வெலிகம ரிம்ஸா முஹம்மத்
கிண்ணியா ஏ. நஸ்புல்லாஹ்வின் காவி நரகம் என்ற சிறுகதைத் தொகுதி பேனா பதிப்பகத்தின் மூலம் 125 பக்கங்களில் வெளிவந்துள்ளது. பின்னவீனத்துவப் பாணியை கைக்கொண்டு மிகவும் வித்தியாசமான போக்கில் தனது சிறுகதைகளை நஸ்புள்ளாஹ் யாத்துள்ளார். பின்னவீனத்துவ பிரக்ஞை மிக்க இவர் இதற்கு முன் துளியூண்டு புன்னகைத்து, நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம், கனவுகளுக்கு மரணம் உண்டு ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.காவி நரகம் என்ற இச்சிறுகதைத் தொகுதியில் புத்தன் வந்த பூமியிலே, இவர்களை நடைபாதையாக உபயோகிக்காதீர்கள், முரண்களின் சாபம், கன்னத்தில் அறையும் கதை, நிலைகுலைவு, மனிதம், ஆறு கண்களால் எழுதிய மூன்று கடிதங்கள், இப்படிக்கு பூங்காற்று, காவி நரகம், வேரறுந்த விலாசங்கள், விதவைத் தேசம், சுதா சுங்கன் மீன் போல அழகு, ஓர் எழுத்தாளனின் கதை ஆகிய தலைப்புக்களிலான ஏ. நஸ்புள்ளாஹ்வின் 13 சிறுகதைகளைக் காண முடிகின்றது.
08 கதைகள் போர்க்காலச் சூழல் சம்பந்தமானவையாகவும், ஏனைய 05 கதைகள் இன்னோரன்ன விடயங்;கள் சம்பந்தமானவையாகவும் என்று இரண்டு பகுதிகளாகவே பிரித்துப் பார்க்கும் அமைப்பில் இந்த 13 சிறுகதைகளும் அமைந்துள்ளன.
போர்க்காலச் சூழல் சம்பந்தமான கதைகள் யாவும் கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள், கஷ்டங்கள் நிறைந்த வாழ்வியலை வெளிக்காட்டி நிற்கின்றன.
நிலை குலைவு பற்றிய விமர்சனப் பார்வை என்ற தலைப்பில் கே.ஆர். டேவிட்டும், காவி நரகத்தின் கதைகள் என்ற தலைப்பில் ஜே. பிரோஸ்கானும், நஸ்புள்ளாஹ்வின் கதைகளில் நான் என்ற தலைப்பில் ஏ.எம்.எம். அலியும், நான் நேசிக்கின்ற சகோதர சமூகத்திற்காக என்ற தலைப்பில் நூலாசிரியரின் குறிப்புக்களையும் நூலில் காண முடிகின்றது.
2007 இல் முதலாவது சிறுகதை லண்டன் புதினம் சர்வதேச சிறுகதைப் போட்டியிலும், பூபாள ராகங்கள் சர்வதேச சிறுகதைப் போட்டியிலும், 2009 இல் வந்தாறு மூலை கிழக்கொளி சிறுகதைப் போட்டியிலும் (மூன்றாமிடம்) பரிசுகள் கிடைத்துள்ளதோடு, நோர்வே சர்வதேச தமிழர் கவிதை சிறப்பிதழ் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளதோடு, தேசிய பிரதேச மட்டங்களிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் பெற்றுள்ளார். இவற்றை இவரது சிறுகதைகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கலாம்.
2008 இல் திருகோணமலை நூலக அபிவிருத்திச் சங்கம் சிறந்த எழுத்தாளருக்கான விருதும், கிண்ணியா பிரதேச சாகித்திய விழாவில் இலக்கிய ஒளி பட்டமும், விருதும் வழங்கப்பட்டுள்ளதோடு, கிண்ணியா நகர சபையினால் கௌரவிக்கப்பட்ட சமூகம் என்னும் சிறப்பு விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியை வைத்துக் கொண்டுதான் இவரது சிறுகதைகளை ஆராய்ந்து பார்ப்பது சாலப் பொருத்தம் என்று கருதுகின்றேன்.
இனி நஸ்புள்ளாஹ்வின் முதலாவது கதையான புத்தன் வந்த பூமியிலே (பக்கம் 23) என்ற சிறுகதையை நோக்குவோமேயானால் மனிதம் மரித்துப் போன தேசத்தின் வரலாற்றை அது குறித்து நிற்கின்றதெனலாம். இனவெறிகளால் ஆளப்பட்டு இன்பமான வாழ்வை தொலைத்து நிற்பவர்களுக்கு இதுவொரு சாட்டையடியாக அமைந்திருக்கின்றது. கருணையும், காரூண்யமுமே வாழ்வின் ஆதாரம் என்று போதித்த புத்தன் வாழ்ந்த இந்த பூமி இரத்த வெள்ளத்தாலும், பிரேத வாடையாலும் மாசுபட்டுவிட்டது. வரலாற்றுக் கறையை ஏற்படுத்திய இந்த நிகழ்வுகளில் பெரும்பாலும் அப்பாவிகளே கொல்லப்பட்டமை கண்டுகூடு. இந்தக் கதையிலும் அவ்வாறாதோர் சம்பவமே கருவாக சொல்லப்பட்டுள்ளது. சந்திரபால என்ற சிங்கள மனிதன், மாணிக்கம் என்ற இந்து மனிதனை எதிரியாக நோக்குவதினூடாகவே கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது. கதையின் இறுதியில் மாணிக்கத்தின் மகனை சந்திரபால தன் வாகனத்தால் விபத்துக்குள்ளாக்குகின்றான். தனது அண்ணனின் சொந்த மகனையே, தான் கொன்றுவிட்டதாக சந்திரபால பின்னர் அறிகின்றான். காட்டேறி மனிதர்களின் கசந்த மனது இக்கதையில் இழையோடியிருக்கிறன்றது.
நிலைகுலைவு (பக்கம் 55) என்ற சிறுகதையிலும் யுத்தமே கருவாக்கப்பட்டிருக்கின்றது. அதில் மனித நேயத்தின் சாயல்களை இனங்காட்டியிருக்கின்றார் நஸ்புள்ளாஹ். காயத்திரி என்ற முதிர் கன்னியின் வேதனைகளும், அவஸ்தைகளும் தத்ரூபமாக இக்கதையில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. கலவரம் நடந்த ஒரு பயங்கர இரவில் கருணாரட்னவின் மனைவிக்கு பிரசவம் பார்க்கிறார்கள் காயத்திரியும் அவளது நண்பி உமாவும். ஐந்து நாட்களுக்குப் பிறகு இரவோடிரவாக கருணாரட்ன கண்டிக்குச் சென்றுவிடுகிறான். கருணாரட்ன என்ற மத வெறியன் மனதினாகிறான். சில நாட்களின் பின் நன்றி தெரிவித்து காயத்திரிக்கு கடிதம் எழுதுகின்றான். புரிந்துணர்வு வந்துவிட்டால் பூமி ஆனந்தமாக இயங்கும் என்ற உண்மை இக்கதை மூலம் உணர்த்தப்பட்டிருப்பது அவதானத்துக்குரியது.
இப்படிக்கு பூங்காற்று (பக்கம் 79) என்ற சிறுகதை மெல்லிய காதல் உணர்வினை மனதில் விதைத்துச் செல்கின்றது. ரம்மியமான முறையில் கதை சலனமில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கின்றது. அடுத்து என்ன நடக்கும் என்ற அதிகபட்ச ஆர்வத்தை இக்கதை ஏற்படுத்துகின்றது. கதையின் ஆரம்பத்தில் தாயிடம் பயணம் சொல்லிக்கொண்டு நாச்சியாதீவுக்கு வரும் இளைஞன் என்ன செய்கிறான் என்ற எதிர்பார்ப்பே எட்டி நிற்கின்றது. எனினும் கதையின் இறுதியில் ஏற்படும் தாயின் மரணம் மனதை துண்டாடுகின்றது. சோகம் அப்பிக்கொள்கின்றது. தாய்ப் பாசத்தையும், காதலையும், மனித நேயத்தையும் ஒருசேர உணர்த்தியிருக்கும் பாங்கு சிறப்புக்குரியதெனலாம்.
மகுடக் கதையான காவி நரகம் (பக்கம் 90) என்ற சிறுகதையிலும் யுத்தமே சொல்லப்பட்டிருக்கின்றது. கர்ப்பம் தரித்து நிற்கும் குகநாயகியின் கணவன் ஒரு ஊடகவியலாளன். செய்திகளை அழுத்தந் திருத்தமாக வெளியிட்ட காரணத்தால் அவன் வெள்ளை வேனில் கடத்தப்படுகின்றான். ஐந்துமாத கர்ப்பத்துடன் அவள் வாழ்தல் பற்றிய நம்பிக்கையையே இழந்து காணப்படுகின்றாள். காலம் அதன் பாட்டுக்கு நகர்ந்து செல்கின்றது. பசி, தாகம், தூக்கம் எதிலும் பிடிமானம் இல்லாமல் சராசரி மனுசியாகக்கூட இல்லாமல் அவள் தன் வாழ்வை தொலைத்து நிற்கின்றாள். சாப்பிடுமாறு அவளது தாய் கூறியபோது தனக்கு பசிக்கவில்லை என்கின்றாள். ஆனால் வயிற்றில் வளரும் தன் குழந்தைக்காகவே சாப்பிடுகின்றாள்.
திட்டமிடப்பட்ட கொலையால் கணவனை இழந்த ஒட்டுமொத்த பெண்களின் வலி இக்கதையால் புலப்படுத்தப்படுகின்றது. அது மாத்திரமல்லாமல் எவரும் இரவில் வெளியில் செல்லக்கூடாது என்ற ஆயுததாரிகளின் கட்டளை குகநாயகி பிரசவ வேதனையில் துடிக்கும் போது கரையுடைகின்றது. மகளின் பிரசவ வேதனை தாங்க இயலாமல் அவளது தாய் உதவிக்கு அழைக்க அயல்வீட்டுக்குச் செல்கிறாள். அத்தருணத்தில் காவலரண் அமைத்து அதிலிருந்தவர்கள் அவளை துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாக்குகின்றனர். ‘கடவுளே என்ற அம்மா’ என்று தன் வேதனையையும் மறந்து குகநாயகி வெளியே செல்கையில் அவளும் சுட்டுக் கொல்லப்படுகின்றாள். அநியாயங்கள் மலிந்த.. அரக்கர்கள் நிறைந்த.. அந்த சூழலுக்கு காவி நரகம் என்ற தலைப்பை நூலாசிரியர் வைத்திருப்பதிலிருந்து அவரது மன வேதனை வெளிப்படுகின்றது.
காதல் ஒன்று சேராவிட்டால் அது தரும் காயங்கள் வாழ்நாள் முழுக்க தொடரும். வருடங்கள் பல கழிந்தாலும் காதல் தந்த வடு சிறிதும் மாறாமல் அப்படியேதான் இருக்கும் என்பதை சுதா, சுங்கன் மீன் போல அழகு (பக்கம் 110) என்ற சிறுகதை உணர்த்தி நிற்கின்றது. முபாரக் என்ற இளைஞன் பள்ளிக் காலத்தில் சுமையாவின் மீது கொள்கின்ற பாசம் அவனது தாய் பள்ளிக்கூடம் மாற்றியதால் மறைந்து போகிறது. கனவுகள் வளர்த்த காதலர்கள் பிரிந்து போனாலும் வாழ்க்கை என்பது உரிய காலத்தில் அவரவர்க்கான துணையை தேடிக்கொடுக்கின்றமை நிதர்சனம். அதற்கிணங்க இருவரும் இருவேறு துருவத்தில் வாழ்தலை மேற்கொள்கின்றனர்.
காலம் கழிகிறது. முபாரக்கிற்கு இரு குழந்தைகள். அவர்களை சுற்றுலா பயணத்துக்காக அழைத்துச் செல்கின்றபோது எதிர்பாராத விதமாக சுமையாவைக் காண்கின்றான் முபாரக். நீண்ட நாட்களுக்கு பின் அவனைப் பார்க்கும் எந்தவித பரபரப்புமின்றி அவள் காணப்படுகின்றாள். அவளது மாற்றத்துக்கான காரணத்தை முபாரக் வினவியபோது, பிற ஆண்களுடன் பேசுவது தன் கணவனுக்கு விருப்பமில்லை என்று வெடுக்கென்று பதில் கூறுகிறாள் சுமையா. முபாரக்கிற்கு கன்னத்தில் அறைந்தது போல இருக்கின்றது. இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவிக்கிறான். அவனது கடந்த காலத்தை அறிந்திருந்த மனைவி அவனுக்கு ஆறுதல் சொல்லி தேற்றுவதாக கதை நிறைவு செய்யப்பட்டுள்ளது.
கவிதை யாத்தலில் தன் பெயரை இலக்கிய உலகில் நிலைநிறுத்திக்கொண்டுள்ள நஸ்புள்ளாஹ் காவி நரகம் என்ற இந்த சிறுகதைத் தொகுதி மூலம் தான் ஒரு சிறந்த சிறுகதைப் படைப்பாளி என்பதையும் நிரூபித்திருக்கின்றார். மேலும் பல காத்திரமான படைப்புக்களை வெளியிட நஸ்புல்லாஹ்வுக்கு எனது வாழ்த்துக்கள்!!!
நூல்:- காவி நரகம்
நூல் வகை:- சிறுகதை
நூலாசிரியர்:- ஏ. நஸ்புள்ளாஹ்
வெளியீடு:- பேனா பதிப்பகம்
விலை:- 400 ரூபாய்