பதற வைக்கும் பாலியல் கொடுமைகள் -உ. வாசுகி -தீக்கதிர்

 பொதுவெளியில் பெண்கள் வருவதால்தான் வன்முறை நிகழ்கிறது என்று அவர்களைக் கட்டுப்படுத்துவதும், விலக்கி வைப்பதும் பிரச்சனையைத் தலைகீழாகப் பார்ப்பதாகும்.

தேசிய குற்றப்பதிவு அமைப்பின் 2013க்கான புள்ளி விபரத்தின்படி, இந்தியாவில் பதியப்பட்ட பாலியல் வல்லுறவு வழக்குகள் 33707ஆக உயர்ந்திருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 93 பெண்கள். தமிழகத்தில் 923 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 3 பெண்கள். இந்தியாவில் பதியப்பட்ட 33707 வழக்குகளில், 2854 குற்றவாளிகள் பெற்றவரும், உற்றவரும்தான். முன்னேயும், பின்னேயும் தெரிந்தவர்களே இந்தக் கொடுமையில் ஈடுபடும்போது, முன்ன பின்ன தெரியாதவர்களிடம் பேசாதே என்று அறிவுரை கூறுவதில் என்ன பொருள் இருக்க முடியும்? பெண்ணை ரசிக்கிற, ருசிக்கிற, அனுபவிக்கிற போகப் பொருளாக பார்க்கும் பார்வை வலுப்பட்டுள்ளது.

மனித உறவுகள், மாண்புகள் சீரழிந்துள்ளன. கலாச்சாரம் காணாமல் போய்விட்டது. கலாச்சாரக் காவலர்கள் இது குறித்தெல்லாம் வாயை இறுக்க மூடிக்கொள்வது ஏன்? நீ சுகப்பட்டால் போதும், மற்றதைப்பற்றிக் கவலைப்படாதே என்று கலாச்சார மதிப்பீடுகளைத் திருத்தி எழுதிய உலகமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு இதில் பங்கில்லையா? இது குற்றம் என்பது போய் ஒரு பொழுதுபோக்கு ஆகிக்கொண்டிருக்கிறது. அனைவரும் சேர்ந்து செய்வதில் ஒரு ஜாலி, அந்தப் பெண் தவிப்பது, அலறுவது, துன்புறுவதைப் பார்ப்பதில் ஒரு அலாதி இன்பம்.

வன்முறையை பொழுதுபோக்காக்கியதில் சினிமாவுக்கு முக்கிய பங்குண்டு. குடிபோதை, வன்முறைக்கு ஒரு பிரதான காரணமாக முன்னுக்கு வருகிறது. குடிக்காதவர்கள் அப்பாவிகள், குடிப்பவர்கள் குற்றவாளிகள் என்று ஒரு சூத்திரத்தை எழுத முடியாது. ஆனால் வன்முறை செய்வதற்கான துணிச்சலை, போதை உற்பத்தி செய்கிறது. பெரும்பாலான சம்பவங்களில் குற்றவாளிகள் குடித்திருக்கிறார்கள் என்னும் செய்தி, இதை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசின் மதுபான கொள்கைக்கு இதில் பங்குண்டு. அடுத்து, மொபைல் இருந்தாலே போதும், சுலபமாக இணைய தளத்தில், யூடியூப்பில் ஆபாசத்தைப் பார்த்துவிட முடிகிறது.

பிறகு, பார்ப்பதை எல்லாம் பரீட்சித்துப் பார்க்கத் தோன்றுகிறது. அதற்கு ஒரு பெண் வேண்டும். 1 வயதாக இருந்தால் என்ன, 80 வயதாக இருந்தால் என்ன என்ற மனநிலை ஏற்படுகிறது. மேலும் சாதியும், வர்க்கமும் முக்கிய காரணமாக இருக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்கள் கூடுதலாக வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள். காரணங்கள் இப்படியாக இருக்கும்போது, பெண்ணின் உடை காரணம், ஆண் நண்பருடன் போனது காரணம், இந்த நேரத்தில் தெருவில் நின்றது காரணம் என்ற அபத்தங்களை ஏன் பேசவேண்டும்?

எந்த உடை அணிந்தால், எந்த நேரத்தில், எந்த இடத்தில் இருந்தால் பிரச்சனை வரவே வராது என்று சொல்வார்களா? இப்படிப் பேசுவது திசை திருப்பும் போக்காகும். குற்றத்தை நியாயப்படுத்துவதாகும். பொதுவெளியில் பெண்கள் வருவதால்தான் வன்முறை நிகழ்கிறது என்று அவர்களைக் கட்டுப்படுத்துவதும், விலக்கி வைப்பதும் பிரச்சனையைத் தலைகீழாகப் பார்ப்பதாகும். பொதுவெளியில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி வர்மா குழு சொன்னது மிகப் பொருத்தமானது. பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும்போது நிச்சயம் குற்றம் குறையும்

நன்றி -https://www.facebook.com/jeevasundaribalan?fref=ts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *