உணர்வுமயமானவர்கள், எனவே சிறு அசைவும் அவர்களை உலுக்கிவிடும். எனினும், உலுக்கி விடப்பட்ட மரக்கிளை சில நொடிகளில் தன்னிலை திரும்புவதுபோலே பெண்கள் முன்னிலும் சிறந்த வலிமையுடன் தம் சுயம் ஏகுகின்றனர். இதனை தான்யாவின் கவிதைகள் வலியுடனும் வலிமையுடனும் அதே நேரம் மென்மையாகவும் திண்மையாகவும் எடுத்துரைக்கின்றன.
”தாத்தாவின் வயலில்
துணையை இழுத்து
மெல்ல நடக்க
விருப்புற்றேன்
போக முடியாத
என் தேசத்துள்
அமிழ்ந்து போகிறேன்”
எனும் வரிகளில் பெண்ணொருத்திக்கு புலம்பெயர்ந்த பின் நிகழும் ஒரு அற்புத காதலில் இருக்கும்போது அவளுக்குள் உருவாகும் மிக நியாயமான ஒரு ஏக்கத்தைச் சொல்கிறது. காதலில் இருக்கும்போதும் தன் நிலம் பற்றிச் சிந்திக்கும் பெண்ணின் மன ஊசலாட்டத்தை சரியாய் இயம்புகிறது இந்த வரிகள்.
“குளிரின் வெய்யிலோ காலங்கள் மாறி
மாற்றம் நிகழும்
ஆனால்
எனக்கான நிமிடங்கள்
எனக்கான நாட்கள்
எனக்கான வருடங்கள்
எப்போதும் போல அப்படியே”
இந்த வரிகளில் “என் காலத்தை நானே நிர்ணயிக்கிறேன்” என்பதுதான் எத்தனைப் பெரிய சுதந்திரமான மனவெழுச்சி! குடும்ப அமைப்புகளுக்குள் பெண்களின் காலம் என்பது உறவுகளால் சுரண்டப்படுகிறது. மதிப்பு வாய்ந்த தன் காலத்தை கடமையெனும் பெயரால் பெயர்த்துக்கொண்டுச் செல்லும் இந்தச் செய்கையை எதிர்த்துத் தன் வரிகளில் காத்திரமாய் கடந்துச் செல்கிறார் கவிஞர். தனக்கே தனக்கான காலத்தை எவருக்கும் விட்டுத்தராத மனவலிமை மிளிரும் வரிகள் இவை.
“காதலை மார்புகளுள் பதுக்கி
துக்கத்தை மறைத்து
இயல்பாக்கி வாழ
என்னால் முடியும்
புரிய முடியாமல் விலகிப் போகிறாய்
பகிர்ந்து கொள்ள முடியாமல்
சுயத்தை வளர்த்து
முறிவுக்குத் தயார் படுத்தினும்
சொட்டும் மழையிலும்
தனிமையின் சாரலிலும்
உன் பற்றிய நினைவுகள்
மோதிக் கொள்கிறது”
இந்த வரிகளில் ஒரு தனிமையின் நீட்சியில் நினைவுகளின் தாக்கம் எந்த பலத்தையும் வீரியத்தையும் நீர்க்கச் செய்துவிடும்தான். ஒரு மழை கிளர்ந்தெழுப்பும் வாசங்களில் தலையாயது தனிமையின் இருப்பை உணர்த்தச் செய்வது. அதனைச் சரியாய் வலியாய் வெளிப்படுத்தும் வரிகள் இவை. தன் பலமெது என அறிந்துகொண்ட ஒரு தெளிவான பெண் தனிமை நேரங்களில் நினைவுகள் கொண்டு கடந்து வருவதைத் துல்லியமாய் வரிகளில் படம் பிடிக்கிறார்.
“சவக்குழிகளுக்குள் புதைக்கப்படும்
பிள்ளைகளை
மண்ணைக் கிளறி
தேடித் தேடிக் கதறுகிறாள் அம்மா
சரியாய் எந்த கிரியைகளையும்
செய்யாது போர் திண்ட பிள்ளைகளை விட்டு
நகர்கிறார்கள் அம்மாக்கள்”
போர்க்களத்தில் இறந்தவர்களுக்காய் செய்யப்படும் மரணச் சடங்குகள் நிலுவையில் இருப்பதை துக்கத்துடன் சொல்லும் இந்த வரிகளைத் தொடர்ந்து
“பிள்ளையின் எல்லாவற்றையும் எடுத்துச்
செல்லும் அகாலத்தின் கதவாய்
தீ வார்க்கப்படுகிறது
காவெடுத்தவர்கள் நினைக்கப் போவதில்லை
ஒரு பயித்தியக்காரியைப் போல
தனக்கான குழியை வெட்டியபடி
காத்திருக்கும் பெற்றவர்களை”
எனும் வரிகளில் அகாலக் கதவு எனத் தீ இங்குச் சுட்டப்படுவதுதான் எத்தனைப் பொருத்தம்! எந்நேரமும் திறந்துகொள்ளவும் நம்மை எதனுள்ளோ அடைத்து மூடிவிடவும் கூடிய கதவு அது. அத்தைகைய தீயால் உண்ணப்படாது போருக்கு உணவான மகன்களின் தாய்மார்கள் தமக்கானக் குழிகளை வெட்டிக் காத்திருக்கிறார்கள் இங்கே.
”எல்லோரும் சொல்கிற அழகியை
நீயே கண்டு பிடித்தவன் போல
அழகி என்கிறாய். யார் தான் அழகில்லை என்கிறேன்.
எல்லோரும் பேசுகிற அரசியலைப் பேசுகிறாய்
பெண்ணியம், சமத்துவம், பின்நவீனத்துவம்
என
எல்லாப் புண்ணாக்கையும் பேசுகிறாய்
நீ மழையை மழைக்காய் ரசிக்கிறாயா?
அல்லது எல்லோரும் இரசிக்கிறார்கள் என்பதற்காக
இரசிக்கிறாயா?
எனக்கு நீயும் மழையைப் போலவே அந்நியமாய்.”
எத்தனை திடமான வரிகளாய் இவை பரிமளிக்கின்றன! தன்னை இரசிக்கும் விழிகளுக்குக் கூடத் தனது அழகானது தனித்துவமாய் இருந்திட வேண்டும் என என்னும் மனோபாவம் நிலைக்கும் வரிகள் இவை. எதிலும் சுயம் பேணும் பெண்மையின் இலக்கண வரிகள் இவை.
“பிரசவங்கள் பற்றி
எடுத்தெறிந்த கர்ப்பப்பை பற்றி
கருச்சிதைவு பற்றி
கர்ப்பப்பை அற்றவர்கள் பற்றி
கருக்கலைப்பு கர்ப்பத்தடை பற்றிப்
புரியாதவர்கள்
எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்
இன்னும் பிரசவங்களை”
எனும் வரிகளில் குழந்தையைத் தன் கர்ப்பத்தின் மூலம் பெறாத ஒரு பெண்ணின் மனக்கிலேசங்களைச் சொல்கிறது. குழந்தையைப் பிரசவிப்பது என்பது ஒரு பெண்ணின் பரிபூரண உரிமை. உடல் சார்ந்த மற்ற எல்லாக் காரணிகள் இந்தத் தேர்வை நோக்கி அவளைத் தள்ளினாலும் ஆரோக்கியமானச் சூழலிலும் இந்த உரிமையைப் பெற அவள் விரும்புகிறாள் என்பதை இந்த வரிகள் உணர்த்துகின்றன.
”அந்த இடம்,
ஒரு நிமிடம், சாவதற்கான
முனை
மறுநிமிடம், இசைக்கான
கருவி
பிறிதொரு பொழுதில், வாழ்வதற்கான
வெளி
அத்துவான வெயிலில்
வாழ்க்கையின் நம்பிக்கையைத் தொலைப்பது
இயலாமற் போகிறது
சாகசக்காரியாய், ஆறாய், நீர்வீழ்ச்சியாய்
படகாய்க் குழந்தைகளாய்
கீழே வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன
மேலே
கோபமும் விவேகமும் தாபமும் நிறைந்தவள்
சேர முடியாதபடி
வாழ்க்கை அவளை வசீகரிக்கிறது”
இந்த வரிகளில் வாழும் இந்த ஒரே வாழ்வானது ஒரு நேரம் சாவின் முனை போலவும் மற்றொரு நேரம் நம்பிக்கையின் சுடர் போலவும் பிரகாசிப்பதைச் சொல்கிறது. ஒரு சாகசக்காரியைப் போலே இந்த வாழ்வை எதிர்கொள்ளும் அவள் தன் சுயம் சார்ந்த கோபம், விவேகம், தாபம் ஆகியவற்றுடன் இந்த வாழ்வை இணைகோடுகள் போல் கொண்டு செல்வதை செய்கிறாள், அதனாலேயே இந்த வாழ்வு தன்னை வசீகரிப்பதாயும் சொல்கிறாள். சாகசக்காரி பற்றிய இந்தக் குறிப்புகள் மிகவும் செம்மையாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பாங்கும் போக்கும் பெண்ணெழுத்துகளில் தனித்துவமாய் கவனிக்கப்பட வேண்டியதாய் நான் கருதுகிறேன்.
8 (நீஷீஜீஹ்)முத்தாய்ப்பாய் இந்தத் தொகுப்பிற்காய் கோட்டோவியங்கள் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களால் மிகச் சிறந்த முறையில் வரையப்பட்டிருக்கின்றன. கவிதைகளுக்கு மிகப் பொருத்தமாயும் பாந்தமாயும் இருக்கும் இந்த ஓவியங்கள் வரிகளுக்கு ஒரு அரூப வலிமையளிக்கிறது.
நன்றி http://thanya2013.wordpress.com/